இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை

September 11th, 2020 · 3 Comments

"வங்கிகளின் திருட்டு வேலை" என்று வீட்டுக்கடன் பற்றிய ஒரு பதிவும் ஒலிப்பதிவும் சில நாள்களாகக் கண்ணில் பட்டுக்கொண்டிருந்ததை இன்றுதான் கேட்க நேர்ந்தது. எச்சு.டி.எப்.சி வங்கி மேலாளர் ஒருவருக்கும் கடன் வாங்கிய மருத்துவர் ஒருவருக்கும் இடையே நடந்ததாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஒரு ஒலிக்கோப்பு. இப்படி ஒரு பதிவைச் சமூக ஊடகத்தில் போடவேண்டும் என்ற முன்முடிபுடன் மருத்துவர் பேச்சை அமைத்துக் கொள்வதைக் கவனிக்க முடிகிறது.

என் கருத்தில் இது ஒரு அயோக்கியத்தனமான பதிவு. கடுஞ்சொற்களுக்கு வருந்துகிறேன். குறைந்தபட்சம், படித்த மக்களாய் இருந்தாலும் தம் பொருளாதார அறிவின்மையைப் பறைசாற்றும் பதிவு இது. தனது தவறு, ஏமாற்றம் என்று மருத்துவர் ஆதங்கப்படுவதில் மீச்சிறு நியாயம் மட்டுமே இருக்கிறது. வங்கி மேலாளரின் மீது பெரிய தவறொன்றும் இல்லை என்பதோடு, இவ்வாறு எள்ளலும், நயந்தும் பேசும் ஒருவரோடு மிகவும் பொறுமையாக அவர் பேசிய விதமும் நன்றே.

ஒன்று நிச்சயம். கண்ணை மூடிக் கொண்டு கடனைத் தரும் வங்கிகளும், வாங்கும் மக்களும், அதுகுறித்த போதிய அறிவின்றி இச்சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதும், அவர்களின் பொருளாதார அறிவைப் பெருக்கிக் கொள்ள அவசர ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்பதுமே அது.

அடிப்படைச் செய்தி இதுதான். மருத்துவர் 2006ல் வாங்கிய கடன் ரூ.51 இலட்சம். 14.75% வட்டி விகிதத்தில் வாங்கிய கடனுக்கு மாதத் தவணையாக ரூ.57 ஆயிரம் கட்டுகிறார். அவர் பேசும் 2020 காலக்கட்டத்தில் இதுவரை கட்டிய தொகையின் கூட்டல் ரூ.91 இலட்சம். ஆனால், கட்டிய அசல் போக இன்னும் மிச்சமிருக்கும் கடன் தொகை ரூ 40+ இலட்சம்.

இவர் (அநியாயப்) பொங்கல் வைப்பதற்கு இரண்டு காரணங்களைப் பார்க்கலாம். ஒன்று, வாங்கிய கடனுக்கு மேல் 40 இலட்சம் ரூபாய் கட்டிய பிறகும் இன்னும் 40+ இலட்சம் அசல் மட்டுமே இருக்கிறது. இது வங்கிகளின் கொள்ளை அல்லவா என்பது முதல் கேள்வி. இரண்டாவது, வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை ரிசர்வுவங்கி 6-8% என்று குறைத்துவிட்டபோதும், வங்கி மேலாளர் இவரை அழைத்துச் சொல்லித் தன் தார்மீகக் கடமையை ஆற்றாமல் மோசம் செய்கிறார் என்பது இரண்டாவது. இவை ஏன் நியாயமற்றவை என்பதை இங்கே பார்ப்போம்!

முதலில், இங்கே வைக்கப்பட்டிருக்கும் எண்கள் சற்றுக் குத்துமதிப்பாய்த் தான் இருக்கின்றன. கடன் தொகை, வட்டி விகிதம், செலுத்தும் மொத்த ஆண்டுகள் என்பவை தெரிந்தால் மாதத் தவணையைக் கணக்கிடுவது எளிதான ஒன்று. மைரோசாட்டு எக்சல் போன்ற செயலிகளில் மிக எளிதாகக் கணக்கிடலாம் 51 இலட்சத்திற்கு, 14.75% 30 ஆண்டுகள் என்று எடுத்துக்கொண்டால், மாதத் தவணை ரூ63 ஆயிரம் ஆகிறது. ஆனால், இங்கே குறிப்பிடப்படும் ரூ57 ஆயிரம் மாதத்தவணை என்பதை நம்பினால், ஒன்று மொத்தக் கடன் குறைவாய் இருக்கும், அல்லது வட்டி விகிதம் குறைவானதாய் இருக்க வேண்டும். கடன் தொகையை அப்படியே வைத்துக் கொண்டோமானால், 13.25% வட்டி விகிதத்திற்கு ரூ57 ஆயிரம் மாதத்தவணை என்பதைப் பின் சென்று கணக்கிட்டுக் கொள்ளலாம். இக்கணக்கின்படி 2006ல் இருந்து 2020 வரை கட்டிய மொத்தத் தொகை ரூ91 இலட்சம். அதில் அசல் ரூ6 இலட்சம் கட்டியது போக மீதி அனைத்தும் வட்டித்தொகை தான். மிச்சம் இருக்கும் கடன் தொகை ரூ45 இலட்சம். இன்னும் கட்டவேண்டிய ஆண்டுகள் 16.

இது வெறும் கணக்கு. இதில் எவ்வித அநியாயமும் இல்லை. நீண்ட காலக் கடன்களில் மாதத் தவணையில் பெரும்பகுதி வட்டிக்கே செல்லும். கடன், வட்டி, அசல், காலக்கணக்கு என்பதைப் பற்றிய தெளிவு இருப்பின் இது புரியும். எளிமையாக, ஒவ்வொரு மாதமும் மிச்சம் இருக்கும் அசல் தொகைக்கு வட்டி எவ்வளவு என்று கணக்கிட்டால் இது புரியும். காட்டாக, முதல் மாதத்தில்,

வட்டி = அசல் * வட்டிவிகிதம்/12 = ரூ.56,300.

ஆக, மாதத் தவணை ரூ57,400-இல் வட்டி மட்டுமே ரூ56,300. அசலுக்குப் போவது வெறும் ரூ1100 மட்டுமே. அடுத்த மாதம் மிச்சமிருக்கிற அசல் தொகை ரூ50,98,900. இதை வைத்துத் தான் அடுத்த மாதத்து வட்டியைக் கணக்கிட வேண்டும். ஒவ்வொரு மாதமும் அசலுக்குப் போவது ரூ15, ரூ15 ஆகத்தான் அதிகரிக்கும் (1115, 1130…). போகப் போகச் சற்று அதிகரிக்கும் என்றாலும், இப்படி ஆயிரம் ஆயிரமாய்க் கட்டி எந்தக் காலத்துக்கு ஐம்பத்தொரு இலட்சம் கடனைக் கட்டி முடிப்பது?! (தவணை தவறாமல் கட்டினால் 30 ஆண்டுகளில் கண்டிப்பாகக் கடன் அடையும்!). ஆனால், முப்பது ஆண்டுகளில் கட்டி முடித்துத் திரும்பிப் பார்த்துக் கூட்டினால், நீங்கள் மொத்தம் ரூ155 இலட்சம் கட்டி இருப்பீர்கள்! அதாவது, ரூ51 இலட்சம் கடனுக்கு அசல் + அதன் இரண்டு மடங்கு வட்டி கட்டி இருப்பீர்கள். அது அந்தக் கடன் தொகைக்கு அந்தக் காலத்தின் மதிப்பு. அவ்வளவு தான். வாடகை வீட்டில் இருப்போர் மாதாமாதம் கட்டும் வாடகையை முப்பது ஆண்டுகள் கூட்டிப் பார்த்தால் கூட அந்த வீட்டு மதிப்பின் அளவு இருக்கக் கூடும். அதற்காக, வீட்டுக்காரர் வீட்டைத் தமக்கு எழுதிக் கொடுத்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா? ஒப்பந்தம் அதுவல்லவே!

இதில் இருந்து தப்பிக்க இரண்டே வழிகள். ஒன்று, மாதத்தவணைக்கு மீறிய முடிந்த தொகையை அசலுக்குக் கட்டுவது. இரண்டு, கடனுக்கான வட்டி விகிதம் குறையுமா என்று பார்த்துக் கடன் ஒப்பந்தத்தை மாற்ற முயல்வது. "என்கிட்டே பணம் இருக்கு சார். தெரிஞ்சாக் கட்டி இருப்பேன்" என்று சொல்லாதீர்கள். இருப்பதைக் கட்டி அசலைக் குறைக்க முயலுங்கள். அது மாதாமாதமானாலும் சரி. ஒருமுறை கிட்டும் மொத்தத் தொகையானாலும் சரி.

இரண்டாவது, ரிசர்வு வங்கி வட்டி குறைத்தால் ஏற்கனவே வாங்கிய கடன் வட்டி எப்படிக் குறையும்? புதிய கடன்களுக்கு வங்கிகள் குறைந்த வட்டிக்குக் கொடுப்பார்கள் என்பது தான் எதிர்பார்ப்பாக இருக்க முடியும். நுகர்வோர் தான் தமது கடன்களை மாற்றிக் கொடுக்கும்படி கேட்க வேண்டும். ஒரு கிளையில் நூறு இருநூறு நுகர்வோர், கடன் கணக்குகள் இருப்பின், அதன் மேலாளர் ஒவ்வொரு மாதமும் அவர்கள் அனைவரையும் அழைத்து வட்டி விகிதம் 0.25% குறைந்திருக்கிறது, மாற்றிப் போடுங்கள் என்று சொல்லவா முடியும்? அதிலும் பல வாய்ப்புகள் இருக்கின்றன. செலவுகள் இருக்கலாம். இதையெல்லாம் கடன் வாங்கியோர் தான் பார்த்துக் கட்ட வேண்டும்.

பொருந்தாத உதாரணம் சொல்லிப் பொங்குகிறார் மருத்துவர். நீங்கள் ஒரு சருக்கரை நோயாளியாக எம்மிடம் வந்தால் நாங்கள் எப்படியெல்லாம் பார்த்துக் கொள்கிறோம் என்கிறார். நோயாளி மாதா மாதம் வந்தால் தான் ஆயிற்று. ஒருமுறை வந்து போய்விட்டு வீட்டில் உட்கார்ந்திருந்தால் மருத்துவர் ஒவ்வொருவரையும் கூப்பிட்டுக் கூப்பிட்டா மருந்து கொடுக்கிறார்!

மருத்துவர் சரியில்லை என்றால் வேறு மருத்துவரைப் பார்த்துக் கொள்வதில்லையா? அதுபோல, ஒரு வங்கியில் வட்டி விகிதம் அதிகம், மற்றொன்றில் குறைவு என்றால், கடனை மாற்றிப் போட்டுக் கொள்ள வேண்டியது தான். ஆனால், கடனை மாற்றுவதில் சில செலவுகள் ஏற்படலாம், அதனையும் சேமிப்பு எதிர் செலவு என்று கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.

பற்றாததற்கு நிருமலா சீதாராமன் நல்லது பண்ணுவதற்காக ரிசர்வு வங்கி வட்டியைக் குறைக்கிறாராம். வங்கிகள் தான் ஏமாற்றுகின்றனவாம். வேண்டாம், அரசியலுக்குள் செல்லவேண்டாம், நாம் பொருளாதாரத்தோடு நின்று கொள்வோம்!

எக்சலில் Loan Amortization எப்படிச் செய்வது என்று தேடுங்கள். கண் திறக்கும். இதையெல்லாம் இந்தியா, அமெரிக்கா, என்று ஒன்றுக்குப் பலமுறை வீட்டுக் கடன் வாங்கிக் கட்டிய உலக மகாக் கடன்கார அனுபவத்தில் சொல்கிறேன். அடிப்படை தெரிந்து கொண்டால், சிக்கல் ஒன்றும் இல்லை.

loanamort

Tags: சமூகம் · பொது · பொருட்பால்

3 responses so far ↓