இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

கண்கள் சொல்லும் கதை – 9 (நிறைவு)

February 21st, 2006 · 23 Comments

நீண்டு வளர்ந்த கதையின் முடிவிற்குச் சுருக்கமாய் வருவோமெனில் மறுலேசிக் சிகிச்சை நன்முறையிலேயே முடிந்தது. இன்று எனக்குக் கண்ணாடி உள்ளாடி வெளியாடி எதுவும் அவசியமில்லை.

ஒருவார அவகாசத்தில் மறுமுறை செய்யவேண்டியிருந்ததில் தனிச்சிறப்பான கவனிப்புத் தேவை என்பதால் என்னைக் காத்திருக்க வைத்துக் கடைசியில் பெரியமருத்துவர் தானே வந்து செய்துவிட்டார். விடுமுறை முடிந்து அமெரிக்காவிற்கு மீள இன்னும் இரண்டு வாரங்களே இருந்தன. இல்லாவிட்டால் சற்றுப் பொறுத்துக் கூடச் செய்திருக்கலாம்.

“உங்களுக்கு வயது என்ன?” என்று அவர் மீண்டும் ஒருமுறை கேட்டபோது “ஏன்?” என்றேன்.

“இல்லை, லேசிக் சிகிச்சை கிட்டப் பார்வையைச் சரி செய்யும். ஆனால் நாற்பதுக்கு மேல் வரும் சாளேஸ்வரப் பார்வைக்கு ஒன்றும் செய்ய முடியாது. அப்போது மீண்டும் கண்ணாடி போட்டுக் கொள்ள நேரிடும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

“பரவாயில்லை” என்றேன். கண்ணாடியில் இருந்து விடுதலை சில ஆண்டுகளே ஆனாலும் அது மதிப்பில்லாதது.

இம்முறையும் சிகிச்சைக்குத் தயாராகும் எல்லா முஸ்தீபுகளும் (இது என்ன சொல்?) செய்யப்பட்டன. முன்னர் காண இயலாமற் போனவர்களுக்கு வெளித்திரையில் பார்த்து கொள்ள ‘இன்றே கடைசி’ என்றாற்போல் அரிய வாய்ப்பு!

Lasik - Image (c) http://www.allaboutcustomwavefront.com/pics/redlight_hi-res-300.jpgசென்றமுறை செதுக்கிய வில்லையை இம்முறையும் அதே இடத்தில் மருத்துவர் கவனமாகப் பார்த்து மீண்டும் செதுக்க வேண்டும். இப்போதும் இடது கண்ணுக்கு வரும்போது சற்றே அயர்வு உண்டானது. இருந்தாலும் ஒருபுறம் “சொன்னாக் கேளுங்க, ஆட்டாம இருங்க” என்று சத்தமிட்டு கட்டுக்குள் வைத்திருக்க முயன்ற மருத்துவர், மறுபுறம் மிகவும் திறமையோடு தன் வேலையைச் செய்தார்.

லேசிக் கதிர்கள் பாய்ந்து கொண்டிருந்த அந்த நேரத்திலேயே இம்முறை வெகுவான முன்னேற்றம் இருப்பதை உணர முடிந்தது. மகிழ்வாய் இருந்தது. அடுத்த நாள் வீட்டிற்கு அனுப்பும் முன் பரிசோதித்த போது, “இரண்டு கண்களிலும் சற்றே பொதிவுப் பவர் இருக்கிறது. ஒரு வாரம் கழித்து ஓரளவு சரியாகி விடும். இல்லையென்றாலும் கண்ணாடி அணியும் அவசியம் இராது”, என்று கூறப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு ‘கழுகுப் பார்வை’ கிடைக்கும் என்னும் விளம்பரங்களைப் பெரிதும் நம்பியதில்லை என்பதால் ஏமாற்றம் ஒன்றுமில்லை. பெருஞ்சிக்கல் ஏதுமின்றி முடிந்ததில் அவர்களுக்கும் ஒரு நிம்மதி ஏற்பட்டிருக்க வேண்டும்.

சரியாகச் சூன்யம் என்றில்லை. +0.75, +1.0 என்று பொதிவான பார்வைச்சக்தி இருந்தாலும் சோதனையில் கிட்டப் பார்வை, தூரப் பார்வை எல்லாம் சரியாகவே இருந்தது. சில மாதங்களுக்குக் கண்கள் அடிக்கடி ஈரப்பசை காய்ந்து போய்விடும் என்று அதற்குச் சொட்டுமருந்து (உப்புநீர்க்கலவை) விட்டுக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப் பட்டது. காய்ந்து போகின்ற நேரங்களிலே சற்றே பார்வை மங்கியது போல் தோன்றும். சொட்டு விட்டுச் சரி செய்து கொண்டால் முன்னேற்றம் இருக்கும். சில மாதங்கள் வரை ‘ஒருவேளை பார்வை மங்கிவிட்டதோ’ என்று அவ்வப்போது ஐயம் எழுந்ததுண்டு. இரவிலே இருட்டு முன்பை விட அதிகக் கருப்பாக இருக்கும். கண் காய்ந்த நேரத்திலே தூரத்து எழுத்துக்கள் சற்றுப் பிசிறி இருக்கும். இருப்பினும், இயற்கையில் கண் ஒரு அமோகமான இயந்திரம். தானே குணமாகிக் கொள்ளும் அற்புதம். சிகிச்சைக்குப் பிறகு சில மாதங்களில் இந்தச் சிறு சங்கடங்கள் தெளிவடையத் தொடங்கும்.

“ஏங்க, லேசிக் பண்ணிக்கிட்டவங்களுக்கு ரெண்டு வருசத்துல மறுபடியும் பார்வை மங்கிவிடுமாம். பொங்கல் விழாவுல பார்த்த ஒருத்தர் அவங்களுக்குத் தெரிஞ்சவங்களுக்கு (த் தெரிஞ்சவங்களுக்குத் தெரிஞ்சவங்களுக்குத் தெரிஞ்சவங்களுக்கு) இப்படி ஆயிடுச்சுன்னு சொன்னாங்க” என்றார் ஒரு நாள் மனைவி பயந்தபடி.

‘அது போலெல்லாம் நடக்க வாய்ப்பில்லை’ என்று மருத்துவர் சொல்லியிருந்தாலும், அதைவிட இந்த வதந்திகளை நம்பிப் பயப்பட வேண்டியிருக்கிறது. இருந்தாலும் இரண்டு வருடம் மட்டும் நன்றாக இருந்தால் அதுவே சுகந்தான் என்று கிடப்பவனை என்ன செய்வது என்று சென்றுவிட்டார் மனைவி, உள்ளூரப் பயந்தாலும்.

இப்போது இரண்டு வருடங்களும் இரண்டு மாதங்களும் ஆகிவிட்ட நிலையில் பார்வை இன்னும் நன்றாகவே இருக்கிறது. அந்தக் கேள்வி ஞானத்தை நம்பவேண்டியதில்லை என்பதற்கு நானே சாட்சி. சற்று முன்னம் இந்தியா சென்றிருந்தபோது, அதே மருத்துவமனைக்குச் சென்று மீண்டும் சோதித்துப் பார்த்து வந்தேன். எல்லாம் சரியாகவே இருக்கிறது. கணினியில் அதிக வேலை செய்பவர்கள் யாராக இருந்தாலும் ஈரப்பசை சேர்க்கும் சொட்டுமருந்தைப் பயன்படுத்தலாம் என்றார் மருத்துவர். குறைந்த பட்சம் கண்களுக்கு ஓய்வு கொடுத்து அடிக்கடி சிமிட்டிக் கொள்ள வேண்டும். (யாரையோ பார்த்து ஒரு கண்ணை மட்டும் சிமிட்டி அடிவாங்கினால் அதற்கு நான் பொறுப்பல்ல!).

இந்த இரண்டு ஆண்டுகளில் லேசிக் சிகிச்சைக்கான கட்டணங்கள் மிகவும் குறைந்திருக்க வேண்டும். ஒரு கண்ணுக்கு $299 என்றும் மாதம் பதினெட்டு டாலர் என்று தவணை முறையில் கட்டலாம் என்றும், அமெரிக்காவிலும் விளம்பரங்கள் தென்படுகின்றன. கட்டணம் மட்டுமின்றி, இந்தச் சிகிச்சை செய்து கொள்ள விரும்புவோர் இதன் இக்குகளையும் (risks) ஆதாயங்களையும் (benefits) ஆய்ந்து அவரவர் நிலை பொருத்து முடிவெடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு இந்தக் ‘கண்கள் சொன்ன கதை’ பயன்பட்டிருந்தால் மகிழ்ச்சி.

RS 2004 Jun - in Colorado Springsஇவ்வளவிற்குப் பிறகும், “இப்படி எல்லாம் தெரிந்த பிறகு, நீங்கள் லேசிக் சிகிச்சை செய்து கொள்வீர்களா?” என்று கேள்வி எழுந்தால் “நிச்சயமாக” என்பதே என் பதிலாய் இருக்கும். கண்ணாடி அணிவது பெரிய சிரமம் இல்லை தான். அது தான் அழகு என்று கூட ரெண்டு பேர் சொல்கிறார்கள்! :-).

இருந்தும், வசந்த வேனிற்கால வெய்யல் நாட்களில் கதிராடி/குளிராடி (Sun Glass/Cooling Glass) போட்டுக் கொண்டு படங்காட்ட முடிவது;

‘கண்ணு சரியாத் தெரியாததுனால தான் நீச்சல் கத்துக்க முடியவில்லை’ என்று சொன்ன நொண்டிச் சாக்குகள் நீங்கி நீச்சலடிக்கத் தடைகள் நீங்கியது (இப்போது ‘நீச்சல் கற்றுக் கொள்ள நேரம் தான் இல்லை’ என்கிற சாக்கு மட்டும் தான் உண்டு 🙂 );

மழை பெய்து நனையும் போது கண்ணாடிக்கு ஒரு ‘வழிப்பர்’ (Wiper) இருந்தா நல்லா இருக்குமே என்று சுயகிண்டலாய் எண்ண வேண்டாத நிலையும், குளிரில் கார் மீது கிடக்கும் பனியைச் சுரண்டி நீக்கும் போது ஆவியடித்துப் பார்வையை மறைக்கும் நிலையும் இல்லாதது;

‘பெஸ்ட் கட்ஸ்’ கடையில் ஏதோ கதை பேசியபடி முடிவெட்டி விடும் பெண் “போதுமா பாருங்க?” என்று கேட்கையில், “ஒரு நொடி பொறுங்க” என்று மடிக்குள் கையை விட்டுத் தடுமாறித் தேடிக் கண்ணாடி எடுத்துப் போட்டுக் கொண்டு, “இன்னும் கொஞ்சம் வெட்டுங்க” என்று சொல்ல அவசியமின்றி, உடனடியாகப் “போதும்” என்று சொல்லிப் புன்னகைக்க முடிவது;

எல்லாவற்றிற்கும் மேல், தலை மீது ஏறி ஆடும் சின்னவர்கள் கை பட்டோ கால் பட்டோ கண்ணாடி கீழ்விழுந்து உடைந்து போகும் என்கிற அச்சமில்லாத பெரு நிம்மதியோடு ஆட்டம் போட முடிவது;

… என்று இந்தச் சின்னச் சின்னச் சந்தோஷங்கள் பல. அதற்காகக் கதிருக்குள் கண்ணை இன்னொரு முறையும் கொடுக்கலாம்.

Pongal 2004

மறு சிகிச்சை முடிந்த ஒரு வாரம் கழித்துச் சுள்ளி விறகு எரித்து வாசற் பொங்கல் வைத்துக் கும்பிட்டுவிட்டு நாங்கள் அமெரிக்கா கிளம்பினோம். மறவாமல் என் அன்னை சத்திரத்து மாரியம்மனுக்குக் கண்ணமுது சாற்றினார்.

(நிறைவு)

கண்கள் சொல்லும் கதை-1, கதை-2, கதை-3, கதை-4, கதை-5, -இடையுரை, கதை-6, கதை-7, கதை-8, இது-9 (நிறைவு)

Tags: வாழ்க்கை

23 responses so far ↓

  • 1 மதி கந்தசாமி // Feb 21, 2006 at 3:30 pm

    கண்ணாடியும் கண்ணுள்ளாடியுமா இருக்கேன்.. இப்ப நீங்க சொல்றதைக்கேட்டா கொஞ்சமா செஞ்சுக்கலாமான்னு தோணுதுதான்.. இல்லேங்கல.

    ஆனாலும்,

    //இருந்தும், வசந்த வேனிற்கால வெய்யல் நாட்களில் கதிராடி/குளிராடி (Sun Glass/Cooling Glass) போட்டுக் கொண்டு படங்காட்ட முடிவது;//

    அதான் transition lens கண்ணாடி இருக்கே.. தொன்றுதொட்டு நம்ம கண்ணாடியெல்லாம் இதுதான்..

    //
    ‘கண்ணு சரியாத் தெரியாததுனால தான் நீச்சல் கத்துக்க முடியவில்லை’ என்று சொன்ன நொண்டிச் சாக்குகள் நீங்கி நீச்சலடிக்கத் தடைகள் நீங்கியது (இப்போது ‘நீச்சல் கற்றுக் கொள்ள நேரம் தான் இல்லை’ என்கிற சாக்கு மட்டும் தான் உண்டு ); //
    நானும் இதைத்தான் சொல்லிக்கிட்டிருக்கேன். கண்ணுள்ளாடி இருக்குன்னாலும் சௌகரியமா இல்ல. 🙁 எல்லாத்தையும் விட மோசமானது பனிக்காலம். மழைன்னாலாவது நான் லென்ஸ் போட்டிருவேன். பனிக்காலச் சூரியனுக்கு பயந்துட்டு கண்ணாடி, பனி பெஞ்சா லென்ஸ்னு கூத்தாட வேண்டி இருக்கு..

    கொஞ்சம் யோசிக்கிறேன்..

    இங்க செய்யாம ஊர்ல செஞ்சதுக்கு ஏதாவது காரணம் இருக்கா செல்வராஜ்?

    தொடரை வெற்றிகரமாக முடித்ததற்கு நன்றி. தொடரைத் தொடங்கும்போது நமக்குப் பிரயோசனமாக இருக்குமேன்னு நினைச்சேன். இருந்தது.

    -மதி

  • 2 DJ // Feb 21, 2006 at 4:08 pm

    செல்வராஜ், உங்கள் பழைய பதிவுகளிலிருந்து, அனைத்தையும் இப்போதுதான் வாசித்து முடித்தேன். லேசிக் சிகிச்சை செய்வதற்கு முன்பான அனைத்தும், கிட்டத்தட்ட உங்களைப்போலவே எனக்கும் நடந்திருக்கின்றது (ஆறாம் வகுப்பிலேயே கண்ணாடி அணியத்தொடங்கியது, கண்ணிலை குறைபாடு என்பதைக் கண்டுபிடிக்கவே கரும்பலகை எல்லாம் மாற்றிப்பார்த்தது…அதன் நிமிர்த்தம் நண்பன் ஒருவன் எனக்காய் ஆசிரியரிடம் அடிவாங்கியது :-)).

    அண்மையில் எனக்குத் தெரிந்த இரண்டு நண்பர்கள் கூட இந்தச்சிகிச்சை செய்துகொண்டார்கள். உங்களின் இந்தப்பதிவு இந்தச்சிகிச்சை குறித்த பல தயக்கங்களைக் களைகின்றன. நன்றி.

  • 3 மூக்கு சுந்தர் // Feb 21, 2006 at 5:13 pm

    செல்வா,

    கதையை சுபமாக முடித்தது சந்தொஷம். நீங்கள் சொல்லுகின்ற அசெளகரியங்களை எல்லாம் பட்டுக் கொண்டிருக்கிறவன் என்ற முறையில் எனக்கு இதை முழுதும் புரிந்து கொள்ள முடிந்தது,

    இம் முறை ஊருக்குச் செல்லும்போது, முயற்சி செய்யலாமா என்று இன்னமும் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

    என்றென்றும் அன்புடன்

  • 4 karthikramas // Feb 21, 2006 at 5:52 pm

    செல்வா,
    இது தொடர்பான பழைய பதிவுகள் எல்லாவற்றையும் இப்பொழுதுதான் வாசிக்க முடிந்தது. சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள். பலருக்கும் பயனாக இருக்கும் இது.

  • 5 பரணீ // Feb 21, 2006 at 7:25 pm

    சிகிச்சை எடுத்துக் கொண்டது அரவிந்த் கண்மருத்துவமனையிலா அல்லது வேறு ஏதேனும் கண்மருத்துவமனையிலா என்று கொஞ்சம் கூற முடியுமா ?

  • 6 செல்வராஜ் // Feb 21, 2006 at 9:12 pm

    மதி, டீசே, சுந்தர், கார்த்திக், பரணீ, நன்றி. இந்தப் பதிவுகள் உங்களுக்கும் இன்னும் பலருக்கும் பயனுள்ளதாய் இருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சியே.

    மதி, இந்தியா சென்று செய்து கொண்டதற்கு அந்தச் சமயத்தில் இங்கு சிகிச்சைக் கட்டணம் மிகவும் அதிகமாக இருந்தது ஒரு காரணம். அமெரிக்காவில் காப்பீட்டுத் திட்டங்கள் இன்னும் இவற்றை ஒதுக்கி வைத்திருக்கின்றன. தவிர இங்கு செய்துகொண்ட தொடுவில்லை (உள்ளாடி) பரிசோதனைகள் எனக்கு அவ்வளவு திருப்தி அளிக்கவில்லை. சிலசமயம் சில மருத்துவ முறைகள் இந்தியாவில் அதிக நம்பிக்கை அளிப்பதாய் இருக்கின்றன. ஒரு ஆறு வார விடுப்பில் சென்றிருந்த போது கோவையிலேயே நன்றாகச் செய்துவிடுகிறார்கள் என்று அறிந்து உடனே செய்துகொண்டேன்.

    பரணீ, நான் சென்றது லோட்டஸ் மருத்துவமனை. நல்லதொரு இணையதளம் வைத்திருக்கிறார்கள். பாருங்கள்.

  • 7 Thangamani // Feb 21, 2006 at 10:05 pm

    நல்ல தொடர். பல இடங்களில் உங்கள் நகைச்சுவையும் நன்றாக இருந்தது. நன்றி.

  • 8 பாலா சுப்ரா // Feb 21, 2006 at 10:23 pm

    ரசித்த தொடர். கண்ணாடி அணிபவர்களின் கஷ்டநஷடங்களை சொன்ன இடத்தில் என்னைப் பற்றி சொன்னது போலவே இருந்துச்சு.

  • 9 krishnamurthy // Feb 21, 2006 at 11:35 pm

    Useful report with happy ending! I think many bloggers will now have the confidence to go for the laser treatment after reading yours.

  • 10 Jsri // Feb 22, 2006 at 12:39 am

    செல்வராஜ் நலம் பெற்றது நல்லவிஷயம். எப்படி இருந்தாலும் இந்தப் பதிவுகள் முடியும்வரை இடையில் பேசக்கூடாதென்று அமைதியாக இருந்தேன்.

    ஒரு பத்து பன்னிரண்டு வருடங்களுக்குமுன் தலைவலி வந்தபோது பக்கத்துவீட்டில் இருந்த ஜேஎஸ்.ராகவன் என்ற எழுத்தாளர் தான் சத்தம்போட்டு எனக்கு அகர்வால் மருத்துவமனையில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொடுத்து, அப்பொழுதிருந்து கண்ணாடி அணிந்துவருகிறேன். அதாவது அணியவேண்டும் என்று நிர்பந்தம். அணிகிற கணக்குதான். ஆனால் நான் அணியாமல் அலட்சியமாக இருந்த நாள்களே அதிகம். கண்ணாடிப் பிரச்சினைகளில் நீங்களே குறிப்பிட்ட காரணங்களுடன் பெண்களுக்குக் கொஞ்சம் சமையலறைப் பிரச்சினைகளையும் நிறைய சேர்த்துக்கொள்ளுங்கள். எனக்குக் கிட்டப் பார்வை போல வருடா வருடம் பாயிண்டும் ஏறாது. இத்தனை வருடங்களும் அதே 0.75 தான். ஆனாலும் இந்த லேசர் சிகிச்சைக்கு நிதானமாக நேரம் எடுக்கமுடியாமலே இருந்துவந்தது. இப்போது இந்த அகர்வால் மருத்துவர்கள் பல ஊர்களிலும் சிகிச்சை அளிக்கிறார்கள்.

    ஆறு மாதங்களுக்குமுன் ஜூன்மாதம் திருச்சியில் அம்மாவீட்டில் (பொதுவாக உடலின் ஸ்பேர் பார்ட்ஸ் ரிப்பேர் எல்லாம் அம்மாவீட்டில் இருக்கும்போது வைத்துக்கொள்வதே எனக்கு வசதி) இருக்கும்போதே முடித்துவிட வேண்டும் என்று தீவிரமாக இருந்தேன். ஆனால் அதற்குமுதல்நாள் வரை மும்பையில் பெண்ணின் பள்ளி அட்மிஷனுக்கும், வாடகைக்கு வீடுபிடிப்பதற்கும் நாயாய் பேயாய் அலைந்துகொண்டிருந்தேன். முதல்நாள் மாலை எல்லாம் முடித்து விமானம் கிளம்பும்முன் அப்பாவிற்கு போன் செய்து மறுநாள் ஆபரேஷனுக்குப் பணம் கட்டிவரச் சொன்னேன். மற்றவர்கள்போல் இரண்டு நாள்கள் முன்பிருந்தே கண்களைச் சுத்தம்செய்வது போன்ற எந்த முன்னேற்பாடும் நான் செய்துகொள்ளவில்லை. ஊரிலிருந்து வந்த இரவு முழுவதும் மும்பைக்கு எடுத்துச் செல்ல சாமான்கள் பேக்செய்வதுபோன்ற வேலைகளையே பார்த்துக்கொண்டிருந்தேன். சுத்தமாகத் தூங்கவேயில்லை.

    மறுநாள் காலை எட்டுமணிக்குக் கிளம்பும்வரை யாருக்கும்(என் மாமியார் வீட்டிற்குக்குகூட) சொல்லக்கூட இல்லை. நிற்க நேரமில்லாத காலில் சக்கரம் கட்டிய வேலைகள். படியிறங்கும்போது அடுத்த 4 நாள்களுக்கு விடுமுறை எடுக்காமல் வந்து வீட்டைத் துடைக்கச்சொல்லி வேலைக்காரிக்குச் சொல்லும்போதுதான் தூக்கமில்லாமல் கண்ணெல்லாம் சிவந்திருக்கிறது என்று சத்தம் போட்டாள். இடுப்பிலிருந்த பொட்டலத்திலிருந்து விபூதி எடுத்து நெற்றியில் வைத்து, “ஆரம்பிக்கும்போது சமயபுரத்தாளை நினைச்சுக்க கண்ணு; அவளைவிட யார் இருக்கா கண்ணுக்கு?”

    மருத்துவமனைக்குச் சென்று உட்கார்ந்தபோது அப்பாடா என்று இருந்தது. சுற்றிவரப் பார்த்தேன். நடிகர் மாதவன் சிரித்துக்கொண்டிருப்பது போல் ஒரு படம். Congratulations! என்று இந்த மருத்துவமனையின் 10000ஆவது நபருக்கான ஆபரேஷனுக்கு கையெழுத்துப் போட்டுக் கொடுத்ததை, படமாக்கி மாட்டியிருந்தார்கள். நான் எத்தனையாவது ஆளோ என்று கொஞ்சம் தைரியமாக இருந்தது.

    என் பெயரைக் கூப்பிட்டார்கள்.

    ஆனால் ஆபரேஷனின் போது உங்கள் அனுபவத்திற்கு முற்றிலும் மாறாக என்னுடையது இருந்தது. ஏறிப் படுத்தபோது எனக்கிருந்த உடல் அசதிக்கு சுகமாக இருந்தது. உதவியாளர் மருந்தைக் கண்ணில் விட்டுக் க்ளிப் போட்டு, மெஷினை கண்ணுக்கு மேல் நகர்த்தியபோது லேசாகப் பயம் எட்டிப் பார்க்க, வேலைக்காரி சொன்னதுபோல் மாரியம்மனை நினைத்துக்கொள்ளலாம் என்று நினைத்தால்.. நினைத்தால்.. (டாக்டர் ஏதோ செய்ய ஆரம்பித்துவிட்டார்…) ம்ஹூம்.. எவ்வளவு முயற்சிசெய்தும் தெற்றுப்பல் சிரிப்புடன் maddy தான் நினைவுக்கு வந்தார். சிரிப்புவந்து விட்டது. எழவு வீட்டிலாவது சிரிக்கலாம். ஆபரேஷன்- அதுவும் கண்ணுக்குச் செய்யும்போது சிரிக்கலாமா? பயந்துபோய் கட்டிலின் இரண்டுபக்க விளிம்பையும் இறுகப் பிடித்து சிரிப்பை அடக்கப்பார்த்தேன். முடியவே இல்லை. இடையில் விவேக் வந்து ‘உன் சிரிப்புதான் ஊரறிஞ்ச சிரிப்பா இருக்கே..’ என்று ‘மின்னலே’ வேகத்தில் சொல்லிப்போக.. செல்வராஜ் நம்புங்கள்… அவர்கள் ஆரம்பித்த விநாடியில் அவசரமாக ‘நா கொஞ்சம் சிரிக்கணும்’ என்று அபத்தமாகச் சொன்னேன்.

    “What??” அக்கறையாய் டாக்டர் முகத்தருகே குனிந்து கேட்டார்.

    “I feel like laughing..”

    “God!!” என்று முதன்மை மருத்துவர் அலறிய அலறலில் எனக்கும் சிரிப்பு போய்விட்டது. “இப்ப சரியாப் போச்சு” என்று நான் சொன்னது எனக்கே கேவலமாக இருந்தது.

    “Are you alright?” என்று அவர் கேட்டதில் இருந்தது கிண்டலா கோபமா, நிதானமா என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அவர் இதயம் வேகமாகத் துடிப்பது எனக்கே கேட்டது. அந்த சீரியஸ்நெஸ் எனக்கும் தொற்றிக்கொள்ள அதனால் கொஞ்சம் அடக்கமாக இருக்க முடிந்தது. லேசாகத் தலையை ஆட்டிவைத்தேன்.

    God!.. Strange!!.. funny.. horrible!.. திரும்ப God என்ற வார்த்தைகளை மாற்றி மாற்றி மணிரத்னம் படம் மாதிரி ஒற்றை ஒற்றையாய் சொல்லிக்கொண்டே ஒருவழியாக(மொத்தம் 4 நிமிடத்தில்) செய்து முடித்தார். உதவி மருத்துவர்(பெண்) சிரித்துக்கொண்டே இருந்தார். மாதவன் அருளால் எல்லாம் சுபம். அப்புறம் எல்லோரும் என்னை அங்கே ஜெய’சிரி’ என்றே கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இரண்டாம் நாள் பரிசோதனைக்குப் போய்விட்டு மூன்றாம் நாளில் மும்பை வந்தேன். மீண்டும் இறக்கை கட்டிய வாழ்க்கை. [வந்தபுதிதில் கருப்புக் கண்ணாடி அணிந்திருந்தால் இங்கே நிறைய பேர் என்னை கண்தெரியாதவள் என்றும், அப்படியும் வேலை செய்வதைப் பார்த்து சிலர் ஒருவேளை ‘அல்பத்துக்கு பவிஷு வந்த கேஸோ’ என்றும் நினைத்தார்களாம். :)]

    ===

    செல்வராஜ்: உங்களுக்கு ஏற்பட்டது கொஞ்சம் அதிசயமாக ஏற்பட்ட பிழைதான். எந்த முன்னேற்பாடுகளும் இல்லாமலே எக்கச்சக்க வேலைகளுக்கு இடையில், அலட்சியமான கவனிப்பிலும் என்னால் செய்துகொள்ள முடிந்தது என்பதைச் சொல்லத்தான் இவ்வளவு நீட்டிச் சொன்னேன். 40 வயதுக்குமேல வெள்ளெழுத்துக்குக் கண்ணாடி போடவேண்டியிருக்கலாம் என்பதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. அப்படியே இருந்தாலும் படிக்கும்போது மட்டும்தான் போடப் போகிறோம்.

    மதி: இரண்டு கண்களுக்கும் சேர்த்து ரூ.25000 ஆனது. இதைவிடக் குறைந்த விலையில் அங்கு செய்யமுடியுமென்றால் செய்துகொள்ளுங்கள். இல்லாவிட்டால் இந்தியாவில் செய்துகொள்வதே நல்லது.

    மூக்குசுந்தர், பாஸ்டன் பாலா: உனக்குக் கண்ணாடிதான் எடுப்பாக இருக்கிறது என்று ஆளாளுக்கு நம்மைத் தட்டிவிடுவார்கள். அதை எல்லாம் நம்பிக்கொண்டு 🙂 கஷ்டப்படத் தேவை இல்லை. கண்ணாடி அணிவதால் என் கண்கள் சிறியதாகிவிட்டது என்று என் அம்மா மட்டும் வருத்தப்பட்டுக்கொண்டே இருந்ததே நான் செய்துகொண்டதற்கு முக்கியக் காரணம். ஆனால் என்னுடன் அதே நாளில் செய்துகொண்ட வேறு இரண்டு பெண்கள்(25 வயதிற்கும் குறைவு) இருவருக்கும் கண்ணாடியை கழட்டினால் கண்ணே தெரியாதாம். 9 மற்றும் 10 புள்ளிகள் என்று சொன்னார்கள். கல்யாண மார்க்கெட்டில் விலைபோகவே வீட்டின் நிதிநிலையை மீறிச் செய்துகொள்வதாகக் கூறினார்கள். 🙁 அவர்களுக்கும் இது சரியாகவே அமைந்தது. முக்கியமாக அவர்களைப் போன்றவர்களுக்கு இந்தச் சிகிச்சை ஒரு வரப்பிரசாதம். கல்யாணத்திற்கு முதல் பத்திரிகையை டாக்டருக்கு வைக்கலாம். 🙂

    துபாய்வாசி: அவசியம் மனைவிக்கும் மகளுக்கும் செய்யுங்கள். தற்சமயம் 17 வயதிற்கு மேல்(40 வயதிற்குள்) ஆனவர்களுக்கே இதைச் செய்கிறார்கள். சிறுவர்களுக்குச் செய்வதில்லை. என் மகளுக்கு கொஞ்சம் கிட்டப் பார்வை இருக்கிறது. வயதானதும் உடனே நிச்சயம் செய்வேன்.

  • 11 செல்வராஜ் // Feb 22, 2006 at 10:52 am

    தங்கமணி, பாலா (கில்லிச்சுட்டிக்கும்), கிருஷ்ணமூர்த்தி நன்றி. ஜெஸ்ரீ உங்களுடைய விரிவான அனுபவப் பகிர்தலுக்கும் நன்றி. ‘சிரி’ப்பனுபவங்கள் வேடிக்கையாகத் தான் இருந்தது.

    உங்களுடையதும் என்னுடையதும் இரு எல்லைகளாக இருக்க, பலருக்கும் இந்தத் தகவல்கள் உதவும் என்பதில் மகிழ்ச்சி. நீங்கள் சொல்வதைப் போல் திருமண வயதில் இருக்கும் பல பெண்கள் இந்தச் சிகிச்சையைச் செய்து கொள்ள முன்வருவதைக் கண்டேன்.

  • 12 ஜகன் // Feb 23, 2006 at 1:29 am

    செல்வராஜ்,
    இரசிக்கும்படியான தொடர் பதிவு.

  • 13 Nithya // Feb 23, 2006 at 9:00 am

    Selvaraj,

    Good series. I have never worn glasses. I used to want to wear them when I was a teenager as I thought they were cool but the doctor told me that my vision doesn’t require one. And I was disappointed at that. Go figure! But the small discomforts on wearing glasses that you mention are interesting, and ones who don’t wear glasses don’t think of these. A few of my friends who have got Lasik surgery done say that the main plus for them is being able to see when they wake up in the middle of the night. Your posts would boost confidence in people that even if Lasik surgery doesn’t work the first time, it can be rectified (maybe not in all cases). Interesting and informative series.

  • 14 selvanayaki // Feb 23, 2006 at 6:05 pm

    வித்தியாசமான பயனுள்ள தொடர் செல்வராஜ். அந்தப் பொங்கல் வைக்கும் புகைப்படம் மிகவும் பிடித்தது. ஊருக்குப் போயிருந்தபோது நாங்களும் வைத்தோம் இதேமாதிரி கல் அடுப்புக் கூட்டி.

  • 15 செல்வராஜ் // Feb 23, 2006 at 10:04 pm

    ஜகன், நன்றி. நித்யா, இல்லாததற்கு ஆசைப்படுவது இயல்பு தான். இந்த இடத்தில் இல்லாதிருப்பதே நலம்!

    செல்வநாயகி, நன்றி. அது ஒன்று தான் பொங்கலுக்கு நாங்கள் ஊரில் இருந்த சமயம். நினைவுகளுக்கு ஒன்று.

  • 16 iraamaki // Feb 24, 2006 at 2:18 am

    தொடர் முழுவதையும் ஒன்றாய்ச் சேர்த்துப் படித்துப் பார்த்தேன். நன்றாக இருந்தது.

    லேசிக் செய்யவேண்டும் என்ற ஆவல் ஒரு 7/8 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது. பின்னால் வெள்ளெழுத்து வந்து இரண்டு வேறுபட்ட ஆடிகளைப் (படிப்பதற்கு ஒன்று, நீண்ட பார்வைக்கு மற்றொன்று) போடத் தொடங்கியதிலிருந்தும், அகவை கூடியதாலும், இந்த எண்ணம் கரைந்து போயிற்று.

    கண்பார்வைச் சிக்கல்களுக்கு ஈனியல் (genetics) ஏதெனும் வழியைச் சொல்லுமோ?

    அன்புடன்,
    இராம.கி.

  • 17 செல்வராஜ் // Feb 24, 2006 at 7:57 am

    நன்றி இராம.கி ஐயா. வெள்ளெழுத்துக்கு இன்னும் லேசிக்கோ வேறு சிகிச்சைகளோ இல்லை என்று தான் எண்ணுகிறேன். ஆனால், அது தவிர, கண்பார்வை மருத்துவத்தில் ஏற்பட்டிருக்கிற முன்னேற்றங்கள் வியக்க வைக்கின்றன. ஈனியல் (இதற்கு என்ன வேர் என்று முடிந்தால் விளக்குங்கள்) மருத்துவ முறைகளில் இன்னும் வளர்ச்சி உண்டாகுமா என்று பொறுத்துப் பார்க்க வேண்டும். ஆனால் கண்பார்வைக்குறைக்கும் ஈனியல் ஒரு காரணம் என்று, சந்ததியினருக்கும் அந்தக் குறை வரக்கூடாதெனில் கண்ணாடி அணியாத பெண்ணாய் வேண்டும் என்று திருமண வயதில் எண்ணியது நினைவிருக்கிறது 🙂 !

  • 18 தாணு // Feb 24, 2006 at 12:26 pm

    //கொச்சினைப் பார்க்க ஒரு கண்; சச்சினைப் பார்க்க மறுகண் என்று காத்திருந்த நேரத்தில் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன்//
    //யார் கண்டது? வேண்டாம் என்று சொல்லியும் மதிய உணவில் சாப்பிட்ட கோழிக் குழம்பாகக் கூட இருக்கலாம் //
    //‘அது போலெல்லாம் நடக்க வாய்ப்பில்லை’ என்று மருத்துவர் சொல்லியிருந்தாலும், அதைவிட இந்த வதந்திகளை நம்பிப் பயப்பட வேண்டியிருக்கிறது//
    //யாரையோ பார்த்து ஒரு கண்ணை மட்டும் சிமிட்டி அடிவாங்கினால் அதற்கு நான் பொறுப்பல்ல!).//
    //எல்லாவற்றிற்கும் மேல், தலை மீது ஏறி ஆடும் சின்னவர்கள் கை பட்டோ கால் பட்டோ கண்ணாடி கீழ்விழுந்து உடைந்து போகும் என்கிற அச்சமில்லாத பெரு நிம்மதியோடு ஆட்டம் போட முடிவது;//
    செல்வராஜ்-கலக்கத்துடன் இருந்தபோதும் காமெடிதான் உங்களைத் தைரியமாக உட்கார்த்தி வைத்திருந்தது போலும். Good luck for that Good LOOK!!
    ஒவ்வொரு சிகிச்சையிலும், மருத்துவரை மீறிய , மருத்துவ அறிவை மீறிய சங்கடங்களும் சாதனைகளும் தவிர்க்க முடியாதது. ஆயிரத்தெட்டு முன்னேற்பாடுகளுடன் நானும் கணவரும் மருத்துவராக இருந்தபோதும், மூன்றாவது முறையாக எனக்கு வயிறு கிழித்து ஆப்பரேஷன் செய்யப்பட்டபோது ஏற்பட்ட காம்ப்ளிகேஷனில் யாருமே ஒன்றும் செய்ய முடியாமல் தவித்ததையே ஒரு பதிவாகப் போடலாம். நம்மளை மாதிரி ஆளுங்க தமிழ்மணத்தில் `அறுவை’ செய்யவாவது பயன்படுவோம்னு தப்பிச்சுட்டோம்னு வைச்சுக்கலாம்.
    (நேற்று தட்டச்சு பண்ணி இன்றுதான் பின்னூட்டமிட முடிந்தது.)

  • 19 செல்வராஜ் // Feb 24, 2006 at 11:57 pm

    தாணு, (முன்பதிவில்) சுதர்சன், உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. தாணு, ஒரு மருத்துவர் என்கிற முறையில் உங்கள் கருத்து முக்கியம் தான். சில வேளைகளில் எல்லாப் போல்மங்களையும் மீறிச் சில சிக்கல்கள் ஏற்படத்தான் செய்கின்றன. அப்படியே கொஞ்சம் வேடிக்கை கலந்து ஏற்றுக் கொள்ள வேண்டியது தான். (பொறுமையாய் எல்லாம் படித்து எடுத்துக்காட்டித் தட்டிக்கொடுத்ததற்கு நன்றி!)மருத்துவர்களைக் கொஞ்சம் பழி கூறலாம் என்று தோன்றுவதும் இயற்கையானது தானே :-). அந்த உடனடி எதிர்வினையை ஆறப்போட்டுப் பொறுமையாக எதிர்கொள்ள வேண்டும். ஆமாம், தீவிர சிகிச்சையின் போது பிற சாதாரணப் பேச்சில் பல சமயம் மருத்துவர்கள், செவிலிகள் ஈடுபடுவது பற்றி நான் நினைத்தது சரிதானா என்பதையும் இந்தப் பக்கமாக வந்தாலோ பிறகு எப்போதாவதோ தெளிவுசெய்யுங்கள். நன்றி.

  • 20 Jsri // Feb 25, 2006 at 1:26 am

    செல்வராஜ், இது தீவிர சிகிச்சை என்பது உங்களுக்குத்தான். இந்தச் சிகிச்சையை அவர்கள் எத்தனைமுறை செய்து பழகியிருப்பார்கள். அதனால்கூட அலட்சியமாக (இதை அலட்சியம் என்று சொல்வதுகூட சரியான வார்த்தை இல்லை. தன் திறமைமேல் நம்பிக்கை என்று சொல்வதே சரி.) அவர்கள் பேசிகொண்டிருந்திருக்கலாம். நடந்த தவறு அவர்கள் பேசியதால் இருக்கும் என்றும் எனக்குத் தோன்றவில்லை. எல்லாமே ஒரு ஊகம்தான்.

    அதுபோகட்டும். நேற்று இன்னேரம் வரை என் வாழ்க்கையில் பல விஷயங்கள் முடிவுசெய்யப்படாமலே இருந்தன. இன்று எல்லாம் சுமுகமாக முடிந்து கடைசிவரை சந்தேகமாக இருந்த சிகிச்சைக்கும் வந்துவிட்டேன். அந்த 4,5 நிமிடங்கள் எனக்கு எவ்வளவு முக்கியமானது! ஆனால் கடைசி விநாடிதான் சிகிச்சை குறித்த பயமே எட்டிப் பார்க்கிறது. ஆனாலும் மாரியம்மனை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. எத்தனை முயன்றும் மருத்துவமனையில் மாட்டியிருந்த மாதவன் ஃப்ளோ அப் படம் தான் நினைவுக்கு வருகிறது. கூடவே மின்னலே படத்தில் ரீமா சென் மாதவனிடம் சொல்லும் ‘கண்ணை மூடிப் பார்த்தேன்; அங்க நீதான் தெரிஞ்ச’ வசனமும்… (இந்தக் காட்சியை நாங்களே வீட்டில் பலமுறை சொல்லி கிண்டல் செய்திருக்கிறோம்.) வெளியே பாவம், பணத்தைக் கட்டிவிட்டு, குழந்தையைக் கையில் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு கவுண்டராக, ‘வலிக்குமா?’ விலிருந்து சந்தேகம் மேல் சந்தேகமாக கேட்டுக்கொண்டு கவலையுடன் காத்திருக்கும் கணவரிடம் போனதும், ‘கண்ணை மூடிப் பார்த்தேன், அங்க மாதவன் தான் தெரிஞ்சான்’ என்று சொல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டு.. (இதைத் தட்ட எவ்வளவு நேரம் எடுக்கிறது. ஆனால் இவையெல்லாம் மிகச் சில விநாடிகளில் மனஓட்டத்தில் நடந்து முடிந்துவிட்டது.) அடக்கமுடியாமல் சிரிப்பும் வந்தால்…. நோயாளியே இந்த லட்சணத்தில் இருந்தால் என்ன செய்வது?

    முக்கியமாய் சொல்லவந்தது…. எனக்குக் கண் சிகிச்சை செய்த மருத்துவர்களும் முதலில் சாதாரணமாக வேறு ஏதோ கான்ஃபரன்ஸ் விஷயமாகத்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு சிரிப்புவருவதாகச் சொன்னதால் மட்டுமே முதன்மை மருத்துவர் அதிர்ச்சியடைந்து சிகிச்சைத் தீவிரத்துக்கு வந்தார். உதவி மருத்துவர் கண நேர அதிர்ச்சிக்குப் பின் தொடர்ந்து கடைசிவரை சிரித்துக்கொண்டே தான் இருந்தார். நாம் அலுவலக வேலை செய்வதுபோல், சமையல் வேலை செய்வதுபோல் தான் அவர்களும் என்று நினைத்துக் கொள்வேன்.

    நாமாவது பரவாயில்லை; பிரசவ நேரங்களில் வலியோடு துடிக்கும்போது, எதுவுமே நடக்காததுபோல் பக்கத்தில் மருத்துவர்கள், செவிலிகள் தங்களுக்குள் பேசுவதைக் கேட்டால் என்ன சொல்வீர்களோ. 🙂 அறுவை சிகிச்சை செய்யும்போது அப்படி இருக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். எனக்கு அனுபவமில்லை. நானும் தாணுவின் பதிலுக்குக் காத்திருக்கிறேன்.

    [முடிந்தவரை தமிழிலேயே எழுதவேண்டும் என்ற ஒழுங்கு உங்கள் பதிவில் பின்னூட்டும் போது வருகிறது. நன்மையே.]

  • 21 மீனா. // Feb 27, 2006 at 5:32 am

    அருமையான பயனுள்ள பதிவு!மிகவும் சுவாரஸ்யமா இருந்தது!

    சரி செல்வராஜ் அடுத்து..?(பழைய்ய்ய கேள்விதான் :))

    மறுபடி ஆரம்பித்தில் இருந்து படித்துவிட்டு சொல்லலாம் என்றிருந்தேன் அதுதான் இத்தனை தாமதம்.

  • 22 செல்வராஜ் // Feb 27, 2006 at 4:53 pm

    மீனா, நன்றி. பழைய கேள்வியை விடமாட்டீங்க போலிருக்கு 🙂 இருந்தாலும் நான் சிக்குவதாயில்லை !!

    ஜெஸ்ரீ, நீண்ட பின்னூட்டத்திற்கு மீண்டும் நன்றி. நான் மருத்துவர்களின் அலட்சியம் என்றோ, அதனால் தான் தவறு நிகழ்ந்தது என்றோ கூறவில்லை. அப்படி ஒரு ஐயம் ஏற்பட வழியிருக்கிறது, அதுவும் இயற்கைதானே என்றேன். அதோடு, அதற்குப் பிற காரணங்கள் என்ன இருக்க முடியும் என்றும் சத்தமாக யோசிக்கிறேன். வேறொன்றுமில்லை.

  • 23 Jsri // Feb 28, 2006 at 6:26 pm

    செல்வராஜ், :))) என் பிரச்சினை இதுதான். நீட்டிமுழக்கி சொல்லிவிட்டு எதற்காகச் சொன்னேன் என்பதைச் சொல்லவிட்டிருக்கிறேன். நான் சொல்லவந்தது, யாரும் சத்தமாக மற்றவர்களுடன் பேசினால்தான் கவனம் சிதறி இருக்கிறார்கள் என்று இல்லை. யாருடனும் பேசாமலே இருந்தாலும் எனக்கு நேர்ந்ததுபோல் தறிகெட்டு உள்ளே ஓடும் எண்ண அலையை மனிதனால் நிறுத்தமுடியுமா? அதைச் சொல்லவே என் உதாரணம் சொன்னேன்.

    ஒன்றும் பேசாமல் சிகிச்சைதரும் மருத்துவர்களும் ‘சத்தமாக தனிமையோடு (வேறு ஏதாவது) பேசிகொண்டு’ தானே இருப்பார்கள். இரண்டு நிமிடம் அப்படியே மனதைவிட்டுவிட்டு பிறகு என்ன விஷயங்களை எல்லாம் மனக்குதிரை தாண்டியது என்று யோசித்தால் ஆச்சரியமாக இருக்கும். எல்லோரையும் பேசாமல் அமைதியாக இருக்கச்சொல்லிவிட்டு ஆசிரியர் பாடம் எடுத்தாலும் மாணவர்கள் 40 பேரின் மனமும் பாடத்தைத் தான் கவனிக்கிறது என்பதற்கு ஆசிரியரிடம் என்ன உத்தரவாதம் இருக்கிறது? அதே நான் சொல்லவந்தது.

    மற்றவர்களோடு பேசுவது அவர்களது கவனமின்மைக்குச் சாட்சி. அவர்கள் மனதுக்குக்குள் பேசிக்கொண்டாலும் கவனம் சிதறும். ஆனால் நம்மிடம் அதற்கு சாட்சி இல்லை. அவ்வளவுதான்.

    மருத்துவர்களை நான் ஆதரித்துப் பேசுகிறேன் என்று இல்லை; ஆனால் அவர்களும் மனிதர்கள்; எதுவும் சாத்தியம் என்றே சொல்கிறேன். 🙂

    பொங்கல் புகைப்படம் அருமை. ஒவ்வொரு முறையும் குறிப்பிட மறந்துவிடுகிறேன். 🙂