இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

ஓவியக் கண்காட்சி ஒன்று

May 2nd, 2005 · 5 Comments

ஓவியக் கண்காட்சி பார்க்கவென்று பெரிதாக ஒரு ஆர்வத்துடன் எங்கும் சென்றதில்லை. பள்ளி கல்லூரி நாட்களில் ஒருமுறை திருவனந்தபுரத்துக்குச் சுற்றுலா போயிருந்த போது எப்படியோ ‘மழைக்கு ஒதுங்கி’ ஒரு ஓவியக் கண்காட்சிக்குள் நுழைந்துவிட்ட கும்பலில் நானும் ஒருவனாய் இருந்துவிட்டேன். பொழுதைப் போக்கியவண்ணம் உள்ளே அலைந்து கொண்டிருந்தேன். ஒரு பக்கத்தில் இருந்த ஓவியக் கூட்டம் அப்படியே பிடித்து நிறுத்தி வைத்து விட்டது. என் அசிரத்தையைப் போக்கி ஆர்வத்தைத் தூண்டியது ஓவியர் ரவிவர்மாவின் எண்ணெய் வண்ணக்கலவைப் படங்கள். பிரகாசமான வண்ணங்களில் பலவகை இந்தியப் பெண்களின் முகங்களை ஒரு உயிரோட்டமாய்க் கொண்டுவந்திருந்ததைக் கண்டபோது ஓவியங்களின் சக்தி மனதில் இன்னும் ஆழமாகப் பதிந்தது. அதிலும் அந்தப் படங்கள் வரையப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு மேலிருக்கும் என்று அறிந்த போது காலத்தினால் அழியாத கலைக்கு ஒரு உதாரணமாக நின்று வியப்பை மேலிடச் செய்தது.

Ravi Varma Orchestra: (Copyright © 1996-2004, Kamat's Potpourri: http://www.kamat.com)

ரவி வர்மா பற்றி இணையத்தில் படித்த சில விவரங்கள் கீழே. ராஜா ரவி வர்மா (1848-1906) கேரளத்தில் கிளிமனூர் அரண்மனையில் பிறந்து வளர்ந்தவர். ஏழு வயதில் அரண்மனைச் சுவரில் கிறுக்கிக் கொண்டிருந்தவரைப் பார்த்த அவரது மாமா(?) ராஜராஜ வர்மா அவரது ‘திறமையை’ (!) மெச்சி ஓவியக்கலையில் ஆரம்பப் பாடங்கள் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். பதினாலு வயதில் திருவிதாங்கூர் மகராஜா ஆயில்யம் திருநாள் தன் அரண்மனை ஓவியர் ராமசாமி நாயுடுவிடம் கூட்டிச் சென்றார். அங்கே அவர் நீர்வண்ண ஓவியங்கள் வரையக் கற்றுக் கொண்டார் என்றும் பிறகு மூன்றாண்டுகள் கழித்து தியோடர் ஜென்ஸன் என்னும் ஆங்கிலேயர் ஒருவர் எண்ணெய் வண்ண ஓவியங்கள் வரையக் கற்றுக் கொடுத்தார் என்றும் குறிப்புக்கள் கூறுகின்றன. ரவிவர்மாவின் ஓவியங்கள் பெரும்பாலும் இந்தியப் பெருங்காப்பியப் பாத்திரங்களையும் இந்தியப் பின்புலத்தையும் வைத்தே அமைந்திருந்தாலும் அவரை இந்தியக் கலாச்சார ஓவியர் என்று ஏற்றுக் கொள்வதில் பலருக்கு உடன்பாடில்லை. 1873ல் சென்னை ஓவியக் கண்காட்சியிலும், வியென்னா கண்காட்சியிலும் பரிசுகள் பெற்ற பிறகு உலகம் அவரை உணர்ந்து கொள்ளத் தொடங்கியது. அவரது பிற்காலச் சிறப்பிற்கும் புகழுக்கும் இளவயதின் ஆர்வமும் பயிற்சியும் பெரும் காரணிகளாய் இருந்திருக்க வேண்டும். அவையே அடித்தளம் இட்டிருக்க வேண்டும்.

ஓவியங்களின் பால் எனக்கு ஈர்ப்பு இல்லாமலேவும் இருந்ததில்லை. வருடம் தவறாமல் பள்ளியில் ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு ‘பங்குகொண்டமைக்கு’ எனச் சான்றிதழ் வாங்கி இருக்கிறேன்! ஒரு வருடம் மட்டும் பாட்டுடைத்தலைவன் பாரதியின் உருவை முண்டாசோடு வரைந்து ஒரு கவிதையை மேற்கோளாய் எழுதி வைத்த போது முதல் பரிசு கொடுத்தார்கள். அது தவிர, வார இதழ்களில் வரும் மாருதி, லதா, மசே, ஜெ படங்களைச் சில சமயம் ஆழ்ந்து கவனித்து அதில் சிலவற்றை நானாக வரைய முற்பட்டுக் குமுதத்தைப் பையில் வைத்துக் கொண்டு பள்ளியில் திரிந்திருக்கிறேன். ஒரே இளம்பெண் படங்களாய் வரைகிறானே என்று பெரிய வகுப்பு மாணவர்களின் கிண்டலுக்கும் கூட ஆளானதுண்டு.

அது தவிர அவ்வப்போது ஏதேனும் வரைய முற்பட்டதுண்டு. ஆனால், கால ஓட்டத்து நெரிசலில் வளர்த்துக் கொள்ளாமல் விட்டுவிட்ட கலைகளில் அதுவும் ஒன்றாகிப் போனது. சமீபத்தில் பிக்காஸோ கூறியதாய் ஒன்றைப் பார்த்தேன். உண்மை தான் என்று தோன்றியது.

Every child is an artist. The problem is how to remain an artist when he (or she) grows up – Pablo Picasso

இந்தச் சிக்கலில் சிக்கிக் கொள்ளாமல் தனது கலையை வளர்த்துக் கொள்ள ரவி வர்மனால் முடிந்திருக்கிறது.

* * * *

இரண்டு வாரங்களுக்கு முன்னர் உள்ளூரில் ஒரு ஓவியக் கண்காட்சிக்குச் செல்ல நேர்ந்தது. அதிக நேரம் வேண்டியதில்லை, இரண்டு மணிக்கும் குறைவான நேரமே போதும் என்றதால் குடும்ப சகிதம் ஒரு ஆர்வத்துடனும் சென்றேன். ஒரு நீண்ட உள்வாசலின் இரு புறமும் சுவற்றில் ஓவியங்கள் பலவற்றை மாட்டி வைத்திருந்தார்கள். பெரிதாய் எதிர்பார்ப்பில்லாத போதும், இந்த ஓவியங்களும் என்னைக் கவர்ந்தன. ரவிவர்மன் ஓவியத் தரமாய் இல்லாவிட்டாலும், இந்த ஓவியங்களில் கலந்திருந்த பல வண்ணக் கலவைகளும், சிறு சிறு நுணுக்கங்களும், கற்பனைத் திறனும், உணர்ச்சிகளின் வெளிப்பாடும் கவர்ந்து என்னை ஒரு ஈடுபாட்டோடு பார்க்கச் செய்தன. ஒரு ஓவியர் என்றில்லாமல் பலரின் ஓவியங்களைத் தெரிவு செய்து மாட்டி வைத்திருந்தார்கள். கீழேயே பெயர்க் குறிப்புக்களும் இருந்தன. நிறைய ஓவியங்கள் நவீன ஓவியங்கள் போலிருந்தன. இந்த இடத்தில் ஒரு உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். நவீன ஓவியங்கள் பெரும்பாலும் எனக்குப் புரிந்ததில்லை. நவீனக் கதைகளையும் கவிதைகளையும் போலவே. புரிந்து கொள்ள வேண்டிய முயற்சியையும் நேரத்தையும் நான் செலவிடுவதில்லை என்பதையும் ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

இந்த ஓவியக் காட்சியில் குறிப்பாய் ஒன்றைப் பார்த்து ஆவல் மிகுதியில் கேட்டேன்,

“இதில் என்ன வரைந்திருக்கிறீர்கள்?” என்று. வரைந்த ஓவியர்களும் அருகிலேயே தான் இருந்தார்கள்.

Roxbury Art Show

“நன்றாகப் பாருங்கள். இதில் ஒரு தந்தையும் மகளும் இருக்கிறார்கள்” என்ற பதில் வந்தது. “தந்தையுடன் ஒரு பெண் விளையாடிக் கொண்டிருக்கிறாள். அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு தொடை மீது ஏறிக் குட்டிக் கரணம் அடிக்கும் முயற்சியில் தொங்கிக் கொண்டிருக்கிறாள்” என்று பதில் கிடைத்தது.

“அட ஆமாம். அங்கு கொடுவாள் மாதிரி இருப்பது அந்தப் பெண்ணின் தலைமுடி”, என்று எனக்கும் புரிய ஆரம்பித்தது.

“நல்லா வரையறீங்களே! என்னையும் ஒரு படம் வரைந்து கொடுப்பீர்களா?” என்றேன்.

“ஓ! தாராளமாக. ஆனால் நீங்கள் அசையாதிருக்க வேண்டும்”.

தலை மீது கை வைத்து அமர்ந்த விதமே நன்றாய் இருக்கிறது என்று அப்படியே என்னை அமரச் செய்து, வீட்டிற்கு வந்த பிறகு வரைந்து கொடுத்தார் ஓவியர் நிவேதிதா! அவரது ஆரம்ப நிலைப் பள்ளியின் ஓவியக் கண்காட்சிக்குத் தான் சென்று வந்திருந்தோம். KG வகுப்பு முதல் நான்காம் நிலை வகுப்பு வரையில் இருந்த மாணவர்கள் வரைந்ததைக் காட்சிப் படுத்தியிருந்தார்கள். ஓவிய ஆசிரியைக்கு நன்றி கூறச் சென்றோம். அவரோ, இது போன்ற ஓவியர்களோடு வேலை செய்யும் வாய்ப்பைத் தந்தமைக்கு எங்களுக்கு நன்றி என்று கூறினார்!

Appa Portrait

கோமாளியாய் என்னை வரைந்தாலும், குரங்கு மாதிரி மேலே தொற்றிக் கொண்டு குட்டிக் கரணம் போட அனுமதித்த நேரங்கள் கூடக் கற்பனையைச் செதுக்க உதவுகிறது என்றொரு நிறைவு பின்னணியில் நெஞ்சில் உண்டாகிறது. இந்தக் கோமாளிப் படமும் கூடப் பெருமை கொள்ள வைத்து வலையில் போட்டுக் கொள்ள வைக்கிறது!

Tags: கண்மணிகள் · பொது · வாழ்க்கை

5 responses so far ↓

  • 1 prakash // May 2, 2005 at 1:59 am

    //கோமாளியாய் என்னை வரைந்தாலும், குரங்கு மாதிரி மேலே தொற்றிக் கொண்டு குட்டிக் கரணம் போட அனுமதித்த நேரங்கள் கூடக் கற்பனையைச் செதுக்க உதவுகிறது என்றொரு நிறைவு பின்னணியில் நெஞ்சில் உண்டாகிறது. இந்தக் கோமாளிப் படமும் கூடப் பெருமை கொள்ள வைத்து வலையில் போட்டுக் கொள்ள வைக்கிறது//

    நூற்றுக்கு நூறு உண்மை. இம்மாதிரி குட்டி குட்டி குதூகலங்களுக்கு ஈடு இணை கிடையாது.

  • 2 பாலாஜி-பாரி // May 2, 2005 at 7:29 pm

    arumaiyaana pathivu. Nandrigal Selva.

  • 3 சுந்தரவடிவேல் // May 2, 2005 at 9:22 pm

    ஆ! நிஜமாகவே அந்தக் குட்டிக்கரணப் படம் யாரோ “பெரிய” ஓவியர் வரைந்ததாக்கும் என நினைத்தேன். அதிலே நம்மூர் முத்திரை/வாசம் இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டே போனால் இப்படிப் போகிறது கதை. மாதா, பிதா, குரு, குட்டி எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

  • 4 DJ // May 2, 2005 at 9:38 pm

    அழகாய் இருக்கின்றன ஓவியங்கள். உங்கள் படமும் கூட, செல்வராஜ் :-). வாழ்த்துக்கள் உங்கள் குழந்தைக்கு. அவர் வரைந்தவற்றை/வரையப்போகின்றவற்றை ஒரு இணையதளத்தில் போட்டு சேமிக்கலாமே?

  • 5 செல்வராஜ் // May 2, 2005 at 11:45 pm

    பிரகாஷ், பாரி, சுந்தர், டீஜே நன்றி.
    டீஜே போன வருடம் தங்கமணியும் இன்னும் சிலரும் இந்த யோசனையைச் சொன்னார்கள். அப்போதிருந்து யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இதுவரை செயல்படுத்தாமல் இருந்துவிட்டு இப்போது தான் செய்ய ஆரம்பித்திருக்கிறேன்.