இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

எதற்கு ?

November 6th, 2003 · No Comments

முதலில் இதோ தண்டூராச் சத்தம். டகர டகர டகர டகர டும்… இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால், இதோ நானும் என் வலைப்பதிவுகளோடு வந்துவிட்டேன். குறைந்தது நான்கு நாட்களாவது எழுதினால் தான் வெளியே சொல்வது என்று ஒரு சுய இலக்கு வைத்திருந்தேன். அதை வெற்றிகரமாக அடைந்துவிட்டதால் இந்த அறிவிப்பு.


வயதில், அனுபவத்தில், ஆற்றலில், அறிவில், முயற்சியில், சிந்தனையில் மிகப் பெரியவர்களெல்லாம் இந்த வலைப் பதிவுகளில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் எனக்குப் பிடித்த சிலரை இங்கே தனியாய்ச் சுட்டி இருக்கிறேன் (பிடித்தவை பகுதி பார்க்க). பெரும் முழக்கத்தோடு கலக்கிக் கொண்டிருக்கும் அவர்களை எல்லாம் தாண்டி இங்கே என் சிறிய மூலைக்கு நீங்கள் வர நேர்ந்தால், வணக்கம்.  வாருங்கள் – என் எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு இந்த எழுத்துக்களோடு சற்று உறவாடி விட்டு உங்கள் கருத்துக்களைத் தந்து விட்டுச் செல்லுங்கள். நன்றி.


எதற்காக இந்த வலைப்பதிவுகளில் எழுதிக் கொண்டிருக்கிறேன் ? என் மனைவி கூட நேற்று என்னிடம் இதைக் கேட்டாள். எழுதுவதன் பால் எனக்கு இருந்த ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள இந்த வலைக்குறிப்பு வடிவம் ஒரு சிறந்த ஊடகமாக அமைந்திருக்கிறது. ஏதேதோ எண்ணங்களும் கிறுக்கல்களுமாக எழுதும் குறிப்பு வடிவத்திற்கும் இது நன்கு ஒத்துப் போகிறது. இந்த எண்ணங்கள் கால வெளியில் கரைந்து போகிற வெறும் கரும்புகையாய் மட்டுமே போய்விடாமல், வாழ்க்கைப் பயணத்தின் வழித்துணையாய் வருவதைப் படம் பிடித்து வைத்துக் கொள்ளும் ஒரு முயற்சி இது.

சுமார் இருபது வருடங்களாக விட்டு விட்டு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் எனக்கு இருந்து வருகிறது. (இப்போது அது வாரக்குறிப்பு, மாதக்குறிப்பு, வருடத்தில் அஞ்சு குறிப்பு என்றாகி விட்டது என்பது வேறு விஷயம் ! ). எதற்காக என்று சில சமயம் என்னை நானே கேட்டுக் கொள்வதுண்டு. சரியான விடை தெரியாவிட்டாலும், அவ்வப் போது தொடர்ந்து எழுத இன்னும் முயற்சிப்பதுண்டு. பல வருடங்களுக்கு முன்னர் (பள்ளியில் படிக்கையில் ஒரு குயர் நோட்டில்) எழுதியது படிக்கும் போது வியப்பாக இருக்கும். அது மறந்து விட்டிருக்கும் சில நினைவுகளைத் தூண்டிவிடும். அந்த நினைவுகள் நிரந்திரமாகத் தொலைந்து போகாமல் இருக்க அந்தக் குறிப்புக்கள் உதவி இருக்கின்றன. அது போலவே இந்த வலைக்குறிப்புக்களுக்கும் ஒரு பயன் இருக்கக் கூடும். எனக்கு மட்டுமே சொந்தமான நாட்குறிப்புக்கள் போல் இல்லாமல், இந்த வலைக்குறிப்புக்கள் என் (பழைய, புதிய) சொந்தங்களுக்கும், நட்புக்களுக்கும் அப்படி ஒரு பயனை அளிக்கக் கூடும்.

மாதம் தவறாமல் கடிதம் எழுதுகிறேன் என்று மாதம் தவறாமல் வாக்குக் கொடுத்து விட்டுத் தவறி விடுகிற ஒரு பெருமகனைப் பெற்றெடுத்தவள் என்றேனும் நினைத்துக் கொண்டால் அவன் கிறுக்கல்களைப் படித்துப் புளகாகிதம் அடைவதற்கு இது உதவக் கூடும்.

பெற்ற தந்தையின் எண்ணங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்திற்காகவே என் இளம் சிட்டுக்கள் இருவருக்கும் தமிழ் கற்றுக் கொள்ளும் உந்துதலை இது கொடுக்கக் கூடும்.

கல்யாணத்திற்கு முன்னாறு மாதங்கள் கடிதங்கள் மூலமே காதலை வளர்த்துக் கொண்டவனின் எழுத்துக்களை இப்போது படிக்க முடியவில்லையே என்று ஏங்கி இருப்பவள் (நினைப்பு தான்!), “ஏன்ப்பா நீ ஏதாச்சும் எழுதலாம் இல்லே, நீ நல்லா எழுதுவே”என்று ஊக்குவித்தும், பிறகு, “எங்கே என்னவோ எழுதறேன் எழுதறேன் என்று என்னோடு இராமல் ஓடி விடுகிறாய் ? “என்று குறை பட்டுக் கொண்டும் இருப்பவளுக்கும் இது ஒரு இனிமையைத் தரக் கூடும்.

இன்றில்லை எனினும் ஒரு நாள்… இன்னொரு நாள்…

Tags: பொது