இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

கணிணியில் தமிழ் வந்த வழி – ஒரு பயனர் அனுபவம்

November 20th, 2003 · 3 Comments

மீண்டும் வரலாற்றுப் பாதையில் ஒரு சிறு பயணம். இது கணிணியில் தமிழ் வந்த வழி பற்றிய ஒரு பயனர் பார்வை. இன்று கணிணிகளில் பரவலாகிக் கொண்டிருக்கிற தமிழ் வடிவங்கள் பற்றி முன்னர் எழுதி இருந்தேன். ஆரம்ப நாட்களில் தமிழைக் கணிணிகளில் காணவும் உள்ளிடவும் மக்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் பட்ட பாடுகளையும் திசைகளின் ஆரம்ப இதழில் ஒரு பிரசவ வலிக்கு ஒப்பிட்டிருந்தார் கண்ணன்.  என்னுடைய பங்கு ஒரு பயனர் என்கிற அளவில் அவர்கள் பெற்றுத் தந்த குழந்தையோடு கொஞ்சி விளையாடுவது மட்டுமாகத் தான் இருந்தது.

நினைவு மறப்பதற்குள் இந்த முயற்சிகள் சரித்திரப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கோடி காட்டிவிட்டு அவர் “தொன்று நிகழ்ந்தனைத்தும்” கட்டுரைத் தொடரில் வேறு பலவற்றைப் பற்றிப் பார்க்கச் சென்று விட்டார். ஒரு முழுமையான விரிவான சரித்திரப் பதிவு செய்யும் அளவு என் ஞானமோ அனுபவமோ அமையாததால் அந்தக் கருத்தை ஆமோதிப்பதோடு நின்று விடுகிறேன். தமிழ் இணைய மாநாடுகளிலும் இன்னும் பிற ஊடகங்களிலும் இவற்றைப் பற்றிய விலா வாரியான தகவல்கள் ஒருவேளை கிடைக்கக் கூடும்.


ஆனாலும் ஒரு பயனர் என்கிற அளவில் என்னுடைய குறுகிய அனுபவத்தின் அடிப்படையில் சில குறிப்புக்களை இங்கு கிறுக்குகிறேன். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நான் கல்லூரி மாணவனாய் இங்கு வந்திருந்த சமயம், இணையம் வலைப்பின்னல்கள் இல்லாத வெறும் பின்னணித் தொடர்பு முறையாய் ஆரம்பித்து வளர்ந்து வந்த நேரம். DOS இயங்கு தளம் கூட இன்னும் முழுமையாய் மறையாத நேரம். கணிணியில் தமிழுக்கு நான் அறிந்த முதல் செயலி – கனடாவைச் சேர்ந்த Dr. ஸ்ரீனிவாசனின் ‘ஆதமி’ என்னும் DOS-இல் அமைந்த ஒரு மென்பொருள். FTP எல்லாம் செய்து (!) அதை இறக்கிக் கொண்டது பெரும் சாதனையாக இருந்தது.

aadami vinayakar 2.jpg
ஆதமியில் தனியாக ஒரு எழுத்துரு என்று எதுவும் இருக்கவில்லை (பின் ஆண்டுகளில் ஒரு TTF எழுத்துருவை அவர் உருவாக்கினார் என்று எண்ணுகிறேன்). அதனால் வேறு எந்த செயலியோடும் பயன்படுத்த முடியாது. அந்தச் செயலியின் மேல்பகுதியில் ஆங்கிலத்தில் தட்டச்சி ஒரு Fn Key-ஐ அழுத்தினால் கீழே தமிழில் தெரியும். ஆனாலும், சில படங்கள் (அழகாய் ஒரு விநாயகர்), மற்றும் கோலங்கள் போன்ற கொத்துக்களை அது உள்ளடக்கி இருந்தது.

அதன் பிறகு மயிலை, X-Tamil/libtamil/Tex/LateX/WnTamil, மதுரை முதலியவற்றைப் பற்றிச் சொல்லலாம் என்றிருந்தேன். Dr. கல்யாண் அதை இங்கே அருமையாகத் தொகுத்து வைத்திருக்கிறார். அதனால் நான் விட்டு விடுகிறேன்.

சில படங்கள் மட்டும் இங்கே…

மயிலை எழுத்துருக் கொண்டு அமைக்கப் பட்ட இந்தத் திருமண அழைப்பு 1996ல் அமைக்கப்பட்டது. எங்களுடையது தான் ! vasantha azaippu.jpg

Soc.Culture.Tamil என்னும் பயன்வலைச் (UseNet) செய்திக் குழுமத்தில் ஒரு பதிவில் மதுரை முறை கொண்டு அச்சிட்ட என் கையொப்பம்.
madurai.jpg

Tags: கணிநுட்பம் · தமிழ்

3 responses so far ↓

  • 1 காசி // Feb 17, 2004 at 1:02 am

    FTP எல்லாம் செய்து (!) hi hi )

    அதென்னது மதுரை முறை. எல்லாம் பெரிசு பெரிசா இருக்கும் போல…

  • 2 செல்வராஜ் // Feb 17, 2004 at 1:02 am

    இது பற்றித் தான் கண்ணன் மேற்கூறிய உரையில் கூறியிருந்தார். தமிழைத் திரையில் காணவேண்டும் என்று விசைப்பலகையில் இருக்கிற வெவ்வேறு வடிவக் கோடுகளைப் பயன்படுத்திய விதம் அது. உள்ளீடு romanized முறை தான்.

  • 3 ந. கண்ணன் // Feb 17, 2004 at 1:02 am

    செல்வராஜ் அருமையான முயற்சி. ஏன் இதை நீங்கள் ஒரு கட்டுரையாக நான் இணையாசிரியராக இருக்கும் இ-சங்கமத்திற்கு தரக்கூடாது? பாராட்டுக்கள்.