இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

ஜெர்மனிப் பக்கங்கள் – 2

October 7th, 2005 · 1 Comment

DE2 Ladenburgமான்ஹைம் தவிர அருகே இருக்கிற ஹைடல்பர்க், லாடன்பர்க் என்னும் சிறு நகரங்களுக்கும் சென்றிருந்தேன். இந்த மூன்று ஊர்களும் ரைன், நெக்கர் என்னும் இரு நதிகளின் கரைகளில் அமைந்திருக்கின்றன. ஆற்றங்கரையை இங்கே அழகாகப் பயன்படுத்துகின்றனர். இம்மூன்றையும் இணைக்கும் பொது வாகன வசதி இங்கு நன்றாக இருக்கிறது. ரயிலோ, பேருந்தோ, டிராம்வண்டியோ ஏறிச் சுற்றி வந்துவிடலாம். அப்படிச் சுற்றி வந்த ஒரு ஞாயிற்றுப்பொழுதில் ஒருபுறம் தெரிந்த மலைத்தொடர்க் காட்சிகள் அருமை. உள்ளேயோ ஜெர்மனின் வயதான குடிகளின் தொண தொணப் பேச்சு. ஊரெல்லாம் பயங்கர அமைதியாய் இருந்தது. இங்கு மட்டும் இப்படி என்ன பேச்சு? ஒரு சீக்கியடித்து “அமைதி” என்று கத்தலாம் போல் ஒரு கண எண்ணம் எழுந்து அமிழ்ந்தது.

ஹைடல்பர்க் ஒரு ஆறும், அதன் இருபுறங்களை இணைக்கும் பாலங்களும், மலையும், அதன் உச்சியில் இடிந்த பழங்காலக் கோட்டையும், இருக்கிற ஊர். ஒரு பல்கலைக்கழகமும் பிரதானமாய் இருப்பதால் இளைய சமுதாயம் அதிகம் நிறைந்திருக்கிற இனிய ஊர். நண்பரோடு இங்கு சென்று வந்ததன் தாக்கத்தில் எழுந்த ஜெர்மன் கிராமத்தினளின் நேரிலிக் கதை இங்கே. ரோட்டோரத்தில் ஒரு இரும்புக் குதிரைப் படத்தை அங்கே பார்க்கலாம்.

DE2 Ladenburg Stone Road DE2 Ladenburg Street

இந்த மூன்று ஊர்களில் சிறியது லாடன்பர்க். இதன் நகர மையம் பழங்கால ரோமானியக் கட்டிடங்களும் கற்சாலைகளும் நிறைந்து அழகாக இருக்கிறது. விதம் விதமான சிற்பங்களும் (அதில் சில நவீன வகை) நிறைய இருக்கிறது. குறுகிய வளைந்த தெருக்களில் உணவகங்களும் மக்கள் குழுமும் இடங்களும் நிறைந்திருக்கின்றன. இங்கும் நிறையப் பூச்செடிகளும் பூச்சாடிகளும் வண்ணங்களையும் அழகையும் கூட்டுகின்றன.

DE2 Ladenburg Statue2 DE2 Ladenburg Statue3
DE2 Ladenburg Statue4 DE2 Ladenburg Statue1

மையப் பகுதியின் தெருக்களை விட்டு வெளியே வந்தால் ஒரு புறம் ஆற்றங்கரையும் பூங்காவும் ஊருக்கு எல்லைகளாக இருக்கின்றன. கலங்கரை விளக்கம் ஒன்று வெள்ளை சிவப்புப் பாவாடை அணிந்திருந்தது. கருமேகங்களுக்குள் கதிரவன் மறையும் காட்சி அன்று மாலை கொள்ளையழகாய் இருந்தது.

DE2 Ladenburg Lighthouse DE2 Ladenburg Sunset

இரண்டு கதவுகள் மட்டுமே இருந்த பொட்டிக் கார் ஒன்றும் கண்டேன். Parallel Parking என்று ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக நிறுத்துவதற்குச் சற்றுப் பயிற்சி வேண்டும். அமெரிக்க ஓட்டுரிமத் தேர்வில் சிக்கலான விதயம் இது தான். இந்தப் பொட்டிக் கார் இருந்தால் அப்படியான நிறுத்தத்திற்கு மிகவும் வசதி. அப்படியே நேரே கொண்டு நிறுத்தி விடலாம். சதுரமாகத் தானே இருக்கிறது. நேரே நிறுத்தினால் என்ன? குறுக்குவாக்கில் நிறுத்தினால் என்ன?

Car

கார், ஜெர்மனி இரண்டையும் ஒரு சேரப் பார்ப்பவர்களுக்கு பி.எம்.டபிள்யூ (BMW) நினைவுக்கு வரலாம். நினைக்க வேண்டிய இன்னொரு பெயர் பென்ஸ். பென்ஸ் கம்பெனியின் நிறுவனரான கார்ல் பென்ஸின் சொந்த ஊர் இந்த லாடன்பர்க் தானாம். அவர் இங்கு வாழ்ந்த வீட்டை இன்னும் காத்து வைத்திருக்கிறார்கள். எதாவது காட்சியகம் கூட இருந்திருக்கலாம். அமெரிக்கர்களைக் கேட்டால் ஃபோர்டு தான் மோட்டார் காரைக் கண்டுபிடித்தவர் என்பார்கள். இங்கோ பென்ஸ் தான் கண்டுபிடித்தார் என்று கூறுகிறார்கள்.

ஜெர்மனியிலும் ஆங்கிலப் புழக்கம் வெகு குறைவு. மக்கள் பெரும்பாலும் தமது தாய்மொழியான ஜெர்மனிலேயே தான் பேசிக் கொள்கிறார்கள். நிறையப் பேருக்கு ஆங்கிலம் தெரியாது என்பது தான் உண்மை. தங்கியிருந்த விடுதிக் காப்பாளர் மகளுக்கு மட்டுமே ஆங்கிலம் தெரியும் என்பதால் எனக்கு எதாவது வேண்டுமென்றால் அவர் இருக்கும் போது தான் போய்க் கேட்க வேண்டும். வேற்றுமொழியார் உடனிருக்கிறார் என்கிற தயக்கம் கூடச் சில சமயங்களில் அவர்களிடத்தே இருப்பதில்லை. ஒருகாலத்தில் அது போன்ற சூழலில் பொதுவான மொழியில் பேசுவது தான் நாகரிகமான செயல் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அவ்வெண்ணத்தில் இப்போது எனக்கு உறுதி குறைகிறது. பொதுமொழியில் பேசுவது நலந்தான். ஆனால் சிறுபான்மையருக்காக அவர்கள் சுயமொழியை விட்டுக் கொடுக்கவேண்டுமா? பிறர் முன் தமிழர்கள் இருக்கிற இடத்தில் ஓரிரு முறைகள் தமிழில் பேச நேர்ந்தால் குறைந்தபட்சம் குற்ற உணர்ச்சி கொள்ளாமலாவது இருக்கலாமோ?

ஜெர்மானியர் மொழிக்கு முக்கியத்துவம் தருபவர்கள் போலும். அது அவர்களது மொழிக்கு மட்டுமல்ல, அடுத்தவர் மொழியானாலும் சரி. தமிழகத்திற்கு வந்து வீரமாமுனிவராகித் தமிழிலக்கியத்தில் தனியிடம் பெற்ற பாதிரியார் ‘செருமானியர்’ என்று பள்ளியில் படித்ததாய் ஞாபகம். கூகுளித்தால் அவர் இத்தாலியர் என்று வருகிறது. தெரியவில்லை. ஜெர்மன் விமானமாகிய லுப்தான்ஸாவில் திரும்பும் வழியில் வளியூர்தியிதழைப் புரட்டியபோது கண்ணில் பட்டது தமிழ். சென்னைக்குச் செல்லும் விமானத்தில் தமிழ்ப்படம் காட்டுகிறார்கள் என்று அது பற்றிய விவரத்தைத் தமிழிலேயே அச்சிட்டிருந்தார்கள். ஏர் இந்தியாவில் கூட நான் இப்படிப் வசூல்ராஜா எம்பிபிஎஸ்-ஐயும் மகாலட்சுமி மகன் சரவணனையும் பார்த்ததில்லை.

Lufthansa Kumaran Lufthansa Vasoolraja

சென்னைத் தூதரகத்தில் நுழைமதிக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களிடம் ஜெர்மன் மொழி தெரியுமா என்று இந்திய நங்கை ஒருவர் அதட்டலாய்ச் சோதித்துக் கொண்டிருந்தது கூட ஏன் என்று புரிகிறது.

DE2 Statue5

Tags: பயணங்கள்

1 response so far ↓

  • 1 U.P.Tharsan // Oct 7, 2005 at 3:42 am

    //கார், ஜெர்மனி இரண்டையும் ஒரு சேரப் பார்ப்பவர்களுக்கு பி.எம்.டபிள்யூ (BMW) நினைவுக்கு வரலாம்.//

    அதுமட்டுமா? கோல்வ்,அடுத்து Sportscar போர்சே என்பனவும் ஜெர்மனுடையதுதான் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.