இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

வேதிப்பொறியியல்: ஒரு ஓர் எளிய அறிமுகம் – 1

June 9th, 2006 · 13 Comments

பகுதி-1 | பகுதி-2 | பகுதி-3

வேதியியலுக்கும் வேதிப்பொறியியலுக்கும் சிறிது சம்பந்தம் உண்டு என்றாலும் இரண்டும் வெவ்வேறானவை. இருந்தும் என்னுடைய முழு வரலாறும் அறிந்துமே, “டேய், நீ என்னடா கெமிஸ்டிரி தானே படிச்ச?” என்று பேச்சுவாக்கில் இன்னும் வினவும் என் பள்ளிக் கால நண்பன் போன்றவர்களுக்காக ‘வேதிப்பொறியியல்’ பற்றியொரு எளிய அறிமுகம் இங்கே.

கணியியல், மின்னியல், மின்சாரவியல், எந்திரவியல் போன்ற பொறியியலின் கவர்ச்சிமிகு மற்ற துறைகளைப் போலன்றி வேதிப்பொறியியல் அவ்வளவாகப் பொதுவில் அறியப் படாத ஒன்று. ஏன், கட்டிடவியல் போன்ற அவ்வளவாய்க் கவராத துறைகள் கூட வேதிப்பொறியியலை விட அதிகம் அறியப்படுபவை. இருந்தும் அண்மைய காலங்களில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிச்சூழலில் கட்டிடவியலாளர்களுக்கும் மவுசு அதிகமாகிறது என்று ஒரு சேதி.

A Chemical Plant

பள்ளியிறுதியாண்டு முடித்துக் கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் பெறும் காலம் வரை எனக்கும் ‘கெமிக்கல் இஞ்சினியரிங்’ பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. எண்பதுகளின் இறுதியில் தமிழகத்தில் மொத்தம் ஐந்து கல்லூரிகளில் மட்டுமே வேதிப்பொறியியல் துறை இருந்தது. அவை:

 • சென்னையில், இந்திய நுட்பியல் கழகம் (ஐ.ஐ.டி), மற்றும்
 • அண்ணா பல்கலைக்கழகத்தின் அழகப்பா நுட்பியல் கல்லூரி,
 • அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
 • திருச்சி மண்டலப் பொறியியல் கல்லூரி (தற்போது தேசிய நுட்பியல் கல்லூரி?), மற்றும்
 • கோவையில் கோயம்புத்தூர் நுட்பியல் கல்லூரி

அவ்வளவே. (காரைக்குடி அழகப்பர் கல்லூரியிலும் இருந்திருக்கலாம் என்று ஒரு ஐயம் இருக்கிறது – ஒருவேளை அது மின்வேதிப் பொறியியல் துறையாய் இருந்திருக்கலாம்). அக்காலத்தில் தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்டிருந்த தனியார் கல்லூரிகளில் எதிலுமே வேதிப்பொறியியல் துறை இருக்கவில்லை. இன்றைய நிலையோ வேறு. பல தனியார் பொறியியற் கல்லூரிகளில் வேதிப்பொறியியலும் அதனைச் சார்ந்திருக்கும் துறைகளும் அமைந்திருக்கின்றன. நிச்சயமாய் ஈரோடு-பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் இருக்கிறது என்று அந்த ஊர்க்காரனாக இருந்து அறிவதால் சொல்ல முடியும்.

பிற பொறியியற் பிரிவுகளைப் போன்றே வேதிப்பொறியியல் துறையும் அடிப்படை அறிவியல் கோட்பாடுகளின் மீதே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இத்துறைக்குக் குறிப்பாக வேதியலின் பங்களிப்புச் சற்று அதிகமானது.

வேதியலாளர்கள் மூலக்கூறுகளையும் (molecules) அவற்றின் வேதிவினைகளையும் (reactions) ஆராய்பவர்கள். அவற்றைப் பற்றிய ஆழ்ந்த அறிவால் பயனுள்ள புதிய பொருட்களைக் கண்டுபிடிப்பதிலும், அவற்றை உருவாக்கத் தேவையான சூழலை இனங்காணவும் முற்படுபவர்கள். அப்படி அவர்களால் கண்டுபிடிக்கப்படும் பொருட்களை ஆய்வுக் கூடத்தில் இருந்து எடுத்துப் பெருமளவில் நுகரக்கூடிய அளவில் பன்மடங்கு உற்பத்தி செய்ய உதவுவது வேதிப்பொறியியலும் வேதிப்பொறிஞர்களும்.

கணித்துறை போன்ற அசுர வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கும் துறை அல்லவென்றாலும், வேதிப்பொறியியல் இன்று பல திசைகளிலும் கிளை பரப்பியிருக்கும் ஒரு அகன்ற துறை. எக்காலத்திலும் தனியிடம் பெற்றிருக்கும் ஒன்று. பலரும் அறியாதிருக்கலாம் – எனினும் நமது அன்றாடப் பயன்பாட்டில் இருக்கும் பொருட்கள் பலவற்றை வேதிப்பொறியியலும் அது சார்ந்த நுட்பங்களும் தொட்டிருக்கும் என்பதே உண்மை.

-(தொடரும்).

Tags: வேதிப்பொறியியல்

13 responses so far ↓

 • 1 D the Dreamer // Jun 9, 2006 at 10:05 pm

  //வேதிப்பொறியியல் இன்று பல திசைகளிலும் கிளை பரப்பியிருக்கும் ஒரு அகன்ற துறை//
  Well said. Many chem engg departments are rebranding themselves as chemical and biomolecular engineering for the very same reason. Looking forward to read more.

 • 2 Sivabalan V // Jun 9, 2006 at 10:15 pm

  செல்வராஜ்,

  நல்ல பதிவு.

  கட்டிடவியல் சார்ந்தவன் என்ற முறையில் சற்று வருத்தமாகத்தான் இருந்தது இன்றைய நிலையை என்னி.

  தொடர்ந்து எழுதுங்கள்.

  சிவபாலன்
  சிகாகோ.

 • 3 Deiva // Jun 9, 2006 at 11:32 pm

  CECRI (Central Electro Chemical Research Institue), Karaikudi has a B.Tech degree in Electro-Chemical engineering. Alagappa College of Engineering in Karaikudi doesn’t have this course

 • 4 Natkeeran // Jun 10, 2006 at 1:29 am

  நூணநுட்பவியலுக்கு (nanotechnology) அடிப்படையாக அமைவது வேதியியல், வேதிப்பொறியியல் என்பதால் தற்போது வேதிப்பொறியியலுக்கு ஒரு தனி மரியாதை உண்டு. எனினும் சாதாரண வேதிப்பொறியியல் பாடத்திட்டத்தில் நூணநுட்பவியல் தொடர்பான அம்சங்கள் இன்னும் எதுவும் பொரிதாக இல்லை. (அதற்கு நூணநுட்பவியலே சற்று விம்பமாக்கப்பட்ட (hype) ஒரு துறை என்பதால் கூட இருக்கலாம்.)

  ஒப்பீட்டளவில் மற்ற பொறியியல் துறைகளிலும் பார்க்க பெண்கள் இத்துறையில் கூடிய ஈடுபாடு காட்டுகின்றார்கள். பரிசோதனைகளில் பேய்காட்ட முடியாது, தவறினால் ஆபத்தாக கூட முடியும். நான் படிக்கவில்லை எனது தங்கையின் அனுபவத்தை வைத்து சொல்கின்றேன்.

  911 முன்பு வேதிப் பொருட்களை பல இடங்களில் வாங்கலாம். இப்பொழுது அப்படியில்லை. சமீபத்தில் அமோனியாவுடன் சில தீவரவாத மாணவர்கள் அகப்பட்டிருக்கின்றார்கள், அதற்குபிறகு நிலைமை இன்னும் மோசம் அடையலாம்.

 • 5 Nagu // Jun 10, 2006 at 3:16 am

  \\வேதியலாளர்கள் மூலக்கூறுகளையும் (molecules) அவற்றின் வேதிவினைகளையும் (reactions) ஆராய்பவர்கள். அவற்றைப் பற்றிய ஆழ்ந்த அறிவால் பயனுள்ள புதிய பொருட்களைக் கண்டுபிடிப்பதிலும், அவற்றை உருவாக்கத் தேவையான சூழலை இனங்காணவும் முற்படுபவர்கள். அப்படி அவர்களால் கண்டுபிடிக்கப்படும் பொருட்களை ஆய்வுக் கூடத்தில் இருந்து எடுத்துப் பெருமளவில் நுகரக்கூடிய அளவில் பன்மடங்கு உற்பத்தி செய்ய உதவுவது வேதிப்பொறியியலும் வேதிப்பொறிஞர்களும்.\\

  எளிமையான விளக்கம். நன்று.

 • 6 சேயோன் // Jun 10, 2006 at 2:56 pm

  “ஏன், கட்டிடவியல் போன்ற அவ்வளவாய்க் கவராத துறைகள் கூட வேதிப்பொறியியலை விட அதிகம் அறியப்படுபவை”.

  கட்டடங்கள் மனித குலத்தின் நாகரிக வளர்ச்சியின் சான்றுகள். உதாரணத்துக்கு தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள், சிற்பங்கள் தமிழரின் வாழ்வை இயம்புகின்றன. அவ்வாறான ஒன்று எப்படி கவராத ஒன்றாக முடியும். ஒரு வேளை வருவாய் ரீதியாக மாற்றைய துறைகள் (கணியியல், மின்னியல், மின்சாரவியல், எந்திரவியல்) பெரும்பான்மையானவர்களைக் கவர்ந்து இருக்கலாம் ஆனால் Civil Engineering மனித வாழ்க்கைக்கு முதுகெலும்பு போன்றது. எக்காலத்துக்கும் தேவையானது. நாகரிகத்தைப் பறைசாற்றக் கூடியது.

 • 7 செல்வராஜ் // Jun 10, 2006 at 11:12 pm

  சேயோன், உங்கள் கருத்துக்களில் எனக்கு உடன்பாடே. நான் சொல்ல வந்தது, பள்ளி முடித்துப் பொறியியலில் நுழைய விரும்பும் மாணவர்களைக் கவர்வதில் கட்டிடவியல் துறை பிறவற்றை ஒப்பிடும்போது கடை நிலையில் இருக்கிறது என்பது தான். அண்மைய வளர்ச்சிச் சூழ்நிலையில், சாலைகளும், கட்டிடங்களும், பாலங்களும், பல்லடுக்கு அலுவங்களும், விமான நிலையங்களும்,… என்று கட்டிடவியலுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கிறது என்று கூறியிருக்கிறேன்.

  Dreamer, சிவபாலன், நாகு, நன்றி. Deiva, CECRI பற்றிய சரியான தகவலுக்கும் நன்றி. இப்போது நினைவுக்கு வருகிறது.

  நட்கீரன், நூணநுட்பியல் (நுட்பவியலை இப்படிச் சுருக்கலாம் என்பது இராம.கியின் பரிந்துரை – எனக்கும் பிடித்திருக்கிறது) பற்றிய கருத்துக்களுக்கும் நன்றி. இதுவும் உயிர்நுட்பியலும் இப்போது அதிகம் பேசப் பட்டுக் கொண்டிருக்கிறது. முன்னர் கணித்துறைப் புரட்சி அமெரிக்காவிற்கு முன்னணியில் இருக்க உதவியது போல இனிமேல் நூணநுட்பியல் உதவக் கூடும் என்றும் சில கருத்துக்கள் இருக்கின்றன. வருமாண்டுகள் தான் இது பற்றிச் சொல்லும்.

 • 8 kandan // Jun 11, 2006 at 3:38 am

  Very nice to read about my field.. very interesting introduction..

  Chemical engineers are in good demand in oil and gas , petrochemical..etc.. with the oil prices sky rocketing..

 • 9 குலவுசனப்பிரியன் // Jun 11, 2006 at 10:08 am

  செல்வராஜ்,

  நல்லத் தொடர். முழுவதும் படிக்க ஆர்வமாயுள்ளேன்.

  //Natkeeran says:

  911 முன்பு வேதிப் பொருட்களை பல இடங்களில் வாங்கலாம். இப்பொழுது அப்படியில்லை. சமீபத்தில் அமோனியாவுடன் சில தீவரவாத மாணவர்கள் அகப்பட்டிருக்கின்றார்கள், அதற்குபிறகு நிலைமை இன்னும் மோசம் அடையலாம்.//
  அமெரிக்க உயர்நிலைப் பள்ளிகளில் வேதியில் செயல்முறை வகுப்புக்களே இல்லை. நண்பர் தன் மகனை இந்தியாவில் மருத்துவப்படிப்பிற்காக அனுப்புகிறார். இந்தியாவில் பட்டி தொட்டிகளில் கூட பள்ளிகளில் ஆய்வுக்கூடங்கள் இருப்பதை நினைவுகூர்ந்து அமெரிக்கப்பள்ளிப் படிப்பின் தரம் குறித்து கவலைப்படுவார்.

 • 10 வெளிகண்ட நாதர் // Jun 11, 2006 at 3:59 pm

  செல்வராஜ், நீங்க சொன்ன,அப்போதைய, 80 களில், கோவையில் கோயம்புத்தூர் நுட்பியல் கல்லூரியில் பயின்றவன் நான்! நீங்கள் கூறியது முற்றிலும் உண்மையே!. இந்த துறையில் மாணவர்களை சேர்க்க பெரும்பாடு படுவார்கள் பேராசிரியர்கள்! நான் நேரில் கண்ட ஒன்று! அப்பொழுது இந்த துறையின் மகத்துவம் தெரியாமல், பின் நான் பணியாற்றிய எண்ணெய், எரிவாயு துறையில், இதன் பொறியாளர்களின் மகத்துவம் தெரிந்தவன் நான்!

  பிறகு என் நண்பன் ஒருவன் தமாஷாக கூறிய ஒன்று, அவர்கள் பாடத்திட்டத்தில், ஒரு ச்ப்ஜெக்ட் வரும், ‘Introduction to Chemical Engineering’ (ICE) என்று, அது இறுதி செம்ஸ்டர் வரை வந்தது! அப்பொழுது அவன் சொல்வான், படிச்சி அடுத்த வருஷம் பொறியயல் வல்லுநர் ஆகப்போகிறேன், ஆனால் இன்னும் கெமிக்கல் இஞ்சினியரிங் ‘Introduction’ஏ முடிக்கவில்லை என்று, அது ஞாபகம் வந்தது, உங்கள் பதிவை பார்த்து!

 • 11 Vimala // Jun 12, 2006 at 3:59 pm

  Informative…waiting for the next one.

 • 12 செல்வராஜ் // Jun 12, 2006 at 10:20 pm

  kandan, குலவுசனப்பிரியன், வெளிகண்ட நாதர், விமலா, நன்றி.

  வெ.க.நாதர், நீங்கள் சொன்னது கல்லூரியில் சேரச் சென்ற முதல் நாள் நிகழ்வுகளை நினைவுபடுத்துகிறது. நுழைவுத் தேர்வில் முதல் பட்டியலிலேயே இடம் கிடைத்த பெருமையுடன் சேரச் சென்றபோது, அறுபது இடங்களுக்கு நூறு-நூற்றைம்பது பேரை அழைத்திருந்த போதும், மூன்று (அ) நான்கு பேருக்கு மேல் ஆள் தேறவில்லை. சரி, ஒரு மாதம் கழித்து அடுத்த பட்டியல்களில் அழைத்தபின் வகுப்பை ஆரம்பித்துக் கொள்ளலாம் என்று சொல்லி ஒரு மாதம் ஊருக்கு அனுப்பி விட்டார்கள்! பேசாமல் கணித்துறையில் சேர்ந்திருக்கலாமோ என்று அன்றும், பின்னர் சிலநாட்களும் நான் குழம்பியிருந்த நாட்களும் உண்டு.

 • 13 கில்லி - Gilli » Chemical Engineering - Selvaraj // Jun 14, 2006 at 5:20 pm

  […] ல் விளக்குகிறார் செல்வராஜ் பாடம் ஒண்ணு | பாடம் ரெண்டு தொடர்ந்து எழுதுகிற […]