இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

கண்கள் சொல்லும் கதை – 7

February 14th, 2006 · 8 Comments

மருத்துவர்கள் மற்றும் செவிலிகளின் பழக்கம் ஒன்று பற்றி எனக்குக் கேள்வியுண்டு. தீவிரமான ஒரு மருத்துவச் செய்முறையாக இருக்கும் போதும் அதனூடே வெற்று அரட்டை அடிப்பது போல் பேசிக் கொள்வதைச் சிலசமயம் அவதானித்திருக்கிறேன். என் மகளொருத்தி பிறந்த போதும் மனைவிக்கு மயக்க ஊசி போட வந்த சிறப்புச்செவிலி, தான் கடைவீதி சென்றது பற்றியும், வாங்கிய பொருட்கள் பற்றியும் பேசிக் கொண்டே வேலை செய்தார். பதைபதைப்போடு உள்ளே இருப்பவருக்கு இது ஒரு அலட்சிய மனப்பாங்கு போலத் தோன்றாதா? எதனால் இப்படிச் செய்கிறார்கள்? நாள் முழுதும் உடல் உறுப்புக்களைப் பார்த்துக் கொண்டே இருப்பதால் ஆர்வம்குன்றியோ அருவருத்தோ போய்விடாமல் இருக்கத் தம் கவனத்தைப் பிற கதையாடல்களில் திருப்பிக் கொள்கின்றனரோ தெரியவில்லை.

லேசிக் சிகிச்சையின் போதும் மருத்துவரும் உடனிருந்த செவிலிகளும் இப்படி வெற்றுப்பேச்சில் ஈடுபட்டிருந்தபோது எனக்குச் சிறு கவலை ஏற்பட்டது. வெகு நேரமாய்க் காத்திருந்த பின் லேசிக் சிகிச்சை என்பது சுமார் இருபது நிமிடங்களில் முடிந்து விட்டது. அதிலும் கண்ணுள் லேசர் கதிர்கள் பாய்ச்சும் நேரம் ஒரு கண்ணுக்குச் சுமார் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு மேல் இருந்திராது.

மல்லாக்கப் படுத்திருந்தேன். மரத்துப் போன கண்களை நன்கு விழிக்க வைத்து இமை மூடாதிருக்கும் படி இழுத்துப் பிடித்துக் கொள்ள ஒரு சாதனம். வலியொன்றும் உணரவில்லை. கொஞ்சம் மேலே தெரிந்த ஒரு செந்நிற ஒளிப்புள்ளி தான் லேசர் கதிரின் மூலமாய் இருக்க வேண்டும். கண்கள் ஆடாமல் அதனையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

என்னவோ குளிர்ச்சியான ஒன்றால் கண்பரப்பைச் சற்றே ஒதுக்கி விட்டாற்போன்ற உணர்ச்சி. பிறகு தான் கண் வில்லையைச் சற்றுச் சீவி மேலாகத் திறந்து வைத்த செயல் அது என்று உத்தேசமாய் உணர முடிந்தது. சிகிச்சை ஆரம்பித்த போது சற்று மங்கலாய்த் தெரிந்த செந்நிறப் புள்ளி சற்று தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. ஒரு தார்க்குச்சியை வைத்துக் காய்ந்த பனியாரக் குழிக்குள் பனியாரத்தைத் திருப்பிப் போடும்பொது வரும் ‘சொய்ங்’ போன்று சிறு ஒலி (இது கொஞ்சம் மிகையோ 🙂 ). லேசர் கதிர்கள் கண் வில்லைத் திசுக்களைப் பொசுக்கிச் செதுக்கிக் கொண்டிருக்கின்றன என்று எண்ணிக் கொண்டேன்.

அவ்வப்போது, “நேராப் பாருங்க. கண்ண ஆட்டாதீங்க” என்று கேட்டுக் கொண்டிருந்தனர். ஒரு கண் முடித்து மறு கண்ணுக்கு மாறும் இடையில் ஓய்வோ, ‘சற்று அவகாசம் கொடுங்கள்’ என்று சொல்லிக் கொள்வதற்கோ வழியேதுமில்லை. வலது கண்ணைக் கட்டில் வைத்திருந்த அளவிற்கு என்னால் இடது கண்ணை வைத்திருக்க முடியாததற்கு என்ன காரணம் என்று இதுவரை எனக்குப் புரியவில்லை. சோர்வா, இல்லை அந்தக் கண்ணில் அதிக ‘பவர்’ என்பதால் சரியானபடி குவிக்க முடியாததா என்று தெரியவில்லை. இருப்பினும் முடிந்த வரை கட்டுப்படுத்தி, சிரமத்தோடு நிலையாய் இருக்க முயன்றேன்.

அவ்வளவு தான். சிகிச்சை முடிந்தது. ஒதுக்கிய வில்லையை மீண்டும் மூடி, இன்னும் கொஞ்சம் சொட்டு மருந்துகள் இட்டு, அடுத்த அறைக்குச் சென்று அமர்ந்து சிறிது நேரம் இமைகளை மூடி மூடித் திறந்து கொண்டிருக்கச் சொன்னார்கள். சற்று நேரத்துக்குள் வரண்டு விட்ட கண்களை இன்னும் மூடி மூடித் திறக்க வேண்டுமா இல்லை நிறுத்திக் கொள்ளலாமா என்று கேட்க நினைப்பதற்குள் அடுத்து வந்தவரைச் சிகிச்சைக்குத் தயார் செய்யப் போய்விட்டார்கள்.

பெரிய மருத்துவர் வந்து பார்த்துவிட்டு, ‘எல்லாம் சரியாக இருக்கிறது நாளை மீண்டும் பரிசோதனைக்கு வந்து போங்கள் என்று சொல்லி எழப் போனவர், ஒரு நிமிடம் என்று மீண்டும் ஒருமுறை பரிசோதித்துப் பார்த்தபோது சற்றுச் சந்தேகமாக இருந்தது.

கண்களில் தூசு படாமல் இருக்கவும், இரவு தூங்கும் போது தெரியாமல் கண்களைத் தேய்த்துவிடக் கூடாதென்றும் கோழிமுட்டைஓடு போன்ற ஒரு பொருளை வைத்துக் கட்டிக் கொள்ளச் சொன்னார்கள். அது தவிர, வலி தெரியாமல் இருக்க ஒரே ஒரு மாத்திரை. அவ்வப்போது ஊற்றிக் கொள்ள ஆன்டிபயாடிக் சொட்டு மருந்து. அவ்வளவே.

One Morning in 2003 Dec

காலையில் வலி மறைந்திருந்தது. கண் பார்வையில் பெரிதும் முன்னேற்றம் இருந்தது. நிச்சயமாய்க் கண்ணாடியைத் தேட வேண்டியிருக்கவில்லை. இருப்பினும், காட்சி சற்றே பிறழ்வாகவே இருப்பதாய்ப் பட்டது. ஓரிரு நாட்களில் சரியாகி விடுமென்று தேற்றிக் கொண்டாலும் இடையிடையே எழுந்த சந்தேகங்கள் ஏதோ சரியில்லை போலும் என்று உறுத்தியது. அன்று பரிசோதனைக்குச் சென்ற போது, “எல்லாம் சரியாக இருக்கிறது. ஒன்றும் பிரச்சினை இல்லை” என்று செவிலிகள், சின்ன மருத்துவர்கள் சொன்னாலும் “முழுத் தெளிவு இல்லீங்களே” என்றதற்கு அவர்களிடம் பதிலில்லை. “பெரிய மருத்துவர் வந்து பார்ப்பார்”, என்று மட்டும் சொல்லிவிட்டுச் சென்றனர்.

வரவேற்பறையில் காத்திருந்த போது தொலைக்காட்சியில் ஆஸ்திரேலியாவுடன் கிரிக்கெட்டில் சச்சின் மட்டைபிடித்துக் கொண்டிருந்தார். சும்மா இருந்த நேரத்தில் சுயமாய்ப் பரிசோதனை செய்து கொள்ள ஒவ்வொரு கண்ணாய் மூடிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அருகே இருப்பதைப் படிக்கத் தெளிவாய் இருந்த கண் தொலைவில் இருப்பதைப் படிக்க முடியவில்லை. மறுகண்ணோ தொலைவில் இருப்பதைத் தெளிவாய்ப் பார்த்தது. தொலைவில் சாலைச் சுவற்றில் ஒரு பம்புசெட் விளம்பரம் தெரிந்தது. அதனருகே சாலைக்குறிப்புப் பலகையில் ஒரு திசையில் விமான நிலையமும் மறு திசையில் கொச்சினும் எழுதி இருந்தது தெரிந்தது.

கொச்சினைப் பார்க்க ஒரு கண்; சச்சினைப் பார்க்க மறுகண் என்று காத்திருந்த நேரத்தில் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கடைசியில் வந்த பெரிய மருத்துவர் தான் உண்மையைச் சொன்னார். ஒரு கண்ணில் பொதிவுப் பார்வையும் (positive power) மறு கண்ணில் நொசிவுப் பார்வையுமாக (negative power) அமைந்துவிட்டதால் தான் பார்வை அப்படிப் பிறழ்ந்து விட்டது என்று.

“எப்படி இப்படி ஆனது என்று தெரியவில்லை. உங்களோடு செய்து கொண்ட மற்ற ஏழு பேருக்கும் சரியாக இருக்கிறது. அதனால் வேறு இயந்திரப் பிரச்சினைகள் இல்லை. சில சமயம் சிலருக்கு மட்டும் சரியான எதிர்வினை இல்லாமல் போய்விடுகிறது போலும். இப்படி நடப்பது மிகவும் அரிது. இரண்டிலும் பொதிவு அல்லது நொசிவு என்று ஒரே மாதிரி இருந்திருந்தால் பரவாயில்லை. மாறி இருப்பதால் சிரமம் தான். எதற்கும் சில நாட்கள் கழித்துப் பார்க்கலாம். சிகிச்சை செய்த இடம் ஆறும் வரை பார்வை சற்றே மாறுபட வாய்ப்புண்டு” என்றார்.

இரண்டு நாள் அங்கேயே தங்கியிருந்தும் முடிவில் பிறழ்ந்த பார்வையில் முன்னேற்றம் இல்லை. ஒருவாரம் கழித்து ஏதும் மாறவில்லை எனில் மீண்டும் ஒருமுறை லேசிக் செய்து சரிசெய்துவிடலாம் என்றார். “ஆமா உங்க வயசென்ன?” என்று மறுபடியும் வேறு கேட்டு வைத்தார்!

ஏனிப்படி ஆயிற்று என்று எனக்குள்ளே ஒரு பேச்சு நடந்து கொண்டிருக்க, ஒரு வாரத்திற்குக் கிட்டத்தட்ட எதுவுமே செய்யாமல் வீட்டுச் சிறையாக மறுலேசர் சிகிச்சைக்காகக் காத்திருந்தேன். தானாகவே சரியாகிவிட்டால் நன்றாக இருக்குமே என்றும் மனது கெஞ்சியது.

-(தொடரும்).

கண்கள் சொல்லும் கதை-1, கதை-2, கதை-3, கதை-4, கதை-5, -இடையுரை, கதை-6, இது-7, கதை-8, கதை-9

Tags: வாழ்க்கை

8 responses so far ↓

  • 1 மூக்கு சுந்தர் // Feb 14, 2006 at 7:14 pm

    செல்வா,

    இப்போதுதான் இந்தத் தொடரைப் படித்தேன். அப்பப்பா..எத்தனை இம்சையான விஷயத்தை இப்படி சொல்லி இருக்கிறீர்கள். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதில் இருந்தே ஒரு சோடா புட்டியை போட்டுக் கொண்டிருப்பவன் என்ற வகையில் உங்கள் போராட்டம் தெளிவாகப் புரிகிறது. உங்களை விட என் ஆடியின் பவர் அதிகம். எனவே அடுத்த தலைமுறையை பாதிக்காமல் இருந்தாலே போதும் என்ற எண்ணத்தில் என் கண்ணைப் பற்றிய கவலையயே கிட்டத்தட்ட விட்டு விட்டேன்.

    இப்போது கண்கள் சரியாகி விட்டனாவா..?? அவசியம்/உடனே எழுதுங்கள் .

  • 2 krishnamurthy // Feb 14, 2006 at 9:08 pm

    Cochin and Sachin…. Did that rhymed sentenced came out now or during the operation days? Writers used to say, particularly Balakumaran, all sad and painful happenings turn into Brave acts or laughable acts after some years.

  • 3 Dubaivaasi // Feb 15, 2006 at 12:23 am

    இந்த சிகிச்சை எந்த அளவுக்கு நம்பகமானது? எனது மனைவி மற்றும் குழந்தைக்கு செய்ய வேண்டும்.

    நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால் பயமாக இருக்கிறதே?

  • 4 nirmala // Feb 15, 2006 at 1:17 am

    சொல்லுங்க செல்வா. நானும் ம் கொட்டிட்டு இருக்கேன்.

  • 5 செல்வராஜ் // Feb 15, 2006 at 9:53 pm

    பொறுங்கள், இன்னும் இரண்டு பதிவில் கதை முடியும்.

    கிருஷ்ணமூர்த்தி, சில சமயம் சில வாக்கியங்கள்/கருத்துக்கள் மனதிற்குள் புகுந்து கொண்டு வெளிப்படுத்தும் வரை மறையாதிருக்கும். கொச்சின்-சச்சின் அது போன்ற ஒன்று தான். இரண்டு வருடத்திற்கு முன்னரே மனதில் எழுந்த ஒன்று.

  • 6 Nithya // Feb 15, 2006 at 10:06 pm

    Some times even when we know the ending, we are very interested in knowing how it came about. That is how it is right now.

  • 7 Vimala // Feb 16, 2006 at 12:35 pm

    Well written, kan munnadi nadantha mathiri irukkunga,
    Somehow I like nurses talking about something else ..but not always though:)

    Vimala

  • 8 சுதர்சன் // Feb 24, 2006 at 11:04 am

    //கொச்சினைப் பார்க்க ஒரு கண்; சச்சினைப் பார்க்க மறுகண் //

    :))