இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

குந்தவை

July 13th, 2020 · 3 Comments

"குந்தவை என்னும் பெயருக்குக் குறிப்பாக ஏதேனும் பொருள் இருக்கிறதா?", என வினவியிருந்தார் நண்பரொருவர். சோழப்பேரசில் புகழ்வாய்ந்த ஒரு பெண்ணும், மாமன்னன் இராசராசனின் தமக்கையும், வந்தியத்தேவனின் மனைவியுமானவரின் பெயருக்குக் காரணம் என்னவென்று இதுகாரும் நான் சிந்தித்ததில்லை. ஆனால், இப்படியொரு புதிய தேடல் பலவாறாக என்னைச் செலுத்தியதன் விளைவே இப்பதிவு.

clip_image001

குந்தவையின் பெயர்க்காரணம் என்ன? ஒரு பகுபதமாய்க் கொண்டு அப்பெயரைப் பிரித்து எழுதினால் ‘குந்தம்+ஐ’ என்றோ, ‘குந்தம்+அவ்வை’ என்றோ கருத இடம் இருக்கிறது.

தமிழில் ‘ஐ’ என்னும் பெயர்ச்சொல்லுக்குத் தலைவன் என்று பொருள். அதனைப் பால்பொதுவினதாக்கித் தலைமைப் பண்புள்ளவர், பெருமைக்குரியவர் என்று கொள்ளலாம். மீண்டும் ஆண்பால் பெயர்விகுதியாக ‘அன்’ சேர்த்து ஓர் ஆணுக்கு ஐ+(ய்)+அன்=ஐயன் என்றாக்குவோம். எனது தாய்தந்தைத் தலைமுறையினர் தமது தந்தையை ஐயன், ஐயா, என்று தான் அழைத்துவந்தனர். ஐயனார், ஐயப்பன் எல்லாம் இதன்வழி வந்ததே என்று விக்கி விளக்கும். இன்றும் மரியாதைக்குரிய ஒருவரை ஐயா என்று தானே அழைக்கிறோம்? ஆனால், குந்தவையின் ஈற்று ஐகாரத்திற்கு இது பொருளன்று. அது, பகுதியாக அன்றி விகுதியாக வருகிறது.

பெண்பாலுக்குரிய பொதுவான பெயர்விகுதிகள் அள், ஆள், இ, ஐ என்பனவாம். தலைமைப்பண்பும், பெருமையும் சிறப்பும் உடைய பெண் ஒருவரை ஐ+(ய்)+ஐ=ஐயை என்று வழங்குகிறோம். ஐயை என்பவர் மாண்பிற்குரிய ஒரு பெண். எனது பள்ளிப்பருவ ஆசிரியைகளை ‘மிஸ்’ என்று அழைத்தது வழக்கமாகிப் போன ஒன்று. இன்றும் நேரில் சந்திக்கும்போது அவர்களை அவ்வாறே பேச்சுவாக்கில் அழைத்தாலும், அவர்களுக்கு எழுதும் போது ஐயை என்று மாற்றி எழுதத் தொடங்கியிருக்கிறேன். சார்’ஐயும் மிஸ்’ஐயும் போக்கினால் ஐயனும் ஐயையும் இயல்பாக வந்துவிடுவார்கள். இவன் ஏன் இப்படி விளிக்கிறான் என்று இத்தனை நாளாகக் குழம்பிப்போயிருக்ககூடும் எனது ஐயைகள் இதைப் படிக்க நேரும்போது புரிந்துகொள்வார்கள் 🙂 என்று நம்புகிறேன்.

ஈற்று ஐகாரம் பெண்பால் விகுதியாக இருப்பதைப் பரவலாகப் பல சொற்களில் காணலாம். அக்கை, அம்மை, அன்னை, தங்கை, நங்கை, நடிகை, ஆசிரியை, பாவை, பூவை, அரிவை…இவ்வாறு. அரி என்னும் உரிச்சொல்லுக்கு அழகு என்று பொருள் என்று தொல்காப்பியம் காட்டுகிறது. அழகான பிடர்த்தலையுடைய விலங்கு தான் அரி-மா. ‘அரிவை கூந்தலின் நறுமணம்’ பற்றித் தேடி அஞ்சிறைத் தும்பித் தேனீக்களிடம் பித்துற்றுப் பேசிக்கொண்டிருந்த பாண்டியனின் மனைவி எவ்வளவு அழகானவளாய் இருந்திருக்க வேண்டும்! 🙂 அரி+(வ்)+ஐ என்று உயிர் உயிர்ப் புணர்ச்சியில் இடையில் உடம்படுமெய் வகரம் தோன்ற அரிவை என்றாகும்.

ஆகா! குந்தவைப் பெயராய்வில் தொடங்கி எங்கோ சென்றுவிட்டோம். பாண்டியன் மனைவியிடம் இருந்து நீங்கி மீண்டும் சோழர் தலைவியிடமே வருவோம். இங்கும் குந்தம்+ஐ என்பதில், மகரவீற்றுப் புணர்ச்சியில் ‘ம்’ நீங்க, உடம்படுமெய் ‘வ்’ தோன்ற, குந்தம்+ஐ–>குந்த+ஐ–>குந்த+வ்+ஐ=குந்தவை என்றாகும்.

அவ்வை என்றாலும் பெண் என்பது பொருளென்பதால், ஈற்றுப் பகுதியை அவ்வை என்று கொண்டாலும், குந்தம்+அவ்வை–>குந்த+அவ்வை–>குந்த்+அவ்வை –> குந்தவ்வை –> குந்தவை என்று ஆகும். அங்கவை, சங்கவை என்ற பாரிமகளிர் பெயர்களும் இவ்வாறே அமைந்திருப்பது காண்க.

அடுத்து, முதற்பகுதியாகிய குந்தம் என்பதைப் பார்ப்போம். பொதுவழக்கத்தில் அறியாத ஒரு பெயராக இருப்பினும், இச்சொல்லுக்குப் பல பொருள்கள் இருப்பதை அகரமுதலிகள் காட்டும். அதிலிருந்தே இது ஒரு தொன்மையான பெயர் என்று நாம் உணர்ந்துகொள்ள முடியும். அகரமுதலிகள் காட்டும் பொருள்களில் சில:

குந்தம் = குதிரை, வேல், எறிகோல், தீப்பந்தம், வைக்கோல் போர், நஞ்சு, ஒருவகைக் கண் நோய், கள், கவளம், ஒரு குபேர நிதியம், குருந்த மரம், குங்கிலியம், அலரி, ஒருவகை மல்லிகை. இது தவிர, கூந்தல் என்றொரு பொருளையும் சில இடங்களில் காண்கிறேன்.

மேற்கண்ட பொருள்களில் சிலவற்றைத் தேர்ந்து பொருள் கூற முயலலாம். குதிரைகளை உடைய பெண், குதிரைகளின் அரசி என்றோ, வேல் அல்லது எறிகோல்களைப் (javelin) போன்ற கண்ணுடையாள் என்றோ கூடச் சொல்லலாம். அலரி என்பது அரளி மலரின் இலக்கணப்போலி. அரளி நிறத்தவள் என்றோ, அல்லது இன்னொரு மலர்ப்பொருளான மல்லிகையின் மணம்மிக்கவள் என்றோ கூடக் கூறலாம். குங்கிலியம், குருந்தம் என்று இரு மரப்பொருள்களும் உள.

குந்தம்/குந்தளம் என்றால் கூந்தல் என்ற பெயர் கொண்டு நீண்ட கூந்தலை உடைய பெண் என்றும் சிலர் கூறுவர். பொன்னியின் செல்வனில் கற்பனையாய்ப் படம் வரைந்திருந்த ஓவியர் குந்தவைக்கு உயர்ந்ததோர் கொண்டை வரைந்தது தற்செயலா, அல்லது இப்பொருள் நோக்கியா எனத் தெரியவில்லை. இவ்வாறு பலவாறாகக் கூறலாம் என்றாலும், அவற்றின் பொருத்தப்பாடு என்னவென்றும் பார்க்க வேண்டியிருக்கிறது.

பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பு அகரமுதலியில், மேற்சொன்ன குந்தம் என்னும் சொல்லைத் தாண்டிச் சென்றால் குந்தவைக்கே பொருளை நேரடியாகக் கொடுத்துவிடுகிறார்.

clip_image002

குந்தம் என்றால் நறுமணமிக்க குண்டுமல்லிகை என்று பொருள் கொண்டு, அந்தக் குண்டுமல்லிகை மலரின் பெயரமைந்த பெண்ணாள் தான் குந்தவை என்று அவர் விளக்குகின்றார். குந்தம், மல்லி என்று இணையத்தில் சேர்த்துத் தேடினால், சேலம் மாவட்டத்தில் மல்லிகுந்தம் என்னும் ஓரூரும் அதன் காளியம்மன் கோயிலும் வந்து நிற்கின்றன. இருப்பினும், குந்தவைக்கும் மல்லிகைக்கும் ஏதேனும் பொருத்தப்பாடு இருக்கிறதா என்றும் ஒரு கேள்வியை இது தோற்றுவிக்கிறது. முழுநிறைவான ஒரு முடிவாகவும் மனம் ஒப்பவில்லை. குண்டுமல்லிக்கும் பத்திரகாளிக்கும் ஏதேனும் தொடர்பும் உளதோ?

நிற்க. சோழர் பெண்களில் குந்தவை என்ற பெயர் பலருக்கும் வைக்கப்பட்டிருப்பதை அறியமுடிகிறது. குறிப்பாக, மூவரைச் சொல்கிறார்கள். முதலாமவர், இராசராசனின் தந்தை சுந்தரசோழரின் தந்தை அரிஞ்சய சோழரின் முதல் மனைவி. கீழைச் சாளுக்கிய நாட்டு இளவரசியான இவருக்கு வீமன் குந்தவை என்று பெயர். அடுத்து, சுந்தரசோழர் தனது பெரியம்மாவின் மீது இருந்த பற்றால் தனது மகளுக்குக் குந்தவை எனப் பெயரிடுகிறார். இவரே இப்பதிவின் ஆரம்பப்புள்ளியாக இருக்கும் குந்தவைப் பிராட்டியார் அல்லது குந்தவை நாச்சியார்; இரண்டாமவர். இவருக்குப் பராந்தகன் குந்தவை என்றும் ஒரு பெயர் இருக்கிறது. இவருக்கும் இவர் உடன்பிறப்பு இராசராசனுக்கும் இடையே பெருத்த அன்பு நிலவுகிறது. இராசராசனுக்குப் பிறந்த மகளுக்கும் குந்தவை என்று அத்தையின் பெயரையே இடுகிறார்கள். இவர் தான் மூன்றாவது குந்தவை.

முதலாவது குந்தவை கீழைச் சாளுக்கிய நாட்டில் இருந்து வந்தவர். இரண்டாமவரும், மூன்றாமவரும் முறையே வந்தியத்தேவன், விமலாதித்தன் என்று சாளுக்கியப் பின்புலம் இருப்பவர்களையே மணந்து கொண்டார்கள் என்பது தற்செயல் நிகழ்வாய் இருக்கலாம். ஆனால், இப்பெயர்களின் மூல காரணமாய் இருந்த வீமன் குந்தவை சாளுக்கிய நாட்டில் இருந்து வந்தவர் என்பது நமது ஆய்வுக்கருத்தில் ஒரு புள்ளி. இங்கே நமக்குச் சாளுக்கிய நாடு பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளத் தூண்டுகிறது. மேலைச் சாளுக்கியர், கீழைச்சாளுக்கியர், வேங்கி நாடு, இன்றைய கருநாடக, ஆந்திர மாநிலப் பகுதிகள் என்று போகும் ஆய்வை விரிவஞ்சித் தவிர்ப்போம்.

மீண்டும் சொற்பிறப்பியல் அகரமுதலிக்குள் நுழைவோம். குந்தம், குந்தவையை அடுத்துச் சென்றோமானால், குந்தளம், குந்தளர் என்னும் சொற்களைக் கண்ணுறலாம். குந்தளம் என்றால் கூந்தல் என்னும் ஒரு பொருளை அடுத்து, சாளுக்கியர்களின் நாடு என்றும் பொருள் காணலாம். குந்தள நாட்டை ஆண்ட சாளுக்கிய மன்னர்கள் குந்தளர்கள் எனப்பட்டனர். ஆக, குந்தளம் என்னும் சாளுக்கிய நாட்டைச் சேர்ந்தவர் என்னும் பொருளில் கூடக் குந்தவை (குந்தளர்+அவ்வை->குந்தவை) என்னும் பெயர் அமைந்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

மேலும் கீழைச் சாளுக்கியர்கள் என்போர் வேங்கியைத் தலைநகராய்க் கொண்டு ஆண்டு வந்தவர்கள். அது இன்றைய ஆந்திர மாநிலப் பகுதியைச் சேர்ந்த ஓரூர். தெலுங்கு மொழியிலே குந்தவை என்றால் இலட்சுமியைக் குறிக்கும் என்றும் ஒரு கருத்தைக் கண்ணுற்றேன். குந்தன் என்றால் திருமால் என்றும் (கிருட்டிணா மு’குந்தா முராரே), குந்தனுடைய மனைவி என்னும் பொருளில், குந்தவை என்றால் இலட்சுமி என்றும் ஆந்திராவில் அழைத்துவருகின்றனராம். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியும் குந்தன் என்றால் திருமால் அல்லது விட்டுணு என்று கூறுவதையிட்டு, குந்தவை என்றால் இலட்சுமித் தெய்வம் என்னும் பொருளும் அமைந்திருக்க வாய்ப்பிருக்கின்றது என்றே நாம் கொள்ளலாம்.

ஒருவேளை, குந்தவை இலட்சுமிக்குக் குண்டுமல்லிகை மிகவும் பிடித்த பூவாய் இருக்குமோ?

* * * *

Tags: இலக்கியம் · தமிழ்

3 responses so far ↓

 • 1 செல்லமுத்து பெரியசாமி // Jul 18, 2020 at 2:15 am

  அருமை

 • 2 ராஜகோபால் அ // Dec 17, 2020 at 12:12 am

  உங்களின் தேடலில் நாங்களும் பயனுற்றோம் 😉

  நன்றி ஐயா

 • 3 இலக்குமணன் // Feb 22, 2021 at 12:52 am

  அப்பப்பா….. எத்தனை தகவல்கள்….. தமிழின் இனிமை தான் என்னே….
  மிக்க நன்றிகள் ஐயா