இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

இனிய தோழி சுனந்தாவிற்கு…! – 1/05 –

June 30th, 1993 · No Comments

இனிய தோழி சுனந்தா,



‘வேண்டுகிறேன்’ என்று எழுதும் போது,  நாம் கடவுள் பற்றிப் பேசியதெல்லாம் கூட எனக்கு நினைவுக்கு வருகிறது சுனந்தா…


ஒருவனே தேவன், கடவுள் ஒன்றே, என்று கூறிக் கொண்டே, மக்கள் கடவுளுக்குப் பல பெயர்கள் இட்டும், பல மதங்கள் பிரித்தும், சண்டையிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு நாம் மட்டும், ‘சரி, நமக்கு ஒரு தெய்வமே போதும்’, என்று எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் அந்த ஒரு தெய்வத்தின் பெயரைச் சொல்லி வணங்கிவந்தோம். ஆனால், அதே சமயம், மற்றவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதனால், மற்றவர்களின் எண்ணங்களை எடுத்தெறியவில்லை நாம். நமக்கு என்று ஒரு தனி வழி ஏற்படுத்திக் கொண்டோம்.



வீடு பூராவும் சுவாமி படங்களும், நாள், கிழமை தவறாது பூஜையும் செய்து கொண்டிருந்த உன் அம்மா கூட, நான் வெள்ளி தோறும்
கோவிலுக்குச் சென்றதை, “என்ன செல்லு, இன்னிக்கும் ‘சைட்’ அடிக்கக் கிளம்பி ஆச்சு போலிருக்கே. பாவம் நீயும் எத்தனை நாள் தான் சுனந்தாவையே பார்த்துக் கொண்டிருப்பே!”, என்று கேலி செய்தது எனக்கு இரண்டு விஷயங்களைப் புரிய வைத்தது.

ஒன்று. உன் மேலும், என் மேலும், நமது நட்பின் மீதும் அவர்களுக்கு இருந்த நம்பிக்கை. இரண்டு. கடவுள் பக்தி என்பது ஒரு பயத்தோடு, ‘ஐயோ… இது செய்தால் சாமி கண்ணைக் குத்திவிடுவார்’ என்ற அச்சுறுத்தலினால் வர வேண்டியதில்லை என்ற உயர்நிலை. காவு கொடுத்தால் தான் கடவுள் அருள் பாலிப்பார் என்னும் மூடத் தனத்தை அழித்து எறிந்த உண்மை.

அன்பு மயமானவர் கடவுள். அவர் தந்த கண்ணை அவர் எடுக்க வேண்டியதில்லை என்கிற அன்பின் தத்துவத்தை விளக்கிய பேச்சு அது. நெற்றியில் இடுகிற திருநீறும், வாரந்தோரும் செல்லும் கோயிலும் தான் கடவுள் பக்தி என்பதில்லாமல், இயற்கையும், நல்லெண்ணங்களும், நமது மனமும் தான் இறை என்று புரிய வைக்கச் செய்த வரிகள் அவை.

நாம் படித்த அறிவியலும் பொறியியலும், கடவுள் பற்றிக் கேள்விகள் கேட்க வைக்க, மெல்ல மெல்ல எனக்கு இயற்கையே கடவுள் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது சுனந்தா. குளிர் காலத்தில் காய்ந்து கிடந்த மரங்களில் இருந்து, புதிதாய் அத்தனை இலைகளையும், பூக்களையும் தோன்றச் செய்து, அத்தனை நிறங்களை அவற்றிற்கு யார் தந்தது? உலகெலாம் ஒளி தந்து, கதிர் வீசிச் சிரிக்கும் அந்தச் சூரியனுக்கு அவ்வளவு சக்தியை யார் தந்தது? மெல்ல வீசித் தாலாட்டும் அதே தென்றல், உருமாறி உயர் மரங்களைத் தரை சாய்க்கும் புயலாய் மாறிடும் அந்தக் காற்றை யார் கண்டது? எல்லையில்லாது விரிந்துகொண்டே போகும் அந்த வான்வெளியின் விந்தையை என் சொல்வது? உன்னை, என்னை–நன்மை, தீமை, நட்பு, பகை, அன்பு, பற்று, என்று இனம் பிரிக்க வைத்துச் செயல்படச் செய்வது எது?
“நான்” என்று என்னை எண்ண வைக்கிறதே–அது தான் எது?

எங்கு புறப்பட்டோம், எது இலக்கு, ஏன் இந்தப் பாதை–புரியாத இத்தனை கேள்விகளுக்கும் விடை–இயற்கை என்னும் அந்த மாபெரும் சக்தியில் இருப்பதாய் எனக்குப் படுகிறது சுனந்தா… சூரியனின் பல கதிர்கள் போல, நீ, நான், இந்த நிலம், காடு, மலை, மரம், மண், உடல், உணர்ச்சி, நிகழ்ச்சி, வாழ்க்கை, உலகம், எல்லாமே இயற்கை என்னும் அந்த மையச் சக்தியின் அங்கங்கள் என்று எனக்குப் படுகிறது. அதைச் சிலர் கடவுள் என்கின்றனர். இன்னும் சிலர் இயற்கை என்கின்றனர். புரியாது பலரோ வெவ்வேறு பெயரிட்டு அழைத்துச் சண்டைகள் செய்கின்றனர்.

இந்த ஊரில் உள்ள கோவில் அர்ச்சகர் ஒரு கதை சொன்னார் சுனந்தா–அதைப் பற்றி அடுத்த மடலில் எழுதுகிறேன்.

அதுவரை,

அன்புடன்
செல்வராஜ்.

Tags: கடிதங்கள்