இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

உறவுகள் தொடர்கதை

September 30th, 2009 · 13 Comments

இத்தனை நாள் இல்லாமல் இப்போ மட்டும் எதுக்கு இந்த உறவு என்று ‘வாழத்தோட்டத்து’ப் பெரியப்பாவைப் பார்க்கத் தான் வருவதாயில்லை என்று அடம் பிடித்தான் சிவக்குமார். பெரியப்பா என்று கூடச் சொல்ல அவனுக்குப் பிடிப்பதில்லை. ‘வாழத்தோட்டத்தார்’ என்று தான் குறிப்பிடுவான்.

வருடம் ஒருமுறையேனும் அவர்கள் குலதெய்வம் கோயிலுக்குச் சென்றுவிட்டு, அருகே இருந்த சொந்த ஊருக்குச் சென்று பங்காளி சொந்தமெல்லாம் பார்த்து வருவது இப்போது வழக்கமாகி இருந்தது. ஈரோட்டில் இருந்தவரை சிவக்குமாரும் தவறாமல் எல்லா வருடமும் ஊருக்கு வந்து போயிருக்கிறான். பள்ளி முடிந்து கல்லூரியில் பொறியியல் படிக்கக் கோவைக்குப் போன காலத்தில் இருந்து அவன் ஊருக்கும் கோயிலுக்கும் போவது கொஞ்சம் குறைந்து தான் போனது.

“இந்தத் தடவ உன் பெரியப்பா வீட்டுக்கும் போயிட்டு வரோணும்ப்பா” என்று அப்பா தான் ஆரம்பித்தார். “நாலு மாசம் முன்னாடி உங்க அண்ணன் தோட்டத்துல பாம்பு கடிச்சுச் செத்துப்போயிட்டான்”.

“ஆமாப்பா. என்ன தான் சண்டையினாலும், இதுக்கு நீயும் வந்து ஒரு வார்த்த கேட்டுட்டுத் தான் வரணும்” என்று அம்மாவும் கூடச் சேர்ந்து கொண்டார்கள்.

“ஏம்மா… உங்களை அத்தனை அவமானப் படுத்துனவங்க வீட்டுக்கு எப்படிங்கம்மா போகணும்னு சொல்றீங்க?” என்று கேட்டாலும், ஒரு மரணம் மன உறுதியைச் சற்று வலுவிழக்கத் தான் செய்கிறது. ஒரு சாவினால் பிறவற்றை மறந்துவிடவேண்டுமா என்று கேள்வி எழும்பினாலும், அது பக்குவமான கேள்வியில்லை என்று தயங்க வைத்து, ஒரு கணம் நின்று மறுபக்கத்தின் நிலையையும் யோசிக்கவே வைக்கிறது.

“சரி விடுங்க. போய்ட்டுத் தான் வரலாம்”.

வாழத்தோட்டத்தார் இத்தனைக்கும் அப்பாவுக்குச் சொந்த அண்ணன் தான். சொந்த அண்ணனாய் இருந்தால் என்ன, பொன்னர் சங்கர் பங்காளிகளின் பரம்பரையில் வந்தவர்கள் வெட்டு குத்து என்று சாகாமல் இருந்தால் தான் ஆச்சரியம். கடைசியாகப் போக்குவரத்து இருந்தது சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பாகத் தான் இருக்கும்.

தனக்குச் சின்ன வயதிருக்கும் போது ஏன் பெரியப்பா வீட்டிற்குப் போக வர இருப்பதில்லை என்று சிவக்குமாருக்குக் கேள்வி எழுந்திருக்கிறது. என்னவோ சண்டை, சொத்துத் தகராறு, தென்னமரம், நஞ்சை, புஞ்சை, மேட்டாங்காடு, ஆட்டுக்குட்டி என்று கணக்குவழக்குச் சண்டை என்று அரையும் குறையுமாகத் தான் தெரிந்து வைத்திருந்தான். ஆனால், அந்த வீட்டில் இருந்த செந்திலண்ணன் கூடப் பழக முடியாமல் போனது தான் அவனுக்குப் பெரிய வருத்தம்.

தனக்குச் சுமார் பத்து வயது இருக்கும்போது விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும்போது, சொரப்புரடையைக் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து நீச்சல் கற்றுக் கொள்ள அவர்தான் முன்பு கூட்டிப்போயிருக்கிறார். பம்புசெட்டு நீர் இறைக்க, வரப்புக்கு நடுவே ஆட்டம் போட்டதும், பனங்கிழங்கு சுட்டுத் தின்றதும், நொங்கு இளநீர் என்று சமயத்திற்கு ஏற்ற மாதிரி உண்டு களித்ததும் நினைவில் நின்றிருந்தன. ஆட்டு மடியில் பால் பீய்ச்சக் கூட அவர் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

இருந்தும் என்ன செய்ய? இந்தப் பாழாய்ப் போன சொத்துத் தகராறு உறவைத் துண்டாக வெட்டிப் போட்டது.

பள்ளி முடிந்து சிவக்குமார் கல்லூரிக்குப் படிக்கப் போன சமயம், ஒரு அமாவாசைப் பூசைக்கு அம்மாவும் அப்பாவும் கோயிலுக்குப் போன ஒருமுறை ஏதோ வாய்த்தகராறு முற்றி கைகலப்பில் முடிய, பெரியப்பா அப்பாவைக் கீழே தள்ளி விட்டுச் சிராய்ப்பு ஏற்படுத்தி இருக்கிறார். நல்ல வேளை, ஏதும் கை கால் முறிவு என்று பெரியதாக ஏதும் ஏற்படவில்லை. அம்மாவையும் கூடக் கீழே தள்ளி விட்டார் என்று கேட்கையில் பதின்ம வயதினனுக்குக் கோபம் பீறிட்டுக் கொண்டு வந்தது. “அவரைச் சும்மா விடக்கூடாது” என்று கத்தியவனை, அப்பா தான், “வேண்டாம்ப்பா, விடு. இனி அவர்களைப் பற்றி நமக்கென்ன கவலை. போ. நீ போய் நல்லாப் படி” என்று கோவைக்குப் பொறியியல் படிக்க அனுப்பி வைத்து விட்டார்.

“நம்மள அவமானப் படுத்துனவங்க முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டணும்டா’ என்று அம்மா சொன்னதும் மனதில் நன்கு பதிந்து விட்டது.

கல்லூரிப் படிப்பு முடிந்து, பெங்களூர் போய் மென்பொருள் வழியாக இப்போது அமெரிக்காவும் போய்விட்டபடியால் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தான் இந்தியாவுக்கே வந்து கொண்டிருந்தான். இருந்தாலும், வரும்போதெல்லாம் ஒரு நடையாவது அம்மாவும் அப்பாவும் அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஊருக்கு வந்துவிடுவார்கள்.

தனது, தன் மகனது இன்றைய நல்ல நிலையை ஊருக்கு முன் காட்டிப் பெருமை கொள்ள வேண்டும் என்பதும் கூட ஒரு காரணமாய் இருக்கலாம் என்று சிவக்குமார் சிலசமயம் நினைத்துக் கொள்வதுண்டு.

வாழத்தோட்டத்தார் வீட்டுப் பக்கம் மட்டும் இதுவரை எப்போதும் தலை காட்டாதிருந்திருக்கிறார்கள்.

* * * *

ஊருக்குள்ளே இருந்த பத்து வீட்டைத் தவிர இன்னும் சிலர் தங்களது தோட்டத்திற்குள்ளேயே வீடு கட்டிக் குடி இருந்தார்கள். வாழத்தோட்டத்திற்குள் அப்படி வீடு கட்டி இருந்தார் பெரியப்பா. செந்திலண்ணன் தான் அவருக்கு ஒரே பையன். சிவக்குமாரை விட எட்டு வயது பெரியவன். அண்ணனுக்குப் பெரிதாகப் படிப்பு வரவில்லை. தோட்ட வேலைகளே பிடித்துப் போய் ஊரிலேயே இருந்துவிட்டான். இரண்டு குடும்பங்களுக்கும் இடையே சண்டை பற்றிய அவனது கருத்து என்னவென்று சிவக்குமாருக்குத் தெரியாமலே போய்விட்டது.

தோட்டத்திற்குப் போகும் வழியில் தாத்தா, ஆத்தா வாழ்ந்த வீடு இன்று கூரை ஏதுமின்றி ஒரு குட்டிச் சுவராக நின்று கொண்டிருந்தது. அங்கு தான் அப்பா தன் சின்ன வயதைக் கழித்திருப்பார். இந்தப் பெரியப்பாவோடு! அந்தக் குட்டிச் சுவற்றின் இடிந்த மணல்பகுதியில் இருந்து புல் பூண்டு முளைத்துக் கிடந்தது. ஒரு எலுமிச்சைச் செடி கூட அதன் நடுவில் வளர்ந்திருந்தது. காட்டுப்பூக்கள் சிலவும் முளைத்துக் கொண்டிருந்தன.

தோட்டமே களையிழந்து கிடந்ததாகப் பட்டது. வேலியெல்லாம் கட்டின்றி வளர்ந்து கிடந்தது. வீட்டினுள் சென்றபோது ஒரு நிமிடம் பேச்சற்றுத் திகைத்தது போலத் தோன்றியது. பெரியப்பா வயதாகித் தோள் சுருங்கித் தளர்ச்சியாய்த் தெரிந்தார்.

பெரியம்மா தான் சுதாரித்துக் கொண்டு, “வாங்காயா…” என்றார். ‘வாரணுங்’ என்றபடி அம்மா உள்நுழைய அப்பாவும் சிவக்குமாரும் பின்னால் சென்றார்கள்.

“எப்படி இருக்கீங்க?”

“என்னவோ இருக்கோம். பாராயா… உங்க அண்ணன் இப்படி எங்கள விட்டுட்டுப் போயிட்டான்” என்றார் பெரியப்பா.

சிவக்குமாருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. மனசு கொஞ்சம் இளகியது.

“நம்ம கையில என்ன இருக்குது? எல்லாம் அந்த ஆண்டவன் செய்யறது” அம்மா தான் பதில் சொன்னார்கள்.

“ஆமாம் போ. உனக்கெல்லாம் செஞ்ச பாவத்துக்குத் தான் அந்த ஆண்டவன் எங்கள இப்படிப் பழி வாங்குறானாட்ட இருக்குது” என்று புடவைத் தலைப்பை வாயில் வைத்துக் கொண்டு பெரியம்மா அழுதார்கள்.

“அழுவாதீங்கக்கா. அப்படி எல்லாம் சொல்லாதீங்க” என்று தேற்றினார் அம்மா. “ஏதோ ஒரு கெட்ட நேரம். நாம என்ன பண்றது?”

சற்றுத் தேற்றிக் கொண்டு எழுந்து வந்தார் பெரியம்மா.

“நீ எப்பாயா ஊர்ல இருந்து வந்த? சௌக்கியமா இருக்கியா?”

“நல்லா இருக்கேன் பெரியம்மா”

“அடிக்கடி வந்து அம்மா அப்பாவப் பாத்துட்டுப் போ. முடிஞ்சா எங்களையும் எப்பவாச்சும் வந்து பாரு”. மீண்டும் கண் கலங்கினார் பெரியம்மா.

“நாங்கல்லாம் இருக்கறமுல்லங்க்கா. ஏன் கவலப் படறீங்க? ஒடம்ப நல்லாப் பாத்துக்குங்க” மீண்டும் அம்மா தேற்ற முயன்றார். அது அவர்களைத் தேற்ற உதவியதா, இல்லை குற்ற உணர்ச்சியில் தோய்த்து எடுத்ததா என்று சிவக்குமாரால் சொல்ல முடியவில்லை.

“என்ன இருந்தாலும் நாங்க இனி இப்படித் தனியாவே கெடக்க வேண்டியது தான?”

“எல்லாருமே ஒரு சமயத்துல அப்படித் தானுங்க்கா. பாருங்க, சிவூ அடுத்த வாரம் அமெரிக்கா போயிருவான். அப்புறம் ரெண்டு வருசத்துக்கு நாங்களும் தனியாளுங்க தான். எப்ப வருவான் வருவான்னு வழியப் பாத்துக்கிட்டு இருக்கப் போறோம். மறுபடி இனி ஒரு வருசமோ, ரெண்டு வருசமோ?”

அம்மா அவரைத் தேற்ற முயன்றாரா இல்லை தன் கவலையைச் சொல்கிறாரா என்று சிவக்குமாருக்கு ஐயம் ஏற்பட்டது. முந்தைக்காலச் சண்டைகளை மறந்து உறவினைப் புதுப்பித்துக் கொள்ளத் தன் பெற்றோர்களுக்கு அவர்களும் அறியாமல் இன்னும் ஒரு காரணமும் இருக்கலாம் என்றும் தோன்றியது.

“வர்றங்க பெரியம்மா. உங்களையும் வந்து பாக்குறேன்” என்று அம்மாவைப் பார்த்தான்.

* * * *

Tags: சிறுகதை

13 responses so far ↓

  • 1 giri sivagiri // Oct 1, 2009 at 1:53 pm

    ‘rendu kudumpathaiyum onna ore oorule kudi vaithuvittu 2 varankal kazhiththu america vanthen’nnu mudichiruntha niraivaga irukkum thane.

  • 2 giri sivagiri // Oct 1, 2009 at 1:56 pm

    photo nalla irunthathu sel,enga ooru thottathukku pora vazhi ippatiththan irukkum.

  • 3 Balakumar // Oct 1, 2009 at 3:08 pm

    செல்வா, சொந்தகாரங்க சண்டை எல்லாம் ஒன்னும் இல்ல.. ஆனா ஊருக்கு போகணும் போல இருக்கு…

    //தோன்றியது. பெரியப்பா வயதாகித் தோள் சுருங்கித் தளர்ச்சியாய்த் தெரிந்தார்.
    பெரியம்மா தான் சுதாரித்துக் கொண்டு, “வாங்காயா…” என்றார். ‘//

    கண்ணீர் எட்டி பார்த்த தருணம்..

    – பாலகுமார்

  • 4 இரா. செல்வராஜ் // Oct 1, 2009 at 9:44 pm

    கிரி சிவகிரி, தமிழ் தட்டச்சு இணைப்புக்கள் என்னாச்சு? கதை, படம் குறித்துச் சொன்னதற்கு நன்றி. உங்க ஊர் வழி கொஞ்சம் எனக்கும் தான் தெரியுமே – ஒரு முறை பார்த்தது…

    பாலகுமார், நன்றி. வேறொன்று எழுத நினைத்துப் பின் கதையின் போக்கை மாற்றிக் கொண்டேன். நல்லவேளை அதில் இன்னும் சோகம் இழையோடியிருக்கும். (ஓட்டத்திற்குத் தயார் தானே?).

  • 5 Balakumar // Oct 2, 2009 at 9:23 am

    ஆமாங்க செல்வா .. ஓட்டத்தக்கு தயார் தான்… கொஞ்ச நாளா கால் வலி அதிகம் ஆயிடிச்சி… காரணம் தெரியல…அதுனால ஒரு மாசமா பயிற்சி செய்யவில்லை…இப்போ கொஞ்சம் ஓகே…

    அடுத்த வருஷம் நான் உங்கள மராத்தான் ஓட்டத்தில் பார்க்கணும்…அதனால ரெடியா இருங்க… இல்லாட்டி உங்க வீட்டுக்கு வந்து அழைச்சிகிட்டு போயிருவோம்..நாங்க நெறைய பேர் இருக்கோம்…

    அப்புறம் உங்களோடோ மராத்தான் contribution இக்கு ரொம்ப நன்றி..

    பாலகுமார்

  • 6 குறும்பன் // Oct 3, 2009 at 5:39 pm

    பெரியவரு வாழத்தோட்டத்தாருன்னா சின்னவருக்கும் ஒரு பேரு இருக்கணுமே? என்ன தான் பிடிக்கலைன்னாலும் சிவகுமாரு வாழத்தோட்டத்தான் என்று மரியாதை குறைவாக சொல்லாமல் வாழத்தோட்டத்தார் என்று சொல்லியதில் இருந்தே பெரியப்பா மேல் இருந்த மரியாதை சுத்தமாக போகவில்லை என்பது புரிகிறது.

    கல்யாணத்துக்கு போகலைன்னாலும் எழவுக்கு போகனும். சின்னவருக்கு இது தெரியாமலா இருக்கும்.

    எப்ப அடுத்த பகுதி? அதுல என்ன திருப்பம் வைக்கபோறீங்க?

  • 7 giri sivagiri // Oct 3, 2009 at 10:20 pm

    செல்வராஜ்,தமிழில் அடித்து விட்டேன்.இனி இப்படியே அனுப்புகிறேன்.திரு

  • 8 இரா. செல்வராஜ் // Oct 4, 2009 at 9:09 pm

    வாங்க குறும்பன். சிறுகதைன்னு போட்டாலும் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறீங்களே 🙂 நியாயமா? சின்னவரு பத்தி இன்னும் கொஞ்சம் விவரம் சொல்லியிருந்திருக்கலாம். முதலில் எழுத நினைத்த கதையில் இருந்து அது தானாக வேறு பக்கமாகத் திரும்பிக் கொண்டது. மிச்சம் இருப்பதை வளர்த்தெடுத்தா இன்னொரு நாள் கதை பண்ணிக்கலாம்னு விட்டுட்டேன்.

    திரு கிரி சிவகிரி – பேரு வளர்ந்துக்கிட்டே போகுதுங்களே? 🙂 தமிழில் தட்டச்சக் கற்றுக் கொண்டது நல்லது. பிற பின்.

  • 9 இரத்தினமூர்த்தி. // Oct 6, 2009 at 10:38 am

    உங்க எழுத்துக்கு ரசிகன் ஆகி விட்டேன். நல்லா இருக்கு.

  • 10 குறும்பன் // Oct 7, 2009 at 9:41 pm

    தலைப்பு “உறவுகள் தொடர்கதை” என்று பார்த்ததும் இது தொடர்கதை என்று நினைத்தே படித்தேன் . tag சிறுகதை என்று இருந்ததை கவனிக்கவில்லை 🙂

  • 11 இரா. செல்வராஜ் // Oct 10, 2009 at 8:10 pm

    இரத்தினமூர்த்தி, மிக்க நன்றி. உங்கள் கருத்து எரிதத்தடுப்பில் இருந்ததை இன்று தான் பார்த்தேன்.

    குறும்பன், தொடர்கதை பக்கம் இப்போ போகப் போறதா இல்லை. இங்கேயே அதிக நேரம் வர முடிவதில்லை. பார்ப்போம்.

  • 12 Thambi // Dec 8, 2010 at 4:03 pm

    பெரியம்மா தான் சுதாரித்துக் கொண்டு, “வாங்காயா…” என்றார். ‘வாரணுங்’ என்றபடி அம்மா
    ……
    “வாங்காயா..” — word to me…explained Oru Kodi Aruthangal! touched my heart.

  • 13 mohamedalijlnnah // Dec 26, 2010 at 10:26 am

    உறவின் சிறப்பு உரசிப் பார்க்கும் பொழுதுதான் அதன் அருமை அறிய வரும் .உறவு ஒரு எதிர்பார்ப்பில் இருப்பின் அது நீடிக்காது .உறவு அன்பின் வழி வந்தால் வளரும் .
    உறவு உன்னதமடைய உயர்ந்த உள்ளம் வேண்டும் .