இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

ஜூரிக் நகரத்துக் கத்தரிக்கா

September 7th, 2005 · 13 Comments

அவளுக்கு வயது சுமார் இரண்டு இருக்கும். பச்சை நிறப் பொட்டு வைத்திருந்தாள். தீர்க்கமாய்ப் பார்வையைச் செலுத்தும் கண்கள். கொக்கி மாதிரி தலையின் இரு புறங்களில் கொண்டைகள். அப்போது தான் உறங்கி எழுந்து வந்தவள் தன் தந்தையின் மீது ஏறிக் கொண்டாள். அவரின் சட்டையை இறுகப் பற்றிக் கொண்ட ஒரு பாதுகாப்பு உணர்வோடு என்னைச் சந்தேகமாகப் பார்க்கிறாள். ஒரு அன்புப் பொட்டலமாய் இருந்த அவளையும் கொஞ்சுகிற பெற்றோரையும் பார்க்கையில் இரண்டு வயதினளோடு இருப்பது என்ன ஒரு சுகம் என்று மனம் சுயநினைவுகளில் ஆழ்கிறது.

Zurich Teddy

மெல்லப் பேச்சுக் கொடுத்தேன். “உன் பேர் என்னம்மா”

பதில் இல்லை.

“பாப்பா தானே?”

என்ன தவறாகச் சொல்கிறீர்கள் என்பது போல் உடனே நிமிர்ந்து பார்க்கிறாள். “குட்டிப் பாப்பா!”. திருத்தம் தெளிவாக வருகிறது. சொல்லிவிட்டு மீண்டும் தன் வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டாள். நான் வெளியூருக்குப் போகிறேன் என்று தெரிந்தவுடன் எங்கள் வீட்டு நாலேமுக்கால் வயதுக் குட்டிப் பாப்பா ஒன்றும் என் கால்களைக் கட்டிக் கொண்டு “உங்க ஆபீஸ எனக்குப் பிடிக்கல்லே” என்று சொன்னதும் நினைவுக்கு வருகிறது.

அவளுடைய காய்கறி வண்டியில் நெகிழிப் (plastic) பண்டங்கள் விதம் விதமாய் இருந்தன. செந்நிறத்தில் ஒன்றை வாயில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தவளை வெளியே எடுக்கச் சொல்லி அன்பாய்ச் சொல்கிறார் தந்தை. தான் ஆரோக்கியமாய்ப் பழம் காய் சாப்பிடுவதை ஏன் வேண்டாம் என்று சொல்கிறார் என்று கேட்பது போல் “கத்தியிக் காய்!” என்கிறாள். அவளுக்குக் கத்தரிக் காய் சுவை பிடிக்குமோ தெரியவில்லை, ஆனால் சொல்லப் பிடித்திருக்கின்றது.

“இல்லம்மா, அது தக்காளி”, சரியாகச் சொல்லித் தர முயலும் தந்தை.

“ம்”. ஒற்றை வார்த்தை கூட இல்லை. ஒற்றை எழுத்துத் தான் பதிலாய் வருகிறது. தொடர்ந்து நாம் என்ன பேசினாலும் அவள் ம்-கொட்டிக் கேட்பது சுவாரசியமாய் இருக்கிறது.

“தக்காளீ…”. விடா முயற்சியோடு தந்தை மீண்டும் முயல்கிறார்.

“ம்?”

“எங்கே சொல்லு பாக்கலாம், தக்காளீ”

“ம்!?”

“அப்பா சொல்றதச் சொல்லும்மா, தா…”

“தா”. புரிந்து கொண்டவள் அடுத்து உற்சாகத்தோடு உடனுக்குடன் திருப்பிச் சொல்கிறாள்.

“இக்…”

“இக்”

“கா…”

“கா”. கவனித்துக் கொண்டிருக்கிற எனக்கும் மனதுள் தா, இக், கா என்று எதிரொலிக்கிறது.

“ளீ…”

“ளீ”. அவளுடைய வாயையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதோ பாடம் முடிந்து சரியான சொல் உதிரப் போகிறது என்று ஒரு திருப்தியோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

“தக்காளீ…” என்று தந்தை முடித்து வைக்க, பின்னும் “கத்தயிக்காய்” என்று சற்றும் எதிர்பாராமல் புன்னகையோடு உடனே வந்து உதிர்கிறது ஒரு முத்து. குபீரென்று சிரிப்பு வந்து எல்லோரையும் தொற்றிக் கொண்டது. அவளும் சேர்ந்து சிரித்து விட்டுப் பிறகு தக்காளியைச் (தக்காயி?) சொல்லி விட்டாள். திருட்டுப் பொண்ணு!

அருகில் இருந்த ‘அவள் விகடனை’ எடுத்துப் பிரித்து என்னிடம் என்னவோ காட்டுகிறாள். மழலை மொழி கேட்கப் பரவசமாய் இருக்கிறது. புரியவில்லையே என்று சொல்லக் கூட எனக்குப் பிடிக்கவில்லை. அவள் காட்டிய இடத்தில் இருந்தவற்றைப் படிக்கிறேன். தான் கேட்பது இல்லாமல் இந்த மாமா வேறு என்னவோ செய்கிறாரே என்று அவளுக்கு அது குழந்தைத்தனமாகக் கூட இருந்திருக்கலாம். படிக்கப் படிக்கப் பக்கங்களைப் புரட்டி வேறு எதையோ காட்டி இன்னும் தீவிரமாய் வேறு சொல்கிறாள். “ஓஹோ, அப்படியா?” என்று மட்டுமே சொல்ல முடிகிறது என்னால், வியப்புடனே.

அப்பா சொன்னதைக் கேட்டுக் குல்லாக்காரன் கதையைச் சொல்ல ஆரம்பித்தவள், “ஒரு ஊல்ல…” என்ற அடுத்த கணமே கதையை விட்டு வேறு எங்கோ தாவி விட்டாள். “குரங்கு வந்துச்சா?” என்று நான் கேட்டுப் பார்த்தும் பயனில்லை.

“தவளை மாதிரி குதிப்பாளாக்கும். எங்கே குதிம்மா” என்று தந்தை சொன்ன பிறகு சிறிது நேரம் கழித்துக் குதித்துக் காண்பிக்கிறாள். அந்தரத்தில் காலை அகட்டிக் குதிப்பதைப் படம் எடுக்கப் பலமுறை முயன்றும் முடியவில்லை. அது பற்றி எல்லாம் அவளுக்கு யாதொரு கவலையுமில்லை. மீண்டும் மீண்டும் குதித்துக் கொண்டிருக்கிறாள்.

இரவு திரும்புகையில் ரயில் வண்டியில் என்னை வழியனுப்பி வைக்க அப்பாவின் மேல் தொற்றிக் கொண்டு தானும் வருகிறாள். குட்டிக் கையின் பிஞ்சு விரல்கள் “டாட்டா” என்று சொல்லி அனுப்பி வைக்கின்றன. வண்டி நகர்ந்த பின்னும் நெடுநேரம் “மாமா”, “மாமா” என்ற வெடுக்கென்ற குரல் இன்னும் ஒலிக்கிறது.

வார இறுதியில் மட்டுமாவது அதிக நேரம் உடனிருந்து விளையாட முடிகிற அவளுடைய அப்பாவை ஊர் சுற்றிக் காண்பிக்கச் சில மணி நேரங்கள் என்னோடு அழைத்துச் சென்று விட்டேன். ரயிலிலும் டிராமிலும் நடந்தும் என்னை இழுத்துச் சென்ற நினைவோடை இராதாகிருஷ்ணனுக்கும், நான் சென்ற அரை நாளில் என் காய்ந்த வயிற்றிற்கு இட்லி சட்னி சப்பாத்தி சாம்பார் ரசம் இரண்டு மூன்று பொரியல் பாயாசம் என்று எல்லாம் செய்த பிறகும் “இவர் கடசி வரைக்கும் சொல்லவே இல்ல. அதனால சிறப்பா ஒண்ணுமே பண்ணல” என்று குறைப்பட்டுக் கொண்ட அவரது மனைவிக்கும் சின்னதாய் ஒரு நன்றி மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

முன்பின் பார்த்திராத ஒருவனுக்கு இப்படி மாய்ந்து மாய்ந்து செய்யும் நட்பையும் உருவாக்கி இருப்பது இந்த வலைப்பதிவின் சாத்தியங்களுள் ஒன்று என்று ஜெனீவாவுக்குப் போக முடிந்திருந்தால் இந்த வார நட்சத்திரத்தையும் நேரில் சந்தித்துச் சொல்லிவிட்டு வந்திருப்பேன்.

இன்னும் சில மணி நேரங்களில் விமானம். ஸ்விட்சர்லாந்திற்கு ஒரு வணக்கமும் ஜூரிக் நகரத்துக் கத்தரிக்காயிற்கு ஒரு டாட்டாவும்.

Zurich Main Station

Tags: பயணங்கள் · வாழ்க்கை

13 responses so far ↓

  • 1 krishnamurthy // Sep 7, 2005 at 2:00 am

    sweet report. Kutty Sweety n name?

  • 2 Thangamani // Sep 7, 2005 at 2:21 am

    நல்ல அருமையான பதிவு செல்வராஜ். இராதகிருஷ்ணனுக்கும், அவரது குட்டி பாப்பாவுக்கும் என் அன்பு.

  • 3 'மழை' ஷ்ரேயா // Sep 7, 2005 at 2:23 am

    //வண்டி நகர்ந்த பின்னும் நெடுநேரம் “மாமா”, “மாமா” என்ற வெடுக்கென்ற குரல் இன்னும் ஒலிக்கிறது//.

    “போ மாணாம்” (போக வேணாம்) என்கிற சொற்களின் கனமே தனி!

  • 4 துளசி கோபால் // Sep 7, 2005 at 2:30 am

    அருமையான பதிவு.

  • 5 சுதர்சன் // Sep 7, 2005 at 3:20 am

    நல்ல பதிவு, மிகவும் ரசித்தேன்.

  • 6 Ramya Nageswaran // Sep 7, 2005 at 4:05 am

    வழக்கம் போல வித்தியாசமா எழுதியிருக்கீங்க..ஸ்டேஷன் படத்தைப் பார்த்தவுடன் அங்கிருந்த நாட்களில் ட்ரெயின் பிடிச்சு ஆபீஸுக்கு ஒடும் நாட்கள் நினைவுக்கு வந்தன.

  • 7 ravisrinivas // Sep 7, 2005 at 5:50 am

    தலைப்பைப் பார்த்து விட்டு சன்னாசி பாணி சிறு கதையோ என்று நினைத்தேன் :). படித்தபின் தெரிந்தது இது செல்வராஜ் பாணி எழுத்து என்று,வந்தது வருகிறீர்கள், ஏன் ஒரிரு நாட்களில் மாயமாக திரும்பிப் போகிறீர்கள் , சுவிஸ்ஸில் அதிக நாட்கள் தங்கினால் இங்கெயே இருந்துவிடத் தோன்றும் என்ற அச்சமா :). அந்த ஊர் எனக்கு பிடித்த ஊரும் கூட,ஒரு காலத்தில் என் காதலி அங்கிருந்தார் பின்னர் மனைவியாகிவிட்டார் 🙂

  • 8 Padma Arvind // Sep 7, 2005 at 7:02 am

    செல்வராஜ்
    குழந்தைகளின் குறும்பை அழகாக எழுதி இருக்கிறீகள்.
    ரவி: மனைவி காதலியாக தொடர முடியாதா என்ன?:)

  • 9 பாலாஜி-பாரி // Sep 7, 2005 at 7:55 pm

    செல்வா, சூப்பர் பதிவு..
    🙂 🙂

  • 10 Kannan // Sep 8, 2005 at 12:01 am

    குதிக்காமல் ‘கத்தியிக்காய்’ சொல்லும்போதாவது ஒரு படம் எடுத்திருக்கலாமே 🙁

  • 11 தாணு // Sep 8, 2005 at 12:42 pm

    என் நண்பர் ஒருவருக்கு வலைப்பதிவு பற்றி அறிமுகம் செய்தபோது, அதில் எழுதுவதால் என்ன பயன் உங்களுக்கு என்று கேட்டார். அன்று பதிலளிக்கும்போது விவாதத்துக்காக ஏதேதோ சொன்னேன். இன்று உங்கள் பதிவு பார்த்ததும் `ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தாய்’ போல் உணர்கிறேன்; பதிவை அவருக்கு அனுப்புகிறேன். வாழ்த்துக்கள்.

  • 12 ரவிசங்கர் // Sep 8, 2005 at 1:15 pm

    மிகவும் ரசிக்க வைத்த பதிவு. குழந்தைகளின் உலகமே தனி தான்

  • 13 செல்வராஜ் // Sep 9, 2005 at 3:36 pm

    நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. சுவிட்சர்லாந்து அழகாக இருக்கிறது. காதலியாய் அங்கு இருப்பவரை மனைவியாய் ஆக்கிக்கொள்வதெல்லாம் இனி முடியாது. மனைவியாய் இருப்பவரை வேண்டுமானால் கூட்டி வந்து காதலியாக்கிக் கொள்ளலாம். அடுத்தமுறை.