இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

செம்மீன் சுண்டிய சில எண்ணங்கள்

January 4th, 2008 · 9 Comments

காலையில் பார்த்த அந்த மீன்குட்டி என்ன காரணத்தாலோ என் நினைவில் இன்னும் நீந்திக் கொண்டிருக்கிறது. வண்ண வண்ணக் கண்ணாடிக் குண்டுகள் கீழாக நிரப்பப்பட்ட ஒரு அழகான வளைந்த குவளையில் செந்நிறத்து மீன்குட்டி சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. பாருங்கள்… தவறு செய்கிறேன். மீனின் சிறுசு குட்டியன்று, மீன்குஞ்சு என்று மாற்றிப் போட்டுக் கொள்ளுங்கள். உண்மையைச் சொல்லப் போனால் அது குட்டியா பெருசா என்று தெரியவில்லை. செந்நிறத்து மீன் என்று மட்டும் இப்போது வைத்துக் கொள்ளலாம்.

red-fish: image adapted from http://www.eslkidstuff.com/images/fish.gif

அமைதியாகத் தன்பாட்டுக்குச் சுற்றிக் கொண்டிருந்த மீன் பன்னிரண்டு மணி நேரத்துக்கும் மேலாகியும் ஏன் இன்னும் என்னைச் சுற்ற வேண்டும்? ஒருவேளை அந்த குவளையைப் பிடித்து ஒரு ஆட்டு வேகமாக ஆட்டி வைத்தால் என்ன ஆகும் என்று ஒரு நிமிடம் குரூரப்பட்ட என் மனம் காரணமாக இருக்கலாம். வாய்பேசாத சீவன் அப்படியொரு இடைஞ்சலுக்கு ஆளாகி (மீனாகி:-) ) இருந்தால் பெரும் மனத்தகைவை அடைந்திருக்கும் என்று தோன்றியது.

நிற்க. மீனுக்கு மனம் இருக்கிறதா; அது பற்றி உனக்குத் தெரியுமா என்றெல்லாம் நீங்கள் என்னிடம் கேட்கக் கூடாது. பாவம் செய்ய நினைத்த என் மனதில்… (நிற்க நிற்க… நான் அப்படியெல்லாம் செய்திருக்க மாட்டேன்…) பாவச்செயலைப் பற்றி நினைத்த என் மனதில் அந்த விநாடி அப்படியொரு பரிதாப உணர்ச்சியும் உண்டானதென்னவோ உண்மை. கூடவே, பெருஞ்சலனப்பட்டு ஆடுகின்ற நீரில் ஒரு மருண்ட பார்வையோடு வாயை என்ன செய்வதென்று தெரியாமல் மூடி மூடித் திறந்து கொண்டு வாலைச் சிறிதாக ஆட்டி ஒன்றிரண்டு அடிகள் பின்னோக்கி நகரும் அந்த மீனைக் கற்பனை செய்து பாருங்கள். மீன்களுக்கும் மனத்தகைவு உண்டாகும் என்று எங்கோ படித்த ஆராய்ச்சிக் கட்டுரை உங்களுக்கு நினைவுக்கு வரவில்லை? இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பின்னொரு நாளில் அப்படி ஒரு கட்டுரை வரும்போது ‘செல்வராசு அன்னைக்கே சொன்னாரு’ என்று மட்டும் சொல்லி விடுங்கள்.

தொட்டிகளிலே அழகுக்குப் பலியாகி நீந்துகிற மீன்களை அருகே சென்று பார்க்கையில் எப்போதும் அவற்றின் முகங்களில் ஒரு சோகம் இழையோடுவதாய் எனக்குத் தோன்றும். வளர்ப்புப் பிராணிகள் என்று எதையும் வைத்துக் கொண்டதில்லை என்பதால் இறந்து மிதக்கிற மீன்குஞ்சுகளை வலையில் பிடித்து வெளியே எடுத்தெறியும் அனுபவம் எனக்கு இல்லை. ஆனாலும் பெண்களின் பள்ளியிலே எப்போதோ ஒரு முறை தங்கமீன் ஒன்றைக் கொடுத்தனுப்பியதும் அதை இரண்டு நாள் கூட உயிருடன் வைத்திருக்க முடியாமல் குப்பைத் தொட்டியில் கறிவேப்பிலைக் காம்பைப் போல் தூக்கி எறிந்ததும் நாட்போக்கில் மறந்து போய் விட்டது. இருந்தும் பல ஆண்டுகள் கழித்து இன்று நினைவு வருகிறது என்றால், மன இடுக்கில் எங்கோ அது உறைந்து போயிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அழகான தங்க மீன்களுக்கு ஆயுசு கெட்டியில்லை.

மீன்பிடித்தல் ஒரு பிரியமான பொழுதுபோக்காய்ப் பலர் சிலாகித்துப் பேசுவதைப் பார்க்கலாம். ஆனால், நான் மீன் பிடிக்கப் போனதில்லை. ஒரே ஒரு முறை நண்பனோடு சென்ற ஒரு களியாட்டப் பூங்காவில் (amusement park) சிறு தொட்டியில் மீன்பிடித்துத் திரும்பத் தொட்டியில் எறிந்துவிடவேண்டும் என்னும் விளையாட்டு (?) பார்த்திருக்கிறேன். தூண்டிலிற் புழு ஒன்றைச் சிக்க வைத்துத் தொட்டியில் எறிந்து நண்பன் உற்சாகத்தோடு சிக்கிய மீனை வெளியே எடுத்துப் பார்த்தான். அவனுக்கும் அதுவே முதல்முறை மீன்பிடி அனுபவம். கொக்கியில் மாட்டிக் கிழிந்த புண்ணில் இரத்தம் வழியக் காற்றில் துடித்த மீனைப் பார்க்கையில் எங்கள் இருவருக்குமே பாவமாக இருந்தது. இனிமேல் வாழ்க்கையில் மீன்பிடிக்கப் போவதில்லை என்று நினைத்துக் கொண்டோம். பேசிக் கொண்டோம். அதன் பிறகு நான் மீன் பிடிக்கப் போகவில்லை. அவனும் போகவில்லை. போவதற்கு அவன் இருக்கவில்லை. அடுத்த வருடமே அவன் சில மருத்துவக் கோளாறால் மறைந்து போனான் 🙁

மீன்பிடிக்கப் போவதில்லை என்பதால் இப்போது மீனைப் பிடிக்காமல் போகவில்லை. சிறு வயதில் வீட்டில் மீன் சுட்டுத் தரும் நாட்களில் (பல்லாண்டுகளுக்கு ஒரு முறை என்றாலும்) அந்த நாற்றம் பிடிக்காமல் அன்று முழுதும் வீட்டை விட்டு வெளியே ஓடி இருக்கிறேன். ஈரோட்டுப் பெரும்பள்ளம் ஓடையொட்டிச் சாலையோரம் போட்டு வைத்திருக்கிற மீன்கள் அப்படி ஒன்றும் சுவையானதாய் இருந்ததில்லை. நல்ல மீன்களை வாங்கக் கடலோரம் இருந்திருக்க வேண்டும் என்று தூத்துக்குடி மற்றும் சென்னை நண்பர்கள் பேசுவதைக் கேட்டு நினைத்திருக்கிறேன். குறைந்த பட்சம் ‘கொடிவேரி’யில் நல்ல மீன் கிடைக்கிறதாம். சொல்கிறார்கள், பன்னிரு வருடங்களாக வாங்கிக் கொடுப்பார் யாரையும் தான் காணவில்லை! 🙂

நாற்றம் அடிக்காத மீன் வேண்டுமென்றால் ‘கேட்-ஃபிஷ்’ (பூனை மீன்:-) ) என்று அமெரிக்காவில் ஒன்று கிடைக்கிறது. அதை வாங்கி வந்தால், சும்மா புடலங்காய் வெட்டிச் சமைப்பது போலத் தான் இருக்கும். கொஞ்சம் புளி போட்டுக் குழம்பு வைக்கப் பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு நண்பர் சொல்லிக் கொடுத்ததை வைத்து வாரா வாரம் உண்ட காலம் உண்டு. அதைத் தாண்டி எப்போதாவது சால்மன், டிலேப்பியா என்று போவது உண்டு. உடலுக்கு நல்லது என்று சொன்னாலும் அங்கும் சிலவற்றில் பாதரசம் (mercury) தேங்கிக் கிடக்கும் அது கெடுதல் என்ற பயமுறுத்தல் காரணமாக அந்தக் கொஞ்சமும் இப்போது குறைந்து போய்விட்டது. பண்ணையில் வளர்த்ததா (farm raised) படுகடலில் வளர்ந்ததா என்று பலதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

போன மாதம் ‘ஹோல் ஃபுட்சு’ கடையில் உறைந்த பனிக்கட்டிகளின் மீது முழுதாய்ப் படுத்துக்கொண்டிருந்த மீன் ஒன்றைப் பார்த்தேன். நீலமீன் (Blue fish) என்று பெயர் கூட நன்றாகத் தான் இருந்தது. வாங்கினால் என்னவென்று தோன்றியது. கடைக்காரரே வெட்டிச் சுத்தம் செய்து கொடுத்து விடுவார் என்பதால் இன்னும் வேலை மிச்சம். எப்படி வெட்ட வேண்டும் என்று கேட்டவரிடம் சிறு சிறு துண்டுகளாக வெட்டச் சொன்னவன், தலையை என்ன செய்வது என்று கேட்டபோது, “நீங்களே வச்சுக்குங்க” என்று கால்வாசி மீனைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.

எதற்கு வம்பு? அப்புறம் அது தன் ‘முழியாங்கண்ணை’ வைத்துக் கொண்டு என்னைப் பார்க்கும். முறைக்கும். பேசும். பாவம் பாவம் என்று வாயில் அடித்துக் கொள்ளும். வெந்த மீன் துண்டையும் குழம்பையும் சுடுசோற்றோடு அள்ளிப் போட்டுக் கொள்வதை விட்டுவிட்டு இதெல்லாம் நமக்குத் தேவையா, சொல்லுங்கள்?

Tags: பொது · வாழ்க்கை

9 responses so far ↓

  • 1 Balaji // Jan 4, 2008 at 1:30 am

    —கொக்கியில் மாட்டிக் கிழிந்த புண்ணில் இரத்தம் வழியக் காற்றில் துடித்த மீனைப் பார்க்கையில்—

    கொஞ்ச நாள் மீன் தொட்டி வைத்து மீன் வளர்க்கப் பார்த்தது ஞாபகத்துக்கு வருகிறது. வாங்கிய ஆறேழு மீன்களும் நாளுக்கு ஒன்றாக பலியானதில் இருந்து மீன்காட்சியகத்திலும் லீகல் ஸி ஃபுடிஸிலும் தான் தரிசனம்.

  • 2 வடுவூர் குமார் // Jan 4, 2008 at 2:56 am

    இன்றும் சிலர் என்னிடம் சும்மா மீன் பிடிக்கப்போகிறேன் என்று சொல்லும் போதே “எரியும்”.
    சரி,பிடித்து வீட்டுக்கு கொண்டு வருவாயா? என்றேன்.
    “இல்லை” மறுபடியும் தண்ணீரில் விட்டுவிடுவேன் என்றது எரிச்சல் இன்னும் அதிகமாகியது.

  • 3 செல்வராஜ் // Jan 4, 2008 at 9:19 pm

    பா.பா, வடுவூர் குமார், நன்றி. உங்களுக்கும் அந்த அனுபவங்கள் இருப்பது தெரிகிறது. கணித்திரையில் screensaver-ஆக இருக்கும் மீன்களை “வளர்ப்பதே” உத்தமம் என்று அவ்வளவு தான் என் மீன்வளர்ப்பு அனுபவம் 🙂

  • 4 காசி // Jan 4, 2008 at 11:14 pm

    //‘செல்வராசு அன்னைக்கே சொன்னாரு’ // சொல்லிடுறோம்:-)

    //இறந்து மிதக்கிற மீன்குஞ்சுகளை வலையில் பிடித்து வெளியே எடுத்தெறியும் அனுபவம் எனக்கு இல்லை.// நல்லவேளை தப்பிச்சீங்க. அது ரொம்ப சோகமான சமாச்சாரம். குழம்புல கிடக்கிற ஒரு குண்டா நிறைய மீனை ருசிச்சு சாப்பிடும் அதே நாக்குத்தான் செத்துப்போன தொட்டி மீனப் பாத்து ‘ட்சொ, ட்சொ, பாவம்’னும் சொல்லுது. நரம்பில்லாதது!

    எழுதினா மீன் சிரியல் ஒண்ணு எழுதலாம், ம், மாட்டேன்:-)

  • 5 Vimala // Jan 9, 2008 at 4:46 pm

    “பல ஆண்டுகள் கழித்து இன்று நினைவு வருகிறது என்றால், மன இடுக்கில் எங்கோ அது உறைந்து போயிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ”
    True….I have similar experience and l feel guilty.
    எதற்கு வம்பு? அப்புறம் அது தன் ‘முழியாங்கண்ணை’ வைத்துக் கொண்டு என்னைப் பார்க்கும். முறைக்கும். பேசும். பாவம் பாவம் என்று வாயில் அடித்துக் கொள்ளும்.
    Exactly…..pavam thane.

  • 6 Balaji // Jan 9, 2008 at 5:27 pm

    —அது ரொம்ப சோகமான சமாச்சாரம். குழம்புல கிடக்கிற ஒரு குண்டா நிறைய மீனை ருசிச்சு சாப்பிடும் அதே நாக்குத்தான்—

    மீன்காட்சியகத்தில் தொட்டி தொட்டியாக அதிசயித்து வரும்போதே, பார்வையாளர் சிலரிடம் கேட்ட குரல்… ‘இந்த மீன் ரொம்ப சுவையா இருக்கும். இது நான் சாப்பிடதே இல்ல…’ 🙂

  • 7 செல்வராஜ் // Jan 9, 2008 at 9:22 pm

    காசி, விமலா: நரம்பில்லா நாக்கு, பாவம்னு சொல்லி குற்ற உணர்ச்சி எல்லாம் உண்டாக்கப் பாக்காதீங்க. ஏதோ ஆடிக்கொரு தடவ தான் எங்கூட்டுல.

    பா.பா, அதிகமா மீன்காட்சியகம் போனதில்ல. உசுரோட இருக்குற மீனெல்லாம் சாப்பிடணும்னு நான் நெனைக்குறதில்ல.

    அப்புறம், முன்பு இங்க ‘வெஜிட்டேரியன்’னு சொன்னா ‘not even fish?’ன்னு கேள்வி வரும் பாத்திருக்கீங்களா? 🙂

  • 8 நட்டு // Jan 15, 2008 at 9:07 am

    நானும் மீன் பிடிக்கிறேன்னு குச்சி வாங்கியதோடு சரி.அதுக்குள்ள சி.வி.ஆர் வந்து வாங்க படம் பிடிக்கலாம்ன்னு கூட்டிட்டு போயிட்டாரு.வடுவூரார் சொன்ன மாதிரியே ஒருத்தர் முக்காலி போட்டு ஒரு மணி நேரமா உட்கார்ந்துட்டு போறபோது கொக்கில மாட்டின மீனை கடல்தண்ணிலேயே விட்டது என்னமோ உண்மை.

  • 9 கதிர் // May 3, 2008 at 3:50 am

    கொல்லம்பாளையத்துல ஒரு அரசு வறுவல் மீன் அங்காடி இருக்குமே அங்க ரொம்ப நல்லாருக்குங்க. முள் இல்லாத பொரித்த மீனை அங்கேதான் என் வாழ்வில் முதல் முறை சாப்பிட்டேன். ரசனையான ருசி. கடல் மீன்களை விட ஏரி, குட்டை, ஆற்றுமீன்கள்தான் சாப்பிடுவதற்கு ருசியானது. இதை என் அனுபவத்தில் கண்டது. மற்றவருக்கு எப்படியோ தெரியவில்லை.