இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

“இனிய தோழி சுனந்தாவிற்கு…!” – வலைப் பதிவுரை

February 29th, 2004 · 6 Comments

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் (1993 ஆகஸ்ட்) நான் எழுதிய இந்தக் கடிதத் தொடர் முதலில் Soc.Culture.Tamil என்னும் தமிழுக்கான யூஸ்நெட் செய்திக் குழுமம் ஒன்றில் வெளிவந்தது. என்னுடைய எழுத்து முயற்சியின் வளர்ச்சிக்கு இது ஒரு முக்கிய மைல்கல்.


அப்போதெல்லாம் தமிழ் எழுத்துருக்கள் பரவலாய்க் கிடைக்கவில்லை. கணிணிகளில் தமிழின் ஆரம்ப நடை. தமிழில் இந்தக் குழுமத்தில் எழுத romanized முறையும் பின்னர் மிகச் சிறு மாற்றங்களுடன் கூடிய மதுரை எழுத்து முறையும் தான் இருந்தது. இரண்டு வருடங்கள் கழித்து அந்த ஆங்கில உருவைத் தமிழ் எழுத்துக்களாக மாற்றும் வாய்ப்புக் கிட்டியது. LibTamil என்னும் நிரலித் தொகுப்பும் m2t (மதுரை To Tex) உருமாற்றியையும் பயன்படுத்தி LaTeXல் வாஷிங்டன் தமிழ் எழுத்துருக்கள் கொண்டு தமிழ் வடிவத்தைக் கொண்டு வந்தது பெரும் வேலையாய் இருந்தது. அப்படி வந்ததை ஒரு புத்தகமாக்கி என்னைச் சுற்றிய வட்டத்திற்கு மட்டும் தந்திருந்தேன்.


செய்திக் குழுமத்திலும், சுற்று வட்டத்திலும் கிடைத்த கருத்துக்களும் ஊக்கங்களும் மேலும் என்னை உந்த, இந்தக் கடிதங்களின் இரண்டாம் பாகம் என்று இன்னொரு தொகுப்பை 1995ல் எழுதி முடித்தேன். ஆனால் அதனை எங்கும் வெளியிடவில்லை. என்னைச் சுற்றிய ஒரு பத்துப் பன்னிரெண்டு பேர் மட்டுமே படித்திருப்பார்கள். யாருக்கு இது பயன்பட்டதோ பிடித்ததோ இல்லையோ, எனக்கு ஒரு முக்கியமான பணியைச் செய்ய இந்தக் கடிதங்கள் உதவின. திருமணம் நிச்சயிக்கப் பட்ட பின் இருந்த இடைவெளியில் என்னைப் பற்றித் தெரிந்து கொள்ள இது உதவும் என்று இவற்றை எனக்கு மனைவியாய் வர இருந்தவளிடம் கொடுத்தேன். (இவற்றைப் படித்தும் என்னை மணம் செய்து கொள்ள முன்வந்தாளே!!).

ஒரு தேதியிட்ட கடிதத் தொடராய் அமைந்திருக்கும் இந்தப் படைப்பின் இரு பாகங்களும் இன்றைய வலைப்பதிவுகளுக்கு உகந்ததாய் இருப்பதால் அவற்றைப் பின் தேதியிட்டுப் பதித்து வைக்கலாம் என்று எனக்கு ஒரு ஆவல். இன்னும் ஒரு பத்து பன்னிரெண்டு பேராவது படிக்க முடியுமே! சுரதாவின் யூனிகோடு உருமாற்றியின் உதவியோடு வரும் நாட்களில் அந்தக் கடிதங்கள் வலையேறும். ஓரப் பகுதியில் இருக்கும் சுட்டியை வைத்துக் கொண்டு அங்கு நீங்கள் போகலாம். இதன் முதன் மூல வடிவத்தைப் பார்க்க விரும்புபவர்கள் கூகிள் குழுத்தொகுப்பில் காணலாம்.

இனி அந்த அச்சுப் பதிவின் முகவுரையில் இருந்து பகுத்து எடுத்த பகுதி இங்கே.


‘இனிய தோழி சுனந்தாவிற்கு…!’ என்று அமைந்திருக்கிற இந்தக் கடிதங்கள் எனது சுயசரிதையாக எழுதப் பட்டவை அல்ல; ஆனால் என் சுய அனுபவங்கள் சிலவற்றின் தாக்கம் இவற்றில் இருக்கக் கூடும். இது, பிறருக்கு ‘இப்படிச் செய்ய வேண்டும்’, ‘அப்படித் திகழ வேண்டும்’, என்று அறிவுறுத்தும் வழிகாட்டு நூலும் அல்ல; ஆனால் நான் என்ன செய்ய வேண்டும் என்று சில சமயம் எனக்கு நானே வழிகாட்டிக் கொள்ள இது உதவியிருக்கிறது. இது சரி, அது தவறு, என்று பிறரது செயல்களை மதிப்பீடு செய்யும் நோக்கம் கொண்ட நீதி நூலும் அல்ல இது !
‘சுனந்தா’ என்கிற கற்பனைப் பாத்திரத்தின் மூலம், எனது அனுபவங்கள் சிலவற்றின் பின்னணியில் என்னுள்ளே எழுந்த எண்ண அலைகளுக்குச் சிறிது கற்பனை வர்ணம் பூசி, இங்கே வெளிப்படுத்த ஒரு முயற்சி செய்திருக்கிறேன். கால ஓட்டத்தில், வாழ்க்கை எனும் இந்த நாடக மேடைக்கு இதுவரை வந்து சென்றவர்களும், இனிமேல் வர இருக்கின்றவர்களும் பலர். இடையிலே வந்திருக்கிற நான், என் மனதின் சில எண்ணங்களைச் சக தோழி ஒருவளுடன் கற்பனையில் பகிர்ந்து கொள்கிறேன். அந்தப் பகிர்தலுக்கு எழுத்து வடிவம் தரும் சிறு முயற்சியே இது. சுருங்கக் கூறின், இது “எனது எண்ணக் கிறுக்கல்களின்” இன்னும் ஒரு பரிமாணம். அவ்வளவே !

‘சுனந்தா’ என்கிற இந்தப் பாத்திரப் படைப்பின் அடிப்படையை முதல் பாகத்தின் முன்னுரையில் நீங்கள் காணலாம். முதல் பாகம் எழுதி முடிக்கிற போது இன்னும் ஒரு பாகம் எழுதும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. ஆனால், குறிப்பிட்ட சிலரின் ஊக்கத்தினாலும் உந்துதலினாலும் இரண்டாவது பாகமும் எழுத முற்பட்டேன். இது ஒரு வகையில் எனது கல்வியின் தொடர்ச்சியும் கூட !

இந்தக் கடிதங்களுக்கு மையம் நான். அதனால் இவற்றைப் பற்றிய எனது ஈடுபாட்டிற்கும், உணர்வுகளுக்கும் இணையாகப் பிறர் உணரக் கூடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்த அளவிற்கு யாராலும் ஒன்ற முடியாது தான். இந்த மையத்தை அடுத்து இதனைச் சுற்றி ஒரு வட்டத்தினுள் இருப்பவர்கள் இதனோடு தங்களை அங்கே இனங்கண்டு கொள்ள முடியும். அதனால் இந்நூல் ஒரு ‘தனிச் சுற்றுக்கு’ மட்டுமே. ஆனால் பிறரும் இக்கடிதங்களின் அடிப்படையில் அமைந்திருக்கிற உணர்ச்சிகளோடு ஒன்ற முடியும். அதனால், யாரும் இவற்றைப் படிப்பதையும், பாராட்டும் (!) கண்டனமுமாய்க் கருத்துக்கள் தெரிவிப்பதையும், இந்தப் படைப்பை விமரிசனம் செய்யும் உரிமையை எடுத்துக் கொள்வதையும், இதன் நிறை-குறைகளை அலசுவதையும் நான் ஆட்சேபிக்கவில்லை. உண்மையில், அதனை நான் வரவேற்கிறேன். என்னைச் சுற்றிய வட்டத்தின் விட்டம் நீண்டு வளர வேண்டும் என்பது தான் எனது ஆசையும் !

Tags: கடிதங்கள்

6 responses so far ↓

  • 1 Pari // Mar 1, 2004 at 11:03 pm

    பத்து வருஷத்துலயே ‘அந்தக் காலத்திலெல்லாம்’-னு சொல்ற அளவுக்கு இருக்கு கணினித்தமிழ். இன்னும் பத்து வருஷம் போனா நாங்களும் ‘தாத்தா கதை’ சொல்லலாம் போல இருக்கே 🙂

  • 2 Badri // Mar 2, 2004 at 8:03 am

    இந்தப் பதிவுக்கு trackback இல்லையே? இருந்தால் இதுபற்றிய என் பதிவிற்கு கொடுத்திருப்பேன்.

    soc.culture.tamil இல் எழுதிய வெகு சிலரே இன்று மீண்டும் ‘பொதுக்களத்தில்’ உள்ளனர். SCT பற்றியும், அங்கு நடந்த கணினித்தமிழ் வளர்ச்சி பற்றியும் எழுத விருப்பம்.

  • 3 செல்வராஜ் // Mar 2, 2004 at 1:03 pm

    நன்றி பத்ரி. Trackback சரி செய்து விட்டேன். மறந்துவிட்டேன் போலிருக்கிறது. SCTயும் கணினித் தமிழ் வளர்ச்சியும் பற்றி எழுதுங்கள். பதிந்து வைக்கப் பட வேண்டிய ஒன்று. அங்கிருந்த மற்றவர்களெல்லாம் எங்கே என்று நானும் வியந்ததுண்டு…
    பரி, இந்தப் பத்து வருடங்களில் கணினித்தமிழில் ஏற்பட்டிருப்பது பெரும் வளர்ச்சி தான். சந்தேகமே இல்லை.

  • 4 எண்ணங்கள் // Mar 2, 2004 at 11:03 pm

    அந்த நாள் ஞாபகம் – soc.culture.tamil
    செல்வராஜ் ‘இனிய தோழி சுனந்தாவிற்கு’ என்ற&#3009…

  • 5 P.CHELLAMUTHU // Mar 26, 2015 at 7:04 am

    அய்ய! உங்களை ஒரு சந்தேகம் கேட்கவேண்டும். ஆதன்+அந்தை= ஆந்தை என்பது சரியா? ஆதன்+ தந்தை= ஆந்தை சரியா?

  • 6 இரா. செல்வராசு // Mar 26, 2015 at 8:43 am

    செல்லமுத்து ஐயா, வணக்கம். உங்கள் ஐயம் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் தேடிப் பார்த்ததில் உறவுப்பெயர்கள் பற்றிய தொ.பரமசிவனின் நல்ல கட்டுரை ஒன்று கண்ணில் பட்டது. அதனைப் பாருங்கள்: http://www.koodal.com/article/tamil/ilakkiyam.asp?id=255

    ‘தாய் தந்தை என இப்பொழுது வழங்கிவரும் சொற்களின் மூல வடிவம் ஆய் அந்தை என்பதே. தாய் என்பதைத் தாயம் (உரிமை) என்னும் சொல்லோடு தொடர்புபடுத்தி உரிமையுடையவள் தாய் எனச் சிலர் விளக்கம் தருகின்றனர். ஆய் என்பதே மூலச் சொல். ஆயின் ஆய் (பாட்டி) ஆயா(ய்) என அழைக்கப்படுகின்றன. என் தாய், உன் தாய் என்ற பொருளில் சங்க இலக்கியத்தில் யாய், ஞாய் ஆகிய சொற்களைக் காண்கிறோம். தன் ஆய் தாய் ஆனது போலவே, தன் அந்தை தந்தையாகி இருக்கிறது. எந்தை, நுந்தை முதலிய இலக்கியச் சொற்களை என்+அந்தை, நும்+அந்தை என்றே பிரித்துக் காண வேண்டும். மரூஉ இலக்கணமாக ஆதன்+தந்தை-ஆந்தை எனக் கொள்ளுதும் தவறு. ஆதன் அந்தை எனக் குறிப்பதே சரி.’