• Home
  • என்னைப் பற்றி

இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

Feed on
Posts
Comments
« ததிங்கிணத் தித்தோம்
அகத்திணை »

இனிக்காதது

Oct 9th, 2006 by இரா. செல்வராசு

என் அம்மாவிடமும் அப்பாவிடமும் இருக்கிறது. அப்பச்சியிடமும் அம்மாயியிடமும் இருந்தது. நான் சிறுவனாய் இருந்த போதே இறந்து போன அப்பத்தாவிடமும், தான் சிறுவனாய் இருந்த போது இறந்து போன தன் தந்தை, என் தாத்தனிடமும் கூட இருந்திருக்கும், யார் கண்டது? குடும்ப வரலாற்றில் அதற்கு முன்னர் வேர் பிடித்துச் சென்று பார்க்கத் தரவுகள் இல்லை.

வழி வழியாய் என் மூதாதையருக்குக் கிடைத்த தலைமுறைச் சீதனம் – அது எனக்கும் கிடைத்திருக்கக் கூடிய அலுக்கம் ஓரிரு முறை இருந்த போதும் இன்னும் கிட்டவில்லை. ஒவ்வொரு வருடமும் கணக்குப் பார்க்கும் போது எனக்கும் ஒரு நாள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாய் ஆரூடம் சொல்கிறார்கள். ஆனால், எப்போது வரும் அந்நாள் என்று ஏங்கி இருக்கும் ஒன்றல்ல இது. எதுவரை தள்ளிப் போட முடியும்; எப்படியும் பெறாமல் இருக்க முடியுமா என்பதற்காக அதி முயற்சிகள் மேற்கொள்ள வைக்கிற இந்தச் சொத்திற்குச் “சர்க்கரை” என்றொரு செல்லப் பெயர் கூட உண்டு. “நீரிழிவு” (Diabetes) என்பது இதன் பெயர்.

(c) nutriweb.org.myசர்க்கரை நோயில் இரண்டு வகை உண்டு. (இதை நோய் என்பதை விட ஒருவித உடல்நிலை என்றும் கூறலாம்). இரண்டு வகையும் ‘இன்சுலின்’ என்னும் ஒரு சுரப்பியைச் சம்பந்தப்பட்டதே. நாம் உட்கொள்ளும் உணவில் இருக்கும் சர்க்கரையை (குளுக்கோஸ்) உடைத்து உடலின் ‘செல்’களுக்குச் சக்தியாக மாற்றித் தரும் வேலையைச் செய்வது இந்த இன்சுலின் என்னும் சுரப்பி தான். எல்லோருக்கும் உடலில் இயற்கையாகவே உற்பத்தியாகும் இன்சுலின் சிலருடைய உடம்பில் உற்பத்தியாகாமல் நின்றுபோவது முதல் வகை. சிலருக்கு மட்டுமே இது காரணமாய் இருக்கும்.

பரவலாக, எண்பது சதவீதத்தினருக்கு மேலாக அமைவது இரண்டாவது வகைச் சர்க்கரை நோயே. உடலில் போதுமான இன்சுலின் உற்பத்தியாகாததாலோ, உண்டான இன்சுலின் வீரியமின்றிச் சரியாக வேலை செய்யாததாலோ இது ஏற்படலாம். இதன் காரணமாக இரத்தத்தின் சர்க்கரை அளவு குறையாமல் அதிக அளவிலேயே இருக்குமென்பதால், உடலுக்குப் போதுமான சக்தி கிடைக்காத அயர்வு உண்டாவதோடு, கண்கள், நரம்புகள், சிறுநீரகம், இதயம் போன்ற உடலின் பிற பகுதிகள் பழுதுபடும் சாத்தியங்களும் அதிகம்.

சரியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி மூலமும் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். பின்னாளில் இன்சுலின் ஊசி தேவைப்படலாம் என்றாலும் ஆரம்பக் கட்டத்தில் மாத்திரைகள் மட்டுமே கூடப் போதும்.

* * * *

“சிந்தாமணில போயி இந்த மாத்திர வாங்கீட்டு வாப்பா. அங்க தான் வெல கொறவா இருக்கும்” என்னும் வேண்டுகோளை ஏற்றுக் குருமூர்த்தி டாக்டர் எழுதிக் கொடுத்த சீட்டை எடுத்துக் கொண்டு ‘கடவீதி’யில் இருக்கும் சிறப்பு அங்காடிக்குச் செல்வேன். அரசுசார் நிறுவனம் என்பதால் அங்கு விற்பனை வரி இருக்காது. சில சமயம் சிந்தாமணியில் பற்றாக்குறை என்றால் அடுத்த தெருவின் ‘காவேரி மெடிக்கல்ஸ்’ பாய் கண்டிப்பாக வைத்திருப்பார்.

வீட்டில் மங்கியதொரு ‘மஞ்சப்பை’யில் (துணிக்கடைப் பை) மாத்திரைகளைச் சீட்டோடு சுருட்டி வைத்திருப்பார்கள். சில சமயம் அரை மாத்திரை உட்கொள்ள வேண்டுமென்று உடைக்க முற்பட்டு முடியாமல் கத்தியில் வெட்டிய கதையும் உண்டு. உடைக்க அவசியமில்லாத ‘பவரு கொறைவான’ மாத்திரை வாங்கலாம் தான். ஆனால், செலவு அதிகம்.

கொஞ்ச நாட்களில், மாத்திரை தீரும்போது சீட்டுக்குப் பதிலாக ஓட்டை ஓட்டையாய் இருக்கும் பழைய மாத்திரை அட்டையைக் காட்டி, “இந்தாப்பா, இந்த ரெண்டுலயும் ரெண்டுரெண்டு அட்டை வாங்கீட்டு வந்திரு” என்பார்கள்.

ஒருமுறை வந்துவிட்டால் எக்காலத்துக்கும் துணையிருக்கும் இந்தச் சர்க்கரை நோய் அதற்குள் நன்கு பழக்கமாகி இருக்கும். அடுத்த முறை என்ன மாத்திரை, எவ்வளவு வேண்டும், எவ்வளவு விலை என்று பைசாக் கணக்கு வரையில் அத்துப்படியாகி இருக்கும். மருத்துவரைக் கூட மாதா மாதம் பார்க்காமல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பார்த்தாலே போதும் என்று இருந்துவிடுவார்கள்.

மாத்திரை வாங்கிவர நாளடைவில் பழைய அட்டை கூட வேண்டி இருக்கவில்லை எனக்கு.

“ஏனுங்காத்தா, மாத்திரை தீந்து போயிருச்சா? சரி இருங்க, இன்னிக்கு சாய்ந்திரம் வாங்கிட்டு வந்துர்றேன்” என்று செல்வேன்.

கண்ணாடித் தடுப்பின் பின் இருப்பவரைப் பார்த்து, “(அ)ண்ணா, டிபிஐ-ல ரெண்டு அட்டை, டயோனில்-ல ரெண்டு அட்டை கொடுங்க” என்று கேட்டு வாங்குமளவு எனக்கே அந்த மாத்திரைகளோடு நெருக்கமான உறவு ஏற்பட்டிருக்கும்.

(c) www.nandyala.org
அந்தக் காலத்தில் சர்க்கரை நோய் இருந்த பலரும் வாங்கியது இந்த இரு மாத்திரைகளாகத் தான் இருக்கும். ஒரு சிலர் இனிப்புச் சாப்பிட ஆசைப்படும்போது, “அது என்ன கண்ணு. இந்த இனிப்பு சாப்பிடலாம்னு தோணறப்ப ஒரு டயோனில் எச்சாத் தின்னாப் போதும்” என்று சாதாரணமாகக் கூறக் கேட்டதுண்டு.

அளவாகச் சாப்பிட வேண்டும் என்னும் கட்டாயம் உருவாகும்போது தான் நிறையச் சாப்பிட உந்துதல் வரும் போலும்.

“கபகபன்னு பசிக்குதுடா. வெள்ளரிக்கா வாங்கியாந்தியா?” சில நேரங்களில் வயதான ஆத்தாவுக்குப் பசியெடுத்த பதற்றம் தெரியும். ஏதோ அயர்வால் உடனிருப்போருக்கு கவனித்துக் கொள்ளப் பொறுமையில்லாத சில நேரங்களில், “அது என்ன அப்படியொரு பசியோ?” என்று பொறுமையற்ற பதில்கள் தெறிப்பதும் அன்றாட வாழ்வில் இயல்பாகத் தொடரும்.

“இந்தாங்காத்தா. சீவீருக்குது. சாப்புடுங்க”. பல் இல்லாத ஆத்தா பொக்கை வாயில் குதக்கிச் சாப்பிடுவார்கள். பசியடங்கிய தெளிவு முகத்தில் தெரிய, தன் இயலாமையை நொந்து கொள்வார்கள்.

“அதென்னமோ தெரீல. பசின்னு வந்துட்டா இப்போல்லாம் கொல எறியுற மாதிரி இருக்கு”.

* * * *

இரத்தத்தில் சர்க்கரை மிகவும் குறைந்த நிலை, தலைச்சுற்றலும், பதற்றமும், கிறுகிறுப்பும், மயக்கமும் கொண்டு வந்துவிடும். சரியான நிலையில் இரத்த்ததின் சர்க்கரை அளவை வைத்துக் கொள்வது சவாலான ஒன்றாக இருக்கும்.

‘சர்க்கரை’ உள்ளவர்கள் நேரா நேரத்திற்குச் சாப்பிடும் உணவொழுங்கு கொண்டிருப்பது மிகவும் முக்கியம். இல்லாவிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகியும் சிலசமயம் குறைவாகியும் எதிர்வினைகளை உருவாக்கிச் சிரமம் தரும். நிலத்தடியில் விளையும் கிழங்கு வகைகளைத் தவிர்க்க வேண்டும். காய்கறிகளையும் தானிய வகைகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரையோ இனிப்போ மிகவும் அளவாகவோ மிகவும் குறைவாகவோ சேர்க்கலாம்.

துளிச் சர்க்கரை கூடக் கூடாது என்று அதை விடமென்னும் அளவிற்கு ஒதுக்க வேண்டியதில்லை. சில சமயம் உடலில் சர்க்கரை அளவு குறைந்த நிலையில் மயக்கம் கிறுகிறுப்பு உண்டாகும்போது ஒரு தேக்கரண்டி சர்க்கரை சரிநிலைக்குக் கொண்டு வரவும் பயன்படும்.

* * * *

“சக்கர போடாம டீ குடிக்க வேண்டியது தான? சொன்னா உங்கப்பா கேக்குரதேயில்ல” என்று என் அம்மா இன்றும் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பார்கள்.

“ஏங்கப்பா, போடாமத் தான் குடியுங்களேங்ப்பா”, பன்னிரு வருடங்களுக்கு முன்னால் ஒருமுறை கடிதம் எழுதிய போது, ‘சொல்வது எளிது தான் நம்மால் செய்யமுடியுமா’ என்று முயன்று பார்த்தேன். முதல் சில நாட்கள் வெகு சிரமமாய் இருந்த போதும் பிறகு பழகிக் கொண்டு பல மாதங்கள் சர்க்கரை சேர்க்காது இருந்தேன். நமக்கும் அவசியம் ஏற்பட்டால் விட்டுவிடலாம் என்ற தெம்பில் பிற்காலத்தில் அளவு மட்டும் குறைத்துக் கொண்டேன்.

திருமணமான புதிதிலோ, அமெரிக்காவிலிருந்து ஊருக்கு விடுப்பிற்குச் சென்றபோதோ, ‘எட்டிப்பார்க்க’ச் சென்றுவந்த கிராமப்புறச் சொந்தங்களின் வீட்டில், ‘கொஞ்சமாச் சக்கர போடுங்க’ என்று சொல்வதில் பயனிருக்காது என்று நினைத்தேன். அதனால் ஒட்டுமொத்தமாக,

“நான் காப்பி டீ எல்லாம் குடிக்கறதில்லீங்க”, என்பேன்.

“அப்டீங்களா, போன்விட்டா, ஆர்லிக்ஸ் இருக்குதுங்க. அது குடிப்பீங்கல்ல?”

விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற கொங்கு நாட்டில் ஒருவர் வீட்டில் ‘தலைகாட்டிவிட்டு’ ஒன்றும் பருகாமல் உண்ணாமல் கிளம்பி விடமுடியுமா?

“சரிங்க… சக்கரை கொஞ்சம் கம்மியாப் போடுங்க”, என்று நான் அவசரமாய்ச் சேர்த்த பிற்பாதியைக் காதில் வாங்கிக் கொண்டார்களா என்று தெரியாது.

முதல் வாய்க்கே திகட்டுவதை உணர்ந்து நாவைச் சுழற்றிச் சப்பிக்கொண்டு நிதானித்துக் கொண்டிருக்கையில், “எப்பூம் போடறதுல பாதிச் சக்கர தான் போட்டிருக்கன். அதுவே போதுமுங்களா?”, என்று அப்பாவித்தனமாகக் கேட்டு அதிர வைப்பார்கள். பாதியே இப்படியென்றால்…

* * * *

(c) www.johndoe.org
கிராமம் நகரம் என்று பாகுபாடின்றி நாட்டில் சர்க்கரையும் இனிப்பும் ஆரோக்கியமற்ற உணவுகளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சரியான உணவுப் பழக்கம் இன்றி அதிகரித்த எடை கொண்டவர்களுக்கும், புகை, மது பழக்கம் இருப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் வருவதற்கான இக்கு (risk) அதிகம். இவற்றோடு உடற்பயிற்சி ஏதும் செய்யாத சடத்துவ வாழ்க்கை முறையும் முக்கிய காரணம். மரபியல் அடிப்படையில் வழிவழியாய்க் குடும்பத்தில் வருவதற்கும் வாய்ப்புக்கள் உண்டு.

முன்பெல்லாம் நாற்பது நாற்பத்தியைந்து வயதுக்கு மேல் வந்து கொண்டிருந்த சர்க்கரை நோய், உலகெங்கும் இப்போதெல்லாம் ஒரு பத்து வருடங்கள் முன்னுக்கு வந்து முப்பது முப்பத்தியைந்து வயதிருப்போருக்கே வர ஆரம்பித்திருக்கிறது.

இந்தியாவில் மூன்றரைக் கோடிப் பேருக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறது தெரியவந்திருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் அது ஏழரைக் கோடிக்கும் மேலாகிவிடும் அபாயம் இருக்கிறது என்கிறார்கள். இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது அதுபோல் இரண்டு மடங்காவது இருக்கும் என்றும் அனுமானிக்கிறார்கள். கோக்கும் பெப்ஸியும், விரைவு உணவகங்களும் வந்துவிட்ட இந்நாளில், கணிப்பொறி முன்னமர்ந்து வேலை செய்வது போன்ற சடத்துவ வாழ்க்கையும் அதிக அபாயத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.

சர்க்கரை நோய் வந்த பின்னும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி இவற்றைத் தொடர்ந்து ஊக்கமாகக் கைப்பிடித்தால் பிரச்சினையின்றிப் பல காலம் இருக்க முடியும். தன் வயதான காலத்திலும் என் தாத்தா ஒரு பெரிய குடையை எடுத்துக் கொண்டு தினமும் இரண்டு வேளையும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடைக்குக் கிளம்பிவிடுவார். நடப்பதற்கு உதவியாகத் தடியொன்று வேண்டிய காலகட்டத்திலும் சற்று வெட்கி தடிக்குப் பதிலாகக் குடையை ஊன்றிக் கொண்டு சென்று விடுவார்.

Coke Pepsiஉடற்பயிற்சியும், உணவுக்கட்டுப்பாடும், டயோனில், டிபிஐ மாத்திரைகளும் சமாளிக்க முடியாத ஒரு காலகட்டத்தில் தினசரி இன்சுலின் ஊசி போட வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது. மாத்திரை கரைந்து இரத்தத்தில் கலந்து வேலை செய்வதை விட நேரடியாக இரத்தத்தில் கலக்கும் வண்ணம் போடப்படும் இன்சுலின் ஊசி பலனுள்ளதாக இருக்கும். அதற்கும் கேட்காமல் இரத்தச்சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது தான் சற்றுத் தீவிரமான பிரச்சினைகள் ஆரம்பமாகும். பிற உடற்பாகங்கள் பாதிப்படையும்.

தனக்குத் தானே ஊசி போட்டுக் கொள்ள வேண்டிய நிலை சிரமமானது என்றாலும், சர்க்கரை நோயிருக்கும் பலரும் இதைப் பழகிக் கொள்கிறார்கள். அண்மையில் மூக்கில் நுகரும் இன்சுலின் மருந்து (Exubera) குறித்த கண்டுபிடிப்பு ஒன்று பற்றிச் செய்தி படித்திருக்கிறேன். பரவலான பயன்பாட்டிற்கு வரச் சற்று காலமாகலாம்.

* * * *

வயதாகும் போது ஏற்படும் உடல் தளர்ச்சியாலும், எலும்புத் தேய்மானங்களாலும் அதிக நடைபயில்வதும் பிரச்சினையாக இருக்கலாம். சில வருடங்களுக்கு முன்னால், “முட்டி வலின்னு பாலசுப்ரமணி டாக்டர் சைக்கிலு ஓட்ட வேண்டாம்னுட்டாரு. ஒரு மொப்பட் வண்டி வாங்கணும்” என்றார் அப்பா. பல காலமாய் மிதிவண்டி ஓட்டி முட்டி தேய்ந்திருக்க வேண்டும்.

டிவியெஸ் வண்டியில் சென்று இரண்டொரு முறை விழுந்தெழுந்தாலும் தினசரி மிதிவலியில் இருந்து நிவாரணம் கிடைத்திருக்கும். இருந்தும் உடற்பயிற்சிக்கு கொஞ்சம் நடக்க வேண்டும் என்ற போது காய்ந்து போயிருந்த குதியங்கால் வலி எடுத்தது அவருக்கு. மருத்துவர் பரிந்துரைத்ததால் ‘ஷூ’ ஒன்று வாங்கிக் கொண்டார். ஆனாலும், மாத்திரை மருத்துவமனை மருத்துவர் என்று பலதும் மாற்றிப் பார்த்தும் சர்க்கரை அளவு அதிகமாகவே இருந்து வந்தது. உடல்நிலை தவிர்த்த மன அழுத்தங்கள் கூடக் காரணமாய் இருந்திருக்கலாம். சென்ற பயணத்தின் போது அதுகுறித்தும் சிறிது கவனிக்க முடிந்தது கொஞ்சம் ஆறுதலான ஒன்று.

தொலைபேசியில் பேசும்போது ‘சக்கரை அளவு எப்படி இருக்குது?’ என்பது தவறாமல் இடம்பெறும் ஒரு கேள்வியாகிப் போனது.

“இந்த எட்டுக்குப் பரவால்லப்பா. எரநூறு பாயிண்டு தான் இருக்கு”

இருநூறு (mg/dL) என்பதே ஒரு அதிகமான அளவு தான் என்றாலும், பலகாலமாய் முன்னூறு நானூறு என்றே இருந்து சோர்ந்திருந்தவருக்கு இது பெரும் முன்னேற்றம் தான்.

“பரவால்லீங்கப்பா. அப்படியே வச்சுக்கப் பாருங்க. ஷூ போட்டுக்கிட்டு நடக்கப் போய்ட்டிருக்கீங்களா?”

“இல்ல… முன்னால கொஞ்சம் இறுக்கமா இருக்குது… சுண்டுவிரல் வலிக்குதுண்ணு போடறதில்ல” என்று சிரிப்பார்.

என்ன காரணமாய் இருந்தாலும், முன்பை விடக் குறைந்த அளவில் இருப்பது ஒரு ஆறுதலான விஷயம். தொடரட்டும்.

நான் கூடக் கொஞ்சம் எழுந்து நடக்கச் செல்லவேண்டும்.

* * * *
சம்பந்தப் பட்ட நியுயார்க் டைம்ஸ் கட்டுரை ஒன்று:
Modern Ways Open India’s Doors to Diabetes

பகிர்க:

  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to email a link to a friend (Opens in new window)

Posted in பொது, வாழ்க்கை

12 Responses to “இனிக்காதது”

  1. on 09 Oct 2006 at 6:03 pm1-/பெயரிலி.

    ஒன்று கட்டுரையைப் போட்டிருக்கவேண்டும்; அல்லது, அந்தப்பட்சணப்படங்களைப் போட்டிருக்கவேண்டும். இரண்டையும் சேர்த்துப்போட்டதற்கு உங்களுக்கு மரணதண்டனை கொடுக்கலாமா இல்லையா என வலைப்பதிவர்களே தீர்மானிப்பார்கள்

  2. on 09 Oct 2006 at 7:00 pm2Padma Arvind

    தேவையான பதிவு. இன்சுலின் அல்லாமல் குளுக்ககான் பாதிப்பு இருந்தாலும், இன்சுலின் வீரியம் இல்லாத புரதமாயிருந்து அதில் இருந்து வீரியம் உள்ள இன்சுலின் புரதம் உற்பத்தி ஆகாமலும் இருப்பது கூட காரணமாகலாம். இவை வாரிசுகளுக்கு வருவது குறைவே.
    இன்னும் ஒருவகை கணையத்தில் உள்ள செல்களின் குறையால் குறைவு சர்க்கரையும் பெரும்பாலான சமயங்களில் சரியான சர்க்கரையுமாகி பதிப்பை ஏற்படுத்தும் ஒன்று. இப்போதெல்லாம் இதைப்பற்றி மேலும் அலசுவது வழக்கமாகி போய்விட்டது. கோமாவரை ஆபத்து விளையக்கூடிய சாதாரணமான நோயில் ஒன்று. இது தொடர்பான என் பழைய பதிவொன்று.

  3. on 09 Oct 2006 at 7:07 pm3வெற்றி

    மிகவும் பயனுள்ள பதிவு. மிகவும் அழகாக, விளக்கமாகச் சொல்லியுள்ளீர்கள். நன்றி.

  4. on 09 Oct 2006 at 7:24 pm4முனியாண்டி

    நன்றிங்க செல்வராஜ். நீரிழிவு பத்தி எழுதனும்னு நினைச்சிருக்கற நேரத்தில உங்களோட பதிவு.

    எங்க வீட்ல ஒரு சின்னப் பொண்ணுக்கு (11 வயது) முதல் வகை நீரிழிவு நோய்ன்னு கண்டு பிடிச்சிருக்காங்க. அவளுக்கு சொல்றதுக்காக அங்க இங்கன்னு கொஞ்சம் படிச்சிக்கிட்டு இருக்கேன். எப்பவும் இருக்கற சோம்பேறித்தனத்தில முழுசா பண்ணாம இருக்கேன்.

    சின்னப் பிள்ளைங்களுக்கு சொல்ற மாதிரியான பக்கங்கள் எதுவும் உங்ககிட்ட இருக்கா..

  5. on 09 Oct 2006 at 7:31 pm5selvanayaki

    நல்ல பதிவு செல்வராஜ். தகவல்களும், உரையாடலுமாக வித்தியாசமாகச் செய்திருக்கிறீர்கள். நம்மூரில் இப்போ 40 கடந்த பலருக்கும் சர்க்கரை இருக்கிறது.

  6. on 09 Oct 2006 at 7:39 pm6selvanayaki

    ///இரண்டையும் சேர்த்துப்போட்டதற்கு உங்களுக்கு மரணதண்டனை கொடுக்கலாமா இல்லையா என வலைப்பதிவர்களே தீர்மானிப்பார்கள் ////

    அவ்வப்போது இப்படி எழுதிக்கொண்டிருக்கவாவது தலைகாட்டுங்கள் பெயரிலி. நாங்கள் சிரித்துக் கிடப்போமே!

  7. on 09 Oct 2006 at 8:21 pm7Padma Arvind

    There are two kids who are diagnosed with Juvenile diabetes, and they created a cartoon book on it. Also there are many materials on juvenile diabetes, I will try to send the links.

  8. on 09 Oct 2006 at 9:59 pm8கிருஷ்ணமூர்த்தி

    அண்ணாத்த, பெயரிலி சொன்னமாதிரி, உமக்கு (அவ்ளோ பெரிய தண்டன வேணா..), கொல்கத்தால குடுக்கற மாதிரி, ஒரு நாளு முழுக்க, இனிப்பு பண்டங்களே உணவா கொடுக்கனுமய்யா… எவ்வளவு பெரு வவுத்தெரிசல கொட்டிக்கிட்டுருப்ப அந்த படங்கள போட்டு…

    எவ்விஷயமாயினும், செல்வராஜ் எழுத்து பாணியே தனிதான். எழுதுமய்யா, நிறைய எழுதும், அலுவலக பணி, குடும்பக் கடமை பாதிக்காமல்.

    ஒவ்வொரு முறை வருடாந்திர பரிசோதனையின்போதும் படபடக்கும், வந்தே…விட்டதோயென்று…இன்றில்லையென்றால், நாளை, நாளையில்லையென்றால், மற்றொரு நாள் என பயமுறுத்திக் கொண்டிருப்பதென்னமோ உண்மை.

  9. on 10 Oct 2006 at 12:00 am9செல்வராஜ்

    பெயரிலி, கிருஷ்ணமூர்த்தி, அவசரத் தேடலில் சிக்கிய படங்கள் சுவையூட்டுபவையாகத் தான் இருந்தன 🙂 பரவாயில்லை, சாப்பிட்டுவிட்டுக் கொஞ்சம் உடற்பயிற்சி செய்ய எண்ணிக் (:-)) கொள்ளலாம். (முதலில் எண்ணம் அப்புறமாகச் செயல்!)

    பத்மா, உங்களின் பதிவையும் பார்த்தேன். பயனுள்ளது. முனியாண்டிக்குக் கிடைத்தால் சுட்டிகளைக் கொடுங்கள். முதல்வகை பற்றி அதிகம் நான் பார்த்ததில்லை, முனியாண்டி. Diabetes என்று தேடினால் எக்கச்சக்கம் வருவது உண்மை. அதை வடிகட்டித் தனியே வைத்துக் கொள்ள வேண்டும். நீங்களும் எழுதுங்கள்.

    வெற்றி, செல்வநாயகி, நன்றி. வெறும் தகவல்பூர்வமாக எழுதுவதை விட இப்படி எழுதிப் பார்ப்போம் என்று தோன்றியது. நியூயார்க் டைம்ஸ் கட்டுரை படித்ததில் இருந்து எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.

  10. on 12 Oct 2006 at 9:05 pm10Vimala

    As usual well written, kongu tamizhil.

    I used to wonder when they talk about panakara vyathi when I was small…it is nothing but diabetes!!

    Diabetes runs in my family too and in the long run it affects all the other parts of the body like kidneys/heart etc.

    There is something in the gene..we are prone to diabetes/heart disease.

  11. on 12 Dec 2006 at 9:46 am11revathinarasimhan

    செல்வராஜ்,ரொம்ப நன்றி.
    அப்படியே என்னைப் பார்ப்பது போல உணர்ந்தேன்.
    டையோனில் எடுக்கும் வகை இல்லை நான்.
    ஸ்விட்சர்லாண்ட் போயும் சாக்கலேட் சாப்பிட முடியாமல் தடுத்த இந்த நோயை என்னசொல்ல. போனால் போகிறது என்ற பக்குவத்திற்கு வந்துவிட்டேன்.
    ஆனால் பசி வேளை உடம்பு பறப்பதென்னமோ நிஜம்.
    காரமும் சாப்பிட முடியவில்லையே?
    என்ன கனெக்ஷன் தெரியுமா?

    “முதல் வாய்க்கே திகட்டுவதை உணர்ந்து நாவைச் சுழற்றிச் சப்பிக்கொண்டு நிதானித்துக் கொண்டிருக்கையில், “எப்பூம் போடறதுல பாதிச் சக்கர தான் போட்டிருக்கன். அதுவே போதுமுங்களா?”, என்று அப்பாவித்தனமாகக் கேட்டு அதிர வைப்பார்கள். பாதியே இப்படியென்றால்… ”
    அருமையான வரிகள்.:-))

  12. on 16 Feb 2007 at 10:20 am12pedharayudu

    அருமையான கட்டுரை.

    //சில சமயம் அரை மாத்திரை உட்கொள்ள வேண்டுமென்று உடைக்க முற்பட்டு முடியாமல் கத்தியில் வெட்டிய கதையும் உண்டு. உடைக்க அவசியமில்லாத ‘பவரு கொறைவான’ மாத்திரை வாங்கலாம் தான். ஆனால், செலவு அதிகம்.//

    ஒரு டோஸுக்கு(தமிழில் என்ன வார்த்தை?) இரண்டு மாத்திரைகளை வைத்த வெளிநாட்டுக்காரன் நிறைய மாத்திரைகளை உடைத்திருப்பானோ?

    பெத்தராயுடு

  • About

    Profile
    இரா. செல்வராசு
    விரிவெளித் தடங்கள்
    There are 292 Posts and 2,400 Comments so far.

  • Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
  • அண்மைய இடுகைகள்

    • பூமணியின் வெக்கை
    • வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
    • பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • குந்தவை
    • நூற்றாண்டுத் தலைவன்
    • அலுக்கம்
  • பின்னூட்டங்கள்

    • அ.பசுபதி on வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
    • இலக்குமணன் on குந்தவை
    • ராஜகோபால் அ on குந்தவை
    • இரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • RAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • Ramasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • இரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • THIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
  • கட்டுக்கூறுகள்

    • இணையம் (22)
    • இலக்கியம் (16)
    • கடிதங்கள் (11)
    • கணிநுட்பம் (18)
    • கண்மணிகள் (28)
    • கவிதைகள் (6)
    • கொங்கு (11)
    • சமூகம் (30)
    • சிறுகதை (8)
    • தமிழ் (26)
    • திரைப்படம் (8)
    • பயணங்கள் (54)
    • பொது (61)
    • பொருட்பால் (3)
    • யூனிகோடு (6)
    • வாழ்க்கை (107)
    • வேதிப்பொறியியல் (7)
  • அட்டாலி (பரண்)

  • Site Meter

  • Meta

    • Log in
    • Entries feed
    • Comments feed
    • WordPress.org

இரா. செல்வராசு © 2023 All Rights Reserved.

WordPress Themes | Web Hosting Bluebook