இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

ஒரு ஜெர்மன் கிராமத்தினளின் நேரிலிக் கதை

July 19th, 2005 · 7 Comments

Copyright: (?) http://www.amediarte.deஊர் சுற்றிக் காண்பிக்க அழைத்துச் சென்ற ரூட்டபேகோ உடன் பணி புரியும் ஜெர்மன். தன் காதலியையும் அங்கு அழைத்திருப்பதாகக் கூறினான். “நீ எங்கிருந்து வருகிறாய்? மான்ஹைம் நகரா ஹைடல்பர்க்-ஆ?” என்று கேட்டவனைப் பார்த்து இரண்டும் இல்லை என்று தலையை ஆட்டினாள் அவள். அருகில் இருக்கும் கிராமத்தில் இருந்து வருவதாய்க் கூறினாள். முழுக்க ஆங்கிலம் தெரியாத அவளும் ஜெர்மன் தெரியாத நானும் ரூட்டபேகோ ஒண்ணுக்கிருக்கப் போனபோது பேசிக் கொண்டோம். குரங்கு தாவிக் கொண்டு கிடந்தது. கொஞ்சம் வெட்கப் பட்டுத் தனக்குள் பேசிக் கொண்டது. அவர்கள் இருவரும் ஜெர்மனில் பேசிக் கொண்டபோது சன்னல் வழியே பார்த்துக் கொண்டு முகத்தில் மட்டும் ஒரு இளிப்புக் காட்டிக் கொண்டு கிடந்தது. மூன்றாம் ஆள் இருப்பதற்கு அவர்களின் முத்தமோ குரங்கோ வெட்கப் படவில்லை.

ஆந்தலூசியா ஆந்தலூசியா என்று மனதுள் ஒலித்துக் கொண்டே இருந்தது. எங்கோ ஒரு முறை ஆந்தலூசியாவின் நாய் என்று படித்த நினைவு இப்போது ஏன் மேலெழும்ப வேண்டும்? பீர் தயாரிக்கும் வினைகலன்கள் இரண்டு பெரிதாய் இருந்த அறையில் பழமையின் தாக்கம் இருந்தது. “பன்றிக்கறியை இப்படிச் சாப்பிட்டும் எப்படி மெலிதாய் இருக்கிறாய்” என்றேன். இடையில் ரூட்டபேகோ ஜெர்மனில் அவளுக்கும் ஆங்கிலத்தில் எனக்கும் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் விழிகளால் பேசிக் கொண்டதும் முத்தங்கள் கொடுத்துக் கொண்டதும் இடையில் நீ என்ன கரடி என்று குரங்கு கேட்டது. குலுக்கிய அவள் கை வணிக இறுக்கம் இல்லாமல் மிருதுவாய் இருந்தது. “உனக்கு இரண்டு குழந்தைகளா” என்றாள். “ஆம் இரண்டு பெண்கள் ஆறும் நான்கும் வயது” என்றேன். “படம் வைத்திருக்கிறாயா?” என்று வினவினாள். ஆந்தலூசியா. உனது ஏழு வயது மகனை எங்கே விட்டுவிட்டு வந்தாய் என்று நான் இரவு பன்னிரண்டு மணியானபோதும் அவளைக் கேட்கவில்லை. ஆனாலும் ஊருக்குப் போன பின் பெண்களின் படத்தைக் கையோடு வைத்திருக்க முடிவு செய்து கொண்டேன். பேருந்தைப் பிடிக்க ஓடினோம். அலைந்து கொண்டிருந்த குரங்கையும் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினேன். “மறுபடியும் பசிக்கிறதா?” என்றாள்.


“சாப்பாடு பிடித்திருக்கிறதா” என்று கேட்டேன். அவள் தட்டைப் பார்க்கச் சகிக்கவில்லை. பக்கத்து இருக்கைக்காரர்களின் தட்டும் அப்படித் தான் இருந்தது. “இதில் என்ன இருக்கிறது? ஒரு மெக்சிகனோ, இத்தாலியனோ, ஏன் இந்தியனோ அதெல்லாம் நல்லா இருக்கும். ஜெர்மன் உணவு அவ்வளவு தான்” என்றாள். தனக்குப் பீட்சா பிடிக்கும் என்று சொன்னபோது அவள் முகம் பெரிதாய் மலர்ந்தது. குழந்தை! அவள் தட்டின் மிச்சத்தை ரூட்டபேகோ சாப்பிட்டான். அவளுடைய கைப்பையைத் தூக்கிக் கொண்டு போன பொது இரண்டு பேர் விசித்திரமாய் அவனைப் பார்த்தார்கள் என்று அவள் சிரித்தாள். “நான் கூட என் மனைவியின் பையைச் சுமப்பேனாக்கும்” என்று சொல்லிக் கொண்டேன். குரங்கு சிரித்தது.

Heidelburg Horse, Opp Main Station

உதடுகளுக்கு நேர்த்தியாய் சிவப்புச் சாந்து பூசியிருந்தாள். பீன்யா கொலாடாவை உறிஞ்சிக் குடிக்கும் போதும் அந்தச் சாந்து எப்படி அழியாமல் இருக்கிறது? பக்கத்துக் கட்டிடம் ஒரு ஏலியன் வீடு என்றாள். முகத்தில் புன்னகை. “ஓ தலையில் கொம்பு முளைத்த மனிதர்களா” என்றேன். “இல்லை பச்சை வண்ணக் கூட்டம்”. சும்மா அறிவுஜீவித்தனமாய் ரூட்டபேகோ எதையோ சொல்வதை விடத் தன் கதை சுவாரசியமாய் இருக்கும் என்றாள். இரும்புக் குதிரை தான் அந்த ஏலியனின் வாகனமோ? பாலகுமாரன் என்று எங்கள் ஊரில் ஒருவர் உண்டு என்றேன். ஆந்தலூசியா. “கீழே விழுந்தால் நீச்சல் தெரியுமா” என்று கேட்டாள். “ஏன் தள்ளிவிடப் போகிறாயா” என்று எட்டிப் பார்த்தேன். அப்படி ஒன்றும் தண்ணீர் ஆழமில்லை. “ஆனால் உருண்டைக் கற்கள் கடினமானவை. அடிபடும்” என்றாள். ஏலியன் வீட்டு அலங்காரமோ தெரியவில்லை – கற்கள் பச்சையாக இருந்தன. “காலையில் இருந்து காப்பியும் கோக்குமாய் இருப்பதால் தண்ணீர் குடிக்கிறேன்” என்றேன். “ஏன் இப்படித் தயங்குகிறாய்” என்று ரூட்டபேகோ கேட்டான். ஆந்தலூசியா. தீவிரமாய் அலுவல் பற்றிப் பேசியபோது ஆன்னா சுவாரசியமற்றுப் பார்த்தாள். அவள் பெயர் ஆன்னா. மான்ஹைம் ஹைடல்பர்க் அருகே ஒரு கிராமத்தில் இருந்து வருகிறாள்.

ஹைடல்பர்க் நகரத்துப் பழைய கட்டிடங்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம். இது தான் இருப்பதிலேயே பழைய கட்டிடம் என்று ரூட்டபேகோ கதை சொன்னான். “அவன் கதை விடுகிறான் அது சரியல்ல” என்று அவள் சொன்னபோது தான் இந்தக் கதையெல்லாம் எனக்கெதுக்கு என்று குரங்கு கேட்டது. குடியுறிஞ்சிக்குழாய் வெள்ளையாய் இருந்திருந்தால் உதட்டுச் சாயம் அழிந்திருப்பது தெரிந்திருக்கும் என்றது குரங்கு. அவள் பெயர் ஆன்னா.

Old Bridge, Heidelburg, DE பழைய பாலம் ஒன்றன் மீது ஏறிக் காட்டினர். “பாலம் பழையதாய் இருக்கும் போலிருக்கிறதே” என்றேன். “ஆம்! இதற்குப் பெயர் பழையபாலம்” என்றான் ரூட்டபேகோ சிரிக்காமல். சியாம் என்று தாய்லாந்து உணவகம் ஒன்றன் முன் உயரத்தில் ஒரு விளக்கு தொங்கிக் கொண்டிருந்தது. இங்கேயே சாப்பிட்டிருக்கலாம். “இவங்கெல்லாம் எப்பத் தாய்லாந்தில் இருந்து வந்தாங்க?” என்றது குரங்கு. குடிக்கிற தண்ணீருக்கு இரண்டு ஈரோ கேட்பார்கள் என்று முதலிலேயே தெரியாமல் போய்விட்டது. ஆன்னா மான்ஹைம் ஹைடல்பர்க் அருகே ஒரு கிராமத்தில் இருந்து வருகிறாள்.

ஸ்லீப்பிங் ப்யூட்டி கதை புகழ் லூட்விக் மன்னன் இருந்த இடம் இதெல்லாம் என்றார்கள். “இந்தப் பேரெல்லாம் வாய்ல நுழையற மாதிரி இருந்திருக்கலாம்” என்றது குரங்கு. “ரைன் நதி பெயர் அழகாத் தானே இருக்கு” என்றேன். “ஆமாம் நெக்கர்னு ஒன்னும் இருக்காம்ல” என்றது குரங்கு. குளியறையில் கண்ணாடி முன் நின்று தலைவாரிய போது “உன் தலையில நிறைய முடி இருந்திருக்கு” என்று படத்தைப் பார்த்து அவள் சொன்னது நினைவுக்கு வந்தது. இப்போது மட்டும் என்ன என்று அவசரமாய் வெளியே வந்துவிட்டேன்.

இரண்டு நாள் கழித்து ட்ராம் வண்டியில் ஊர் சுற்றிய போது நடுநகரின் செவ்வகச் சாலையின் ஒரு பக்கம் திரும்பிய போது அந்தப் பெயரைப் பார்த்தேன். “ஆந்தலூசியா ஸ்பானிய உணவகம்”. அப்போது ஆன்னா அங்கில்லை. ரூட்டபேகோவும் இல்லை. அதற்குப் பிறகு ஆந்தலூசியாவும் வரவில்லை.

தாமதமாய்த் தான் வந்திருந்தாள். மழை வரப் போகிறது என்றாள். வந்தவள் பெரிய ஜெர்மன் உணவு ஒன்றை வாங்க இருப்பதால் பகிர்ந்து கொள்ள முடியுமா என்று கேட்டாள். என்ன ஒரு சிரிப்பும் மலர்ச்சியும் என்று பார்த்தேன். எதுக்கு சும்மா தலையை ஆட்டுறாவ என்று குரங்கு வேறு தமிழ் பேசியது. ட்ராம் வண்டியின் பதின்ம வயதுப் பையன்கள் சிலர் விடை பெற்றுப் போகும் போது கன்னத்தின் இருபுறமும் முகத்தைச் சேர்த்துக் காற்றில் முத்தம் கொடுத்துக் கொண்டனர். ஆன்னா முன்னிரவு என்னிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டபோது செய்தது போலவே. குரங்கு மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தது. சோர்வில் வாயடைத்துக் கிடந்தது.

நாற்பது இலக்கங்களை ஞாபகம் வைத்திருந்து தொலைப்பேசியில் அழைக்க முடியும் என்று நான் அவளிடம் கூறவில்லை. ட்ராமில் பதின்மப் பையன்களின் சேட்டையை அருகே இருந்த பதின்ம வயதுப் பெண் ரசித்தாளா இல்லையா என்று உறுதியாய்ச் சொல்லமுடியவில்லை.

0,0,800,2255,288,841……..0519180…..330 நாற்பது இலக்கங்கள் தாண்டி மணியடித்து மறுமுனையில் மனைவியின் குரல் “என்னப்பா சுரமா? உடம்பு சரியில்லையா?” என்றது.

Tags: பயணங்கள்

7 responses so far ↓

  • 1 Santhosh Guru // Jul 20, 2005 at 6:58 am

    // குடிக்கிற தண்ணீருக்கு இரண்டு ஈரோ கேட்பார்கள் என்று முதலிலேயே தெரியாமல் போய்விட்டது. //

    எனக்கும் அதே நிலைமை தான். ஆனால் வந்ததோ சோடா போன்ற கார்பனேட்டட் தண்ணீர். 🙁

    (நான் ஒரு மாத காலம் பணிநிமித்தமாக மன்ஹைம் நகரில் தங்கியிருந்து, வால்டார்ஃப் வரை, ஹைடல்பர்க் வழியாக ரயிலில் பயணம் செய்தேன்)

  • 2 Mathy Kandasamy // Jul 20, 2005 at 9:50 am

    படிக்க ஆரம்பித்ததும் எனக்கே சந்தேகம் வந்து கொஞ்சம் திரும்பிப்போய் யாருடைய வலைப்பதிவைப் படிக்கிறேன்? பெயரிலி? மொன்ட்ரெசோர்? என்று பார்த்துக்கொண்டேன்.

    ஆ….. அடிக்காதீங்க! 😛

    நல்லா வந்திருக்கு செல்வராஜ்.

    -மதி

  • 3 karthikramas // Jul 20, 2005 at 9:56 am

    /மொன்ட்ரெசோர்?/ correct

  • 4 செல்வராஜ் // Jul 20, 2005 at 11:44 am

    சந்தோஷ் குரு, இப்போ நீங்க இந்தப் பக்கம் இல்லையா? இன்னும் ரெண்டு நாளுக்கு இந்தப் பக்கமா வந்தா சொல்லுங்க.

    மதி, நன்றி. இதுல அடிக்கறதுக்கு ஒண்ணும் இல்லை. நானே அந்த ரெண்டாளுங்களோட தாக்கம் தான் இப்படி எழுத வச்சிருக்குன்னு யாராவது கேட்டாப் பழி போட்டுடலாம்னு தான் இருந்தேன். ஆனா, சின்னதா ஒரு தாக்கம் மட்டும் தான், அவங்கல்லாம் எங்கயோ இருக்காங்க. ஆந்தலூசியா நாய் கூட அங்க தான் இருக்குன்னு தேடிக் கண்டுபுடிச்சிட்டேன். ஆனா அத இன்னும் படிக்கலே.

    கார்த்திக், மிகச்சரி (ன்னு நீங்க என்ன சொல்றீங்கன்னு தெரியாததால் உங்களுக்கு நன்றி இல்லை :-)).

  • 5 Vimala // Jul 20, 2005 at 4:22 pm

    Irandutharam padithen, Rasithen..especially Kurangayum ..”மனைவியின் குரல் “என்னப்பா சுரமா? உடம்பு சரியில்லையா?” என்றது.”

  • 6 செல்வராஜ் // Jul 21, 2005 at 11:38 am

    நன்றி விமலா. ஒவ்வொரு கருத்தும் ஊக்கத்தைக் கொடுக்கிறது.

  • 7 என் எண்ணக் கிறுக்கல்கள் - செல்வராஜ் » Blog Archive » ஜெர்மனிப் பக்கங்கள் - 2 // Oct 26, 2005 at 6:42 am

    […] ென்று வந்ததன் தாக்கத்தில் எழுந்த ஜெர்மன் கிராமத்தினளின் நேரிலிக் கதை இங் […]