இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

இடது பதம் தூக்கி ஆடும்…

December 1st, 2005 · 5 Comments

உறக்கம் கலைந்தும் கண் விழிக்காத காலைப் பொழுதில் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். இரவு ஒரு மணி வரை வலைப்பதிவுகளில் உழன்று கொண்டிருந்ததன் விளைவுச் சோம்பல் இன்னும் முறிக்கப் படாமல் என்னுடனேயே படுத்துக் கிடந்தது.

“அது ஏழே கால் மணின்னு போடுங்க”, கிண்டலாய் ஒலிக்கும் மனைவியின் குரலைத் தாண்டி மேலே செல்வோம்.

ஏற்கனவே குளித்துவிட்ட மகளின் மீது பூத்துக் கிடந்த நீர்த்துவாலைகளைத் துவட்டி விட்டபடி இருந்த என் மனைவியிடம் முன் தினப் பள்ளி நிகழ்வுகள் பற்றி நிவேதிதா பேசிக் கொண்டிருந்தாள்.

உடலின் இடதுபுறத்தை வலது மூளையும், வலப்புறத்தை இடது மூளையும் கட்டுறுத்துகின்றன என்பதால் சாதாரணமாக வலதுகைப் பழக்கமுடையோர், அவ்வப்போது இடது கையாலும் எழுதவோ, இடப்பாகத்திற்கு அதிக வேலைகள் தரவோ முயன்றால், வலப்பக்க மூளைக்கும் பயிற்சி கொடுத்தாற்போலிருக்கும் என்று அவளின் வகுப்பாசிரியை கூறினாராம்.

‘அட!’ என்று மனதிற்குள்ளேயே முகவாய்க்கட்டையைத் தேய்த்துக் கொண்டு அதுபற்றி நான் யோசித்துக் கொண்டிருக்கையில் ஓரக்கண்ணில் என்னைக் கவனித்தவள் “ஸ்லீப்பி ஹெட் அப்பா” என்றாள். பத்து நாட்களுக்கு முன் தான் முன்பல் விழுந்த ஓட்டை வாயாகியிருந்தாள். இன்னும் கூட அடிக்கடி ‘அப்பா’ என்று அம்மாவையும் ‘அம்மா’ என்று அப்பாவையும் மாற்றி மாற்றி விளித்துக் கொண்டிருக்கிறாள்.

திடீரென்று ஒரு ஒளிவட்டம் தோன்ற, “ஓ அப்பா” என்று வழமை போல் மாற்றி அம்மாவை விளித்து, அதெல்லாம் ஒரு பொருட்டல்லவென்பது போல் புறங்கையால் தள்ளிவிட்டுத் தன் அடுத்த கண்டுபிடிப்பின் வியப்பில் பேசுகிறாள்.

“அதனால் தான் பரதநாட்டியம் போன்று நடனப் பயிற்சி எல்லாம் செய்வது மிகவும் நல்லது. அதில வலது பக்கம் பண்ற எல்லாத்தையும் இடது பக்கத்துலயும் பண்றதனால ரெண்டு பக்க மூளைக்கும் பயிற்சி ஆச்சு”, என்கிறாள்.

சந்தோஷமாக இருந்தது. இப்படி ஒன்றினை ஒன்றோடு தொடர்பு படுத்தி வாழ்க்கைக் கல்வியைப் பெருக்கிக் கொள்கிறாள் என்பது ஒருபுறம். வற்புறுத்தி வெறுக்கச் செய்யாமல் தன்னார்வத்தாலேயே நாட்டியம் கற்றுக் கொள்ள அனுப்ப முடியுமா என்கிற முன் தினக் கவலைக்குச் சிறு பதில் கிடைப்பது போலிருந்தது மறுபுறம். ஒன்றைச் சாதித்து விட்ட திருப்தி தரும் நிறைவிற்கும் தன்னம்பிக்கைக்கும் வலு அதிகம்.

‘போத்தி’ என்கிற வினைச்சொல்லைப் பெயர்ச்சொல்லாக்கி அவள் வழங்குகிற போர்வையை உதறிவிட்டுப் படுக்கையில் இருந்து எழுந்தேன். “வாவ்! இதை நான் என் வலைப்பதிவில் போடப் போறேன்”

நெரித்த புருவத்தோடு எனை நோக்கி, “அம்மா! எதுக்கு இந்த அப்பா எதைப் எடுத்தாலும் பதிவுல போடறேங்கறாரு?”

“ஆமாம்! எனக்கும் அது தான் தெரியல?!”

“அப்புறம் கொஞ்ச நாள்ல வலைப்பதிவு வலைப்பதிவுன்னு பித்துப் பிடிச்சுக்கப் போகுது. அப்புறம் கடசில நான் நின்னேன். நான் நடந்தேன். நான் உட்கார்ந்தேன்னு எழுதிக்கிட்டிருக்கப் போறார்!”

ஆம். இன்று நான் எழுந்து நின்று நடந்தேன். மாலை வீட்டிற்கு வந்தபின் ஒரு குட்டிக்கரணம் போட முயன்று கீழே விழுந்தேன்.

“குட்டிக்கரணம்னா சொமர்சால்ட் அப்பா. நீங்க போட முயன்றது கார்ட்வீல்”, என்கிறாள். நின்றபடி பல்டி அடிக்கும் ‘கார்ட்வீல்’க்குத் தமிழில் என்ன? நெடுங்கரணம்?

நடராஜ நினைப்பொன்றும் இல்லை. இடது பதம் தூக்கி, இடது கரம் நீட்டி, இரண்டு ஆட்டம் போட்டு விட்டு வந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். முடுக்கி விடப்பட்ட மூளை இன்னும் சீராய் வேலை செய்கிறதா என்று தெரியவில்லை!

இவள் மட்டும் ‘கிறுக்கு அப்பா’ என்று என்னை முகத்தில் ஒரு வியப்பும் மகிழ்வும் முறுவலும் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

‘வாடா, வந்து பயிற்சி பண்ணு, நெளிக்காதே’ என்றெல்லாம் (தாய்) சொல்லியழைத்து உடனிருந்து ஆட வைக்க வேண்டியிருப்பவளை, கடந்த பல மாதங்களாய் ‘அரைமண்டி’ ‘தித் தை, தித் தித் தை’ எல்லாம் மறந்தவளை இன்று அழைக்க வேண்டியிருக்கவில்லை. தானாகவே வந்து “அம்மா, நான் இன்னைக்கு டான்ஸ் பிராக்டீஸ் பண்றேம்மா” என்று நடராஜனை நெஞ்சம் பணிந்திருக்கிறாள்.

Tags: வாழ்க்கை

5 responses so far ↓

  • 1 karthikramas // Dec 1, 2005 at 3:37 pm

    ஆமாம்! எனக்கும் அது தான் தெரியல. 🙂

  • 2 அன்பு // Dec 1, 2005 at 9:15 pm

    ஆரம்பம் முதலே அமர்க்களமாயிருக்கு….

    “எழுந்திருக்கும்போது ஏழேகால்…” என்றுதான் நான் ஆரம்பித்திருப்பேன்..
    “அது ஏழே கால் மணின்னு போடுங்க”
    சொல்லியும் மாறலன்னே — உங்க எழுத்து ஒரு மார்க்கமா, அதாங்க ரொம்ப அழகாயிட்டே வருது.

    போத்தி – எங்க தாத்தாவை அண்ணன்கள் இருவர் போத்தி-ன்னுதான் முன்னாடி கூப்பிடுவாங்க!

  • 3 செல்வராஜ் // Dec 1, 2005 at 10:23 pm

    கார்த்திக், நீங்க தான் சரியான ஆளு! முக்கியமான வரியை/கருத்தைப் பிடிச்சிருக்கீங்க! 🙂 ஒருநாளில் எல்லாம் வேலை செஞ்சுடாது. தினமும் கொஞ்சம் நடராஜ வேலை செய்யணும்ணு நினைக்கிறேன் 🙂

    அன்பு, நன்றி. எல்லாம் உங்களைப் போன்றவர்களின் தொடர்ந்த ஊக்கம் தான். போர்வையில் இருந்து போத்தி புரியுது. அதெப்படிங்க தாத்தா போத்தி ஆனார்? ஒருவேளை எப்போதும் அவருக்கென்று ஒரு அடையாளமாய் ஒரு ‘போத்தி’ இருந்திருக்கலாம் என்று காட்சி கண்முன் தோன்றுகிறது.

  • 4 தாணு // Dec 3, 2005 at 12:55 pm

    வீட்டுக்கு வீடு பில்ளைகள் ஒரே மாதிரிதானோ? ஆடுக்கு ஆப்பரேஷன் பண்ணினதைக்கூட பதிவில் போடணுமான்னு என் மகள் கிண்டல் பண்ணினாள்

  • 5 செல்வராஜ் // Dec 4, 2005 at 10:08 am

    தாணு, பிள்ளைகளின் கிண்டல் கூட ஒரு சுகம் தானே. அது சரி, ஈரோடு “மாநகரிலே” ஆடு வளர்க்கிற ஒரு டாக்டரைப் பற்றி, இல்லாவிட்டால் நாங்கள் எப்படித் தெரிந்து கொள்வதாம்? 🙂