இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

இனிய தோழி சுனந்தாவிற்கு…! – 1/02 –

June 25th, 1993 · 1 Comment

இனிய தோழி சுனந்தா,


பள்ளி இறுதி வருடங்களில் நாம் எவ்வளவு புத்தகங்கள்படித்தோம்!நினைவிருக்கிறதாஉனக்கு—அவற்றுள் பல கதைப்புத்தகங்கள் தான் என்றாலும், அதில் வருகின்றபாத்திரங்களை, நிகழ்ச்சிகளைச், சரி, தப்பு, இயல்பு என்று எப்படி எல்லாம்அலசி இருக்கிறோம். உன் வீட்டில், என் வீட்டில், திண்டல் மலை அடிவாரத்தில்,ஐஸ் கிரீம் கடைகளில்,12-ஆம் நம்பர் பேருந்தின் பின் சீட்டில், மாரியம்மன்கோவில்திருவிழாவின் போது வந்த கறும்புச் சாற்றுக் கடைகளில், என்றுஎவ்வளவு இடங்களில் இது பற்றி விவாதித்துஇருக்கிறோம்.



சுனந்தா… ஒரு வகையில், இவை எல்லாம் கூட நமக்கு நிறையக் கற்றுத் தந்திருக்கின்றன. சாண்டில்யனின் சரித்திரக் கதைகளானாலும்

சரி, சுஜாதா, பாலகுமாரன் போன்ற இந்தத் தலைமுறையினரின் கதைகளானாலும் சரி, எல்லாவற்றில் இருந்தும் நமக்கு வேண்டியவற்றை

எடுத்துக் கொள்ளும் மன முதிர்ச்சி நம்மிடையே இருந்தது.

உடன் பிறந்தோர் எவரும் இல்லாத எனக்கு, உனது நட்பு அந்தக் குறையின்றிச் செய்ததை நீ அறிவாயோ? தனியாய் இருக்கும் போது,

சில நாட்கள், `அக்கா…சுனந்தாக்கா…’ என்று கூறிக் கற்பனை செய்து கொண்டிருந்திருக்கிறேன். அந்த நினைவில் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்ப, அந்த சகோதரப் பாசத்திற்காக ஏங்கி இருக்கிறேன். எனக்காக என்று நீ செய்து வரும் சிறு சிறு காரியங்களிலும் எவ்வளவு அன்பு காட்டினாய் என்று எண்ணி நெகிழ்ந்து போயிருக்கிறேன் !

நீ எழுதுகிற கடிதங்களில் ஓரத்தில் ஒட்டி வைக்கின்ற குட்டிப் பூ, “smile” என்று வரைந்து அனுப்புகிற மொட்டைத் தலை, “இங்கிவனை யான்பெறவே என்ன தவம் செய்து விட்டேன்” என்று எழுதி வைக்கின்ற பாரதி கவிதை, எனக்காக என்று கோவிலுக்குச் சென்று அனுப்புகிற ஐயப்பன் பிரசாதம், எளிமையான பிறந்த நாள் வாழ்த்து, ‘நல்லா சாப்பிடு, தூங்கு, எப்போதும் சந்தோஷமாய் இரு’, என்கிற அறிவுரை, எனக்குப் பிடிக்கும் என்பதால் அனுப்பிய Campco White Chocolate அவ்வப் போது பத்திரிக்கைகளில் வருகிற, உனக்குப் பிடித்த, எனக்குப் பிடிக்கும் என்று தோன்றிய கவிதைத் துண்டுகள்—இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்—எண்ணற்றுப் போய்விடும்.

இவை எல்லாம் எனக்கு எவ்வளவு உற்சாகம் அளிக்கின்றன தெரியுமா ? சுனந்தா… சென்ற முறை அனுப்பி இருந்தாயே—விகடனில் வெளி வந்த பரசுராம் பிஸ்வாசின், ‘புதிய ஆத்திச் சூடிக் கதைகள்’, ஆகா, எவ்வளவு அருமையாக இருந்தது தெரியுமா? எப்படி எனக்குப் பிடிக்கும் என்பதை இன்னும் இவ்வளவு சரியாகக் கணிக்கின்றாய் ! நீண்ட நாட்களுக்குப் பின் நான் படித்த ஒரு நல்ல புத்தகம். அது கூட முக்கியமல்ல. அது வந்த நேரம் தான் முக்கியம். சோம்பி, உடலும் மனமும் சோர்வுற்று இருந்த நேரத்தில் அது வந்து எனக்குப் பெரும் புத்துணர்ச்சி தந்தது.

வெகு தூரத்தில் இருந்தும் கூடச் சரியான நேரத்தில் சரியானவற்றை இன்னும் எப்படிச் செய்கிறாய் பெண்ணே !!

பிறகு தொடர்வேன்,

அன்புடன்
செல்வராஜ்.

Tags: கடிதங்கள்

1 response so far ↓