இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

தமிழ்மணம் என்றொரு நொண்டிக் கழுதை

December 24th, 2007 · 14 Comments

ஒரு தகப்பனும் மகனும் பக்கத்து ஊர்ச் சந்தையில் கழுதை வாங்கிவிட்டு எப்போதுமே நிம்மதியாக ஊருக்கு வந்ததாகச் சரித்திரமே இல்லை. எங்கள் வீட்டுக் கழுதைக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? பலகாலம் ஆனாலும் எங்கள் கழுதைக்கு இன்னும் கூட நிம்மதியில்லை.

Technology is a donkey

நொண்டிக் கழுதைன்னு சொல்றாங்களேப்பா…” என்றார் அப்பா.

“ஊர்ல வேலை இல்லாத வெட்டி ஆபீசர் ஆயிரம் சொல்லுவாங்க. அதுக்கு என்னப்பா பண்ண முடியும். நொண்டிக் கழுதைன்னாலும் ஊர்க்காரங்க பொதிய எல்லாம் சொமந்துட்டுத் தானே இருக்கு?”

“இல்ல… என்னமோ இந்தக் கழுதை நொண்டுறதால பொதி வந்து சேர்றதுல பிரச்சினைன்னு பொரளி கெளப்புராங்களே”

“அடப் போங்கப்பா! என்னவோ ஏழு மாசத்துக்கு முன்னால ஒருநாளு பொதிபாரம் தாங்காம, கழுதைக்குக் காலு மடங்கிடுச்சு. என்னவோ இந்தக் கழுதை கொண்டு வராத பட்டு வேட்டியினால தான் கல்யாணமே நின்னு போச்சுங்கற அளவுக்கு பேசுனா… கேக்கறவுங்கல்லாம் கேழ்வரகுல நெய்யு வடியுதுன்னு நெனைக்குறவங்கன்னு நெனச்சீங்களா?”

“இல்லப்பா… என்னமோ இதவிட நல்ல கழுதை இருக்காமுல்ல? சொல்றாங்களே?”

“சந்தையில ஆயிரம் கழுதை இருந்தாலும் எல்லாத்துக்கும் எங்கயாவது ஒரு பிரச்சினை இருக்கத் தான் செய்யும். அவிய சொல்றாங்கன்னு நீங்களும் கேட்டுக்கிட்டு இருக்கீங்க… எந்தப் பிரச்சினையுமே இல்லாத கழுதைன்னு ஒண்ணு கெடயவே கெடயாது. நமக்கு இருக்கற வேலையைச் செய்ய, நம்மால முடிஞ்ச காசு+நேரத்துக்கு இது சரியா இருக்கும் இது போதும்னு வச்சிக்கிட்டோம். அதுல என்ன பிரச்சினை?”

“இப்படியெல்லாம் நொண்டாத கழுதைய வச்சு நம்மல வேல செய்யச் சொல்றாங்களே சில பெரீயவக?”

“நம்ம தேவைக்கும், ஊர்ப்பொதியச் சொமக்கரதுக்கும், இது போதுமா… வேற கழுதை பாக்கலாமா… இல்லை இதுக்கே கட்டுப் போடலாமா? அப்படின்னெல்லாம் நாம பாத்துக்குட்டே தான இருக்குறோம். சந்தைல புதுசா எதாவது வருதான்னும் நீங்களும் பாக்கறீங்க? அந்த அக்கறை கூடவா இல்லாம இருப்போம்? அப்புறமும் சிலபேரு பொழுதுன்னிக்கும் ‘நான் சொல்றேன் அவங்க செய்யணும்’னு அதையே வெளியில மைக்குசெட்டு போட்டுச் சொல்லிக்கிட்டிருந்தா அவங்களுக்கு என்னான்னு பதிலச் சொல்றது? நமக்கும் வேற வேலைவெட்டி இருக்குல்ல?

பொறவு பாருங்க… முன்னால இருந்த சின்னக் கழுத பத்தலீன்னு இத வாங்கல்லியா? இதுவும் சரியில்லைன்னா செய்ய வேண்டியதச் செஞ்சுட்டுப் போறோம். பொதி அதிகமானா, ‘போகுது கழுதை’ன்னு செத்துப் போகுட்டும்னு உட்டுப்போடுவமா? என்ன தேவையோ அதச் செய்ய மாட்டோமா? அடுத்தவங்க சொல்லித் தான் எனக்குச் சோறு போட்டீங்களா? எனக்குப் பசிச்சா என்ன செய்யணும்னு தெரிஞ்சுக்க எந்த ஊர்ல போயி நீங்க படிச்சீங்க?”

“எத்தனையோ அழகான கழுதை இருக்கு. அதைவிட்டுட்டு இதை ஏன் வச்சிருக்கீங்கன்னு கேக்குறாங்களே?”

“ஏப்பா… நம்ம வேலையச் செய்யறதுக்கு ஏத்தமாதிரி இருந்தாச் சரி. வடிவான கழுதைன்னு கல்யாணம் கட்டிக்கவா முடியும்? உலகத்துலயே அழகான கழுதையைத் தான் நாம வாங்கணும்னா, மைக்குசெட்டு மவராசன் லாரி நெறயாப் பணம் அனுப்புச்சார்னா பரவாயில்லே. மத்த வேல வெட்டிய உட்டுப்போட்டு முழுநேரமா இங்க உக்காந்து கழுதைக்குப் பூச்சு பூசிப் பூரிச்சுக் கெடக்கலாம்”

“கழுதைய எப்படி அழகு படுத்தறதுன்னு அவங்க சொல்வாங்களாமே?”

” ‘நீங்க வச்சுருக்கறது எல்லாம் ஒரு கழுதையா? வேற மாதிரி நாங்களே ஒன்னச் செய்யறோம் ஒரு அஞ்சாறு காலு வச்சு’ன்னு கெளம்பிச் செஞ்சுக்கிட்டிருக்காங்க. பாத்துப் பண்ணுங்கப்பா, நல்லாச் செஞ்சாச் சரி’ அப்படின்னு தானே நாமலும் போய்க்கிட்டு இருக்கோம். அதுக்குமே பூசரதுக்குப் பவுடரு கொடு, சீவரதுக்குச் சீப்புக் கொடுங்கறாங்க.

அப்புறம், ஒரு கழுதை இருக்கற ஊர்ல பல கழுதை வந்தா எல்லாத்துக்கும் நல்லா இருக்கும்னா இருக்கட்டும். அதுக்காக ‘எங்க கழுதைக்குத் தான் அஞ்சு காலு இருக்கு இங்க வாங்க, கொறஞ்சது அந்த நொண்டிக் கழுதைய விட்டு வாங்க’ன்னு மைக்குசெட்டு வேலையை எல்லாம் நாம செய்யறதில்லை.

அன்னிக்கு நடந்த கதையக் கொஞ்சம் கேட்டீங்களா? நம்ம கழுதையோட அவசரமாப் போய்க்கிட்டிருந்த ஒரு நாளு ஒருத்தரு வந்து ‘என்னப்பா நொண்டிக் கழுதைய வச்சுக்கிட்டே எத்தன நாளைக்கு பொழப்ப நடத்துவே. பாத்தா பாவமா இருக்கே. எதாவது மருத்துவம் செய்யக் கூடாதான்னார். இப்பத் தான் மருத்துவர் கிட்டே இருந்து வர்றோம். நாப்பது ஊசி போட்டிருக்கார் அண்ணேன்னேன்.”

‘சரி சரி… நாஞ்சொன்னதுனால தான் ஊசி போட்டீங்கன்னு ஊர்ல நெனச்சுக்கப் போறாங்க. பொதி வேற அதிகமா இருக்குது. இத்தனையில என்னட சட்டை எங்க இருக்குதுன்னே தெரியல்ல. எதுக்கும் நான் வேற எடம் பாத்துக்குறேன்’னு சட்டைய உருவிக்கிட்டுப் போயிட்டாரு. அப்புறமும் நொண்டிக் கழுதைன்னு சொல்லிக்கிட்டே அப்பப்ப தானே ஏறிச் சவாரி செஞ்சுக்கிட்டு இருக்காரு. கேட்டா, ‘கழுத நொண்டுனாலும் பல ஊருக்குப் போகுதே. எனக்கு அங்கயெல்லாம் போகணும்னா வசதியா இருக்குப்பா அதுனால வந்துட்டேன். ஆனாலும், என் சட்டையெல்லாம் வேற கழுத வழியாத் தான் போகுது தெரியுமா’ங்குறார்.

இதுக்கெல்லாம் நான் என்னான்னு சொல்ல?

இப்பவும் வந்து ‘அந்த ஊசி போடு, இந்த மாத்திரை கொடு, இந்தக் கட்டுப் போடு, அந்த சோறு குடுக்காத’ன்னு எல்லாத்தையும் சொல்லிக்கிட்டிருந்தாரு. ‘கழுதைன்னா இப்படித் தான் இருக்கணும். நாங்க சொல்றமில்ல. கேட்க வேண்டியது தான’ன்னு எல்லாத்தையும் கைவலிக்கக் கத்திக்கிட்டு இருக்காரு. ‘அட அண்ணே, எப்பவும் பாக்குற மருத்துவமும், எச்சா ஒரு கட்டும் போடனும், நீங்க கொஞ்சம் வழிய விட்டீங்கன்னா மருத்துவரு வீட்டுக்குத் தான் போயிக்கிட்டு இருக்கோம். இன்னிக்கு வேணுங்கற கட்டப் போட்டுக்கிட்டு வந்துருவோம். நாங்க வந்த பிறகு, ‘பாருங்க நான் சொன்னதுனால தான் இந்தக் கட்டுப் போட்டிருக்கீங்க’ன்னு சொல்லிக்குங்க, இப்போ கொஞ்சம் வழிய விடுங்க’ன்னு சொல்லீட்டுப் போகனும்.

எதுக்கும் ஊர்க்காரங்க கிட்ட ஒரு வார்த்த சொல்லீட்டு வந்துர்றேன். கழுதை எப்பூமிருக்குறாப்புல தான் இருக்குது. நேரங்கெடைக்குறப்போ வேணுங்கற மருத்துவம் பாக்குறோம். வேற நல்ல கழுதை வந்தாலும் பாத்து வாங்கி வைக்கிறோம். நீங்க உங்க வேலையப் பாருங்க. வேற கழுதை பாத்தாலும் பாருங்க. எங்களுக்கும் சொல்லுங்க. ஆனா, அஞ்சாறு காலும் தொண்ணூத்தொம்பது கண்ணும் இருக்கற மாதிரி ஒன்ன நான் காட்டுறேன்னு யாராவது வந்து சொன்னா, அது என்னான்னு கொஞ்சம் நின்னு யோசிச்சுக்குங்க.

அவ்வளவு தான் நாஞ்சொல்லுறது.

Tags: இணையம் · கொங்கு

14 responses so far ↓

  • 1 குழலி // Dec 24, 2007 at 12:57 am

    செல்வராஜ் இது ஜூஊஊஊஊஊஊஊஊஊஊப்பரப்பு

  • 2 செல்வராஜ் // Dec 24, 2007 at 1:09 am

    குழலி, நன்றி. தவறான தகவல்களை மறுத்து எழுதப் பட்டிருக்கும் உங்கள் பதிவிற்கும் நன்றி. நீங்கள் பதிவில் சொன்னது போன்றே தனித்தனியாய் எல்லாத் தவறான கருத்துக்களையும் குறித்து எழுத நேரமில்லாமை ஒரு காரணம். வாதச்சுழலில் சிக்க விரும்பாதது இன்னொன்று.

  • 3 கோவி.கண்ணன் // Dec 24, 2007 at 1:11 am

    சூப்பர் உதை 🙂

  • 4 தமிழ் சசி // Dec 24, 2007 at 1:24 am

    ரவிசங்கரின் முரண்பாடு குறித்து பலர் பேசி விட்டார்கள் என்பதால் நான் பேசப்போவதில்லை. ஆனால் என்னுடைய குறைந்தபட்ச வருத்தம் என்னவென்றால் ஒவ்வொரு நாளும் முழம் நீளத்திற்கு பதிவு எழுதவும் பிரச்சாரம் செய்யவும் நேரம் இருக்கிற இவருக்கு, மிகவும் சுலபமான ஒரு திரட்டியை அதுவும் tamilblogs.com போல தளத்தை opensource மூலம் மேம்படுத்தக்கூடிய வாய்ப்பு இருந்தும் ஒரு உருப்படியான திரட்டியை கூட செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் தான் 🙂

    ஆனால் எல்லா திரட்டிக்கும் இவர் தான் Technology consultant என்ற பிம்பத்தை உருவாக்கி கொள்கிறார். தமிழ்மணத்திற்கு இவர் என்ன தொழில்நுட்ப ஆலோசனை கொடுத்தார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எல்லா திரட்டிக்கும் ஆலோசனை கொடுத்ததாக கூறிக்கொள்கிறார். நாளைக்கே தமிழ்மணம் தொழில்நுட்ப ரீதியில் சில மேம்பாடுகளை கொண்டு வந்தால், நான் தான் ஆலோசனை கொடுத்தேன் என்று கூறிக்கொள்ளவும் தயங்கமாட்டார் என்று நினைக்கிறேன் 🙂

  • 5 ila // Dec 24, 2007 at 1:32 am

    //கேக்கறவுங்கல்லாம் கேழ்வரகுல நெய்யு வடியுதுன்னு நெனைக்குறவங்கன்னு நெனச்சீங்களா?//
    Ithukkum melaiyum oru pathil venugala Selva? oru vasanam irukkkunga. Freeya vidu maame. vittutu poveengala athai vittutu kazuthai kuthirainnu kathai ezuthukittu.

  • 6 ஜெகதீசன் // Dec 24, 2007 at 1:38 am

    கலக்கல்… சூப்பர் க(உ)தை!!!!
    🙂

  • 7 செல்வராஜ் // Dec 24, 2007 at 9:31 am

    கண்ணன், சசி, இளா, ஜெகதீசன், உங்களுக்கும் நன்றி.

    இளா, freeyaவே தான் விட்டிருந்தேன். ஆனால், அடுக்கடுக்காய் அடுக்கப்பட்டதில் மூச்சுத்திணறலாப்போச்சு. அதான் இப்படித் தெளிவுபடுத்தத் தோணுச்சு. இனி வேற உருப்படியான வேலைக்கு எல்லாரும் போலாம்.

  • 8 natarajan // Dec 24, 2007 at 11:36 am

    பதிவின் நையாண்டித்தனம் படித்துவிட்டு வெளியே போகலாம் என்று நினைக்கும் போது அட்டாலி(பரண்) என்ற மறந்து போன கொங்குத் தமிழைக் கண்டு மயங்கிப் போனேன்.

  • 9 செல்வராஜ் // Dec 24, 2007 at 1:59 pm

    நடராஜன், நன்றி. நிறைய வட்டாரச் சொற்கள் மறந்து போகின்றன. மீட்டெடுக்கவும், மிச்சத்தை நினைவில் இருத்திக் கொள்ளவும் ஆசை.

  • 10 senshe // Dec 24, 2007 at 3:05 pm

    :))))))))))))

  • 11 நண்பன் // Dec 24, 2007 at 4:28 pm

    அழகு.

    பாராட்டுகள்.

  • 12 Thangamani // Dec 24, 2007 at 5:45 pm

    செல்வா, நல்ல க(ழு)தை!

    வட்டார நடை அழகையே நான் இதில் பெரிதும் ரசித்தேன். எளிமையாக எழுதுதல் என்பது முதிர்ந்த எழுத்தின் அடையாளம் என்றால், இங்கு அது கைகூடி இருக்கிறது. சாரா உங்கள் குழந்தைகளுக்கு கதை சொல்லிச் சொல்லி அது வந்திருக்க வேண்டும் என்கிறார்.
    அதுவும் சரியானதாகவே படுகிறது. குழந்தைகளுக்கும் ஞானிகளுக்கும் சரியான அறிவைக் கடத்தும் ஊடகங்களாக எளிய கதைகள் ரொம்ப காலமாகவே இருப்பது இயல்பானதுதானே!

    நன்றி!

  • 13 செல்வராஜ் // Dec 25, 2007 at 9:38 pm

    senshe, நண்பன், தங்கமணி: நன்றி. குழந்தைகளுக்குச் சொன்ன கதைகள் எல்லாம் நினைவில் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், மனம்போன போக்கில் சொன்னவை மறந்துபோச்சு. இது கூட நினைவில்லையா என்று அவர்கள் நினைவுபடுத்தினாலும் சிலவற்றைத் தவிர நினைவில் இல்லை.

  • 14 எல்லாம் கருத்தாக்கல் மயம் « Snap Judgment // Dec 26, 2007 at 5:33 pm

    […] எழுத்தின் அடையாளம். (என்றால்) – Thangamani உதாரணங்கள், ஒப்புமைகள், […]