இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

வெளிநாட்ல ஒரு கட்டுச் சோத்து விருந்து

June 11th, 2005 · 4 Comments

எங்கூர்ப் பக்கம் புள்ளைக மாசமா இருக்கறப்போ கட்டுச் சோத்து விருந்துன்னு ஒண்ணு போடுவாங்க. புளிச் சோறு, எலுமிச்சாங்காச் சோறு, தக்காளிச் சோறுன்னு விதம் விதமா கட்டுச் சோறு ஆக்கிக்கிட்டு பொண்ணூட்டுக்காரங்க பையனூட்டுக்கு வந்து விருந்து போட்டுச் சாப்பிட்டுட்டு அப்புறம் புள்ளையக் கூட்டிக்கிட்டு அவங்க வீட்டுக்குப் போயிடுவாங்க. பிரசவ காலத்தில அம்மா ஊட்டுக்குக் கூட்டீட்டுப் போற விருந்துன்னு வச்சுக்கலாம்.

சிலசமயம் வளையல் எல்லாங் கூடப் போடுவாங்க. ஆனா இதத் தவிரப் பெருசா ஒண்ணும் இருக்காது. (சந்தனத்தக் கன்னத்துல இலுக்கிக்கறது, ஊஞ்சலாடறது, பாட்டுப் பாடறது மாதிரி). சில ஊர்ல இதத் தான் வளகாப்புங்கறாங்க. அமெரிக்காவில பேபி ஷவர்னு ஒண்ணு வைக்கிறாங்க.

Baby Shower Balloons

இங்க இருக்கிற எங்கூர்ப் புள்ள ஒண்ணுக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னால கட்டுச்சோத்து விருந்து. ஊர்ல இருந்தா அம்மா அப்பா வந்து வேணுங்கறதச் செஞ்சு கூட்டிக்கிட்டுப் போவாங்க. இங்க என்ன பண்றதுன்னு ஒரு கொழப்பம். சரி, கட்டுச்சோத்து விருந்து, வளகாப்பு, பேபி ஷவர் எல்லாத்தையும் கலந்துர வேண்டியது தான்னு வச்சுக்கிட்டோம். நாங்க எங்க? அந்தப் புள்ளையும் அந்தத் தம்பியுமே பாவம் எல்லா ஏற்பாடும் பண்ணீட்டாங்க. ஒரு இந்தியச் சாப்பாட்டுக் கடையில பத்துப் பேரு இருக்கற மாதிரி தனியா ஒரு ரூம்பு கெடச்சுது. தெரிஞ்சவங்க, சொந்தமுன்னு கொஞ்ச பேர் சேந்துக்கிட்டோம்.

என்னவெல்லாம் பண்ணனும்னு நாலு பேத்தக் கேக்க, ஆளாளுக்கு ஒண்ணச் சொல்லீட்டாங்களாட்டருக்குது. அவியவியலுக்குத் தெரிஞ்சது சட்டமாயிருச்சு. இப்படித் தான் மொறைன்னு அர்த்தம் இல்லாம சிலதச் செய்ய வேண்டியதாப் போயிருதுன்னு நெனைக்கிறேன். என்ன ஏதுன்னு யோசிக்காம அப்புறம் மனுசங்க இந்த மொறைங்களுக்கு உறவ வெட்டிக்கரதுக்கும் உயிரக் கொடுக்கரதுக்கும் தயாராயிடராங்க. என்னவோ போங்க! சரி, எங்கியோ போயிட்டனாட்டருக்குது. வாங்க விருந்துக்கே போகலாம்.

ஒரு கையில பத்தும் இன்னொரு கையில பதினொன்னும் புது வளையல் போடணும்னு ஒரு ஆளு வளையல் கணக்கு மொறை ஒன்னச் சொல்லுச்சு. ஒத்தப் படையில கட்டுச் சோறு செய்யணும்னு இன்னொரு சட்டம் இன்னொரு ஆளு. சரி மூணு வகையாச் செய்யலாம்னு முடிவு. யாரோ ஒம்போது வகையாச் சோறு போட்டாங்களாம்னு ஒண்ணு சொல்லுச்சு. கட்டுச்சாதம்னா எனக்குப் பிடிக்கும்கறதால ‘அட, அஞ்சாச் செஞ்சுரலாமே’ன்னு நானொரு பக்கம் ஜொள்ளு உட்டுக்கிட்டு. இத்தனைக்கும் பொறவு அதெல்லாம் சாங்கியத்துக்குத் தான், சாப்பாடு கடயில தான்னுட்டாங்க! இருந்தாலும் ஊர உட்டு வரும்போது, சின்னச் சின்னச் சொப்புல கொஞ்சம் கலந்த சாதத்தத் தூக்கிக்கிட்டு வந்துட்டேன்.

Kattu Soru

அட இப்படி ஒரு வெழான்னா பலூன் கட்டி உடாம எப்படின்னு அதிலயும் கொஞ்சம். எப்படியோ போங்க, எல்லாம் கலந்த கூத்து நல்லாத் தான் இருந்துது. கொஞ்சம் முன்ன யோசிக்காமப் போயிட்டோம். இல்லாட்டி மாப்ள வேட்டி தான் கட்டோணும்னு அவரையும் மாட்டி உட்டுருக்கலாம். மொறையென்ன சட்டமென்ன சாமியென்ன? எல்லாரும் ஒண்ணாச் சேந்து சந்தோஷமா இருந்தாச் சரி தான்.

“மச்சானெல்லாம் பெரியவங்க; கால்ல உளுந்துக்கோ”ன்னு ஊர்ல சொல்லிட்டாங்களாட்டருக்குது. நெற மாசப் பொண்ணு கால்ல உளுந்ததுல மனசு நெகிழ்ந்து போச்சு. உணர்ச்சி பொங்கி வந்துருச்சு. “சந்தோஷமா இரும்மா”ன்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டுப் பக்கத்துத் தட்டுல இருந்து ஒரு பூவெடுத்துக் குடுத்தேன்.

“பொன்னு குடுக்கற இடத்துல பூவக் குடுக்கறீங்களே மச்சான்!” கிண்டலடிச்சுது பொண்ணு.

“பொன்னென்ன பூவென்ன, என் பொண்ணே வேணும்னாலும் வச்சுக்கோ” ன்னேன். வேடிக்கையாப் பேசிக்கிட்டு உணர்ச்சிகள மட்டுப்படுத்திக்கிட்டோம்.

ராசாவும் ராணியுமா இருக்கற இவங்களுக்கு இனியவளா ஒரு பொண்ணு பொறப்பா. அவ எல்லாம் நெறஞ்சு சந்தோஷமா இருக்கட்டும். நல்ல அழகான தமிழ்ப் பெயரா வைக்கணும்னு ரெண்டு யோசிச்சு வச்சுருக்காங்க. “Unique” அப்படிங்கறதுக்குத் தமிழ்லே என்னன்னு கேட்டிருந்தாங்க. கண்டுபிடிச்சாச் சொல்றேன்னேன். அழகு தமிழ்ப் பேரா uniqueக்குங்கற அர்த்தம் வர்ற மாதிரி யாருக்காச்சும் தெரியுமா? தெரிஞ்சாச் சொல்லுங்களேன்.

பொன்னுக் கொடுக்காத மச்சான் பேரு வக்கறகாச்சும் உதவினாருன்னு சொல்லுவாங்களேன்னு தான்!

Tags: கொங்கு · வாழ்க்கை

4 responses so far ↓

  • 1 AnionMass // Jun 12, 2005 at 7:12 am

    AnionMass எ. அனோனிமாசு சொல்வதாவது:
    |வேண்டிய அளவுக்குச் சிறப்பான பேச்சுத்தமிழிலே எழுதியிருக்கின்றீர்கள். தமிழ்க்குடிதாங்கி, குடியாதடாங்கி என்று இணையத்திலே தங்களைச் சிலேபி சிறுவர்கள், சட்டைகிழித்தான்சாமியார் விசிறிகள் சாடக்கூடும். எதற்கும் பாதுகாப்பாக இருங்கள்.

    unique என்பதற்குத் தனித்துவம், தனித்தன்மை என்று சொல்லலாம். ஆனால் அதனை ஒரு குழந்தையின் பெயராக்குவது எப்படியென எனக்குத் தெரியாது. பேசாமல் அமெரிக்கர்கள் வாயிலேயும் நுழைகின்ற மாதிரி தனி என்றே வைக்கலாமே?|

  • 2 வாசன் // Jun 12, 2005 at 11:45 am

    நண்பர் செல்வராஜ்:

    வட்டார வழக்கு ரொம்ப ஆழமாய் இல்லாமல், அளவுடன் உள்ளதால் படிக்க ஏதும் தளைகள் இல்லாமலிருக்கிறது!

    Unique என்பதை ‘ஒப்புவமை இல்லாத’ என்றும் பொருள் கொள்ளலாம் என்றால், ஒப்பிலாமணி எனும் ஆண் பெயர் ஞாபகத்திற்கு வருகிறது. இதனையே ஒப்பிலன் என சுருக்கலாம், சுந்தரவடிவேல் அவரது மகனுக்கு மாசிலன் என பெயர் வைத்துள்ளது போல…
    ஒப்பிலனை முன்வைத்து பெண்பெயர் ஒன்றை உருவாக்க முடியுமா..!! ஒப்பிலியப்பன் எனும் இந்து கடவுளர் பெயரும் நினைவுக்கு வருகிறது.

    இப்பதிவைப் படித்தவுடன் பழைய நினைவுகள் வர, 10 வருடத்திற்கு முன்னர் நடந்த வீட்டு வளைகாப்பு படங்களை திரும்ப ஒருமுறை பார்க்க நினைவு வந்தது. குழந்தை பிறப்பதற்கு முன் வளைகாப்பு, பிறந்த பின்னர் மற்றொரு காப்பு என நடத்தினார்கள், முதல் தடவையாக மகன் கையில் நகையை அணிவித்தனர். ஆசீர்வதித்தனர் உறவினர்கள், நண்பர்கள்.

  • 3 செல்வராஜ் // Jun 12, 2005 at 11:47 am

    அ.மாசு, உங்கள் பெயர் வித்தியாசமாகவும் நன்றாகவும் இருக்கிறது. கருத்துக்கும் அக்கறைக்கும் நன்றி. சாடுபவர்கள் சாடிக் கொண்டு போகட்டும். அப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று உணர்கிறேன்.

    Unique பெயராக்கம் சிரமம் தான் என்று எனக்கும் தோன்றியது. ‘தனி’ ஒரு வகையில் நன்றாகத் தான் இருக்கிறது. இங்கே உள்ளூரில் ஒருவர் வீட்டில் ‘சிரி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள், அது போலே.

    ‘ராசா ராணி’ இங்கே வந்து படிப்பார்கள். தெரிந்து கொள்ளட்டும். இடையில் வேறு யோசனைகள்/கருத்துக்கள் வருகிறதா என்று பொறுத்துப் பார்க்கிறேன். நன்றி.

  • 4 செல்வராஜ் // Jun 12, 2005 at 11:58 am

    அன்பு வாசன், உங்கள் ஊக்கத்திற்கும் கருத்துக்கும் நன்றி. நீங்கள் சுட்டிய படம் நல்ல குடும்பவுணர்வைத் தருகிறது. ‘ஒப்பிலா’ என்று இன்னொரு இழையைக் காட்டியதற்கும் நன்றி. பார்க்கலாம்.