இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

சில திருத்தங்களும் சீர்திருத்தங்களும்

March 3rd, 2004 · 14 Comments

வலையில் வலம் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று எனக்கு உரைத்தது. கம்ப்யூட்டரின் தமிழ்ப்பதத்தை நான் கணிணிஎன்று தான் இத்தனை நாட்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் பலர் அதனைக் கணினிஎன்று ஈற்றெழுத்தை இரண்டு சுழியாக்கி இருந்தார்கள். எதுசரி? எங்கிருந்து எப்போது ஏன் நான் மூன்று சுழி’ணி’ யைப் பாவித்து வருகிறேன்? தெரியவில்லை. ஒரு சின்னத் தேடல் ஆய்வு செய்வோம் என்று கூகிளில் சென்று இரண்டு வடிவத்தையும் உள்ளிட்டுத் தேடினேன். ஆகா, இதுதான் யூனிகோட்டின் சுகம். இரண்டு வடிவங்களும் பயன்பாட்டில் இருந்தாலும் பெரும்பாலும் கணினி என்பது தான் அதிகமாக உள்ளது. மூன்று சுழிக் கணிணிக்கு கூகிள்இரண்டு பக்கங்களும், இரண்டு சுழிக் கணினிக்குஇருபத்தெட்டுப் பக்கங்களும் தந்தது. இதற்கிடையில் இன்னும் சிலர் கணனி என்றும் கணணி என்றும் பாவிக்கின்றனர் என்றும் தெரிந்தது. ஆனாலும், இவ்விரண்டிற்கும் கூட கூகிள் இரண்டு பக்கங்களைத் தாண்டவில்லை. இந்தக் கடைசி இரண்டும் சரி என்று எனக்குத் தோன்றவேயில்லை.


தமிழ் அகராதி ஒன்றில் தேடினேன். கணிப்பொறி என்று இருந்தது. நீட்டப் பெயரான இதில் பெரிதும் குழப்பம் இல்லை. ஆனால், சுருக்கப் பெயர் தான் மேற்கண்டவாறு நான்கு வகைகளாய் வழங்கப் படுகிறது. வேறு பெரிய ஆய்வு ஏதும் நான் செய்யவில்லை. ஆனால் உள்மன உணர்வு மூலமும், மேற்சொன்னபடி கூகிள் தேடலில் வென்றதாலும் ‘கணினி’ தான் சரியான சுருக்கப் பெயர் என்று எனக்குத் தோன்றுகிறது. அதனால் நானும் இனி அப்படியே பாவிக்கப் போகிறேன்.

நிற்க. இப்படியான பயன்பாட்டு முறையில் ஒன்றை நானே திருத்திக் கொள்கிறேன். சரியோ தவறோ எது சக்தி வாய்ந்ததோ அது நிலைக்கும். டார்வினின் சித்தாந்தம் இங்கும் செல்லும். தமிழ் எழுத்துக்களோ, ஒலி வடிவங்களோ, இலக்கணமோ எதுவும் இப்படிப்பட்ட பெரும்பாலான மக்களின் பயன்பாட்டு முறைகளை ஒட்டியே நிலைக்கும் அல்லது நில்லாமல் போகும்.

தமிழில் சீர்திருத்தம் பற்றி ஒரு இழை வலைப்பதிவுகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. சில சமயம் என் குடும்பப் பெயராகவும் சில சமயம் என் முதல் பெயராகவும் குழப்பிக் கொண்டிருக்கிற, ‘ரா’ வில் ஆரம்பிக்கிற என் அப்பாவின் பெயருக்கு முன்னாலே ஏன் ஒரு இகரம் போட வேண்டும் என்று காசியின் பதிவு ஒன்றில் நான் கேள்வி கேட்டதை ஒட்டி எழுந்த சிந்தனைகள். இலக்கணப்படி அது அப்படித்தான் எழுத வேண்டும் என்ற பதில் தான் எனக்குக் கிடைத்தது. ஆனால் எனது கேள்வி இன்னும் ஒரு அளவு ஆழமானது. தொன்று தொட்டு வரும் ஏதோ ஒரு விதியினால் தான் இம்முறை என்பது எனக்கும் தெரிந்திருக்கிறது தான். எனது கேள்வி எல்லாம் அந்த விதி ஏன் உருவானது ? அதன் அடிப்படை என்ன என்று யாருக்காவது தெரியுமா என்பது தான். அப்படித் தெரியாத பட்சத்தில், அல்லது காரணம் தெரிந்து அது இந்தக் காலத்துக்குச் சரியான காரணமாய் இருக்க முடியாது என்று உணரும் பட்சத்தில், இனி நான் அந்த விதியை விட்டுவிட்டு ரா.செல்வராஜ் என்றே எழுதலாமே என்கிற எண்ணம் தான். உண்மையில் இப்படி எழுதுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் தெரியவில்லை. அதனால் இனிமேல் ரயில் ரசனை ரசிகன் ராவணன் இப்படித் தான் எழுதப் போகிறேன். ஏற்கனவே யாரும் இரஞ்சனி, இரம்பா என்று எழுதுவதாய் நான் அறியேன். ரம்பைக்கு ஒரு நீதி, ராமசாமிக்கு ஒரு நீதியா ?

இங்கே நான் என்னுடைய எண்ண ஓட்டத்தைத் தான் குறிப்பிடுகிறேனே தவிர இனி எல்லோரும் இப்படித் தான் எழுத வேண்டும் என்று கூறவில்லை. பிரபு (இ-இல்லாத)ராஜதுரை கூறியதைப் போல, “மாற்றங்கள் இயல்பாக நிகழ வேண்டும்” என்று நானும் நினைக்கிறேன். சக்தி உள்ளது நிலைக்கும். உங்கள் கண்ணோட்டத்தில் ர/ரா வுக்கு முன் இகரம் வேண்டுமானால் பாவித்துக் கொள்ளுங்கள். ஆனால் என்னுடைய எண்ண ஓட்டத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு வேறு கருத்து இருந்து அதை என்னோடு பகிர்ந்து கொள்ள விரும்பினால் கூறுங்கள்.
பிரபுவின் கருத்தில் இருந்து இன்னும்:

“கயிறினை இரண்டு பக்கமும் பிடித்து இருபாலரும் இழுக்க வேண்டும்…எந்தப் பக்கம் பலமிருக்கிறதோ அந்தப் பக்கம் போய் விட்டுப் போகிறது. இராமன் என்றுதான் எழுத வேண்டும் என்று கூறுபவர்களை விதியை தளர்த்துகிறோம் என்று ஒதுக்கி விட முடியாது. அவர்கள் ஒரு பக்கம் இழுக்கட்டும். மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அதை யாரும் தடுக்க முடியாது.”

காசியின் பதிவின் முடிவுரையாய் இப்படிக் கூறுகிறார். ஆனால் தமிழின் அடுத்த பதிப்பில் சேர்க்க வேண்டும் என்று யாரைக் கேட்கிறார் என்று தெரியவில்லை. அடுத்த பதிப்பு என்று அதிகாரபூர்வமாய் வெளியிடும் நிலையில் யாரும் இல்லை. தமிழக அரசு எடுத்துச் செய்தாலும் கூட அது தான் அமையும் என்பது நிச்சயம் இல்லை. அதிகாரபூர்வமான TAM/TAB குறியீடுகளை விட அதிகம் பயன்படும் யூனிகோடே நிலைக்கும். அதனால் அவருக்குப் பிடித்ததை அவர் பயன்படுத்தட்டும். பரவலான பயன்பாட்டில் மாற்றங்கள் இயல்பாக ஏற்படும். சக்தி வாய்ந்தது வெல்லும்.

“கீழ்க்கண்ட முன்னேற்றங்கள் தமிழின் அடுத்த பதிப்பில் சேர்க்கப்படுதல், தமிழ் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரமாண்டு தழைக்க பேருதவியாக இருக்கும் என்று தோன்றுகிறது:
– ர, ல, ய, போன்ற எழுத்துக்கள் சொல்லின் முதலில் வரத் தடை நீக்கம்
– அன்னிய மொழியிலிருந்து உருமாற்றம் செய்யப்படும் பெயர்ச்சொற்கள் மெய்யெழுத்துக்களில் தொடங்குதல் அனுமதி
– ஏற்கனவே புழக்கத்தில் உள்ள வடமொழி எழுத்துக்களின் மேல் துவேஷம் நீக்கல்
– க, ட, ப, த போன்றவை சார்ந்த ஒலிகளில் இன்னும் கூடுதல் எழுத்துவடிவங்கள். (குறைந்தது ka/ga, da/ta, pa/ba, tha/dha வேறுபடுத்திக்காட்டல்) ”

இவை பற்றிய எனது கருத்துக்கள்:

– ர பற்றி மேலே பார்க்க. ல, ய, போன்றவை ஏற்கனவே பல இடங்களில் முதல் எழுத்தாய் வர ஆரம்பித்து விட்டது என்று நினைக்கிறேன். திருப்பதிப் பதார்த்தத்தை யார் இலட்டு என்று எழுதுகிறார்கள் ?
– அந்நிய மொழிக்குப் போவானேன். சில பேர் ப்ரியமுடன் என்று தமிழையே அப்படித் தான் எழுதுகிறார்கள். அதுவும் நன்றாகத் தான் இருக்கிறது. தவறில்லை – எழுதலாம்.
– எனது பள்ளித் தமிழாசிரியர் ஒருவர் எனது பெயரை செல்வராசு என்று எழுதச் சொன்னாலும் மாற்றத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் எனது பெண்கள் இருவருக்கும் வட மொழி எழுத்துக்கள் இல்லாத பெயராகத் தான் வேண்டும் என்று அந்தக் கால கட்டத்தில் இருந்த கண்ணோட்டத்தில் பார்த்துக் கொண்டேன். இப்போது அப்படி ஒரு உறுதி இல்லை என்றே தோன்றுகிறது.
– (க, ட, ப, த…) இது பற்றி எனக்கும் ஒரு உறுதியான கருத்து இப்போது இல்லை. மெய்யப்பன் கருத்தே எனக்கும். “நிச்சயம் வேண்டும் என்று சொல்லமுடியாது, ஆனால் தேவையைக் கருதி ஆராய்வது நல்லது தான்.”

பி.கு. பிரபு ராஜதுரை, மெய்யப்பன் கருத்துக்களும் காசியின் இந்தப் பதிவில் இடம் பெற்றிருக்கின்றன.

Tags: தமிழ்

14 responses so far ↓

  • 1 Badri // Mar 4, 2004 at 6:03 am

    கணினி vs கணிணி -> ஜெயபாரதி (ஜெ.பி) எழுதிய ஒரு புத்தகத்தில் [இணையத்தில் அவர் எழுதியதைத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது] இதைப்பற்றி எழுதியுள்ளார். அப்படியானால் இது அகத்தியம் ஆவணப்பகுதியில் இருக்கும். தமிழ்ச்சொற்களில் ‘ணி’க்கு அடுத்து வருவது இரண்டு சுழி சமாச்சாரமாகவே இருந்து வந்துள்ளது. பல எடுத்துக்காட்டுகள் தருகிறார். எனவே ‘கணினி’தான் சரியானது என்கிறார். நானும் தெரிந்துகொள்ளுமுன்னர் பல இடங்களில் கணிணி என்று பயன்படுத்தியுள்ளேன். ஆனால் இப்பொழுது கை தானாகவே கணினி என்றுதான் எழுதுகிறது.

  • 2 Kasi // Mar 4, 2004 at 11:03 am

    செல்வராஜ்,

    நான் இங்கு கொஞ்சம் தாமதம். மன்னிக்க.

    இன்று என் வலைப்பதிவில் ஒரு மறுமொழியாக நானும் கிட்டத்தட்ட இதே வகையில்தான் எழுதியுள்ளேன். முதல் மூன்று விஷயங்களும் ஏற்கனவே நடைமுறைக்கு வந்தாயிற்று. அவற்றை அங்கீகரித்துவிடலாம். அதற்கு யாருக்கு அதிகாரம் இருக்கிறது? தெரியவில்லை 🙁

    நாலாவது ஒரு யோசனை. பலரும் விவாதிக்கவே. ஆனால் அதுபற்றி சிந்திப்பது நல்லதென்று தோன்றுகிறது.

    ‘கணினி’ என்னவோ என்னைக் குழப்பவில்லை. (தாமதமாக கணினித்தமிழ் அறிமுகமானதால் கிடைத்த பலன்) வாய்விட்டு சொல்லிப்பாருங்கள் ‘கணிணி’ எவ்வளவு கடினமாயிருக்கிறதென்று தெரியும்.

    அடுத்த பதிப்பு என்றது ஒரு கற்பனை. அதாவது இன்ரைக்கு நாம் காணுவது இப்படியே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்திருக்காது என்பதை லேசாக இடித்துரைக்கும் ஒரு சீண்டல், அவ்வளவே. ஒருவேளை உண்மையான ஆர்வமும் நேர்மையும் உள்ள ஒரு தமிழக அரசு, இவற்றையெல்லாம் ஆராய்ந்து னெறிப்படுத்தினால் அடுத்த பதிப்பு வரலாம். அப்போது குழந்தைகளுக்குப் தொடக்கப்பள்ளியிலேயே இந்த திருத்தங்கள் போதிக்கப்பட்டால் விரைவில் (ஒரு 10-20 வருடத்தில்) பயனுக்கு வர வாய்ப்பிருக்கிறது.

    அன்புடன்,
    -காசி

  • 3 Dubukku // Mar 4, 2004 at 1:03 pm

    உங்கள் பள்ளி பற்றிய வலைபதிவுக்கு இங்கு கருத்து தெரிவிப்பதற்கு மன்னிக்கவும். எனக்கும் ஒரு செல்ல மகள் இருக்கிறாள். இவ்வளவு மெதுவாக ஆரம்பித்து மெதுவாக சொல்லிக் கொடுத்தால் இந்தியா போனால் அவர்களுக்கு பிரசனையாக இருக்காதா என்று ஒரே குழப்பமாக இருக்கிறது. அங்கு அவர்கள் எங்கோ இருப்பார்கள். இவர்கள் சற்று பின்தங்கி இருக்க மாட்டார்களா?

  • 4 Shankar // Mar 4, 2004 at 1:03 pm

    டார்வின் கோட்பாடுதான் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அதுதான் நிலைக்கும். நம் பதிவுகளில் நமக்குச் சரியெனத் தோன்றும் மாற்றங்களைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். அப்போதுதான் மாற்றுக்கருத்துக்களும் விவாதங்களும் தொடர, மெல்ல மெல்ல அவை அங்கீகாரம் பெறலாம். (கவலைப்படாதீங்க அண்ணே! என் பதிவுல சொன்ன வெவகாரமான மாற்றமெல்லாம் பண்ணிட மாட்டேன் :-))

  • 5 Balaji // Mar 4, 2004 at 5:03 pm

    ‘கணி’ என்று சுருக்கிவிட்டதாக எங்கோ படித்தேன். அது இன்னும் எளிதாக இருக்கிறது.

  • 6 Anonymous // Mar 5, 2004 at 10:03 pm

    பாலா, ‘க’ என்பது இன்னும் எளிதாக இருக்கிறதே:-))
    கஷ்டகாலம், என்னவென்று தெரியாமலே நான் இது வரை கணணி என்றே நினைத்து வந்திருக்கிறேன். கணினி சரியாக வருகிறது…எவ்வாறெனினும் மொழி வளர்ச்சியில் பெரும்பான்மையோர் எதை உபயோகிக்கிறார்களோ அதுவே தவறான பதமெனினும் வழக்கத்துக்கு வந்து விடும்.

  • 7 செல்வராஜ் // Mar 6, 2004 at 6:03 pm

    டுபுக்கு, மகள் பள்ளி பற்றி நீங்கள் கூறுவது சரிதான். இது குழப்பமான விஷயம் தான். ஆனால் காலப் போக்கில் இந்த ஒரு வருடத் தாமதம் பெரும் வித்தியாசம் தராது என்று நினைக்கிறேன். அதைவிட, இங்கிருப்பதால் கட்டாயம் ஐந்து வயதுக்கு முன்னர் பள்ளிக்கு அனுப்ப முடியாது. இந்தியாவில் நண்பர் குழந்தைகள் அந்த வயதில் முதல் வகுப்பிலோ அதையும் தாண்டியோ இருப்பதையும் பார்த்தேன்.

  • 8 prabhu // Mar 7, 2004 at 11:03 pm

    the earlier posting without the sender’s name is mine:-)

  • 9 -/r. // Mar 16, 2004 at 4:03 pm

    பத்ரி சொல்லும் கணிணி எதிர் கணினி சங்கதி தமிழ். இணையத்திலே வந்தது. இதற்கு முன்னும் பின்னும் பல கருத்துகள் பேசப்பட்டன. நான் கணணி என்பதையே பயன்படுத்துகிறேன். ஒரே காரணம், கணினி, கணிணி பேசப்படுமுன்னரே, இந்த வழக்கு நெடுங்காலமாக இலங்கையிலே எங்களுக்குக் கற்றுத்தரப்பட்டது. (இதே காரணமே நேர்காணல் என்ற சொல்லை நான் பயன்படுத்தாமல், செவ்வி என்று இன்னமும் பயன்படுத்துவது) அதே பயன்பாடு. ஒரு முறை நா. கண்ணன் கணணி என்று எழுதியதற்குத் தமிழ்.இணையத்திலே கோ என்பவர் “கணிணி கணிணி கணிணி” என்றே காட்டமாகப் பதில் எழுதினார். கணக்கிடுவதால் கணனி கணிப்பிடுவதாற் கணிணியென்று பகிடி பண்ணியது ஞாபகமிருக்கிறது. கணிப்பொறி என்றே விடாமல் சுஜாதா கணிணி/கணினி பயன்பாடு வந்தது தெரிந்தபின்னும் எழுதிக்கொண்டிருக்கின்றார் என்றும் அந்த நேரத்திலே (97) தமிழ்.இணையத்திலே எழுதவும்பட்டது. கணி என்பது வினைச்சொல்லாகவோ பெயராலணையும் வினையாகவோ மட்டும் வரலாமோ? (வேண்டுமானால், கவிதைச்சந்ததுக்காக சுருக்கிக்கொள்ளலாம்;-))

  • 10 செல்வராஜ் // Mar 17, 2004 at 9:03 pm

    நன்றி ரமணீதரன். இதற்குப் பின்னால் இவ்வளவு வரலாறு இருக்கிறதா ? இடையில் சில வருடங்கள் (96-99) சரியான இணையத் தொடர்பு இல்லாத இடத்தில் இருந்துவிட்டேன். பல வளர்ச்சிகள்/விவாதங்கள் தெரியாமல் போய்விட்டது.

  • 11 கலாநிதி சி. மகேசன் // May 11, 2004 at 12:05 am

    [[I am writing this in Engish because the unicode (with Latha on XP ) does not seem to come up properly in this text-box “comments”.]]

    In Sri Lanka for more than twenty years the word kaNani has been used in tamil text and dailys, and still in use, eventhough some dailys has started using “kaNini”. The word “kaNani” was coined by the great poet and writer Mr R Murugaiyan. The Glossary committee of the Jaffna university also adopted the same word for Computer. In the university text we use “kaNani”.
    க ண னி
    =====================================

  • 12 செல்வராஜ் // May 11, 2004 at 9:05 am

    உங்கள் கருத்துக்கு நன்றி கலாநிதி. இப்போது என்னைக் குழப்பி விட்டீர்கள் – கணனி, கணினி இரண்டில் எதைக் கொள்வது என்று. இப்போதைக்கு இரண்டையும் சரி என்று எடுத்துக் கொள்கிறேன். இன்னும் பெரும்பாலும் கணினி என்றே பாவிக்க உத்தேசம்.

  • 13 கண்ணனின் வலைமொட்டுகள் // Mar 8, 2004 at 4:03 am

    பின்தொடருகிறார்கள் ஜாக்கிரதை

    பின்தொடருதல் பற்றி தெரிந்‌துகொள்ளவேண்&#…

  • 14 இரா. செல்வராசு // Oct 25, 2013 at 7:11 pm

    கடந்த பத்தாண்டுகளில் எனது கருத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. தமிழ் இலக்கணத்தை இன்னும் சற்றுக் கூடுதலாகத் தெரிந்து கொள்ளவும் தமிழ்ச்சான்றோர் பலரோடு கலந்துரையாடவும் (இணைய வழி எழுத்தில்) முடிந்திருக்கிறது.

    தமிழ் இலக்கணமும், எழுத்து சொல் உச்சரிப்பு போன்றவையும் ஒரு முறையின் காரணமாகவே இவ்வாறு அமைந்திருக்கின்றன என்று ஐயச்சார்பை (benefit of the doubt:-)) தொன்மைத் தமிழின் பக்கமாகத் திருப்பிக் கொள்கிறேன். அதனால், *இயன்றவரை* கிரந்தம் விலக்கியும், ரகரத்தில் சொல்லைத் தொடங்காமலும் தான் எழுதப் போகிறேன்.

    Exonym பற்றிச் செல்வா (கனடா) பல இடங்களில் சொல்லி இருக்கிறார். பிறமொழிச் சொற்களைத் தமிழின் இயல்புக்கேற்ப உள்வாங்கினால் போதும். கிரந்தம் போட்டே எழுதவேண்டும் என்பதில்லை.

    செல்வாவும், பெரி.சந்திராவும் எழுத்துப்பிறப்பு (ஒலிகள்) பற்றிக் கூறக் கேட்டிருக்கிறேன். அதனால் ஏன் வல்லினமெய்யிலும், வகர மெய்யிலும் சொல் முடியாது என்பதைப் புரிந்து கொள்கிறேன். அதுபோன்றே ரகரத்திலும் ஒரு சொல்லைத் தொடங்கி ஒலிக்க முடியாது. (என்னால் முடியுமே என்பாரைக் கூர்ந்து கவனிக்கச் சொன்னால் ஒரு உயிரொலியோடு தொடங்குவதை உணர முடியும் என்பர்).

    பழைய வடிவ யானைக்கொம்பு லை, னை, ணை போன்றவற்றிலும் ஓர் அழகும் அவற்றிற்கான தேவையும் இருக்கிறது (இருந்திருக்கிறது) என்று மணிவண்ணன் போன்றோர் சொல்லும் கருத்தையும் கவனிக்கிறேன்.

    பொழுதுபோக்குக்கு மட்டுமல்லவென்று எல்லாப் புலங்களிலும் தமிழில் எழுத முடியும் என்று எழுதிக் காட்டியும் இறைஞ்சியும் வருகிற இராம.கி போன்றோரைப் போற்றுகிறேன். இதையொட்டி விக்கிப்பீடியா போன்ற கலைக்களஞ்சியத்தில் ஒரு பொது நன்மைக்காக உழைக்கிற எல்லோரையும் வாழ்த்துகிறேன்.