இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

எழுதாத கவிதை

March 17th, 2004 · No Comments

கவிதைகள் மட்டுமே இடம்பெறும் கவிதைப் பதிவுகள் பற்றி நான் எழுதப் போவதில்லை என நினைத்திருந்தேன். அவற்றைப் படிக்கத் தேவையான அமைதியான சூழலும், மனமும், அவசரகதி வாழ்க்கையில் பெரும்பாலும் கிடைப்பதில்லை. அதனால் அந்தப் பக்கமெல்லாம் நான் அதிகம் போவதில்லை என்பதும் ஒரு காரணம். அதோடு இவற்றின் மீது எனக்கு இன்னும் ஒரு குறைபாடும் உண்டு. வலைப்பதிவுகளாய், அவ்வப்போது எழுதப்படும் கவிதைகளைப் பதிவதாய் இல்லாமல், பலர், தங்கள் கவிதைத் தொகுப்பைத் தொகுத்து வைக்கும் ஒரு வலைத்தளமாகத் தான் வைத்திருக்கிறார்கள். மொத்தமாய் ஒரு நாள் பதிவு செய்துவிட்டுப் பின் காணாமல் போய் விடுகிறார்களா ? இல்லை, ஒரே பதிவில் புதிய கவிதைகளைச் சேர்த்து வைக்கிறார்களா ? இரண்டு ரகமும் உண்டென்று எண்ணுகிறேன். முதலாவதாயின் என்னவோ சடத்துவமாய் இருப்பது போல் உணர்வு. கவிதைகளுக்கும் சரி, வலைப்பதிவுகளுக்கும் சரி, ஒரு உயிர் வேண்டுமே ! அதனால் காணாமல் போனவர்கள் சற்று உயிர் கொடுங்கள். இரண்டாவதாயின் RSS போன்ற வலைப்பதிவு நுட்பங்களின் பயன்களை முற்றிலும் இழந்து யார் என்று இற்றைப் படுத்தினார்கள் என்ற அறிவு இல்லாமல் போய் விடுகிறது.

இப்படியாக இருக்கும் வலைப்பதிவுகளை, இப்படியே வைத்திருக்கும் உரிமையும் சுதந்திரமும் இவர்களுக்கு இருக்கிறது என்று நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், இவை வலைப்பதிவுகளுக்கான இலக்கணங்களுக்கு (“அய்யய்யோ அடிக்க வராங்க!”) உட்படாத, வலைப்பதிவுப் போர்வைக்குள் ஒளிந்திருக்கும் வலைத்தளங்கள் தானே தவிர வேறில்லை. இந்தக் கருத்தில் மாலன் சென்ற வாரம் கூறிய சிலவற்றோடு நான் ஒத்துப் போகிறேன். தவிர ஒரு கவிதைத் தொகுப்பைப் படிக்கும் முன்னர் சில குறிப்புக்கள் இருந்தால் நன்றாக இருக்கும். புத்தக வடிவில் வெளி வருவதில் கூட ஆசிரியரைப் பற்றிய ஒரு குறிப்பு இருக்கும். கவிஞரின் முன்னுரை, சில கவிதைகளுக்கான குறிப்புக்கள் என்று அவர்களின் எழுத்தோடு இனம் கண்டு கொள்ளக் கூடிய விஷயங்கள் இருக்கும். அவை எதுவும் இல்லாத இந்த வலைத் தளங்கள் என்னைப் பெரிதும் ஈர்ப்பதில்லை.

இந்தக் குறைபாடுகள் இல்லாத சில கவிதைப் பதிவுகளும் இருக்கின்றன. குறிப்பாய் மீனாக்ஸ். பெரும்பாலும் கவிதைகள் தான் எழுதினாலும் இவர் அடிக்கடி இற்றைப்படுத்துகிறார். அதோடு, கவிதைகளுக்கு முன் ஒரு சிறு குறிப்பும் தருகிறார். தனது பதிவுகளுக்குக் கிடைக்கும் கருத்துக்களையும் மற்றும் பதிவுலக நிகழ்வுகளையும் மறுபடியும் எழுதக் கருப் பொருளாய் எடுத்துக் கொள்கிறார். யாரேனும் விமர்சித்து விட்டாலும் சிலசமயம் கோபித்து அதற்கும் கவிதை எழுதித் தள்ளி விடுகிறார். பெரும்பாலும் காதல் கவிதைகள் எழுதுவதால் ஒரு இளமையான கூட்டம் இவர் பதிவுகளில் சுற்றிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

எல்லோரும் கவிதைகளுக்குக் குறிப்பு எழுத வேண்டும் என்பதில்லை. ஆனால் (“கோனார்” உரை போல 🙂 ) சில கவிதைகளின் விளக்கங்கள் படிக்கும் போது (தான்) (இன்னும்) அருமையாகப் புரிகிறது. கால் மிதித்து உருளும் சானைக்கல்லில் கத்தியைத் தீட்டுகையில் எழும் தீப்பொறி – அப்பா என்ன ஒரு சக்தி வாய்ந்த உவமை. நமது கண் முன்னே அந்தக் காட்சியைக் கொண்டு வந்து நிறுத்தும் திறமை சுந்தரவடிவேலுவிற்கு இருக்கிறது.

கவிதைகளில் மட்டுமல்ல. சிலர் தமது உரைகளிலேயே அருமையான உவமைகளைத் தேக்கி வைக்கின்றனர். கப்பல்லே பொண்ணு வருதுன்னா எனக்கொண்ணு, எங்கப்பனுக்கு ஒண்ணு’ன்னு சொல்ற மாதிரி என்று படிக்கையிலேயே அட என்ன அருமை என்று ஒரு உற்சாகம். இப்படி வேடிக்கையான எழுத்துக்களுக்குப் பெயர் போன ஓசியிலே மீன் பிடிக்கிற காசி ஒரு கவிதை எழுதினால் எப்படி இருக்கும் ? (எல்லோரும் ஒரு ஓ போடுங்க!)

குறிப்பிடத்தக்க இன்னொரு கவிதைப் பதிவு – புதிதாய் இந்தப் பதிவுலகில் பிரவேசித்திருக்கிற பிரேம் நிமல். ஆச்சரியத்தக்க வகையில் நான் கேட்கும் சில இலக்கணங்கள் இவரின் அம்மா அப்பா பதிவில் இல்லை எனினும் இவரது பதிவில் இருக்கிறது ! அங்கங்கே இவரின் வண்ணப் படங்களுடனே இருக்கும் கவிதைப் பதிவுகள் எழுத்துலகில் இவரது பயணத்திற்கு நல்ல தொடக்கமாய் அமையும். அடுத்த தலைமுறை தயாராகிக் கொண்டு இருக்கிறது என்று மகிழ்ந்து கொள்ளலாம். மூளை எங்கே என்று இவர் எழுதி இருப்பதைப் படித்துப் பாருங்கள். எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிவதில் எதையோ சொல்லாமல் சொல்வது போலில்லை? (ஒரு வேளை “உன் மூளை எங்க போச்சு?” என்று இவரது அம்மா ஏதேனும் திட்டியதற்கு இப்படி இடக்காக பதில் தந்திருப்பாரோ? :-)) இவருக்கு ஒரு சின்ன அறிவுரை. நிறையப் படியுங்கள். நிறைய எழுதுங்கள். முயற்சியும் பயிற்சியும் எல்லாவற்றிற்கும் முக்கியம். வாழ்த்துக்கள். இவருக்கு என்ன வயது இருக்கும் என்று யூகிக்கிறீர்களா பார்க்கலாம். ஆனால் நிச்சயம் இனிமேல் நான் தான் சின்னப் பையன் என்று சுவடுகள் சங்கர் சொல்லிக் கொள்ள முடியாது. சங்கர், கிட்டத்தட்ட எனக்கும் உங்களுக்கும் இருக்கும் வயது வித்தியாசம் உங்களுக்கும் இவருக்கும் இருக்கிறது.

சங்கரின் பதிவுகளும் இனிமை. அருமை. சிறு வயது தான் என்றாலும் எழுத்திலே உரம் அதிகம். செய்வது தவறு எனில் அது சங்கராச்சிரியராய் இருந்தால் தான் எனக்கென்ன ? என்று கேள்வி கேட்கும் துணிவான எழுத்து. (சங்கர், உங்கள் பக்கம் வேறு வகையான மதம்பிடித்தவர்களால் அடிக்கடி கடத்தப்படுகிறது – Aaron’s Bible). அது சரி, இன்னும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் உறுப்பினர் ஆகவில்லையா ?

இந்த வயதில் நானெல்லாம் என்ன எழுதுவது என்று தெரியாமல் கிறுக்கிக் கொண்டிருக்க, சங்கர் குவாண்டம் இயற்பியல் பற்றி விரைவில் எழுதப் போகிறார். (சங்கர், இனிமே நீங்க எழுதித் தான் ஆகணும், தப்பிக்க முடியாது!). ஆமாம், அப்படியே ஒரு கவிதையும் எடுத்து விடுங்க பார்ப்போம்.

கவிதை பற்றி எழுதப் போவதில்லை என்று சொல்லிவிட்டு இவ்வளவு எழுதியதற்காக எனது பிராயச்சித்தம் – பழங்காலத்தில் நான் எழுதிய ஒரு நாலு வரிக் கவிதை (?) – இங்கே.

Tags: பொது