இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

காவிரியாட்டம்

October 3rd, 2005 · 13 Comments

சுமார் மூன்றடிக்கு மூன்றடி அளவில் அமைந்திருக்கும் ஒரு தொட்டியின் முன் நண்பரோடு சம்மணங்காலிட்டு அமர்ந்திருந்தேன். மூன்று அல்லது நான்கு அடி ஆழமிருக்கும் என்று கணித்த அந்தத் தொட்டியில் தண்ணீர் நிறைந்திருந்தது. அதில் மிதந்து கொண்டிருந்த வண்ண வண்ணப் பூக்களில் ஓரமாய் ஒதுங்கி இருந்த செம்பருத்தியை எனக்கு அடையாளம் தெரிந்தது. ஒரு கணம் முன்பு கொட்டப்பட்ட சிறு மஞ்சளும் குங்குமமும் மெல்லப் பரவிக் கொண்டிருந்தன.

Thala Kaveri 1

என் இடது கையில் ஒரு ஒடுங்கிய வெண்கலத் தட்டு. இது நாள் வரை அது பல கைகளைப் பார்த்திருக்க வேண்டும். அதனோரத்தில் இருந்த சிறிய தட்டில் குவிந்திருந்த குங்குமத்தைப் பெருவிரல், ஆட்காட்டி விரல் மற்றும் நடுவிரலால் எடுத்து, எதிரில் இருந்தவர் எனக்குப் புரியாத மொழியில் ஏதோ சொல்லிச் சுவாஹா என்று முடிக்கையில், பெரிய தட்டில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கொண்டிருந்தேன். மனைவி கையால் ஒரு தேக்கரண்டி தண்ணீரை என் உள்ளங்கையில் ஊற்ற அதைக் கீழே அவர் சொன்ன இடத்தில் வார்த்து விட்டேன்.

Thala Kaveri 2மந்திரம் சொன்னவர் கேட்பவர்களுக்கெல்லாம் சிறிதும் சலித்துக் கொள்ளாமல் நீரை மொண்டு ஊற்றிக் கொண்டிருந்தார். புட்டிகளிலும் கூஜாக்களிலும் பலர் வாங்கிச் சென்று கொண்டிருக்க, உடன் வந்த நண்பர் ஒரு பத்து லிட்டர் நெகிழி டப்பாவை நீட்டியதை நானே ஒரு தயக்கத்துடன் பார்த்தேன். அவரோ முகச் சுழிப்பேதுமின்றி ஊற்றிக் கொடுத்தார்.

அள்ள அள்ளக் குறையாத அந்தத் தண்ணீர் தான் காவிரியின் தொடக்கம் என்றார்கள். தலைக்காவிரி என்று பெயர். இங்கு தொடங்கும் இதன் பயணம் சுமார் 800 கிலோமீட்டர் தொடர்ந்து, கே.ஆர்.எஸ் மேட்டூர் அணைகளில் தேங்கி, சில சமயங்களில் சண்டை சச்சரவுகளுக்குக் காரணமாகி, இறுதியாகப் பூம்புகார்க் கடலில் முடிகிறது.

“பாத்தியா… இந்தத் தொட்டித் தண்ணி தான் எப்டி எப்டியோ எங்க எங்கியோ போய், நம்ம பள்ளிபாளையத்துக்கெல்லாம் வருது!” என்றார் நண்பர். தானாய் வருகிற தண்ணீரைப் புட்டியில் அடைத்துக் காரில் எடுத்துப் போகிறவர்.

“இது புனித இடமப்பா” என்றார். சரி என்று கேட்டுக் கொண்டேன். “போன தடவ வாங்கிட்டுப் போனது இன்னும் வெச்சிருக்கோம். அப்படியே இருக்கு”. திரும்பிய போது பயண அசைவில் தளும்பிய நீர் சிற்றுந்திற்கும் புனிதத்தை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தது.

இந்த வருடம் பெய்த நல்ல மழையில் பள்ளிபாளையக் காவிரியில் நீர் நிறைந்து கரை புரள(?) ஓடியதை முன்வார ஈரோட்டுப் பயணத்தின் போது ரயில் சாளரத்தின் வழியாகப் பார்த்தது நினைவுக்கு வந்தது. விரைந்தோடும் காவிரியில் நீராடக் குதித்தபடி சிலர். வேடிக்கை பார்த்தபடி தொலைவில் ரயில்பயணிகளுக்குக் கையசைத்தபடி சிலர். இந்த முகம் தெரியாத கையசைப்புக்கள் எனக்கும் உற்சாகம் தருகின்றன என்பதை மட்டும் சொல்லிவிட்டு மீண்டும் தலைக்காவிரிக்கு வந்துவிடுவோம்.

தலைக்காவிரி நிமிடங்களில் மாறி விடும் பருவநிலை உடையது என்பதை நேரில் அனுபவித்தோம். சிறு மழை, வெய்யல், மூடுபனி எல்லாவற்றையும் அங்கிருந்த சிறு நேரத்தில் கண்டோம். மேற்சொன்ன சிறு தொட்டியை ஒட்டிச் சற்றுப் பெரிய குளம். இறங்கச் சில படிகள். முதல்படியில் சிறிதாய் ஒரு நந்தி. யாரோ பாம்பு பாம்பு என்று சொல்லிவிட்டுப் போக, நாங்களும் சிலரும் சற்றே தேடிப் பார்த்துவிட்டு “ஒண்ணையுங் காணோம்” என்றோம். குளத்தினுள் சிறு சிறு மீன்கள் துள்ளிக் கொண்டிருந்தது தெரிந்தது. மீனைப் பார்த்துத் தான் பாம்பு என்று நினைத்து விட்டார்கள் போலும் என்று எண்ணிக் கொண்டு நானும் நண்பரும் அந்தச் சில்லென்றிருந்த நீரில் முங்கப் போனோம். புனித நீரில் முழுக்குப் போடப் போன எங்களின் அழுக்கு உடைகள் சுமந்தபடி சகதர்மினிகள் கரையில் புனிதம் சேர்த்துக் கொண்டார்கள்.

முதல் முழுக்கு வரை தான் குளிர். அதன் பிறகு பல முறை முங்கி எழுந்தோம். பிரச்சினையில்லை. காலை முத்தமிட மீனோ பாம்போ வருமோ என்று சாதாரணமாகச் சந்தேகித்திருப்பேன். அன்று ஒன்றும் தோன்றவில்லை. இடுப்பளவு நீரில் ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு நடந்து சென்ற எங்கள் மீது ஒரு குண்டாவில் நீர் மொண்டு மூன்று முறை ஊற்றினார் அர்ச்சகர். துணி மாற்றி விட்டு வந்த பின் பூஜை என்று அனுப்பி வைத்தார்.

லேசாக வழுக்கி விடும் வகையில் இருந்த படிகளில் நாங்கள் கவனமாய் ஏறினோம். குறைந்தது இரண்டு பேராவது அதற்குள் வழுக்கி உள்ளே விழுந்து கொண்டிருந்தார்கள். வழுக்கி விழுந்த ஒரு மொட்டைப் பையனைத் தூக்க அதிரடியாய்க் கைப் பையோடு உள்ளே குதித்த பெரியம்மா வெளியே வந்து தெலுங்கில் ஏதோ திட்டியபடி நன்றாகச் சாத்தினார்கள். பாவம் அவன் நீரில் விழுந்ததை விட நேரில் பட்ட அடி தான் அதிகமாயிருக்கும்.

திரும்பி வர எத்தனிக்கையில் தூரத்தில் கடைசிப் படிச் சந்தொன்றில் தலையை நீட்டியபடி அந்தப் பாம்பு அசையாதிருந்தது. நான் பார்த்த போது நாக்கை நீட்டியது.

* * * *

தலைக்காவிரியில் சுரக்கும் நீர் மீண்டும் உள்சென்று பிறகு எங்கோ தான் மீண்டு வெளி வருகிறதாம். மூன்று ஆறுகள் கலக்கும் இடம் பாகமண்டலா என்று கீழே ஒரு ஊர் இருக்கிறது. அங்கு கூட இரண்டு ஆறுகளைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. மூன்றாவது எது எங்கே என்று கேட்கையில் அது காவிரி தான் அது இன்னும் கீழே தான் (மறைமுகமாக) இருக்கிறது என்று பதில் கிடைத்தது. கண்ணில் தெரிந்த இரண்டு ஆறுகள் சேரும் இடம் பார்க்க அழகாக இருந்தது. ஆழ்ந்து நோக்கினால் அந்த ஆறுகள் சேரும் நேரிலிக் கோட்டைக் கண்டுகொள்ள முடிந்தது. ஒவ்வொரு வினாடியும் அது எப்படி மாறுகிறது என்றும் பார்க்க முடிந்தது.

பாகமண்டலாவில் பாகண்டேசுவரர் கோயில் வித்தியாசமான அமைப்பு முறையில் இருந்தது. கேரள முறையில் இருக்கிறது என்றார் நண்பர். எல்லாக் கோபுரங்களிலும் நான்கு மூலையிலும் பாம்புச் சிற்பம் இருந்தது.

Bagandeeswar, Bagamandala

“கன்னடமா?” என்று கேட்டு ஏதோ சொல்ல ஆரம்பித்த அர்ச்சகர், “தமிழ்” என்று கூறியதைக் கேட்டுத் தன் மொழியை மாற்றிக் கொண்டதோடு விளக்கமாய்ச் சொன்னார். “இது சிவன் கோயில். கீழ பாருங்கோ லிங்கம். இது பார்வதி” என்று சொல்லித் தீபாராதனை காட்டினார். ஐந்து ரூபாய்க்குக் கிடைத்த பிரசாதம் எனக்குப் பிடித்த ஒன்று. தேங்காய், பொட்டுக் கடலை, சர்க்கரை இவற்றை இடித்துக் கூடச் சிறிது எள் முதலியனவும் கலந்து கிடைத்தது நன்றாக இருந்தது.

“இங்கு வந்தபின் தான் தலைக்காவிரி செல்ல வேண்டும்” என்றார் இன்னொரு அர்ச்சகர்.

இது பாவத்தைக் களையும் இடமாம். முதலில் இங்கு வந்து பாவத்தைக் களைந்து கொண்டு பிறகு தலைக்காவிரியில் முங்கிப் புனிதம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். அதனால் என்ன? முதலில் நாங்கள் புண்ணியம் சேர்த்துக் கொண்டு அதற்குப் பிறகு பாவத்தைத் தொலைத்தோம் என்று வைத்துக் கொள்ளலாம் என்று வந்துவிட்டோம். எங்களைப் போன்றே இன்னும் பலரும் தலைக்காவிரியில் இருந்து இங்கு வந்திருந்து பாவ புண்ணியக் கணக்கைத் தலைகீழாகப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

Raja Seat, Coorg

மலைப்பாதையில் கீழே இறங்கும் வழியில் அருங்காட்சி ஒன்று பார்க்கும் இடத்தில் நின்று பார்த்துப் படம் எடுத்துக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ வந்த நாய் ஒன்று பாவமாய்ப் பார்த்தது. இன்றோ நாளையோ என்று நாட்களை எண்ணும் வயதான ஒன்று. கண்ணில் கூட ஏதோ நோய் வந்திருக்க வேண்டும். பூஞ்சை அடைந்து கிடந்தது. நண்பர் போட்டதோடு சேர்ந்து நானும் ஒரு ரொட்டித் துண்டு போட்டுவிட்டு வந்தேன். பாவமோ புண்ணியமோ ஒருவேளைப் பசியாவது ஆறட்டும்.

மற்றபடி திரும்பிப் பார்த்தேன். கூட்டிச் சென்ற எதையும் தொலைக்கவில்லை. கூடவே தான் வருகின்றன பின்னிருக்கையில் சத்தமிட்டபடி! 🙂

Nisarga Dhama Bridge

Tags: பயணங்கள்

13 responses so far ↓

  • 1 Thangamani // Oct 3, 2005 at 4:42 pm

    //கூட்டிச் சென்ற எதையும் தொலைக்கவில்லை. கூடவே தான் வருகின்றன பின்னிருக்கையில் சத்தமிட்டபடி! //

    நல்ல பகிர்வு. உங்களுக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் (குடலில்) ஒரிரு நாட்கள் தங்கி அதன் அமைதியை அனுபவிக்கவேண்டுமென்றால் Honey Valley க்கு ஒரு முறை போய் வாருங்கள். அமைதியான, நல்ல தங்குமிடம்.

  • 2 செல்வராஜ் // Oct 4, 2005 at 3:30 am

    நன்றி தங்கமணி. நாங்கள் Capital Village என்றொரு இடத்தில் தங்கினோம். அதுவும் நன்றாக இருந்தது. ஆனால் அதிக நேரம் இருக்க முடியவில்லை. இன்னொரு முறை செல்ல இயலாது என்று எண்ணுகிறேன். மங்களூர் பக்கமாக ஏதேனும் யோசனைகள் இருந்தால் சொல்லுங்கள். அடுத்த வாரம் இரண்டு நாட்கள் திட்டம் இருக்கிறது.

  • 3 தாணு // Oct 4, 2005 at 12:39 pm

    இந்த பள்ளத்தாக்குதான் தலைக்காவிரியின் ஆரம்ப ஸ்தானமா?

  • 4 செல்வராஜ் // Oct 4, 2005 at 1:01 pm

    ஆமாங்க தாணு. இது குடகு மலைப் பள்ளத்தாக்கு. மடிக்கேரி என்னும் ஊரில் இருந்து எடுத்த படம். அங்கிருந்து சுமார் ஒன்றரை மணி நேரப் பயணத்தில் தலைக்காவிரி.

  • 5 aruL // Oct 4, 2005 at 1:24 pm

    மங்களூர்ப் பக்கம் கோயிலா? தவறாமல் தர்மஸ்தலா போய் வாருங்கள். ஜைனர் நடத்தும் சிவன் கோயில். இலவச இடம், முதலில் ரசம் அப்புறம் சாம்பார் புழுங்கல் அரிசி இலவச சாப்பாடு என்று வித்தியாசமாக இருக்கும். இங்கே போக எனக்கு எப்போதும் பிடிக்கும். பக்கத்திலேயே குக்கே சுப்ரமண்யாவும். போய்விட்டு வந்து எழுதுங்கள். எங்களுக்கு படிக்க ஜாலி.
    -அருள்

  • 6 selvanayaki // Oct 4, 2005 at 2:01 pm

    நல்ல புகைப்படங்கள் மற்றும் அனுபவப்பகிர்வு. இந்தியாவில் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் இருந்தும் இதுமாதிரி இடங்களில் சில நாட்களைக்கூடச் செலவழிக்க முடியாதுபோன ஏக்கம் உங்களின் இப்பதிவைப் படித்தபின்பு எனக்கு அதிகமாகிறது. உங்களின் ஈமெயில் முகவரியைத் தொலைத்துவிட்டேன் செல்வராஜ். உங்களின் தந்தையைச் சந்தித்த அனுபவம் பற்றி மடலிட எண்ணிக்கொண்டிருந்தேன். உங்கள் mail ID வேண்டும்.

    மு.கு (முக்கியமான குறிப்பு):- ஈரோடு புத்தகக் கண்காட்சியில் என் உரை நிகழ்வு பற்றியும், என் “பனிப்பொம்மைகள்” கவிதைநூல் வெளியீடு பற்றியும் நீங்கள் எழுதிய பதிவுகளை அமெரிக்கா திரும்பிவந்த இவ்வாரத்தில்தான் படித்தேன். நன்றி செல்வராஜ் உங்களுக்கும் அப்பதிவுகளில் எனக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கும் நம் நண்பர்கள் அனைவருக்கும்!!

  • 7 padma arvind // Oct 4, 2005 at 5:43 pm

    செல்வராஜ்
    தர்மஸ்தாலா மறக்காமல் போய் வாருங்கள். போகும் வழியெல்லாம் இயற்கையின் அத்தனை அழகும் கொட்டி கிடக்கும்.
    முடிந்தால் சிருங்கேரி போனால், குழந்தைகள் துங்கபத்ரா நதியில் மீன்கள் துல்ளி வரும் போது ரசிப்பார்கள்.
    அருள்: எனக்கும் அந்த சோறும் சாறும் (ரசம்?)பிடித்திருந்தது

  • 8 Ramya Nageswaran // Oct 4, 2005 at 9:25 pm

    அனுபவமும்,படங்களும் நல்லா இருக்கு செல்வராஜ். சமீபத்தில் என் கணவர் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வந்தார். மங்களூரிலிருந்து 2 மணி நேரப் பயணம். வழி மற்றும் கோவில் எல்லாம் நன்றாக இருந்ததாக சொன்னார்.

  • 9 arul // Oct 4, 2005 at 9:42 pm

    பத்மா:
    இரண்டும் சிவப்பாக இருக்கும். இரண்டும் நீர் போல இருக்கும். இரண்டிலும் தேங்காய் அரைத்து விட்டிருப்பார்கள். எது சாரு(ரசம்), எது சாம்பார்?. இரண்டுமே அந்தப் பாக்கு மட்டையில் சாப்பிடும்போது சுவையாகத்தான் இருக்கிறது. நல்ல ஊர்.

    செல்வராஜ்: சக்லேஸ்பூரில் (சகல ஈச புரம்) இருந்து முற்றிலும் மலைப்பாதை. பகலில் சென்றால் நன்றாக அநுபவிக்கலாம். தானே வண்டியை செலுத்தினால் இரவைத் தவிர்ப்பது நலம். வழியறிந்த ஓட்டுனர் இருந்தாலும் சரியே. முதல்நாள் இரவே ஹாஸன் சென்று தங்கி அதிகாலையில் கிளம்பினால் இன்னும் நல்லது. திரும்பி வரும்போது பேலூர், ஹளேபீடு ஒரு சுற்று. மூன்று நாள் பயணமாக இருந்தால் அவசரமில்லாமல் இருக்கும்.
    அருள்

  • 10 Kannan // Oct 4, 2005 at 11:31 pm

    // எங்களுக்கு படிக்க ஜாலி. //
    உண்மை!!!

    ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா வரிசையில் இப்போது தென்னிந்தியாவும் சேர்ந்துகொண்டது. உங்கள் பயணக் கட்டுரைகளை ‘சிருங்கேரியிலிருந்து ஹங்கேரி வரை’ என்று புத்தகமாய் வெளியிட்டால் எனக்கொன்று (சலுகை விலையில்) இப்போதே முன்பதிவு செய்து வைக்கிறேன் 🙂

    // இந்த வருடம் பெய்த நல்ல மழையில் பள்ளிபாளையக் காவிரியில் நீர் நிறைந்து கரை புரள(?) ஓடியதை முன்வார ஈரோட்டுப் பயணத்தின் போது ரயில் சாளரத்தின் வழியாகப் பார்த்தது நினைவுக்கு வந்தது. //

    நானும் பார்த்தேன் செல்வா – மனதுக்கு நிறைவாக இருந்தது!

  • 11 செல்வராஜ் // Oct 5, 2005 at 12:27 am

    அருள், பத்மா, ரம்யா, தகவல்களுக்கு நன்றி. அடுத்த வாரப் பயணத்திற்குப் பயனுள்ளதாய் இருக்கும். எல்லாமே கோயில் குளமாய் இருக்குமோ என்று சிறு தயக்கம் இருந்தது. ஆனால் நீங்கள் சொல்வதை எல்லாம் பார்க்கும் போது மிகவும் நன்றாக இருக்கும் போலிருக்கிறது. எப்படியும் உடன் வரும் இரு நண்பர் குடும்பங்களுடன் நேரம் செலவிட இது ஒரு வாய்ப்பு என்பதால் வேறேதும் ஆட்சேபங்கள் இல்லை.

    ரம்யா, வழி நன்றாக இருக்கிறது என்பது உபயோகமான தகவல். நல்ல சுற்றுலாத்தலங்களாக இருந்தும் மைசூர் மடிக்கேரி தலைக்காவிரிச் சாலைகள் ஏன் இன்னும் சீராக இல்லை என்பது எனக்குப் பெருங் கேள்வியாக இருந்தது.

    அருள், நானாவது ஓட்டுவதாவது. அந்த அளவு தைரியம் இன்னும் இங்கு வரவில்லை. நண்பரோ (ஊர் தெரிந்தவர்) அல்லது வேறு மூன்றாம் ஓட்டுனரோ வைத்துத் தான் செல்லத் திட்டம். சிறுசுகள் நான்கை வைத்துக் கொண்டு மூன்று நாள் அலைச்சல் சுகப்படுமா தெரியவில்லை. அதனால், சில இடங்களை (ஹளபீடு, பேலூர்…) இன்னொரு முறை பார்த்துக் கொள்ளலாம் என்றும் ஒரு எண்ணம். முதலில் ரயிலில் செல்ல எண்ணம் இருந்தது. ஏதோ செப்பனிடும் பணியால் ரயில்கள் எல்லாம் அந்த வழியில் ரத்து என்று அறிந்தோம்.

    பத்மா, நீங்கள் சொன்ன ‘துங்கபத்ரா நதியும் துள்ளும் மீன்களும்’ (அட பதிவுக்கு நல்ல தலைப்பா இருக்கும் போலிருக்கே:-)) ஈர்க்கின்றன. நன்றி. (பாக்கு மட்டைச் சாப்பாடு, சாறு, சாம்பாரு இவை கூடத் தான் ஈர்க்கின்றன!).

    செல்வநாயகி, வாருங்கள். நன்றி. நீண்ட விடுப்பிற்குப் பிறகு மறுபடியும் உங்களை இணையத்தில் சந்திக்கலாம். முகவரியை அனுப்புகிறேன். இது போன்ற இடங்கள் இல்லையென்றாலும் நீங்கள் வேறு வகைகளில் மும்முரமாய் இருந்தீர்களே. அடுத்த முறை சுற்றினால் போச்சு விடுங்கள். நீங்கள் சொன்ன அந்தத் தாராபுரம்-பொள்ளாச்சி பக்கம் சென்று வரலாம் என்று எனக்கு ஒரு எண்ணம் இருக்கிறது.

    கண்ணன், உங்கள் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் நன்றி. இந்த மாதிரி இன்னும் ரெண்டு பேர் தெரியாமல் சொல்லிவிட்டீர்களானால் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டாலும் ஏற்படலாம். அப்புறம் புத்தகத்தை வாங்கியே ஆக வேண்டும். கவனமாய் இருங்கள் :-).

  • 12 Alex Pandian // Oct 5, 2005 at 1:17 am

    செல்வராஜ்,

    KSTDCயின் 4 நாள் பேக்கேஜ் டூரில் (ஒருவருக்கு சுமார் 1250 ரூபாயில்) வியாழன் இரவு கிளம்பி, ஹொரனாடு (அன்னபூர்ணேஸ்வரி), சிருங்கேரி, கொல்லூர்,உடுப்பி, மங்களூர், தர்மஸ்தலா, குக்கே சுப்ரமண்யா போன்ற இடங்களுக்கு இட்டுச்சென்று (தங்கும் வசதியும் நன்றாக இருக்கும்) – திரும்பி பெங்களூருக்கு.

    http://kstdc.nic.in/ctours09.html
    இந்த இடங்கள் எல்லாம் இயற்கையின் எழில் கொஞ்சும் இடங்கள்.

    – அலெக்ஸ்

  • 13 செல்வராஜ் // Oct 5, 2005 at 7:19 am

    அலெக்ஸ், தகவலுக்கு நன்றி. அச்சிட்டு எடுத்துக் கொண்டேன்.