இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

பெங்களூர் மழையில் நனைகின்ற பூங்காற்று – 5

August 6th, 2005 · 12 Comments

‘நவகிஸ்’ என்றால் கன்னடத்துல எதாவது அர்த்தம் இருக்கிறதா என்று கன்னட ஓட்டுனரைக் கேட்டேன். தமிழும் பேசுகிறார் அவர். ‘முடிவதில்லை’ என்கிற அர்த்தத்தில் அவர் சொல்லும் ‘ஆவுறதில்லே’ கேட்க நன்றாக இருக்கிறது. அவருக்கும் தெரியவில்லை. “நவ என்றால் புதிது, நவகிஸ்னா தெரியல்லியே” என்று தான் பதில் கிடைத்தது. எம். எஸ். ராமய்யா என்பவர் இந்த ஊரில் பெரிய ஆள் போலிருக்கிறது. அவர் பெயரில் வகைக்கு ஒன்றாய்க் கல்லூரி, பள்ளி எல்லாம் இருக்கிறது. பொறியியற் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பல்மருத்துவக் கல்லூரி, மேலாண்மைக் கல்லூரி, விடுதி மேலாண்மைக் கல்லூரி, தாதியர் கல்லூரி, ஓவியக் கல்லூரி … இப்படி. நவகிஸ் பள்ளி கூட ராமய்யாவின் மகன்களுள் ஒருவருக்குச் சொந்தமானதாம். பெயர்க்காரணத்தை ஒரு நாள் பள்ளியிலேயே கேட்டு விட வேண்டும்.

பள்ளியில் சேர்க்கப் பெரியவளுக்கு நுழைவுத் தேர்வு கூட இருந்தது! எந்த வகுப்பில் சேர்த்துக் கொள்வது என்று மதிப்பிடுவதற்காக என்றார்கள். இரண்டாம் வகுப்பில் சேர்ந்திருப்பவளுக்குப் பொதுவாக எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்தி மட்டும் முற்றிலும் தெரியாது என்பதால் சிறு பிரச்சினை. கொஞ்சம் நாட்கள் தானே என்று ‘எழுத்துக்களைப் பார்த்து வரைந்து கொள்ளச் சொல்லி விட்டார்கள்(!)’ என்று மகளுக்கு நிம்மதி. பொதுவாகவே இங்கே பள்ளிகளில் கையெழுத்து வேலை அதிகம். கூடவே ‘சிக்ஸ் ஒன்ஸ் ஆர் சிக்ஸ்…’ என்று ராகம் போட்டு வாய்ப்பாடும் கற்றுக் கொண்டு வருகிறாள்.

Blr School Dress

இந்தியப் பள்ளிகளில் சீருடை அணிந்து கொள்ளலாம் என்பதில் பெண்களுக்கு ஒரு ஆர்வம். எனது பள்ளிக்காலத்தில் சீருடை அணிய வேண்டியிராத ‘கலர் டிரஸ்’ சனிக்கிழமைகள் பிடிக்கும். மனித மனம் எது கிடைப்பதில்லையோ, எது புதுமையாக இருக்கிறதோ அதையே விரும்புகிறது. வெள்ளிக்கிழமைக்கென்று தனியாய் வெள்ளைச் சீருடையும் உண்டு. இங்கு வரும் முன் புதிய இடம் பற்றித் தெரியாமல் சற்றுக் கலக்கம் அடையும் நேரங்களிலெல்லாம் கூட “ஹே, அங்க போய் சீருடை எல்லாம் போட்டுக்கலாம்” என்று சொன்னால் போதும். கலக்கம் போய் ஆர்வம் வந்துவிடும்.

தலையில் முடி வளர்த்திருப்பவர்கள் சீராகச் சீவி இரட்டைச் சடை போட்டிருந்தாலும் பத்தாது, கருப்பு நிற ரிப்பன் கட்டி வர வேண்டும் என்று சொல்வது சற்று மிகையாக இருக்கிறது. முடியை வெட்டிக் கொள்பவர்களுக்கு இந்தக் கவலை இல்லை.

‘முடியப் புடிச்சு இழுத்தாங்க’, ‘என் பேச்சு வாடையைக் (அமெரிக்க ஆங்கில வாடை) கிண்டல் செய்றாங்க’ என்கிற ஆரம்ப நாட்கள் போய் இப்போது ரக்ஷிதா இதைச் சொன்னா, ஷ்ரேயஸ்னா பொண்ணுன்னு நினைச்சேன் ஆனா அது பையன்மா என்று பேச்சுக் கேட்கிறது. சானா, (ஷானா இல்லையாம்), வர்ஷிதா, தனுஸ்ரீ இவர்கள் எல்லாம் ‘பெஸ்ட் ஃப்ரெண்டு’ என்று போகிறது கதை. போட்டிக்குச் சின்னவளும் பவன், டேரில், ரேவதி என்று அவளுடைய நண்பர்கள் பெயரை எடுத்து விட்டுக் கொண்டிருக்கிறாள். ஷக்கித்துக்கு நேற்றுத் தான் பிறந்த நாளாம்.

முதல் வாரத்தில் நிவேதிதா ஒரு நாள் அழுது கொண்டு வந்ததைப் பார்த்து ‘என்னப்பா ஆச்சு’ என்று பதறியபடி கேட்டதற்கு, “டீச்சர் மொத்த வகுப்பையும் ஒழுக்கமற்றவர்கள் என்று திட்டி விட்டார்கள். நான் ஒழுங்காகத் தான் இருந்தேன்” என்கிறாள். “அட! இங்க எல்லாம் அப்படித் தான் சத்தம் போடுவாங்க. பொதுவாச் சொல்லும் போது நீ உன்னை குறிப்பாச் சொல்றாங்கன்னு எடுத்துக்க வேண்டியதில்லை”. மிகவும் மென்மையான மனம் உறுதியாவதற்கும் இந்த அனுபவங்கள் உதவும்.

க்ளீவ்லாண்டில் மதிய உணவுக்கு ஏதாவது சாதம் செய்து தருகிறேன் என்பதற்கு “நோ அம்மா” என்று கடலை-வெண்ணெய்-பழக்கலவை ரொட்டி (PB&J sandwich) கொண்டு போனவள் இங்கு அதெல்லாம் வேண்டாம் என்று பருப்பும் தயிர் சாதமும் கேட்டு வாங்கிச் செல்கிறாள். சேர்ந்திருக்கும் இடத்திற்குத் தகுந்தாற்போல் மனமும் விருப்பமும் எப்படி மாறிக் கொள்கிறது என்று வியந்தாலும், ஒரு குழுவுக்குள் சேர்வதற்கு ஏற்படும் அழுத்தங்களும் (fitting-in pressures) அதற்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ள முயல்வதும் முழுதும் சரியில்லையே என்று கவலை உண்டாகிறது. சரி, பருப்பும் தயிரும் பிரச்சினை இல்லை. வேறு ஏதாவது என்றால்? இப்போது இது அவசியமற்ற கவலை என்றாலும், பின்னாளில் வளரும் பருவத்தில் பெண்களின் வாழ்வு பற்றி நிறையக் கலந்துரையாட வேண்டும் என்று தோன்றியது.

நிவேதிதா சற்றே இழுத்து இழுத்தும் ஏற்ற இறக்கங்களோடும் இந்திய வாடையில் ஆங்கிலம் பேச முயல்வதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறோம். டக்கு டக்கென்று எப்படி இந்திய ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இந்தப் பெண்ணால் மாறிக் கொள்ள முடிகிறது என்பது வியப்பாக இருக்கிறது. “இப்போ இப்படிப் பேசு; இப்போ அப்படிப் பேசு” என்று கேட்டு வாங்கிக் களிக்கிறோம்.

பள்ளி முன் வண்டியை விட்டு இறங்கியவுடன் ‘நந்திதா’ என்று அழைக்கும் பொடிசு ஒன்றுடன் உள்ளே ஓடிச் செல்கிறாள் சிறியவள். “டேய் நந்து நந்து” என்கிற எனது குரல் காற்றிலே வீணாய்ப் போவதைப் பார்த்துக் கொண்டு ஓரிரு நிமிடம் சும்மா நின்று வருகிறேன். சின்னவளுக்கு நாலு பின்னல் தான் வரும் என்றாலும் அக்கா மாதிரி வேண்டும் என்று கேட்டு இரட்டைச் சடை போட்டுக் கொண்டு செல்கிறாள். பள்ளியில் சேர்க்கப் போன நாள் தற்செயலாய் உடல் பல் பரிசோதனை நடந்தது. பரிசோதனைக்குப் பின் கொடுத்த பற்பசை, துலக்கி இவற்றை ‘இன்னும் ரெண்டு கொடுங்க’ என்று கேட்டு வாங்கிக் கொண்டு வந்துவிட்டாள் !

“உனக்கு இந்தியா பிடிச்சிருக்கா நந்து?” ஒரு வருடம் முன்பு யாரோடும் அதிகம் பேசாமல் இருந்தது இப்போது செம வாய் அடிக்கிறது.

“எஸ் அப்பா”. முற்றத்தின் முதுமாலைக் காற்றின் பின்னணியில் அகல விரிந்த கண்களுடன் குட்டித் தலை மேலும் கீழும் ஆடியது.

“பட் ஐ மிஸ் அமெரிக்கா”. பாசாங்கற்ற நேர்மையான பதில் குழந்தைகளுக்கு இயல்பானது. இரண்டு இடமும் அவளுக்குப் பிடித்திருக்கிறது என்பதும் நல்லது தான்.

“இந்தப் பயணத்தை விடப் போன முறை வந்த பயணம் நன்றாக இருந்தது அம்மா” என்கிறாள் நிவேதிதா. “ஏண்டா?”

“போன தடவ மொட்லி (bubbles) எல்லாம் வாங்கி உட்டோமே. நிறைய இடத்துக்குப் போனோமே”

“அட. அதுக்கென்ன. வாங்கிக்கிட்டாப் போச்சு” என்று அவசரச் சமாதானம் செய்தாலும் முழுதும் விடுப்பு என்று வரும் பயணத்திற்கும் இங்கேயே வாழ்க்கை என்று இருக்கும் பயணத்திற்கும் வித்தியாசம் இருக்கத் தான் செய்கிறது. அது குழந்தைகளுக்கு மட்டுமல்ல.

Tags: பயணங்கள் · வாழ்க்கை

12 responses so far ↓

  • 1 பொதிகை மைந்தன் // Aug 6, 2005 at 3:35 am

    மிக நல்ல பதிவு. நன்றாக இருந்தது

  • 2 சுரேஷ் // Aug 6, 2005 at 5:28 am

    நல்ல பதிவு செல்வராஜ்.

  • 3 சுந்தரவடிவேல் // Aug 6, 2005 at 6:20 am

    சும்மாதான் போயிருக்கிறீர்களென்று நினைத்தேன். வாழ்த்துக்களும், அன்பும்!

  • 4 சுந்தரவடிவேல் // Aug 6, 2005 at 6:37 am

    ஓ! இப்பதான் மத்த நாலையும் படிச்சேன். கொஞ்சம் நாள்களுக்குத்தான் போயிருக்கிறீர்கள் 🙂
    நல்ல பதிவுகள், பகிர்தலுக்கு நன்றி!

  • 5 மூர்த்தி // Aug 6, 2005 at 8:40 am

    “பட் ஐ மிஸ் அமெரிக்கா” இதனை நீங்கள் சொல்ல வில்லையே? சொல்லி இருந்தால்… (ம் யார் கண்டார்? மனதிற்குள் சொன்னீரோ என்னவோ?)

  • 6 செல்வராஜ் // Aug 6, 2005 at 1:42 pm

    பொதிகை மைந்தன், சுரேஷ், நன்றி. சுந்தரவடிவேல், ஆம் கொஞ்சம் நாளைக்குத் தான் 🙂 மூர்த்தி, “மீ டூ செல்லம்” என்று சொன்னதை முதலில் எழுதியிருந்தேன். பிறகு விட்டுப் போய் விட்டது. எதுவாய் இருந்தாலும் இருக்கும் இடம் சொர்க்கம்! 🙂

  • 7 Ramya Nageswaran // Aug 7, 2005 at 8:27 pm

    நல்ல பதிவு..ஒரு மூன்று மாதங்கள் முன்பு என் பெண்ணை (6 வயது) ஒரு சர்வதேச பள்ளியிலிருந்து இந்திய பள்ளிக்கு மாற்றினேன்.. இதில் நீங்க சொன்ன ஒரு விஷயம் முக்கியமான காரணங்களில் ஒன்று:

    //மிகவும் மென்மையான மனம் உறுதியாவதற்கும் இந்த அனுபவங்கள் உதவும்.//

    என்னுடைய இந்தச் சின்ன அனுபவத்தில் நான் புரிந்து கொண்டது: நம்மை விட குழந்தைகளுக்கு திறந்த மனமும், pre-conceived notions இல்லாத பார்வைகளும் மிக அதிகம். உண்மையிலே அவர்கள் தங்களுக்கு ஏற்படுகிற அனுபவங்களை வேறேந்த baggage ஜும் இல்லாமல் பார்கிறார்கள். அதனால் சுலபமாக மாற்றங்களை ஏற்றுக் கொள்கிறார்கள். வயதாக ஆக, இது கொஞ்சம் மாறித்தான் போய்விடுகிறது.

  • 8 செல்வராஜ் // Aug 8, 2005 at 4:45 am

    ரம்யா, உங்கள் இரு கருத்துக்களுக்கும் நன்றி. நீங்கள் சொல்வது உண்மை தான். சிறு வயதினரை ஊன்றிக் கவனிக்கும் போது நாமும் கூடச் சில சமயம் கற்றுக் கொள்ள முடிகிறது.

  • 9 அன்பு // Aug 8, 2005 at 6:27 am

    பள்ளி கிடைத்து செல்ல ஆரம்பித்தாகிவிட்ததா… வாழ்த்துக்கள்.
    வழக்கம்போல் அல்லது வழக்கத்தைவிட பதிவு பலவிடயம் சொல்கிறது, மெல்ல அசைபோடுகிறேன். நன்றி.

  • 10 செல்வராஜ் // Aug 8, 2005 at 12:54 pm

    வழக்கமான உங்கள் உற்சாகமூட்டுதலுக்கு நன்றி அன்பு. பலவித அனுபவங்கள் கிடைக்கிறது என்பது உண்மை தான். இயன்றவகையில் பகிர்ந்துகொள்கிறேன்.

  • 11 Thangamani // Aug 8, 2005 at 1:19 pm

    பி.எஸ்.இராமையாவின் வீடு பார்த்திருக்கிறீர்களா? அது ஒரு அரண்மனை.

    குழந்தைகளின் உலகத்தைக் நீங்கள் கொண்டுவரூம் விதம் அலாதியானது!

  • 12 செல்வராஜ் // Aug 9, 2005 at 3:52 pm

    தங்கமணி உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இராமையாவின் வீடு பற்றிக் கேள்விப் பட்டேன். பார்க்கவில்லை. அவரது பெயரில் இருக்கும் ஒரு (திருமண?) மண்டபம் கூட அப்படித் தான் இருக்கிறது. அதற்கு அருகில் தான் பள்ளி என்று தினமும் சென்று வருகிறோம். அந்தக் காலத்தில் ஒரு ஊரே அவருக்குச் சொந்தமாய் இருந்திருக்க வேண்டும்.