இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

பூமணியின் வெக்கை

March 26th, 2021 · No Comments

வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்திற்கு இந்த வாரம் நடுவண் அரசின் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. படம் வந்தபோது பார்த்து, அதனால் உந்தப்பட்டு அதன் மூலக்கதையான பூமணியின் வெக்கையைப் படித்து, அதுபற்றிய ஒரு பதிவையும் எழுதிவிட்டு, ஏனோ வெளியிடாமல் இருந்துவிட்டேன். 2020ஆம் ஆண்டின் போக்கு இப்படியாகத் தான் இருந்தது. ஆனால், விருது அறிவிக்கப்பட்ட இந்தக் காலத்தின் பொறுத்தப்பாட்டை எண்ணி அதனை இப்போது வெளியிட்டு விடலாம் என்று துணிந்துவிட்டேன். 

* * * *

vekkai‘கையைத்தான் வெட்ட நினைத்தான். ஆனால் சற்று எட்ட விழுந்ததில் விலா எழும்பில் பாய்ந்து ஆளே காலி’, என்று எடுத்தவுடனேயே உச்சநிலையைத் தொட்டுவிடுவதில் சட்டென நம்மை உள்ளே இழுத்துக் கொள்கிறது கதை. பூமணியின் "வெக்கை" புதினம் பற்றி முன்பே அறிந்திருந்தாலும் இதுவரை தேடிச் சென்று படிக்க முனைந்ததில்லை.

வெற்றிமாறனும் தனுசும் உருவாக்கியிருக்கும் அசுரனைச் சில காலம் முன்பு பார்த்தது பிடித்திருந்தது. அதன் மூலக் கதையாய் அமைந்திருந்த வெக்கையைப் பெரிதும் சிதைக்காமல் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்னும் கருத்துகள் செவிகளுக்கெட்டவே அதனையும் படிக்கலாமே என்று தோன்றியது. புத்தாண்டில் புதுப்பிக்க நினைக்கும் நூல்வாசிக்கும் பழக்கத்திற்கு இதனை ஒரு தொடக்கமாக எடுத்துக் கொள்ளலாமே என்று நினைத்தேன்.

வெக்கையின் மூலத்திற்கு நெருக்கமாய் எடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப்பட்டாலும், ஒரு திரைக்கதைக்கும் ஓர் இலக்கியப்படைப்புக்குமான களங்கள் வேறு வேறு என்பதை விரைவில் உணர்ந்துகொள்ளலாம். வெவ்வேறு வகைப்பாட்டில் எனக்கு இரண்டும் பிடித்திருந்தது. திரைக்கதையின் தாக்கத்தில் நூலின் கதைப்போக்குத் தொடக்கத்தில் சற்றுத் தளைப்பட்டிருந்தாலும், பூமணியின் எழுத்தின் வீரியம் விரைவில் அதனை உடைத்துத் தனக்கான இருப்பை நிலைநாட்டிவிடுகிறது. முதற்சில பக்கங்களில் சீரோட்டம் சற்றுத் தடைப்படத் தான் செய்தது. சிறுசிறு துண்டாய் இருந்த வாக்கியப் பயன்பாடுகளா? பெரும்பகுதியில் உரையாடலிலேயே நகரும் கதையின் சில செயற்கைத் தனங்களா? அல்லது கரிசற்காட்டு வட்டார வழக்கிற்குப் பழக்கமில்லா அந்நிய உணர்வா? ஆனால், இவையெல்லாம் சில பக்கங்களுக்குத் தான். கதாசிரியனும் விரைவில் அமைந்துவிடுகிறான். நமக்கும் அதனுள் ஆழ்ந்துவிடும் தன்மை அமைந்துவிடுகிறது.

நூலைப் படித்துமுடித்த பின் இணையத்தில் தேடிப் பூமணியின் ஒரு செவ்வியைக் காண நேர்ந்தது. ‘கொலை செய்தது சிதம்பரம்; காட்டில் அலைந்தது பூமணி’ என்று ஒருவரியில் ஒரு கருத்தை வைத்திருப்பார். நிச்சயமாக ஒருவன் தனக்கான அனுபவத்தை, தான் வாழ்ந்த நாள்களின் நினைவை வைத்தே இத்தகு படைப்பைத் தைத்திருக்க முடியும் எனத் தோன்றுகிறது. எனக்குப் பல செய்திகள் புரியவில்லை. மஞ்சணத்திப் பழத்தை நான் பார்த்ததில்லை. குறண்டிப் பூ எதுவென்று எனக்குத் தெரியாது. குறண்டிப் பூவால் தொடுத்த மாலையை விரும்பும் தங்கையும் எனக்கில்லை. தான் வாழ்ந்த நிலத்தின் வாழ்க்கையூடாகக் கதையையும், கதையினூடாக அவ்வாழ்வையும் பதிய வைத்திருக்கிறார் பூமணி. இதனை வாசிப்பின்பத்திற்கு இடையூறு ஏதும் வாராதவண்ணம் அமைத்து வெற்றி கண்டிருப்பதே முப்பத்தெட்டாண்டுகளுக்குப் பிறகும் இதனைப் பேச வைக்கிறது. நிச்சயமாய்ச் செவ்வியல் வரிசையில் சேரவேண்டிய ஒன்றே.

முதல் வரியிலேயே கதை சொல்லப்பட்டு விடுவதால், திடுக்கெனும் திருப்பங்கள் இல்லை தான். ஆனால், அந்தப் போகூழ் நிகழ்வின் பின்னான நகர்ச்சியையும், அதுபோழ்து காணும் காட்சிகளும், சுழலும் நினைவலைகளும், அதனையொட்டிப் பின்னகர்ந்து முன்கதை சொல்லலும் என்று திறம்பட நெய்திருக்கிறார் ஆசிரியர். ஆனால் ஒரு கொலையைப் பற்றியும், அதனைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டு பேசுவதும், இளம்பதின்ம அகவையான் ஒருத்தன் திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டு உருட்டுவதும், அதற்கு அவனது ஆத்தாளே கஞ்சி வடித்துக் கொடுப்பதும் இயல்பானது தானா என்னும் ஒரு கேள்வி என்னுள் எழாமல் இல்லை. இதற்குப் பதில் சொல்வதாற்போல இந்நூலின் பின்னட்டை இவ்வாறு சொல்கிறது: "வெக்கை – ஒரு குழந்தை நாவல். கடுமையான வாழ்க்கையனுபவ வெக்கையில் தவிர்க்க முடியாதபடி பெரிய மனுசனாகும் சிறுவனது உணர்வோட்டங்களுக்கு வடிகால்". அவன் ஒரு குழந்தை தான் என்று ஒப்புக்கொள்கிறது. ஆனால் வாழ்க்கையனுபவ வெக்கையில் வெந்துபோகும் ஒரு சூழல் காரணமாகவே இப்படியான நிகழ்வுகள் நடக்கின்றன என்று நியாயப்படுத்தி ஏற்கச் செய்கிறது. அந்த வெக்கைச் சூழலைத் தன் அண்ணனின் உயிரைக் காவு வாங்கிய ஒரு வசதி படைத்தவனை மட்டும் வைத்துச் சொல்லவில்லை. ஆனால், அதுபோன்றோர்க்குத் துணையாய் இருக்கும் அதிகாரம் படைத்தவர்களைப் பற்றியும் விவரிக்கிறது. காவல்துறையாரோ, நீதிமன்றத்தாரோ, என்றும் இதுபோன்ற எளியவர்களுக்கு நியாயம் வழங்குவதில்லை என்பது பற்றிய கவலைகளையும் தன்போக்கில் முன்வைத்து, ஒடுக்கப்பட்டவர்கள் சந்திக்கும் வருக்க வேறுபாடுகளையும் பேசுகிறது கதை.

எந்த நிலத்தைக் காக்கப் போராடினார்களோ இறுதியில் அதையே விற்றுத்தான் வழக்காட முடியும் என்னும் நிலை தான் கவலையாக மிஞ்சுகிறது, "வில்லாறத வித்துக் கேசு நடத்தணும்".

எங்கும் கண்டிராத இலக்கணக் குறிப்பொன்றிற்கான சான்றினை என்னால் இங்கே கண்டுகொள்ள முடிந்தது. கற்றான் என்னும் வினைமுற்றுக்கு வினை வேர் ‘கல்’. கல்-ஐ வைத்து உருவான பிற சொற்களைப் பொதுவாக நாம் பல இடங்களில் காண முடியும் – கல்வி, கல்லாதது, கல்லாதவன் என்பது போல. அதைப் போன்றே விற்றான் என்னும் வினைமுற்றில் இருக்கும் வினை வேர் ‘வில்’ என்பது. வில் அடியில் பிறந்த சொற்கள் அருகிவிட்டன. அவற்றை அதிகம் கண்டதில்லை. ஆனால், பூமணி, ‘வில்லாறத’ என்று சில இடங்களில் போகிற போக்கில் பயின்றிருக்கிறார். அதனை உரைநடை வழக்கிற்கு மாற்றிக் கொண்டோமானால், ‘வில்லாவதை’, ‘வில்லாவது’ என்று நமக்கு ஒரு புதையல் கிடைக்கிறது. வில் என்னும் வேரை நேரடியாகச் சொற்களில் வேறெங்கும் கண்டதுண்டோ?

காட்டில் அலைந்தது பூமணி என்று சும்மா சொல்லவில்லை அவர். அந்த அலைதலின் வழியே நமக்குக் கிடைக்கும் தகவல்கள் ஏராளம். மாடசாமிக்கு மயான பூசை, சுடலைமாடன்  வில்லுப்பாட்டு, விசாகத் திருவிழா, தோடோடு நொங்கு சாப்பிடும் சுவை, கிடாய்வெட்டு, சேவல் அறுத்தல், பன்றிக்கறி என்று பலவாறான விவரிப்புகள் நமக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.

பூவரச இலையிலே ஊதல் செய்வதும், ஆலமர விழுதிலே வாழைமட்டை கொண்டு ஊஞ்சல் கட்டுவதும், கிட்டிப்புள் விளையாட்டும், விரும்பியுண்ணும் சிந்தாமணிக் கிழங்கும் (இது தான் சர்க்கரைவள்ளிக் கிழங்கா?) அச்சிறுவனின் இளம் வயதுக்கும் எளிய வாழ்வுக்கும் சாட்சியாக நிற்கின்றன. அதே சிறுவன் தான், கையைத் தான் வெட்ட நினைத்தேன் என்று வன்முறை வழியில் செலுத்தப் படுவதையும் சொல்கிறது. தன் அண்ணனின் அநியாயக் கொலைக்குப் பழிவாங்குவது ஒரு கடமை என்னும் நிலைக்கும், இன்னொரு உயிரை எடுப்பதன் நியாய அநியாயங்களுக்கும் இடையிலான ஊசலாட்டங்கள். நொங்கும் கிழங்கும் கறியும் உண்டுகொண்டு, கிணற்றில் குதித்து விளையாடி, கரிசல்காட்டுவாழ்க்கையில் இயல்பாக இருந்திருக்க வேண்டிய சிறுவன் தான், ஆனால் வாழ்வோட்டத்தில் சூழல் கட்டமைக்கும் வெக்கை அந்த இயல்பை எப்படி மாற்றிப் போடுகிறது என்பதான கதை. அல்லது, மாறிப்போகும் இந்த வாழ்க்கையும் வெக்கையுமே இந்த மனிதர்களுக்கு இயல்பாகிப் போவது தானா?

****

Tags: இலக்கியம் · திரைப்படம்