இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

கொள்ளுப் பருப்பு

March 1st, 2004 · 6 Comments

குதிரைக்குப் பிடிக்கும் என்பார்கள். ஆனால் நான் குதிரை இல்லையே ! சிலருக்குச் சில வகைகளில் சமைத்தால் தான் இது பிடிக்கும் என்று கேட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு எந்த வடிவமானாலும் கொள்ளுப் பருப்புப் பிடிக்கும். சமைப்பதற்காக வேக வைத்திருப்பார்கள். தண்ணீரை இறுத்து ஊத்தி விட்டுக் குழம்பு செய்யவென்று தனியே வைத்திருக்கும் பருப்பைத் திருடி இளஞ்சூட்டோடு வாயில் போட்டுக் கொள்ளச் சுவையாய் இருக்கும். முழுவதுமாய் வடியாதமெலிதாய் உப்புக் கலந்த கொள்ளு வெந்தநீர் நாவின் நுனியில் முதலில் பட்டு அப்படியே ஓரங்களில் படர்ந்து போவது தனிச் சுவை. ‘பொருபொரு’ (அ) ‘நறநற’என்று அரைத்து வைத்தாலும் சரி, பசையாய் ‘நெகுநெகு’ வென்று சட்டினியாய் அரைத்தாலும் சரி எனக்குப் பிடிக்கும். இறுத்த தண்ணீரில் ரசம் வைத்தாலும் சுவை. எதுவும் செய்யாமல் சும்மா ரெண்டு வெங்காயம் வெட்டிக் கடுகு போட்டுத் தாளித்துக் கொடுத்தாலும் சரி, அப்படியே சாப்பிடலாம்.

என்ன சுவையிருந்தும் என்ன ? எல்லாம் கிடைக்கும் அமெரிக்கத் தேசத்தில் கொள்ளு கிடைப்பது குதிரைக் கொம்பாய் இருக்கிறது. இந்திய மளிகைக் கடைகளில் கூட இது மிகவும் அரிதான பொருளாய் இருக்கிறது. தட்டப் பயிறு போல் இருக்கும் Black Eyed Beans நன்றாகத் தானே இருக்கிறது என்று கொள்ளு மாதிரி என்ன இருக்கிறது என்று பார்த்து வாங்கி வந்தால் masoor daal(?) நாவில் மண்ணு மாதிரி தான் இருக்கிறது.

இங்கில்லாவிட்டால் என்ன ? கொண்டு வருவேன் இந்தியாவில் இருந்து என்று ஊருக்குச் சென்றுவந்த போது வாங்கி வந்தோம் கிலோ இரண்டு. (ஒரு கிலோ தான் வாங்கினோம், இருந்தாலும் மோனையாய் நன்றாக இருக்கிறது என்று இரண்டாகி விட்டது!!). மற்ற சுமையோடு இதையும் காரில், இரயிலில், வேனில், விமானத்தில், மீண்டும் காரில் ஏற்றிப் பத்திரமாய்க் கொண்டு வந்து சேர்த்தோம் இந்தக் குளிரில். வீட்டிலும் இன்னும் பத்திரமாய்ப் போட்டு வைக்கலாம் என்று பிரித்து இல்லத்தாள் ஒரு டப்பாவில் நேற்றுக் கொட்டி வைக்க, அட எப்படி வந்தது இத்தனை புழு ? கொட்டிக் காய வைக்க வெய்யலுக்கு எங்கே போவது ? கொட்டு குப்பைத் தொட்டியில் என்று போனது கொள்ளு எல்லாம்.

கொள்ளு கொள்ளு என்று ஜொள்ளு விடாமல், கோயமுத்தூர் ரோட்டில் சுற்றிய போது நுழைந்த புத்தகக் கடையில் பார்த்த பல வருடங்களாக வாங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த கிரியா தமிழ்-தமிழ் அகராதியையாவது வாங்கி வந்திருக்கலாம்.

Tags: வாழ்க்கை

6 responses so far ↓

  • 1 Pari // Mar 1, 2004 at 11:03 pm

    மைக்ரோவேவ்-ல போட்டு புழுவக் கொன்னுருக்கலாமே 🙂

  • 2 காசி // Mar 2, 2004 at 10:03 am

    அட, அங்கேயும் கொள்ளுப் பருப்பு ஆசையா? டாப்ஸ் கடையில் கொள்ளு மாதிரி ஒண்ணு கிடைக்குதே அதை வாங்கி ஆசையைத் தீர்த்துக்கலாம்.

    குதிரையாரே, கொள்ளு தின்னு வளர்ந்தீரா, லொள்ளு தின்னு வளர்ந்தீரா?

  • 3 Anonymous // Mar 3, 2004 at 3:03 am

    மசூர் தால்…சொல்லும் போது ஏதோ மாதிரி இருந்தாலும், மும்பையில் பிரபலம். எனக்கும் பிடிக்கும். கொள்ளூ எப்படியிருக்கும்?

  • 4 பிரபு ராஜதுரை // Mar 3, 2004 at 3:03 am

    மசூர் தால் பதில் எழுதியது நான். முகமூடி ஏதுமில்லை:-)

  • 5 கண்ணன் // Mar 4, 2004 at 5:03 am

    கொள்ளு தான் கிடைக்கவில்லை, அதன் படமாவது கிடைக்கிறதே 🙂
    http://www.supernet.com.bo/sefo/sefo612.htm
    (இது கொள்ளின் குடும்பப்படம்)

  • 6 கண்ணன் // Mar 4, 2004 at 5:03 am

    http://www.supernet.com.bo/sefo/sefo612.htm