இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

தமிழ்மணம் சிந்தனைகள் தொடர்ச்சி

October 23rd, 2005 · 13 Comments

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து இந்த விவாதத்தை நீட்டித்துக் கொண்டே இருக்க வேண்டாம் என்று தோன்றினாலும், சில கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இந்த மறுமொழிப் பதிவு. புதிய பதிவர்கள் சிலருக்கும் இது சில தெளிவுகளைத் தரலாம்.

என் பதிவைத் தூக்கி எறிந்திருந்தால் தெரியும் என்று சொல்பவருக்கு: தமிழ்மணம் தரும் விரிவான வாசகர் வட்டத்தை இழந்திருப்பேன் என்கிற வருத்தம் இருக்கும் என்றாலும், அதனால் என் வலைப்பதிவு நின்றிருக்கப் போவதில்லை. எனது எழுத்திற்கான ஆதாரண காரணத்தையோ உந்துதலையோ தருவது தமிழ்மணம் இல்லை. தமிழ்மணத்திற்கு முன்னரே எனது பதிவு இருந்தது. தமிழ்மணம் இல்லையென்றாலும் என் பதிவு இருக்கும். தினமலரிலும் கல்கியிலும் என் பதிவு பற்றி வந்தால் மகிழ்வேனே தவிர வரவில்லை என்கிற காரணத்திற்காக எழுதாமல் இருக்கப் போகிறேனா?

முப்பது பேர் மட்டுமே பதிவு வைத்திருந்த காலத்திலேயே (அப்போது பிளாக்கரில் RSS/Atom வசதிகள் கிடையாது) யார் யார் என்ன எழுதி இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்வதற்கு இருந்த சிரமத்தையும், நேர விரயத்தையும் போக்குவதற்கு ஒரு திரட்டி/வசதி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ஏங்கி அதற்காகச் சில முயற்சிகள் கூடச் செய்ததுண்டு. இன்னும் சிலரும் அத்தகைய முயற்சிகளை மேற்கொண்டனர் என்றாலும் அதற்கு முழு வடிவம் கொடுத்துச் செய்து முடித்தவர் தமிழ்மணத்துக்காரர் தான். தமிழ்மணம் ஒரு திரட்டி + சில கூடுதல் வசதிகள். அவ்வளவு தான்.


இதனை முழுவதுமாய் உள்வாங்கிக் கொண்டவர்கள் சிலரே. இன்னும் “தமிழ்மணத்தில் உறுப்பினராகி”, “தமிழ்மணத்தில் எழுதி” என்கிற தவறான புரிதல்கள் நிறையப் பேரிடம் உண்டு. இந்தப் புரியாமையே சமீபத்திய கொந்தளிப்புக்களுக்கும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது. திரட்டியில் இல்லையென்பதால் தொடர்ந்து பதிவுகளை எழுதும் யாருடைய சுதந்திரமும் பறிபோவதில்லை. எழுதுவதெல்லாம் அவரவர் வலைப்பதிவில் தான். அதற்கு அந்த வலைப்பதிவு சேவை தரும் நிறுவனங்கள் (பிளாக்கர் முதலியன) தவிர வேறு பிறரால் பங்கம் வரப்போவதில்லை. இது யாஹூ அளிப்பது போன்ற ஒரு குழுவல்ல. இங்கே வந்து எழுதாதே என்று யாரும் யாரையும் தடை செய்ய முடியாது. வேறு திரட்டிக்கு மாறிக் கொள்ள அவகாசம் இல்லை என்பதும் சரியான புரிதல் இல்லை. அவரவர் பதிவுக்கு இருக்கும் செய்தியோடை (RSS/Atom) இருக்கும் வரை எந்தத் திரட்டியை (Bloglines, SharpReader, etc) வைத்து யாரும் படித்துக் கொள்ளலாம். என் செய்தியோடையைத் திரட்டாதே என்று கூட யாரும் சொல்ல முடியாது.

வலைப்பதிவுகளுக்காகத் தான் தமிழ்மணம் இருக்கிறது. ஆனால் பலர் தமிழ்மணத்திற்காகவென்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் அது இல்லை என்றால் அதிர்வடைகிறார்கள். தமிழ்மணத்திற்காகவும் அதன் வாசகர்களுக்காகவும் மட்டும் எழுதிக் கொண்டிருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ஒரு குடும்பம் போல் இருந்தோமே, ஊர் கூடித் தேர் இழுப்போமே, என்றெல்லாம் சொல்பவர்களுக்கு (தமிழ்மணம் இலச்சினை வைத்து இணைப்புக் கொடுப்பது பற்றிய தங்கமணியின் பதிலையும் சென்ற பதிவில் கவனிக்கவும்): சில விதயங்களைத் தனியாளாகத் தான் செய்ய வேண்டியிருக்கிறது. தமிழ்மணம் போன்ற அமைப்பைத் தனியாளாக நிர்மாணிக்காமல் குழுவாய்ச் செய்திருக்கலாம் என்றால் இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த வளர்ச்சியை அடைந்திருக்க முடியாது என்பது தான் கசக்கிற உண்மை. ஆரம்ப காலத்தில் அடிக்கடி கேட்கப் படும் கேள்விகள் பட்டியல், தமிழ் வலைப்பதிவு விக்கி, அறிவியல்பதிவுகள் போன்றவற்றின் நிலையைப் பார்த்தாலே இந்த உண்மை புலப்படும். யாரையும் இதன் மூலம் குறை கூறவில்லை. நானும் கூடப் பெரிதாய் பங்களிக்கவில்லை தான்.

தமிழ்மணம் நிர்வாகத்தில் கூட மிகச்சிறிய அளவில் தான் என் பங்களிப்பும் இருக்கிறது. இருந்தாலும் கடந்த காலத்தைப் பார்க்கையில் பெரும்பான்மையான சமயம் காசி பலரது கருத்துக்களையும் கேட்டுப் பரிசீலித்தே பலவற்றைச் செய்திருக்கிறார் என்பதை அறியலாம். இந்த முறையும் அவரது நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்து கொண்டிருந்திருக்கலாம். எல்லாச் சமயங்களிலும் எல்லாரையும் திருப்திப் படுத்த முடியாது என்பதற்கு இந்த நிகழ்வுகளே சாட்சி. தணிக்கை முறை வேண்டும் என்பவர்களுக்கும், பூரண சுதந்திரம் வேண்டும் என்பவர்களுக்கும் இடையில் ஒரு கோட்டை எங்கே போட்டாலும் சிலருக்குப் பிரச்சினைகள் இருக்கத் தான் செய்யும். இதைச் சுந்தரமூர்த்தி சொல்வது போல் சனநாயக முறையில் வாக்கெடுப்பு வைத்துச் செய்வதிலும் நடைமுறைப் பிரச்சினைகள் பல எழும். அதனால் தான் நல்லது எதுவெனத் தனக்குத் தெரிந்த அளவில் காசி செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன். திரட்டி அமைப்பு, தரவுதள அமைப்பு, வாசகர் வசதி இவையெல்லாம் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று தனியாளாக அவர் நினைத்துச் செய்தது போலவே.

thamizmanam front page

பால சுப்ரா நினைப்பது போல், தனிப்பட்ட முறையில், ஒரு வாசகனாய், வலைப்பதிவனாய், தணிக்கை முறைகள் எதுவுமற்ற திரட்டியமைப்பாய் தமிழ்மணம் இருக்கலாம் என்றே நானும் நினைக்கிறேன். ஆனால் என் ரசனைக்கொவ்வாத குப்பைப் பதிவுகளின் கூட்டத்தில் சில நல்ல பதிவுகளை இழத்தல் என்பது அதற்காக நான் கொடுக்கும் விலையாக இருக்கும். அப்பட்டமான பாலியல் பதிவுகள் வேண்டாம் என்னும் இடத்தில் என் கோடு இருக்கும். அது கூடத் தணிக்க வேண்டாம் என்றும் சிலர் நினைக்கலாம். ஆனால் bazee.com காரருக்கு நேர்ந்தபடி தமிழ்மண நிறுவனர் கம்பியெண்ண வேண்டிய நிலை ஏற்பட்டால் அப்போது இப்போது சத்தமிடும் ‘இடியாப்பங்கள்’ (நன்றி: சன்னாசி) என்ன செய்ய முடியும்?

தணிக்கை எதுவுமற்ற சூழ்நிலையே idealஆக இருக்கலாம் என்றாலும் ஒரு பலக்கிய குமுகாயத்தில் அது நடைமுறைக்கு ஒத்து வராது என்றே தோன்றுகிறது. தணிக்கப்பட்டால் இந்தத் திரட்டியில் வராத சில நல்லவற்றை இழந்து விடுதல் என்கிற விலையும் இருக்கிறது என்பது ஒரு சோகம் தான். எப்படியும் ஒரு சமரசத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இருந்தும் எப்போதும் போல் நமது கருத்துக்களை முன்வைத்து இதையும் தாண்டி மேலே செல்ல வேண்டும்.

Tags: இணையம்

13 responses so far ↓

  • 1 anurag // Oct 23, 2005 at 6:53 am

    மிகச் சரி.
    தணிக்கையற்ற சூழ்நிலையை வலைப்பதிவர்களின் மனப்பக்குவத்தைப் பொறுத்தே நாம் அடைய முடியும். பாலியல் பதிவுகளை எழுதுபவர்களுடன் நாம் சமரசம் செய்து கொள்ள முடியாது எனும்போதே தணிக்கைக்கான ஆரம்பப் புள்ளி ஆரம்பித்து விடுகிறது. புள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது கோலமிடுவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது. (கோலம் என்பது பதிவுகளுக்கான எல்லைக்கோடு)

  • 2 cg // Oct 23, 2005 at 8:26 am

    i am a reader (only). The above post explains well. thank you

  • 3 Krishnamurthy // Oct 23, 2005 at 11:35 am

    Sel,
    U have clarified many things to the bloggers as well as guests like us. Hope people see the rationale behind the decision taken.

  • 4 நண்பன் // Oct 23, 2005 at 11:41 am

    பறத்தலே இன்பம் என பறந்து திரியும் பறவையாக எழுதுவதை ஒரு இன்பமாகக் கருதி எழுதினாலே போதுமானது. ஆனால் இங்கு சிலர் தங்களை முன்னிறுத்த படாத படுவதைப் போலத் தான் இருக்கிறது. பலரது கவனமும் தங்கள் மீது விழ வேண்டும் என்ற நிர்ப்பந்தம் பொருட்டே எழுதுகிறார்கள். சில பதிவுகளில் இது இருநூறு பின்னூட்டங்களைத் தொடும் இது நூறைத் தாண்டும் என்று வெளிப்படையாக ஆருடமே கூறுகிறார்கள். பலராலும் தங்கள் எழுத்துகள் வாசிக்கப்படவேண்டும் என்று ஆசை இருப்பதில் தவறில்லை. ஆனால் அது சிறந்த சிந்தனை, வலுவான மாற்றுக் கருத்துகள், தரமான எழுத்துகள் என்று பரிணமித்து பலரையும் கவரும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.

    ஆனால் பரபரப்புக்காக மட்டுமே எழுதுவேன் என்று அடம் பிடிப்பதும் வலைப்பூக்கள் என்றாலே அடிதடியில் ஈடுபடவேண்டும் என்ற தவறான புரிதலை பல புதியவர்களிடம் ஏற்படுத்தி விடுகிறது உண்மை தான். ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்க வேண்டிய அவசியமில்லை என்ற எல்லையற்ற சுதந்திரமும் என்ன வேண்டுமானாலும் எழுதிவிடலாம் என்ற தப்பான அபிப்பிராயத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. மேலும் எங்காவது குழுமங்களிலோ விவாதக் குழுக்களிலோ விவாதங்களில் மன உளைச்சல் ஏற்பட்டால் கூட அதை இங்கு வந்து உரசிப் போக்க முனையும் தன்மையும் காணப்படுகிறது.

    இந்த நிலையில் சுயதணிக்கையை எதிர்பார்த்தல் என்பது சற்றே அதிகம் தான். சுயதணிக்கையாக தங்கள் பதிவுகளை வைத்திருப்பவர்கள் ஆரம்பம் முதலே அப்படித்தான் இருந்திருப்பார்கள். இனிமேல் தான் அவர்கள் சுயதணிக்கையை ஏற்றுக் கொள்வார்கள் என்றில்லை. அதேபோல ஒரு படபடப்புக்காக, ஒரு கவன ஈர்ப்புக்காக, ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக எழுதுபவர்கள் அன்றும் இன்றும் என்றும் அப்படியே தான் இருப்பவர்கள். அவர்களை இந்த புதிய நடவடிக்கைகள் கட்டிப் போடுமா என்பது கேள்விக்குறியே… புதிய புதிய பெயரில் வந்து குழப்பத்தான் செய்வார்கள்.

    சில குறைந்தபட்ச கட்டுப்பாடுகளும் வழிகாட்டிகளும் நியமங்களும் இருக்கத்தான் வேண்டும். பேச்சு சுதந்திரம் கருத்து சுதந்திரம் என்பவர்கள் முதலில் தன் சக மனிதனின் சுதந்திரங்களைப் பேண கற்றுக் கொள்ளட்டும்.

    உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.

    வெற்றி கிட்டட்டும்….

  • 5 M. Sundaramoorthy // Oct 23, 2005 at 12:52 pm

    //ஆனால் bazee.com காரருக்கு நேர்ந்தபடி தமிழ்மண நிறுவனர் கம்பியெண்ண வேண்டிய நிலை ஏற்பட்டால்//
    செல்வராஜ்,
    இதே போன்ற வேறொரு சந்தேகம் கடந்த சில நாட்களாகவே எனக்கும் ஏற்பட்டது. அதைப் பொதுவில் எழுத விருப்பமில்லாததால் வேறொரு சந்தர்ப்பத்தில் தனிப்பட்ட முறையில் கேட்டுத் தெளிந்துகொள்ளலாம் என்றிருந்துவிட்டேன்.

  • 6 ravisrinivas // Oct 23, 2005 at 2:06 pm

    //ஆனால் bazee.com காரருக்கு நேர்ந்தபடி தமிழ்மண நிறுவனர் கம்பியெண்ண வேண்டிய நிலை ஏற்பட்டால்//

    It need not happen in the same way or same context. If some post contains obnoxious or
    libellous matter tamilzhmanam is not responsible
    but such posts may create problems for the feed
    provider.when the it act was passed blogging was
    not in the scence.but with recent cases and examples from usa regarding blog posts and
    the responsibility for the posts there is need
    for clarification in the indian context.
    A precautious approach is better.I think
    that this can be one of the reasons for the
    decision taken by Kasi. Perhaps he does not
    want to talk about it as people may find
    it too scary.

  • 7 padma arvind // Oct 23, 2005 at 5:38 pm

    செல்வராஜ்:
    அரசு வழக்கறிஞருடன் பேசிக்கொண்டிருந்தபோது தனிநபர் தாக்குதல் பின்னூட்டம் ஒன்றை குறித்து தற்போது உளவு வேலையில் ஈடுபட்டிருப்பதாக கூறி வலைபதிவுகள் பற்றியும் இது எப்படி சைபர் குற்றமாகும் என்றும் சொல்லி கொண்டிருந்தார். அப்போது சில திரட்டிகள் குறித்தும் பேச்சு வந்தது. தமிழ் பலருக்கு புரியாத மொழி என்பதால், மொழிபெயர்த்தல் என்றெல்லாம் பிரச்சினை. இப்போது தனிப்பட்ட சில பேர் அடையாளம் காட்டும் போது, உளவு துறைக்கு இது எளிது.

  • 8 Kannan // Oct 24, 2005 at 12:10 am

    செல்வா,

    உங்களின் இந்தப் பதிவுகள் மூலம் பல விஷயங்களில் ஒரு தெளிவு பிறந்திருக்கிறது.

    நன்றி

  • 9 மனிதன் // Oct 24, 2005 at 7:53 pm

    /but such posts may create problems for the feed
    provider/

    இது இந்திய, அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் மற்றும் அமெரிக்காவில் அங்கிகாரம் வழங்கப்படாத தேசியங்களுக்கு பொருந்துமா?

  • 10 செல்வராஜ் // Oct 24, 2005 at 9:07 pm

    அனைவரது கருத்துக்களுக்கும் நன்றி. மனிதன், உங்கள் கேள்விகளுக்கு என்னிடம் விடை இல்லை.

  • 11 துளசி கோபால் // Oct 25, 2005 at 3:46 pm

    செல்வராஜ்,

    விளக்கத்துக்கு நன்றிங்க.

    தணிக்கை, சுயக்கட்டுப்பாடு போன்றவைகளைப் பொறுத்தவரை
    ‘திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ கதைதான்.

    எதுவா இருந்தாலும், எப்படி இருந்தாலும் எழுதறவுங்க எழுதிக்கிட்டே இருப்பாங்கதான்.
    தேடிப் படிக்கறது அவுங்கவுங்க விருப்பம்.

    நீங்க சொன்னது முற்றிலும் சரி.

  • 12 s.Murugeshan // Jul 14, 2010 at 3:17 am

    தமிழ்மணம் தடை

    என் எழுத்துக்களை ஆபாசம் என்று குற்றம் சாட்டி என் வலைப்பூவை தமிழ் மணம் தடை செய்துள்ளது. இதுவரை தமிழ் மணம் திரட்டிய என் பதிவுகளில் இல்லாத ஆபாசமா? உண்மைகாரணம் பிரபாகரன் உயிரோடிருக்கிறார் என்று ஜோதிடரீதியாக நான் எழுதிய பதிவுதான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறேன்

  • 13 இரா. செல்வராசு // Jul 14, 2010 at 8:58 am

    முருகேசன், தமிழ்மணம் நடவடிக்கைக்கு தமிழ்மணம் பதிவிலோ, மின்னஞ்சலிலோ கேளுங்கள். இது சரியான இடமல்ல.

    இதுவரை திரட்டிய உங்கள் பதிவில் இல்லாத ஆபாசமா என்று நீங்களே ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள். அத்தகு இடுகைகளைத் திரட்டுவதில்லை என்னும் தமிழ்மணம் கொள்கையை மதிக்க வேண்டுகிறேன். அதை ஏற்று எழுதுங்கள். இல்லையேல் இத்தகைய முடிவை ஏற்றுக் கொள்ளுங்கள்.