இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

அயல் சூழலில் மொழியும் கலாச்சாரமும்

July 24th, 2009 · 19 Comments

“எங்கங்க? நாம தமிழ்ல பேசினாலும் அவன் இங்கிலீசுல தாங்க பதில் சொல்றான்” — என்று சொல்லி அவர்கள் இன்னொரு மொழி கற்க இருக்கும் சிறந்த வாய்ப்பை பாழாக்காதீர்கள். உங்கள் குழந்தைகளை தமிழ்(ழில்) பேச வைப்பது உங்கள் கடமை”

என்று ஒரு நண்பர் மடலில் எழுதியிருந்தார். இந்தத் தடுமாற்றமும் குற்றுணர்ச்சியும் எனக்கும் உண்டு. மூன்று வயது வரை அழகாகத் தமிழ் பேசிய குழந்தை வெளியுலகம் செல்லத் தொடங்கியபோது அயல் சூழலுக்கு அவளுடைய மொழி பலியாவதைப் பார்த்துக் கொண்டு ஆவண செய்ய இயலாது விட்டுவிட்டோமா என எப்போதாவது பதைக்கிறேன்.

இது தான் பிரச்சினை. இந்த ‘எப்போதாவது’ எப்போதுமே இருந்திருக்க வேண்டும். தொடர்ந்த வலியுறுத்தலும் ஊக்கமும் இருந்திருந்தால் இந்நிலை அமைந்திருக்காது என்பதற்குச் சில காட்டுக்களையும் மகளது நண்பர் வட்டாரத்திலேயேவும் கண்டிருக்கிறேன்.

ஒரு கட்டத்தில் அதிக வலியுறுத்தல் எதிர்மறையாகப் போய்விடுமோ என்று அஞ்சியும் சற்றுக் குறைத்துக் கொண்டோம், என்பது சரியான காரணமா, ஒரு சாக்குத் தானா என்றும் கூடக் குழப்பம் தான். அப்படி ஒரு நிலை இருந்தது உண்மை தான். ஆனால் அதனைக் கையாளும் விதம் பற்றி முழுமையாகச் செயல்பட்டுச் சிந்தித்தேனா என்றால் இல்லை என்பதே சரியான பதிலாய் இருக்கும். வேறு பல காரணங்களையும் சாக்குகளையும் ஒன்றாகக் கலந்து இந்தப் பாதையை நாங்களே அடைத்தும் இருக்கலாம்.

இன்னும் கூட நம்பிக்கை இழக்காமல் இந்த விசயத்தை அவ்வப்போது கையில் எடுத்து ஆவண செய்ய முனைகிறேன். அதனால் குறைந்த பட்சம் எழுத்துக் கூட்டியேனும் எழுதப் படிக்கத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக இதனைச் செய்யாமல் விடுவது தான் குறை என்பதை உணர்ந்து முயல வேண்டும்.

தமிழோசையாவது வீட்டில் தவழ்வது உதவும் என்று சில நண்பர்கள் சொன்னபடி, தமிழ்த் தொலைக்காட்சிகள் சிலவற்றைப் பார்க்க, காட்ட எண்ணினோம். அதிலும், சதா சர்வ காலமும் ஏதேனும் ஒரு திரை முன் சடநிலையில் அமைந்து கிடப்பது உடலுறுதிக்கு நல்லதில்லை என்று தொலைக்காட்சி, கணினி, வீ போன்றவற்றின் நேரத்தை மட்டுப்படுத்தி வைத்திருப்பதால் அதிகம் பார்க்கச் சொல்ல முடியவில்லை. அப்படியே பார்த்தாலும் ஏதேனும் சினிமாப்பாட்டு, நடன நிகழ்ச்சி, அல்லது அழுமூஞ்சித் தொடர்க்காட்சிகள் தான் தெரிகின்றன. அத்தொடர்களில் வருகிற அதீத பொய்யுலகைத் தான் நம்முடைய கலாச்சாரம், வாழ்வுமுறை என்று அறிமுகப்படுத்தி வைக்க வேண்டுமா என்றும் தயக்கம்.

Thindal Murugan from ta.wikipedia.org (Thanks Kurumban)

‘அடிக்கடி கோயிலுக்குக் கூட்டிப்போங்க’ என்று பெற்றோரோ, ‘நம்முடைய சாமி கதையெல்லாம் சொல்லிக் கொடுங்க’ என்று முருகன் கதையோ, திருவிளையாடலோ பற்றிச் சொல்லச் சொல்லி வேறு சிலருமோ சொல்லியிருக்கின்றனர். கடவுளர் பற்றிய நம்பிக்கைகளில் நாமே வேறு பாதையில் பயணித்து நிற்கையில், எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவர்களுக்கு பயபக்தியை ஊட்டுவது? அவர்களது ஆன்மீகத் தேடலை அவர்களிடமே விட்டுவிடவேண்டியது தான்.

இன்று ஜெயா மேக்ஸில் தமிழ்ப்பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்த போது, நந்துவிற்குப் பிடித்த சுப்ரமணியபுரத்தின் ‘கண்கள் இரண்டால்…’ பாட்டு மெல்லத் தவழ்ந்து வந்தது. அதனை இரசித்தபடி இருந்தவள், சில நிமிடங்கள் கழித்து, “இந்த ஆளு மோசமானவன். எனக்கு இவனைப் பிடிக்கவில்லை” என்றாள். என்னவென்று திரும்பிப் பார்க்க, “இவன் சிகரெட் புகைப்பவன். சிகரெட் புகைப்பது கெடுதல்/தவறு என்பது தெரியாதா என்ன? இப்படிக் கெட்டவனாய் இருந்தும் இவனை எப்படி இந்தப் பெண் விரும்புகிறாள்?” என்றாள்.

அவளுடைய அந்தப் பேச்சு என்னுள் பல நிலைகளைத் தொட்டது.
1. புகை பிடித்தல் கெடுதல் என்று இங்கு பள்ளிகளில் தெளிவாகச் சொல்லித் தருகிறார்கள். (போதை மருந்து போன்றவற்றைப் பற்றியும்).
2. சொல்லித் தரப்படுவதை நன்றாகக் கவனித்து அதனை எதிர்கொள்ளும்போது சரியாகத் தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள்.
3. புகை பிடித்தல் போன்ற ஒரு செய்கையையும் நல்லது எதிர் கெட்டது என்னும் இரு நிலையிலேயே இவர்கள் இன்னும் பார்க்கிறார்கள். நல்லதும் கெட்டதும் இல்லாத ஒரு இயல் நிலை பற்றி இவர்களின் பார்வை செல்லாதது வெகுளியான குழந்தைத் தனத்தையோ, முதிர்ச்சியடையாத நிலையையோ காட்டுகிறது.

பேச்சு வளர்ந்த போது, எல்லாப் பாடல்களிலும் எப்போது பார்த்தாலும் ஏன் எல்லோரும் காதலித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்றாள்.

“ஒருத்தரை ஒருத்தருக்குப் பிடித்திருப்பதால் தான் அப்படி”, என்றேன்.

“யாராவது ஒருத்தர் ஏமாற்றிவிட்டுச் சென்றுவிட்டால் என்ன செய்வார்கள்?”

“அப்படியும் நடக்கும்”, என்று ஏழு வயதினளுக்கு இதற்கு மேல் சொல்லத் தேவையில்லை என்று பந்து விளையாடக் கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டேன்.

முன்பும் எப்போதோ ஒருமுறை பெரியவள் கேட்டாள் – “அப்பா பெற்றோர் பார்த்து வைத்துத் திருமணம் செய்துகொள்வதிலே பெண்ணும் பையனும் ஒருவரை ஒருவர் பார்த்திருக்கவே மாட்டார்களா?”

“சேச்சே, அப்படி எல்லாம் இல்லை. அதாவது, முன்பு அப்படி இருந்திருக்கலாம். இப்போது அப்படி இல்லை. பொண்ணு மாப்பிள்ளை பார்த்துக் கொள்வார்கள். தனியே பேசிக் கொள்ளவும் செய்வார்கள். அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் மறுத்துவிடும் உரிமையும் உண்டு”

“இருந்தாலும் அப்பா… என்னால் நம்ப முடியவில்லை. ஒருவரை ஒருவர் விரும்பாமல், காதல் இல்லாமல், எப்படிக் கல்யாணம் செய்துகொள்வது?”

இதைக் கேட்ட போதும் அவளுக்கு எட்டு அல்லது ஒன்பது வயது தான் இருக்கும். டிஸ்னிப் பாத்திரங்கள் கூட இவற்றை இவளுக்குச் சொல்லித் தந்திருக்கலாம். இவற்றைக் கலாச்சாரம் என்பதா? சூழல் தாக்கம் என்பதா? காலமாற்றம் என்பதா?

இப்படி இருக்கையில் ஊருக்குச் சென்றிருந்த போது சிலர் சொன்னார்கள். “பேசாம இங்கயே திரும்பி வந்துவிடுங்கள். அங்கிருந்தா நம்ம கலாச்சாரமே போயிடும்”

“அதிலும் பொம்பளப் பிள்ளைகள வச்சிருக்கீங்க; அதனாலயே இத நீங்க முக்கியமா நினைச்சுக்கணும்”

இவர்கள் போய்விடும் என்று பயப்படுகிற கலாச்சாரம் எது? அது போய்விடக்கூடாது என்றா நான் எண்ணுகிறேன். பெண் என்றால் தனிச் சட்டம் என்று வேறு விதமாகப் பார்க்கும் கலாச்சாரம் தான் போய்விடட்டுமே!இப்படியாகப் போய்விடும் என்று பயப்படுகிற கலாச்சாரங்கள் எல்லாம் ஊரிலும் தான் போகாமல் இருக்கின்றனவா?

பத்துப் பதினைந்து வருடமாய் நான் இருக்கிற நாட்டைப் பற்றி பத்துப் பதினைந்து பக்கம் மட்டுமே மொத்தமாகப் படித்துவிட்டு, ‘அதெல்லாம் சுத்தப் படாதுப்பா’ என்று இவர்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று எப்படி நினைக்கிறார்கள்?

சுய ஒழுக்கம் (ethics, values) என்னும் குண நலன்கள் எங்கிருந்தாலும், எப்போதிருந்தாலும், எந்தச் சூழலில் இருந்தாலும் ஒன்று தானே.

மற்றபடி இன்னும் வரும் காலத்தில் வளரும் குழந்தைகளின் கேள்விகளுக்கான விடையளிக்கும் தெளிவும், தெரிவுகளில் உதவும் நிலையும், நம்பிக்கைகளையும், பழைய பழக்கங்களையும் சவாலுக்கு உட்படுத்தும் சூழல்களில் அமைதியாகக் கையாளும் மனப்பக்குவத்தையும் பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைக் கேட்கலாமா என்று யோசிக்க வேண்டும்.

“சாமி ஆண்டவா, இவனுக்கு ஒரு தெளிவக் கொடுத்தா, உன் கோயில்ல வந்து மொட்டையடிக்கச் சொல்றேன்” என்று யாரும் வேண்டிக் கொள்ளாமல் இருந்தால் சரி தான். இல்லையெனில் சாமியாண்டவன் ஏமாந்து தான் போகவேண்டும். அட, அடுத்தவன மொட்டை அடிச்சுக்க வேண்டிக்கிற அதுவும் கூட நம்ம கலாச்சாரம் தானுங்க.

Tags: கண்மணிகள் · சமூகம் · வாழ்க்கை

19 responses so far ↓

  • 1 சின்னம்மணி // Jul 24, 2009 at 2:52 am

    //சுய ஒழுக்கம் (ethics, values) என்னும் குண நலன்கள் எங்கிருந்தாலும், எப்போதிருந்தாலும், எந்தச் சூழலில் இருந்தாலும் ஒன்று தானே. //

    ரொம்பச்சரி, values உடல் சம்பந்தப்பட்டதா மட்டுமே இருக்கும் வரைக்கும் பெண் குழந்தைகளைப்பெற்றவர்களை இந்தியாவிற்குத்திரும்ப வரச்சொல்லுவார்கள். பெரிதானால் ஆண் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வருவார்களாமே என்றேல்லாம் கேள்விகள் வேறு.

  • 2 பாலகுமார் // Jul 24, 2009 at 9:17 am

    இந்த மாதிரி அவசியமான கேள்வியை அசால்ட்டா கேட்டு அடுத்தவங்கள குழப்றது கூட நம்ப கலாச்சாரம் தான் செல்வா.. 🙂

    மேரத்தான் ஒட்டத பத்தி போன வாரம் பதிவி எழுதிட்டு அப்புறம் அந்த பக்கமே காணோம் உங்கள.. ஆனா அப்படி இல்ல இந்த விசயம்.. கொஞ்சம் நல்லாவே முயற்சி பண்ணுனும்..

    இத பத்தி நெறைய கேள்விகள் இருக்கு.. ஆனா விடை மட்டும் தான் இல்ல..

    தாய் மொழியில் சிந்தனை இருந்தா நல்லா இருக்கும் அப்படின்னு சொல்லராங்க…
    மொழிக்கா இல்ல நமக்கா.. எது உண்மை…

  • 3 பாலகுமார் // Jul 24, 2009 at 9:36 am

    நம்ப ஊர்ல (இந்தியா) என்ன்டோ friend பொண்ணுக்கு (12 வயசு) தமிழ் தெரியாது.. கேட்டா எதுக்குநு என்ன கேக்கான்.. என்ன சொல்ல…

    //‘அதெல்லாம் சுத்தப் படாதுப்பா’ என்று //
    ஒவ்வொரு நாடும் , ஒவ்வொரு சமூகமும், குடும்பமும், வித விதமா கலாச்சாரத்தை பின்பற்றுது…இதுல எதை பின்பற்ற

    நம்ப ஊருல தெருவுக்கு தெரு கலாச்சாரம் பல்ல இளிக்குது..

  • 4 குறும்பன் // Jul 24, 2009 at 10:00 am

    என் நண்பன் அவன் குழந்தையை (6 வயது) வீட்டில் இருக்கும் போது தமிழில் தான் பேசனும் வெளியில் நண்பர்களுடன் ஆங்கிலத்தில் பேசலாம் என்று கூறியதை அவன் பின்பற்றுகிறான். (இதில் அவர்கள் கொஞ்சம் கண்டிப்பாக இருக்கிறார்கள்) அவர்கள் வீட்டுக்கு போன போது இதைக்கண்டேன்.

    அவங்க இந்தியாவுக்கு போன போது எல்லாருடனும் இவன் தமிழில் பேசியதில் (அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும் தமிழில் பேசுறான் என்று) அங்கிருந்தவங்களுக்கு மகிழ்ச்சி. அவங்க உறவுக்கார பையன் ஆங்கிலத்தில் பேசியபோது வீட்ல தமிழில் தான் பேசனும் என்று இவன் சொல்லியதை நினைத்து அவனுக்கு பெருமை. பாவம் அந்த பையன் இங்கிலிபீசுல பேச சொல்லி அவங்க பெற்றோர் சொல்லி கொடுத்திருப்பாங்க.

  • 5 நாகு // Jul 24, 2009 at 11:38 am

    //என்று ஒரு நண்பர் மடலில் எழுதியிருந்தார்//
    வேறு மொழி சூழலில் குழந்தையை அவர் வளர்க்கிறாரா என்பதை பொறுத்து இருக்கிறது அவர் உபதேசம். இந்தியாவிலேயே வேறு மொழி சூழலில் வளர்ந்தவன் நான். பெற்றோர்கள் தாய்மொழியில் பேச பிள்ளைகள் உள்ளூர் மொழியில் பதிலளிப்பது எனக்கு சிறு வயதிலேயே பழகிப் போன விஷயம். பேசவைக்க முயலலாம். கடமை, கிடமை எல்லாம் அவரவர் விஷயம். என் நண்பனின் மகன் நன்றாக தமிழ் பேசுவான். அவன் நூறில் ஒருவன். என்னைப் பொறுத்தவரை தாய்மொழியைப் புரிந்து கொண்டாலே பெரிய விஷயம். சீரங்கத்தில் வளர்ந்து தமிழ் படிக்கத் தெரியாமல் இருக்கும் மேதாவிகளைப் பார்த்திருக்கிறேன்.
    //“பேசாம இங்கயே திரும்பி வந்துவிடுங்கள். அங்கிருந்தா நம்ம கலாச்சாரமே போயிடும்” //
    அங்கே கலாச்சாரம் ரொம்பதான் கிழிகிறது 🙂 அமெரிக்காவில்தான் இந்தியக் கலாச்சாரத்தோடு பிள்ளைகள் வளர்கிறார்கள் என்று சென்னையில் என் உறவினர்களும் பக்கத்து வீட்டுக்காரர்களும் சொல்கிறார்கள். என் பிள்ளைகளுக்கு தெரிந்த ஒன்று இரண்டு ஸ்லோகங்களும், புராணக் கதைகளும் அந்தப் பிள்ளைகளுக்கு தெரிவதில்லை.
    //பத்துப் பதினைந்து வருடமாய் நான் இருக்கிற நாட்டைப் பற்றி பத்துப் பதினைந்து பக்கம் மட்டுமே மொத்தமாகப் படித்துவிட்டு, ‘அதெல்லாம் சுத்தப் படாதுப்பா’//
    ஆச்சரியம்தான். எனக்கு தெரிந்த மேதாவிகள் சிலர் அவ்வளவுகூட படித்ததில்லை. ஆங்கில சினிமாகூட பார்த்ததில்லை. ஒன்றும் தெரியாமல் அமெரிக்காவைப் பற்றி அளப்பதில் நம்மூர் மாக்களுக்கு நிகர் அவர்கள்தான்.
    //“அதிலும் பொம்பளப் பிள்ளைகள வச்சிருக்கீங்க; அதனாலயே இத நீங்க முக்கியமா நினைச்சுக்கணும்” //
    என் நண்பர் ஒருவர் ஐந்து வயது மகளை இந்தியாவில் வளர்க்க போய்விட்டு, உயர்நிலைப் பள்ளி வயதில் பயந்து போய் இங்கே வந்துவிட்டார். அப்படி இருக்கிறது நிலமை அங்கே… 🙂

    //சுய ஒழுக்கம் (ethics, values) என்னும் குண நலன்கள் எங்கிருந்தாலும், எப்போதிருந்தாலும், எந்தச் சூழலில் இருந்தாலும் ஒன்று தானே. //
    ரீப்பிட்டேய்…

    //அடுத்தவன மொட்டை அடிச்சுக்க வேண்டிக்கிற அதுவும் கூட நம்ம கலாச்சாரம் தானுங்க. //
    அது நெத்தியடி. சூப்பர் முடிவு, செல்வராஜ். உங்களுக்கு சிவா,விஷ்ணு பக்கமா, அல்லது துர்கைக்கோவில் பக்கமா. அதற்கு ஏற்றவாறு வேண்டிக் கொள்கிறேன். 🙂

  • 6 சத்யராஜ்குமார் // Jul 24, 2009 at 4:53 pm

    சுயமாக சிந்திப்பதையும், கலாசாரத்தையும் குழப்பிக் கொள்கிறார்கள்.

  • 7 இரா. செல்வராஜ் // Jul 24, 2009 at 11:31 pm

    சின்னம்மணி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பாலகுமார், அமெரிக்கச் சூழலில் வளரும் குழந்தைகளைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்க, தமிழகத்திலும் நீங்கள் சொல்லியது போல் பலருக்குத் தமிழ் அரைகுறையாகவே தெரிவதாக அறிந்தது வியப்பாக இருந்தது. சாதாரண எண்களைக் கூட ஆங்கிலத்தில் மட்டுமே சொல்லத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். (மராத்தான் பற்றி… எங்கே, நடப்பது கூடத் தொய்வடைந்து போனதைப் பற்றி நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்க, நீங்கள் வேறு…).

    குறும்பன், ஆரம்பித்து வைத்ததற்கு நன்றி :-). எனக்குத் தெரிந்த ஒருவர், வீட்டில் கணவர் கொங்கனி, மனைவி கன்னடம் என்று இரு மொழிகளையும் சொல்லிக் கொடுத்துத் தன் மகளை (இப்போது பத்து வயது) இரு மொழியிலும் சரளமாகப் பேசச் செய்திருப்பது ஆச்சரியம் தந்தது. மிகவும் உறுதியாக இருந்ததாகக் கூறினார். எளிதான விசயம் அல்லவென்றும் சொன்னார். அந்தக் காலம் தாண்டிப்போனாலும், இயன்ற அளவு முயலலாம் என்று நினைக்கிறேன். (எதிர்காலத்தில் அப்பா அப்படி என்ன தான் எழுதித் தள்ளினார் என்று பார்க்கவேணும் படிப்பார்கள் என்று உள்ளூரச் சிறு நம்பிக்கையும் உண்டு 🙂 )

  • 8 இரா. செல்வராஜ் // Jul 24, 2009 at 11:43 pm

    நாகு, மொழி குறித்த சற்று வித்தியாசமான பார்வையை வைத்திருக்கிறீர்கள். வேறொருவரும் ஒரு மடலில் இது போன்ற கருத்தைச் சொல்லியிருந்தார். நீங்கள் சொல்லியிருப்பது கொஞ்சம் மிதமாக இருக்கிறது. ஒரு வகையில் நியாயப்படுத்த வைக்கிறது. அவரவர் விசயம் என்று விட்டுவிடுவது பிடித்திருக்கிறது.
    பத்துப் பதினைந்து பக்கம் படித்தார்களா என்று எனக்கும் தெரியவில்லை. கொஞ்சம் writers license பயன்படுத்திக் கொண்டேன். இல்லை, படித்திருப்பார்கள், எதாவது ஒரு செய்தித் தாளிலோ பத்திரிக்கையிலோ, யாராவது எதையாவது விளம்பியதைக் கண்டிருப்பர்.
    மொட்டை பற்றி எழுதியது தப்பாப் போச்சு போல இருக்கு. அடிக்காமல் விடமாட்டீர்கள் போலிருக்கு. 🙂 (நீங்க சொன்ன ரெண்டுமே கொஞ்சம் தூரம் தான்).

    சத்யராஜ்குமார், உண்மை. தவிர, இப்போதெல்லாம், இரண்டு சூழலிலும் வாழ்ந்த அனுபவம் இருக்கும் நம்மை விட இவற்றை எதையும் அறியாத இவர்கள் ஒன்று சிறப்பு, மற்றது அல்ல என்று தீர்மானமாகச் சொல்வதன் அபத்தம் தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கிறது. என்ன செய்வது, அனுபவத்தின்பாற்பட்டது இல்லை என்றாலும், சிலர் நலம் விரும்பியே சொல்கின்றனர் என்று எண்ணிக் கொள்கிறேன்.

  • 9 இராம.கி. // Jul 25, 2009 at 12:29 am

    வீட்டில் தமிழ் சொல்லிக் கொடுங்கள். [பேச்சு, வாசிப்பு, எழுத்து என்ற மூன்றுமே] விட்டுவிடாதீர்கள். பிள்ளைகள் வீட்டுக்கு வெளியே உங்கள் சூழ்நிலையில் இயல்பாக ஆங்கிலம் கற்றுக் கொள்வார்கள். எந்தக் குழப்பமும் வராது.

    என் பட்டறிவில் சொல்லுகிறேன். நெதர்லாந்தில் நாங்கள் இருந்தபோது, வீட்டில் பையன்கள் இருவரோடும் நானும் என் மனைவியும் தமிழில் தான் பேசினோம். அவ்வப்போது நுணவுதியாய் (minority) ஆங்கிலத்தை வீட்டில் சொல்லிக் கொடுத்து வந்தேன். என் மனைவி தமிழைச் சொல்லிக் கொடுத்துக் கவனித்துக் கொண்டாள். நான் தமிழையும் ஆங்கிலத்தையும் சொல்லிக் கொடுத்து வந்தேன். ஓவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் இருந்து அந்தந்த அகவைக்கு உரிய தமிழ்ப்பாட நூலை வரவழைத்து, என் மனைவி பையன்களோடு கூட இருந்து வாசித்துச் சொல்லிக் கொடுப்பாள். தேர்வெல்லாம் வைக்கவில்லை. ஆனால் அந்தந்த ஆண்டு இறுதியில் அந்தந்தப் பாடப் பொத்தகம் முடிந்து போகும்படி ஒரு வரையறையைச் செய்து கொண்டோம். விளையாட்டுப் போல் தமிழும் அவர்களுக்கு உடன் வந்தது. தவிர அன்றாடப் பேச்சு முற்றிலும் தமிழில் தான். பெயர்ச்சொற்களுக்குத் தமிழும், ஆங்கிலம் என இரண்டையும் சொல்லிக் கேட்டுக் கற்றுக் கொண்டார்கள். வெளியில், பள்ளிக் கூடத்தில், டச்சு மொழியைப் பேசிப், படித்து, எழுதிவந்தார்கள். அவர்களுக்கு ஒன்றும் குழப்பமாகவில்லை. தெளிவாக வெளியில் டச்சு பேசி ஆடிப்பாடி வளர்ந்து வந்தார்கள்.

    இன்றைக்குப் பையன்கள் இருவரும் வளர்ந்து, படித்துத் திருமணம் செய்துகொண்டு, தங்களுக்கே பிள்ளைகள் பிறந்த நிலையில், டச்சு மொழியை மறந்துவிட்டார்கள். ஆனாலும் ஒருசில மலரும் நினைவுகள் அவர்களுக்குள் இருக்கத்தான் செய்கின்றன. மூத்தவன் வேலை நிமித்தம் இப்பொழுது செருமன் படிக்க விழைவதாகச் சொன்னான். “படித்துக் கொள், உன் டச்சு திரும்ப உதவிக்கு வரும்” என்று சொல்லுகிறேன்.

    12 அகவைக்குள் தமிழைத் தெளிவாகக் கற்றுக் கொடுத்தால், மேலே 4,5 மொழிகள் கற்க வேண்டி வந்தாலும் அதைக் கற்று சக்கை போடு போடுவார்கள் உங்கள் பெண்கள். கவலையே வேண்டாம். மொழி கற்பது ஒரு கதவு திறப்பதைப் போல. பொதுவாய் இரோப்பாவில் மொழி கற்பது ஒரு சுமையாகவே தோன்றுவதில்லை. வட அமெரிக்காவில் என்னவோ தெரியவில்லை, இது பலருக்கும் சுமையாகத் தோற்றுகிறது.

    என் பரிந்துரை இதுதான். சிந்தனைத் தெளிவிற்குத் தாய்மொழியை இளம் அகவையில் கற்றுக் கொண்டுவிட வேண்டும். இதை என் பிள்ளைகள் வளர்ப்பில் பட்டறிந்து பார்த்தேன். அதனாற் சொல்லுகிறேன். தாய்தந்தையரின் விடாமுயற்சியும், கொஞ்சம் கட்டுப்பாடும் இதில் தேவை.

    ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

    பண்பாடு, கலாச்சாரம் என்பதெல்லாம் அப்புறம். மாந்த நேயம் வரக்கூடிய கதைகளைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கள். கதைகள், கதைகள், பாட்டுக்கள் – நீங்கள் தான் சொல்லவேண்டும்.

    அன்புடன்,
    இராம.கி.

  • 10 இரா. செல்வராஜ் // Jul 25, 2009 at 1:34 am

    ஐயா உங்கள் பட்டறிவை விளக்கமாகச் சொன்னதற்கு மிக்க நன்றி. ஒருவகையில் இது எனக்குமே ஊக்கம் தருவதாக இருக்கிறது. எங்களின் முனைப்பை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று கொள்கிறேன். பள்ளியிலே ஓரிரு வருடம் ஸ்பானிய மொழி கற்றுக் கொடுத்தால் கற்றுக்கொள்வதில் தயக்கம் இருப்பதில்லை. இப்போது நிறையச் சொல்லித் தமிழ் படிக்க இருந்த தயக்கத்தை விலக்கி விட்டதாய் எண்ணுகிறேன். தொடர்ந்த பழக்கம் நிச்சயம் பயன் தரும். கதைகளைப் பற்றி நீங்கள் சொல்வதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

  • 11 மூர்த்தி // Jul 28, 2009 at 11:17 am

    தங்களின் தமிழ் எழுத்துக்கள் மீதான ஈடுபாட்டிற்கு என் பாராட்டுக்கள். நல்ல பதிவு.
    ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று ஐந்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து வீட்டு சிறுவன் என் மனைவியிடம் தமிழ் கற்றுக் கொள்ள வீட்டிற்கு வந்து படித்துக்கொண்டிருந்தான்.
    “கடிகாரம்” னா என்ன ஆண்டடி என்று கேட்டான். வெளியில் போக கிளம்பிக்கொண்டிருந்த நான் நின்று அவனை பார்த்தேன். கடிகாரம் னா Clock என்று என் மனைவி சொலிக் கொடுத்தார். ஓ… கடிகாரம்னா Clock -அ ஆண்ட்டி என்று அந்த சிறுவன் சொன்னான்.
    நாங்கள் சென்னையில் வசிக்கிறோம். ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு அயல்மொழி மூலமாக தாய்மொழி கற்பிக்கப்படும் அவலம் தான் இன்றைய தமிழகத்தின் நிலை.
    தாய்மொழி கற்கும் முறை வேறு, அயல்மொழி கற்கும் முறை வேறு. பச்சைநிறம் என்பதை கிளி பச்சை, இலை பச்சை என்று தாய்மொழியில் சொல்லித் தருகிறோம். இதையே அயல்மொழியில் சொல்லித் தரும் முறை…”Green .என்றால் பச்சை” இத்துடன் நிறுத்திக்கொள்கிறோம். இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை.
    ஆனால் கற்கும் முறையையே மாற்றி ஆங்கிலம் வழியாக தமிழ் கற்றுக் கொடுக்கும் முறை இன்று பரவியிருக்கிறது. ஒரு குழந்தையை எந்த மொழியில் கொஞ்சுகிறோமோ, எந்த மொழியில் அந்த குழந்தை விளையாடுகிறதோ அந்த மொழியே கல்வி மொழியாக இருந்தால் தான், அந்தக் குழந்தை மிகச்சிறந்த அறிவாற்றலையும், சிந்தனையாற்றலையும் பெரும்.
    ஆனால் இன்று மொழி குறித்த சரியான பார்வையோ, சிந்தனையோ பெரும்பாலோருக்கு இருப்பதில்லை. எந்த மொழியில் கற்றால் என்ன, எந்த மொழியில் பேசினால் என்ன நிறைய பணம் சம்மாதித்தால் போதும் என்ற எண்ணமே மிகப்பலரிடம் உள்ளது.
    தோழர் தியாகுவின் “தமிழ்மொழி காப்போம்” உறையை பதிவிறக்கம் செய்து கேளுங்கள். நன்றி
    http://www.keetru.com/audio/thiyagu/tamil.php

    மூர்த்தி

  • 12 இரா. செல்வராஜ் // Jul 28, 2009 at 10:58 pm

    மூர்த்தி, வணக்கம். உங்கள் கருத்துக்களுக்கும் தியாகு அவர்களது பேச்சுக்குச் சுட்டி கொடுத்தமைக்கும் மிக்க நன்றி. இப்போது தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தமிழ் மொழிப்போர் வரலாறு எல்லாம் நன்றாகக் கூறியிருக்கிறார். முழுமையாகப் பிறகு கேட்பேன்.

    கடிகாரம்/Clock உதாரணம், இது போன்ற ஒரு நிலை இருக்கிறது என்பதற்கான மேலும் ஒரு தரவுப் புள்ளியாகச் சேர்கிறது. தமிழகத்தில் சென்ற வருடமே, இது போன்றே எண்களுக்குத் தமிழில் தெரியவில்லை என்று இன்னும் ஒரு ஐந்தாம் வகுப்பு மாணவனின் அன்னை தெரிவித்தார். Five என்றால் தெரிகிறது, ஐந்து என்றால் தெரியவில்லை என்றார். கவலையான நிலை தான்…

  • 13 பாலாஜி-பாரி // Jul 29, 2009 at 1:20 pm

    நன்றிகள் செல்வராஜ்.
    எங்களுக்கும் இந்த சிக்கல் உள்ளது. தங்களது கூற்றும், இராம.கி ஐயா அவர்களின் மறுமொழியும் உதவியாக இருக்கும் என எண்ணுகின்றேன். மீண்டும் நன்றிகள்.

  • 14 K.V.Rudra // Sep 1, 2009 at 2:35 am

    \என்ன மொழி பேசினாலும்.நமது கலாசாரம், நமது பண்பு, பெருமை, இவைகளை நல்ல முறையில் அறிமுகப் படித்தினால் ஒரு நாளும் தாய் மொழி மறையாது. மறவாது. நல்ல அறிமுகம் இல்லாவிட்டால் ஒரு மொழியும் உதவாது

  • 15 ஜோதிஜி தேவியர் இல்லம். திருப்பூர். // Mar 13, 2010 at 1:38 am

    ஒவ்வொரு தலைப்பையும் படித்துக் கொண்டே வரும் போது இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? என்று கேட்க தோன்றுகிறது.

    இதன் தாக்கத்தை ஆங்கில மீடியமும் அரைலூசு பெற்றோர்களும் என்று வேர்ட்ப்ரஸ் ல் படைத்தேன்.

    உங்கள் எழுத்தின் பலம் என்பது கும்மி இல்லாமல் வளர்ந்து கொண்டுருக்கும் மம்மி உலகத்தை பலரும் புரிந்துணர்வை உருவாக்கிய அழகு தான் உங்கள் வெற்றி.

    ஏதும் புத்தகம் எழுதி உள்ளீர்களா?

  • 16 இரா. செல்வராசு » Blog Archive » தமிழ்மணம் நட்சத்திர வாரப் பொங்கல் // Jan 16, 2012 at 9:05 am

    […] பிறந்து வளரும் குழந்தைகளுக்குத் தமிழ் மொழியை ஊட்டுவது எப்படி என்பதும் சவாலான ஒன்றாகவே […]

  • 17 காசி // Jan 17, 2012 at 6:05 am

    செல்வா,

    தமிழ்மண நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துகள். நிர்வாகத்தில் இருந்ததால் நீங்கள் நட்சத்திரமாகாமல் இருந்திருக்கிறீர்கள், நிர்வாகிகள் இழக்கும் இன்னொன்று இது.:)

    “குமார் கல்யாணத்துக்கு நீயும் வர்றியா?”
    “எப்போ?”
    “வெள்ளிக்கிழமை காலைல எட்டரை மணிக்கு”
    இது நம்வீடுகளில் சரளமான ஒன்று (என்று சொல்ல ஆசை)

    ஆனால் பத்தாவதே படித்து ஆலைத்தொழிலாளர் குடும்பத்தில்கூட, இன்று நடப்பது:
    “குமார் மேரேஜுக்கு நீயும் வர்றியா?”
    “எப்போ?”
    “ஃப்ரைடே மார்னிங் எய்ட் தர்ட்டிக்கு”
    இந்தச் சூழலில் எந்தக் கலாச்சரம் இழப்பது பற்றி நீங்கள் வருந்தவேண்டும்? எவ்வளவு தமிழ் அவர்கள் பேசவேண்டும்? ஒன்றும் கெட்டுவிடவில்லை. தமிழ் அடையாளங்களை முழுதும் அறிந்தவர்களாக அங்கே அவர்களை வளர்ப்பது கடினமே. குறைந்த பட்சம் அவற்றை வெறுக்காதவர்களாக, அடிப்படை தெரிந்தவர்களாக வளர்க்கலாம் என்பதே என் ஆலோசனை.

    நீங்களும் 6 மாதம் அவர்களை பெங்களூரில் வைத்து முயற்சித்தீர்கள்தானே, இனி அவர்களை இங்கே ஒட்டவைக்க நினைப்பது நடவாது.

    மீண்டும் வாழ்த்துகளுடன்,
    காசி

  • 18 SRK // Jan 17, 2012 at 8:39 am

    பெரியவன் பிரச்சனை இல்லை. இரண்டாவது வரை அங்கே படித்தவன். சின்னவள் விஷயம் அத்தனை சுலபமாய் இல்லை. வீட்டில் நாம் தமிழ் பேசினால் அவளும் தமிழ் பேசுவாள் என்ற நம்பிக்கைக்கு அடி கொடுத்து வருகிறாள். சொல்வதெல்லாம் புரியும், ஆனால் திருப்பிப் பேச தன்னம்பிக்கை இல்லை என நினைக்கிறேன். இப்போது ஐந்து வயதாகிறது. இன்னும் கொஞ்சம் பெரியவளானால் திரும்ப பேசுவாளா என்று பொறுத்தொருந்த்து பார்க்க வேண்டும். (ஆனால் விருப்மிக் கேட்பதெல்லாம் யூ ட்யூபில் தமிழ் மழலைப் பாடல்கள்தான்!).

  • 19 இரா. செல்வராசு // Jan 17, 2012 at 9:04 pm

    சத்யராஜ்குமார், நீங்கள் சொல்வது சரியே. எங்கள் வீட்டிலும் இதே கதை தான். மூத்ததை விட இளையது இன்னும் கொஞ்சம் சவாலைத் தருவதாகத் தான் இருக்கிறது. தன்னம்பிக்கையின்மை ஒரு முக்கிய காரணம் தான். சிலசமயம் சரியாகப் பேசிவிட்டால் அதீதமாய்ப் பாராட்டுகிறோம் என்று கூச்ச உணர்வும் தடுக்கிறது.

    இப்போது கொஞ்சம் மாற்றம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. தமிழ்ப்பள்ளிக்கும் அழைத்துச் செல்கிறோம். பிற சமவயதினரோடு சேர்ந்து படிக்கையில் இவை கொஞ்சம் சரியாகிறது.