இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

அனிடோரி-கிளாட்ரா

January 31st, 2013 · 2 Comments

அனிடோரி-கிளாட்ரா டாலியாண்ணா இசிலீ என்கின்ற அழகு இளவரசியைப் பற்றி எப்போதாவது நீங்கள் அறிந்திருந்தால் உங்களுக்கு நிச்சயமாய் முன்பதின்ம வயதில் பெண்கள் இருந்திருக்க வேண்டும். அதோடு, அவர்கள் படிக்கின்ற ஆங்கிலப் புனைவுகளை நீங்களும் படிக்க எத்தனித்திருக்கலாம் என்பதும் புலனாகும். பிறக்கும் போதே தம் நாவில் தமக்கான பெயர்களைத் தாங்கி வருகிற குதிரைகளும், அக்குதிரைகளோடு பேசத் தெரிந்த இளவரசியுமாக அப்புனைவுலகம் அழகான ஒன்று.

clip_image001அப்படியானதொரு புனைவுலகில் நுழைந்து பார்க்க எனக்கொரு வாய்ப்பினை என் மகள்கள் கடந்த சில ஆண்டுகளாக ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.

அதிலே, மூஞ்சூறு வீரர்களும், அவை போர் தொடுத்து வெல்லும் வில்லத்தனம் நிறைந்த எலிகளும், உலகம் பிரகாசமானது என்று எப்போதும் பேசித்திரிந்து எல்லோருக்கும் உதவும் நாய் ஒன்றும், உலகப் பயணம் கிளம்பிச் செல்லும் தேவதைகளும், இளவரசிகளும், மாய மந்திரங்களும் ஒரு புறம். சாதாரணர்களால் புரிந்து கொள்ள இயலாத தனிச்சிறப்பும் அறிவுமுடைய சிறுவர்கள், ஏழ்மை, தனிமை, உறவின்மையை விடுத்து வாழ்வில் பெறும் வெற்றிகள் என்று இன்னொரு உலகம் மறுபுறம். கிரேக்கக் கடவுள்களின் அரசியலும், சேக்சுப்பியர் காலத்து இரகசியங்களும், அவற்றோடு மல்லுக்கட்டும் இக்காலப் பள்ளிச் சிறார்களுமாய் இன்னொரு உலகம். புதிது புதிதான உலகங்களுக்குள் சென்று அவற்றினின்று மீண்டு நிகழ்வாழ்விற்கு வரப் பிடிக்காத என் பெண்களை அனுதினமும் இரவு படிப்பதை நிறுத்தச் சொல்லி நித்திரைக்கு அனுப்பி வைப்பதும் ஒரு தனிக் கதை தான்.

சுமார் இரண்டு வயது இருக்கையில் அஞ்சல் செலவு மட்டும் பெற்றுக் கொண்டு வால்ட்-டிசுனிக்காரர்கள் அனுப்பி வைத்த எட்டுப் புத்தகங்களையே படி படியென்று படித்துக் கிழித்த போது நிவேதிதாவும் நந்திதாவும் எங்களின் கைகளைப் பிடித்துக் கொண்டே தான் அவர்களின் புனைவுலகினுள் தடம் பயின்றனர்.

clip_image002‘ஹேப்பி பர்த்டே சூ சுனூ’ என்னும் டாக்டர் சூய்சு எழுதிய புத்தகத்தை இன்று அவர்கள் மறந்திருந்தாலும் கூட நாங்கள் இன்னும் மறக்கவில்லை.

இருபது பக்கங்கள் தான் இருக்கும் என்றாலும், படித்து முடித்த இருநொடி நேரத்தில் ‘மீண்டும் படி மீண்டும் படி’ என்று பெரியவள் படுத்தி எடுத்து விடுவாள். சிலசமயம், ஏமாந்த சமயத்தில் புத்தகத்தை ஒளித்து வைத்துவிட்டுக் ‘காக்கா… தூக்கீட்டுப் போயிருச்சு’ என்று இரண்டு வயதுக் குழந்தையிடம் கையை விரித்து ஏமாற்றிய எங்களைப் பற்றிய உங்கள் மதிப்பீடுகளைக் காதுகொடுத்துக் கேட்க நான் தயாராய் இல்லை! 🙂

ஒன்றினைப் போல் மற்றொன்று எப்போதும் இருப்பதில்லை என்று எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கவென்றே எங்களுக்கு அனுப்பப் பட்டவள் இரண்டாமவள். பெரியவளுக்குப் புத்தகங்களுள் உண்டாக்கிய ஆர்வத்தைப் போன்றே சின்னவளுக்கும் படித்துக் காட்டிப் புனைவுலகை அறிமுகப் படுத்தலாம் என்று புத்தகத்தை எடுத்தால், ‘எல்லாம் எனக்கே தெரியும். மூடி வை’ என்றாற் போல எங்களைப் படிக்கவே விடாது தானே புத்தகத்தின் பக்கங்களைத் தலைகீழானாலும் திருப்பிக் கொண்டிருப்பாள் நந்திதா. ஏதோ ஏமாந்த சமயத்தில் ஒன்றிரண்டு பக்கங்கள் படிக்க விட்டிருப்பாள். இன்றும் கூட அவளுக்கு ஏதேனும் சொல்லிக் கொடுக்க இறங்கினால், ‘எல்லாம் எனக்குத் தெரியும் எனக்குத் தெரியும்’ என்று குதிக்கும் இவளை வேறு உளவியல் அடிப்படையில் தான் அணுக வேண்டியிருக்கிறது. பல சமயங்களில் அது முடிவதில்லை என்பது தான் உண்மை.

சிறுவயதில் அவர்கள் படிக்கிற புத்தகங்களைக் கண்ணுற்றும், படித்தும், கூடவே துணையாய் வந்த எங்களுக்கு வளர்பருவத்தில் அவர்களுடைய வேகத்தோடு ஈடு கொடுக்க முடியவில்லை. மிகவும் வசதியானவையும் பயனுள்ளவையுமாக இருக்கின்ற அமெரிக்கப் பொது நூலகங்களில் இருந்து ஒவ்வொரு வாரமும் கிலோக் கணக்கில் தான் புத்தகங்கள் எடுத்து வந்து படிக்கிறார்கள். இந்த ஆட்டத்திற்கு நாம் ஈடுகொடுப்பது எங்ஙனம்?

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களுடனான உலகில் நாமும் சற்றுப் பங்கெடுத்துக் கொள்வோமெனச் சுயமாய் ஓர் சவாலை மேற்கொண்டேன். அவர்கள் ஆண்டு முழுவதும் படித்த புத்தகங்களில் இருந்து தேர்ந்தெடுத்த சிலவற்றை ஆண்டிறுதியில் கிறித்துமசு விடுப்பில் நான் படிக்க முயல்கிறேன் என்று சொல்லி வைத்தேன்.

‘ஹேரி பாட்டர்’ தொடர் புத்தகங்களை முதலில் படிக்கப் பணித்தார்கள். அதனை மெல்ல மெல்லப் படித்து முடிக்க ஆறு மாதங்கள் ஆனது எனக்கு. அந்த மாதங்களில் எனக்கு ஊக்கம் அளித்தும் கிண்டல் செய்தும் தொடர்ந்து என்னைப் படிக்கச் செய்து கொண்டிருந்தார்கள். அதோடு, அந்தப் புத்தகங்களில் வரும் நிகழ்வுகள் எங்களது உரையாடலிலும் சேர்ந்து கொண்டன.

மாயமந்திரப் பள்ளி முதல்வர் டம்புள்டோரைப் போல நானும் அவர்களுக்கு அவ்வப்போது ‘நிவேதிதாவுக்கு ஐம்பது புள்ளிகள்’, ‘நந்திதாவுக்கு நூறு’ என்று வாரி வழங்கிக் கொண்டிருந்தேன். அவர்களோ எனக்குப் புள்ளிகளைக் குறைத்தவண்ணம் நொசிவுத் திசையில் விளையாட்டாய்ச் சென்று கொண்டிருப்பர்.

"Minus 100 points for the appaa!"

அடுத்த ஆண்டுகளில் படித்த (அல்லது, படிக்க வைக்கப்பட்ட :-)) புத்தகங்களில் மக்குத் தந்தைகளாய் அரசர்களும், வீரமகள்களாய் இளவரசிகளும் கதாபாத்திரங்களாக அமைந்திருந்தது தற்செயலான ஒன்றாக எனக்குத் தோன்றவில்லை!

படித்து முடித்தவுடன் எனக்குப் பிடித்திருந்ததா, என்ன நினைக்கிறேன் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் எட்டிப்பார்க்கும். அவர்களது இரசனை என்ன, அது என்னுடையதோடு எப்படித் தொடர்புற்றிருக்கிறது என்பது பற்றி ஓரிரு நிமிடங்கள் பேச்சு வளரும். அவ்வளவு தான்.

"போதும்ப்பா… தொந்தரவு பண்ணாதீங்க. எங்களுக்கு வேறு வேலை இருக்கு. இந்தாங்க, அடுத்த புத்தகம். இதப் படிங்க", என்று நகர்ந்து விடுவார்கள்.

அவர்களுடனான உலகில் தான் மெர்லின் கதைகளும், மன்னர் ஆர்த்தரின் கதைகளும் எனக்குப் பரிச்சயமாயின. சிலசமயம் ஆர்வ மிகுதியில் இக்கதைகளையும் கதைமாந்தர்களையும் பற்றியும் இணையத்திலும் விக்கியிலும் தேடித் திரிந்திருக்கிறேன். வார இறுதியின் ஓர் நாள் இரவுணவுக்கு மீனோடு மெர்லின் தொலைக்காட்சித் தொடர் பார்ப்பதும் ஒரு குடும்ப வழக்கமாகவே ஆகிவிட்டது.

clip_image003"அப்பா… Mysterious Benedict Society படிங்கப்பா. உங்களுக்குப் பிடிக்கும்"

"ஏம்மா? ஏன் எனக்கு அது பிடிக்கும்?"

"அதுல ஒரு தமிழ் Character வருது. அதுனால தான்", என்று பூரிப்போடு பார்ப்பார்கள். "மிஸ் பெருமாள்னு ஒரு ட்யூட்டர். ஒருத்தனுக்குத் தமிழ் சொல்லித் தருவாங்க"

எல்லாம் இருக்கட்டும்… ஏன் தான் இந்நூல் ஆசிரியர்கள் நானூறு ஐநூறு பக்கம் என்று எழுதித் தள்ளுகிறார்களோ? எனக்குப் புரியவில்லை. ஒரு புத்தகம் படிக்க ஒரு மாதத்துக்கும் மேலே ஆகிவிடும் சோகக் கதை எனக்கல்லவா தெரியும்! இவர்கள் என்னவென்றால் அதே புத்தகத்தை ஓரிரு நாட்களில் படித்து முடித்துவிட்டு, ‘ம்ம்… அடுத்தது எங்கே?’ என்று தேடித் திரிகிறார்கள்.

சில சமயம் என்னைப் படித்துமுடிக்க வைக்கப் படாதபாடு படும் இவர்களையும், விடாது படிக்கும் என்னையும் பார்த்து மனைவி கிண்டலடிப்பதும் வழக்கமாகி இருந்தது.

"என்னவோ பரிச்சைக்குப் போற மாதிரி இதை நீங்க ஏன் படிக்கிறீங்கன்னும் புரியல்லே. அதில இவங்களுக்கு என்ன பலன் கிடைக்குதுன்னும் தெரியல்லே"

"சும்மா இருங்கம்மா…"

"கிறுக்குப் பசங்கடா மூணு பேரும்!"

கிறுக்குத்தனம் நமக்கொன்றும் புதிதல்லவே. ஆனால், இக்கிறுக்குத்தனங்களின் பின்னே ஒரு காரணம் இருப்பதாகவே நினைத்துக் கொள்ள எனக்கு ஆசை. கடந்தேகும் ஆண்டுகளின் பின்னணியில் இவை அவர்களுடனான ஒரு தொடர்புப் பாலத்தை உறுதிப்படுத்தி வைக்கும் ஒரு முயற்சியாகவும் அமையும் என நினைக்கிறேன். குறைந்தபட்சம் தேக்கி வைத்துக் கொண்டு பின்னொரு நாள் அசைபோட நிறைத்துக் கொள்ளும் நினைவுத் துண்டுகள் இவை.

சென்ற ஆண்டின் புத்தகத் தெரிவை என்னால் படித்து முடிக்க இயலவில்லை. அடிக்கடி வெளியூர்ப் பயணமும் அலுப்புச் சேர்த்த பணியழுத்தமும் இதற்கான நேரத்தை ஒதுக்க முடியாமல் செய்துவிட்டன.

clip_image004"Westing Game-அ முதல்ல படிங்கப்பா. சின்னப் புத்தகம் தான்", என்று பணித்திருந்தாலும், அதையும் பல மாதங்கள் இழுத்தடித்தேன். தவிர ஒருத்திக்குப் பிடித்ததாகவும் ஒருத்திக்கு அவ்வளவு ஈர்ப்பு இல்லாததாகவும் இருந்த கதை அது. பட்டியலில் ஆளுக்குப் பாதி என்று பிடித்து வைத்திருப்பார்கள். கொஞ்சம் பழைய புத்தகமானாலும் படித்து முடித்தபோது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘ஆகா, ஏன் நம்மால் எல்லாம் இது போல எழுத முடிவதில்லை’, என்று யோசிக்க வைக்கும் எழுத்து. பொதுவாகத் தமிழுலகில் குழந்தைகளுக்கான சிறப்பான புத்தகங்கள் இதுபோல் அமைவதில்லை தான்.

என்னுடைய இழுத்தடிப்பின் காரணமாய் ஆர்வம் குறைந்தவளாய், "உங்களுக்குப் படிக்க வேண்டாம் என்றால் விட்டு விடுங்கள் அப்பா", என்று பெரியவள் சொன்னபோது எனக்குச் சற்று ஏமாற்றமாகத் தான் இருந்தது. வளர்ந்து வருகிறவள் விவேகமாகத் தான் சொன்னாள்.

"இல்ல இல்ல. நான் இன்னும் படிக்கறேன். இப்போ படிக்க முடியாதத அடுத்த வருசம் பட்டியல்ல சேர்த்துடுங்க. ஆனா, பத்துப் பதினஞ்சு புத்தகம்னு எடுக்காமக் கொஞ்சம் கம்மியாக் குடுங்க"

"ஓ! நீங்க படிக்கறதுன்னாச் சொல்லுங்க. அடுத்த மூணு புத்தகம் உங்களுக்காக நூலகத்துல இருந்து எடுத்து… இதோ, இங்க தான் வச்சிருக்கோம்"

அவர்கள் முகத்திலும் மலர்ச்சி. இதைக் கேட்டு என் உள்ளத்திலும் குளிர்ச்சி. சில வேலைகள் சுமை போல் தோன்றினாலும் அயராது செய்வதில் இருக்கிறது சுகம்.

"சரி… ஒரு புத்தகத்துல குதிரைங்க பிறக்கும் போதே நாக்குல அவங்க பேரோட பிறக்குமே. அந்தப் புத்தகத்துப் பேர் என்ன?"

"Goosegirl! ஏம்ப்பா? எதுக்குக் கேக்குறீங்க?"

‘கிறுக்கு அப்பா. எதையாவது Blogஇல் எழுதிக்கிட்டிருப்பார்’ என்று நினைத்துக் கொண்டே தத்தம் புனைவுலகில் தம்மைப் புதைத்துக் கொண்டனர் எனது இளவரசிகள்.

ooOoo

பி.கு.: வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் ‘தென்றல் முல்லை’ இதழில் 2013 பொங்கல் மலரில் வெளிவந்த கட்டுரை.

Tags: கண்மணிகள் · வாழ்க்கை

2 responses so far ↓

  • 1 Nirmala // Feb 9, 2013 at 7:37 am

    //குறைந்தபட்சம் தேக்கி வைத்துக் கொண்டு பின்னொரு நாள் அசைபோட நிறைத்துக் கொள்ளும் நினைவுத் துண்டுகள் இவை. //

    Very true.. i too believe in this! 🙂

  • 2 இரா. செல்வராசு // Feb 9, 2013 at 12:25 pm

    வாங்க, நிர்மலா. நன்றி. உங்களோடு பேசிப் பல ஆண்டுகள் ஆனதில் முதலில் நீங்கள் தான் என்பது தெரியவில்லை. ‘ஒலிக்கும் கணங்கள்’-ஐப் பார்த்தால் கண்டு கொள்ள முடிகிறது.