இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

என்றும் தமிழ் இனிது வளரும்

March 14th, 2004 · No Comments

வலைப்பூ ஆசிரியர் வாரப் பதவிக்கு அழைப்பு வருகிறது என்று தெரிந்ததில் இருந்து ஒரு பக்கம் தயக்கம். மறு பக்கம் உற்சாகம். இது எழுத்துலகில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருக்கும் பலரும் வந்த இடம், வந்து போகும் இடம். சில சமயம் ஒரு வம்பு மடம். “நானும் இலக்கிய உலகில் எனது மூலையும்” என்று ஏதோ நான் பாட்டுக்கு ஒரு ஓரமாய் விளையாடிக் கொண்டிருக்க, இப்போது “மேடைக்கு வா மகனே” என்று கூட்டம் சேர்ந்து வேடிக்கை பார்ப்பது மாதிரி இருக்கிறது. மெல்லத் தயக்கத்தை உதறிவிட்டு என் முயற்சிகளை முன் வைக்கிறேன். பருந்துகள் நிறைந்த இடம் என்றாலும் உயர உயரப் பறக்க முயற்சி செய்யும் ஒரு ஊர்க்குருவி இது. முதலில் எல்லோருக்கும் என் வணக்கம்.

நிறையச் சொல்லிவிட்டுப் போய்விட்டார் காசி. இப்போது எனக்கு மலைப்பாய் இருக்கிறது. காசியின் அறிமுகம் ஒரு பக்கம் மகிழ்வையும் மறுபக்கம் அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் இருக்க முடியுமா என்னும் பயத்தையும் தருகிறது. (“உங்களத்தானா, இல்ல வேற யாராச்சியும் பத்தியா ?” என்று என் மனைவி கிண்டலடித்துவிட்டுப் போகிறாள்!).

பழங்காலத்தில் இருந்து கணினியுலகில் தமிழார்வமும் தனி முயற்சிகளும் எனக்கு நிறைய இருந்தது உண்மை தான். ஆனால் எனது சாதனைகள் எல்லாம் அவ்வளவு தான். ஒரு பயனர் என்னும் வரையில் தான். வளர்பாதையில் அதுவும் ஒரு முக்கியமான அம்சம் தான். ஆனால், அதைவிட அல்லும் பகலுமாய் உழைப்பைத் தந்து ஆரம்ப கால நிரலிகளையும், எழுத்துருக்களையும், விசைப்பலகைகளையும், இன்ன பிற வித்தைகளையும் உருவாக்கி அத்தனையையும் தமிழ் உலகிற்குத் தானமாய்த் தாரை வார்த்த அந்த அன்பு நெஞ்சங்களின் முக்கியத்துவம் மிகவும் பெரிது.

ஒவ்வொரு கால கட்டத்திலும் இப்படி உருவாகிய சில வளர்ச்சிகளை வைத்துப் பார்த்த போது பல சமயம் “ஆஹா… அடுத்த நூற்றாண்டின் சவால்களைச் சந்திக்கவும் அவற்றைத் தாண்டி வளரவும் என் தமிழ் தயாராகவே இருக்கிறது”, என்று ஒரு புறம் எனக்குள் மகிழ்ச்சி கொப்பளிக்கும். (2000க்கு முன்பு). அந்தப் பாதையில் இன்னும் நாம் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறோம் என்பதற்கு இன்று விரிந்திருக்கும் இந்த வலைப் பதிவு உலகமே ஓர் சான்று.

இந்த வளர்ச்சி இனி வரும் நாட்களில் இன்னும் பெருகும். நுட்ப வளர்ச்சியில் ஒரு முதிர் நிலையை நெருங்கிக் கொண்டு இருக்கிறோம் என்று தோன்றுகிறது. இனிக் கணினியுலகில் வரப் போகும் நுட்பங்கள் எல்லாவற்றிலும் உடனுக்குடன் தமிழ்ப் பிரதிகளும் கிடைக்கும். நுட்பங்கள் மட்டுமல்ல எழுத்துக்களும் தொடர்ந்து தழைத்தோங்கி வருவதைக் கண் கூடாகப் பார்க்க முடிகிறது. ஒரு சிறுவனாய் இருந்த போது பெரியவர்களின் எழுத்தைப் படித்திருக்கிறேன். வியந்திருக்கிறேன். இன்று என் வயதொத்த பலர் எழுதும் நடையில் மயங்குகிறேன். தலைமுறைகள் மாறினாலும் தமிழுக்குப் புதல்வர்கள் தோன்றியவண்ணம் இருப்பார்கள். “மெல்லத் தமிழ் இனிச் சாகும்” என்கிற ஆரூடங்கள் எதையும் நம்பாதீர்கள். “என்றும் தமிழ் இனிது வளரும்” என்று நேர்மறைச் சிந்தனைகள் கொண்டு செயல்படுவோம். அடுத்த தலைமுறைக்குத் தீனி போடவும் எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி உருவாவதற்கு இந்த வலைப் பதிவுகளும் ஒரு பயிற்சிக் களமாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Tags: தமிழ் · பொது