இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

இசையின் ஒலி (The Sound of Music)

April 26th, 2005 · 12 Comments

எவ்வளவு முறை பார்த்தாலும் மீண்டும் சுண்டி இழுக்கிற படம். அருமையான கதை. படப்பிடிப்பு. எல்லா அம்சங்களும் நிறைந்த உணர்ச்சி பூர்வமான சித்தரிப்பு. பார்த்து முடித்த பிறகும் நீண்ட நேரம் ரீங்காரமிட்டுக் கொண்டு நெஞ்சில் நீங்காதிருக்கும் இனிய இசையும் பாடல்களும். நடிக நடிகையர் எல்லோருடையதுமான அளவான நடிப்பு.

இது விமர்சனமோ சிறுகுறிப்போ கதைச்சுருக்கமோ எல்லாம் கலந்த என்னவோ ஒன்று. சில மாதங்களுக்கு முன்னர் கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி தொலைக்காட்சி நிலையம் ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட இந்த அருமையான படத்தை மீண்டும் பார்க்க நேரிட்டபோது எழுத ஆரம்பித்த பதிவு இது. எனது சுறுசுறுப்பில் சுமார் நான்கே மாதத்தில் வெளிவருகிறது!!

Picture Courtesy: http://en.panoramatours.com/soundofmusic/julie.htm

ஆஸ்திரிய நாட்டுப் பின்புலத்தில் அமைந்த கதை. படத்தின் நாயகன் வான் டிராப் மனைவியை இழந்து ஏழு குழந்தைகளைத் தானே தனியாக வளர்க்கும் ஒரு ஓய்வுபெற்ற கடற்படைத் தலைவன். வீட்டில் கண்டிப்பும் கறாருமாக ஒரு படையைப் போல நடத்துவதும், விளையாட்டிற்கெல்லாம் நேரமில்லாமல், எப்போதும் ஒழுக்கமாக இருப்பதே முக்கியம் என்று வேறு எதற்கும் முக்கியத்துவம் கொடுக்காத ஒரு கண்டிப்பான தளபதி. குழந்தைகளை வளர்க்க, பார்த்துக் கொள்ள ஒரு ஆள் தேடி அருகில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு ஆள் அனுப்புகிறார். துறவறம் மேற்கொள்ளப் பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கும் மரியாவை வாழ்வனுபவம் பெற்று வா என்று அங்கு அனுப்பி வைக்கிறார் தலைமைப் பெண்.

மரியா… ஜூலி ஆண்ட்ரூஸ்’ற்காகவே அமைந்தது போன்றவொரு இனிமையான பாத்திரம். எப்போதும் உற்சாகமும் துள்ளலும் நிறைந்த ஒரு சுதந்திரப் பறவை அவர். ஆஸ்திரிய நாட்டுப் பனிமலைப் பிரதேசங்களின் பின்னணியில், ஏற்ற இறக்கங்கள் நிறைந்த பசும்புல் தொடர்வெளிகளில் உற்சாகமாகப் பாட்டுப் பாடி இயற்கையை ரசித்திருக்கும் காட்சியில் நமக்கு அறிமுகமாகிறார். சிறு நீர்த்தேக்கங்களில் கல்லெறிந்து உள்ளத்தைக் கொள்ளை கொண்டு போகிறார். பசுமையின் இடையே நீர்நிலைகளின் கரையிலே கட்டப்பட்ட மாட மாளிகைகள் கூட அழகு நிறைந்து ஒரு மாயையை உண்டாக்குகிறது.

“மரியா போன்ற சிக்கல் தீர்ப்ப தெப்படீ ?
நிலவின் ஒளியைக் கையில் அடைப்ப தெப்படீ ? ”

தேவனின் சேவையில் ஈடுபட எண்ணித் தேவாலயத்தில் சேர்ந்திருக்கும் மரியா, கேப்டன் வான் டிராப் வீட்டிற்குச் செல்வது கதையை அடுத்த தளத்திற்கு முடுக்கிவிடுகிறது. எல்லோருக்கும் ஒரு திருப்பு முனை. இதற்கு முன்னர் தம்மைப் பார்த்துக் கொள்ள வந்த பத்துப் பன்னிரெண்டு பெண்மணிகளைத் துடுக்குத் தனம் செய்து வாண்டுகள் விரட்டி அடித்து விடுகின்றன. மரியாவிடமும் அந்தச் சேட்டைகளைக் கையாள முற்பட, அதை கனிவாக எதிர்கொண்டு அவர்களைக் காட்டிக் கொடுக்காமல், எரிச்சலடையாமல், இனிய குழந்தைகளின் இது போன்ற நடவடிக்கைகளுக்கு உண்மையான காரணம் அவர்களுக்குத் தந்தையின் கவன மற்றும் கவனிப்புக் குறை தான் என்பதைக் உணர்ந்தறிகிறார்.

தந்தையோ தனது பணிகளில் விலகியிருக்கிற எஞ்சி இருக்கிற சில நாட்களில் வியன்னாவில் இருக்கிற ஒரு பேரோன்னஸைப் (பிராட்டியைப்) பார்க்கச் சென்றுவிடுகிறார். அங்கே இருக்கும் செல்வந்தப் பெண்மணியான எல்சாவிற்கு வான் டிராப்பைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருக்கிறது. வான் ட்ராப் வெளியூர் சென்றுவிட்ட சமயம், சிறையில் இருப்பது போல் கிடந்த குழந்தைகளின் வாழ்வில் விளையாட்டையும் வேடிக்கைகளையும் சிறு சிறு ஆசைகளையும் புகுத்தி அவர்களின் வாழ்வில் இசையைக் கூட்டுகிறார் மரியா. பதினாறு வயது லீசலின் முதற்காதற் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் தோழியாகவும் அமைகிறார்.

டோ ரே மீ ஃபா சோ லா டீ என்று தாளம் போட்டுப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கிறார். தலையை ஆட்ட வைக்கிற இசை. இப்படிச் சொல்லிக் கொடுத்தால் கர்நாடக இசையைக் கூடக் கற்றுக் கொள்ள நமக்கும் ஆர்வம் தலை தூக்குமே! குதிரை வண்டிச் சவாரிகளும், குரங்குகளாய் மாறிச் சாலையோர மரங்களில் தொங்குவதும், பழைய திரைச்சீலையைக் கிழித்து அதில் விளையாடவென்று துணிமணிகள் தைத்துக் கொள்வதும், கொஞ்சம் கொஞ்சமாகக் குழந்தைகளின் மனதில் இடம் பிடித்துக் கொள்கிறார் மரியா. நமது மனதிலும்.

வெளியூரில் இருந்து வந்து திரும்பி வந்த கேப்டன் ஒழுக்க சீலர்களாய் இருக்க வேண்டிய தன் குழந்தைகள் இப்படிக் கசமுசாவென்று துணிகளை அணிந்து கொண்டு, அழுக்கு மூட்டைகளாகி, படகோட்டி வந்து நீரில் விழுந்து எழுந்ததைப் பார்த்ததும் பொறுமை இழக்கிறார். அதிலும், உடன் வந்த எல்சா பிராட்டியிடம் நறுவிசான தன் குழந்தைகளை அறிமுகம் செய்துவைக்கலாம் என்கிற தன் எண்ணத்தில் மண் விழுந்த நிலையில் இதற்கெல்லாம் காரணம் மரியா தான் என்று அவர் மீது அந்தக் கோபத்தையும் எரிச்சலையும் காட்டுகிறார். மரியாவின் சேவைகள் போதும் என்று திரும்பித் தேவாலயத்திற்கே செல்லும்படி பணிக்கிறார்.

தான் அடிக்கும் விசில் சத்தத்திற்குப் பதில் சொல்லும் குழந்தைகளையும் பணியாட்களையுமே பார்த்திருந்த அந்தக் கடற்படைத் தலைவனிடம் தன் மனதிற் பட்டவற்றைப் பட்டென எடுத்து வைத்து எதிர்வாதம் செய்கிறார் மரியா. குழந்தைகள் தந்தையின் அன்புக்காக ஏங்குகின்றன, அவர்களைக் கொஞ்சம் கவனியுங்கள் என்று அறிவுரை சொல்கிறார். இந்தக் காரசாரமான வாக்குவாதத்தை எதிர்பார்த்திராத வான் டிராப் சற்று தன் நிலையில் இருந்து ஆடித் தான் போகிறார். இந்தச் சூழலை எங்கிருந்தோ வந்த இனிய கானம் கலைக்கிறது. வேறு யாருமல்ல. வான் டிராப்பின் குழந்தைகள் தாம் வந்திருக்கும் விருந்தாளியை மகிழ்விக்கச் சேர்ந்திசை அளிக்கிறார்கள்.

மரியா அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிற பாட்டைப் பாடுகிறார்கள். மொழியின் மீதும் தாய்மண்ணின் மீதும் அளவுகடந்த பற்று வைத்திருக்கும் வான் டிராப்பிற்குப் பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. தனது குழந்தைகளா இவ்வளவு அழகாகப் பாடுகிறார்கள் என்று நம்பவே முடியவில்லை. இதற்குக் காரணமான மரியாவிற்கு நன்றி சொல்லி, மன்னிப்புக் கேட்டு, அங்கேயே இருக்கும்படி கேட்டுக் கொள்கிறார். குழந்தைகளோடு தானும் சேர்ந்து “ஈடுல்வாய்ஸ்… ஈடுல்வாய்ஸ்” என்கிற ஒரு ஆஸ்திரிய மலரை ஒட்டிக் கிட்டார் ஒலியுடன் பாட்டுப் பாடுகிறார்.

“ஈடுல்வாய்ஸ்… ஈடுல்வாய்ஸ்…
தினமுங் காலை வணக்கஞ் சொல்கிறாய்…”

Picture Courtesy: http://tv.zap2it.com/images/shows/s/soundofmusic/soundofmusic_big_005.jpg

அந்தப் பாடலைத் தொடர்ந்து குழந்தைகளோடு சேர்ந்து மரியா வழங்கும் பொம்மலாட்டப் பாடலும் அருமை. “தனித்திருக்கும் ஆட்டுக் கூட்டம் ஒன்று…” பாடலும் காட்சியமைப்பும் சிறு குழந்தைகளைக் கவர்வது உறுதி. “ஓடலே ஓடலே ஓடலேகி..”. அருமையாகப் பாடுகிறார்களே என்று எல்சாவுடன் உடன்வந்த நண்பர் பாராட்டுகிறார். சால்ஸ்பர்க் கிராமிய விழாவில் பாடவேண்டும் என்ற அவரது கோரிக்கையை நிராகரித்துவிடுகிறார்.

வான் டிராப்பின் நண்பர்களை எல்லாம் அறிமுகம் செய்து கொள்வதற்கு வீட்டில் ஒரு குழுமலுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று எல்சா கேட்டுக் கொள்ள அதற்கு ஏற்பாடு செய்கிறார் வான் டிராப். இந்தக் குழுமலில் சில முக்கியமான நிகழ்வுகள் ஏற்படுகின்றன. கலந்துரையாடலும் அளவளாவலும் உள்ளே நடந்து கொண்டிருக்க, வெளியே தனியிடத்தில் குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் மரியா. அதைக் கண்டு கவரப்பட்டு வான் டிராப் அவருடன் ஆஸ்திரிய நாட்டு நடனம் ஆடுவதில் ஈடுபடுகிறார். மீண்டும் அருமையான இசையும், நடனமும். நிலவொளியில் ஆட்டம் இருவர் உள்ளத்திலும் ஏதோ ஒரு உணர்ச்சியைத் தூண்டி விடுகிறது. சட்டென்று தன்னிலை உணர்ந்தவர்களாய் நிகழ்விற்கு வந்தவர்கள் ஆட்டத்தை நிறுத்தி விடுகிறார்கள். கொந்தளித்து மேலெழுந்த உணர்ச்சிகள் மரியாவின் முகத்தில் செம்மை படரச் செய்கிறது. எல்சாவும் இதைக் கவனிக்கத் தவறவில்லை.

ஜெர்மானியர்கள் வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றும் அப்போது அந்த ஆஸ்திரியக் கொடியை வீட்டில் இருந்து எடுத்து விடுவது நல்லது என்று கிண்டி, வான் டிராப்பின் தேசப்பற்றைக் கிளறி ஒரு கிளர்ச்சியையும் உண்டுபண்ணிவிட்டுப் போகிறார் ஒருவர்.

மீண்டும் எல்லாக் கவனத்தையும் திருப்பிக் குழந்தைகளின் ‘குட்பை… குட்நைட்…’ பாட்டு. “குக்கூ… குக்கூ…”

தனது ஆள் இன்னொரு பெண்ணுடன் நெருக்கமாக ஆடிய நடனத்தைப் பார்த்து விட்ட எல்சாவின் மனதில் ஒரு பயமும் பொறாமையும் ஏற்படுகிறது. ‘இது ஏதடா நமக்கு வம்பாயிற்றே’ என்று மெதுவாக மரியாவைக் கிளப்பி விட்டுத் திரும்பத் தேவாலயத்திற்குச் செல்ல வைத்து விடுகிறார். “நீ உண்மையிலேயே இறைத்தொண்டு செய்ய வேண்டுமானால் அங்கு போய் விடுவது தான் நல்லது. இங்கு ஒரு மனிதருடன் காதல் வயப்படுகிறாய் போலிருக்கிறதே” என்று மரியாவின் மனதில் வலுவற்ற பகுதியில் கைவைக்கிறார். மனதுள் பெருங்குழப்பம் ஏற்பட, சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி ஓடிவிடுகிறார் மரியா. அப்படிப் போய்விட்ட மரியாவின் மீது வான் டிராப்பிற்குக் கோபம். “போகட்டும் விடு” என்று இருந்து விடுகிறார்.

குழந்தைகளால் அப்படி இருக்க முடியவில்லை. மரியாவைச் சந்திக்கச் செல்கின்றனர். அவர்களைப் பார்க்க மறுத்துவிடுகிறார் மரியா. தனது மனது கட்டிழந்து விடும் என்று பயம். அவருடைய வழக்கமான துள்ளலையும் உற்சாகத்தையும் காணவில்லையே என்று இல்லத் தலைவி மரியாவை அழைத்துப் பேசுகிறார். மீண்டும் வான் டிராப் வீட்டிற்குப் போகுமாறு கூறுகிறார். உண்மையிலேயே காதல் இருந்தால் அதையும் பரிசோதித்து அனுபவித்து வா என்று அனுப்பி விடுகிறார். உண்மையான அன்பையும் காதலையும் மறுத்துவிட்டு வந்து செய்யும் சேவையைக் கடவுள் விரும்புவதில்லை என்று அனுப்பி வைக்கிறார்.

இதற்குள் வீட்டில் தனது நிலையை உறுதிசெய்துகொள்ளத் திட்டமிடும் எல்சா தங்களது திருமணத்திற்கு வான் டிராப்பை ஒத்துக் கொள்ளச் செய்கிறார். ஒரு திகைப்புடனும் தயக்கத்துடனும் குழந்தைகள் அந்தச் செய்தியை ஏற்றுக் கொள்கின்றனர். திரும்பி வந்த மரியாவைப் பார்த்த குழந்தைகள் பெரும் உற்சாகமடைந்தாலும், திருமணச் செய்தி கேட்ட மரியா “ஓ” வென்று வாடி விடுகிறார்.

இந்தச் சமயத்தில் படத்தின் காட்சி அமைப்பு அருமை. இரவில் உறக்கம் வராமல் ஆழ்ந்த சிந்தனையோடு உள்ளே போராட்டமும் வெளித்தோற்றத்திற்கு அமைதியுமாக வெளியே உலாத்திக் கொண்டிருக்கிறார் மரியா. பின்னணியில் நிலவொளியின் வெளிச்சம் கசிந்து குளத்துநீரில் தெறித்து வருகிறது. தானும் உறக்கம் கெட்ட வான் டிராப் மேலிருந்து மரியாவைப் பார்த்த வண்ணம் இருக்கிறார். அவரது பின்னணியில் செயற்கை வெளிச்சத்தின் செந்நிறம். அவருடைய மனதின் கோபமெல்லாமும் உருகிக் காதல் அந்த நிலவொளி போலக் கசிகிறது. மீண்டும் இதனைக் கவனித்து விட்ட எல்சா, ஓட்டை விழுந்த மதகை விரைவில் அடைக்க வேண்டும் என்பது போலத் தமது திருமணத்தைப் பற்றிப் பேசிக் கவனத்தை ஈர்க்க முயல்கிறார். இடையிலேயே தடுத்து நிறுத்துகிறார் வான் டிராப். அவரது உள்ளக் காதல் பொங்கி வழிந்துகொண்டிருக்கிறது.

“இனிப் பயனில்லை எல்சா” என்று தன்னால் அவரைத் திருமணம் செய்துகொள்ள் முடியாது என்று வெளிப்படையாகக் கூறிவிடுகிறார். அதை ஒரு பெருமூச்சோடு கௌரவமாக ஏற்றுக் கொள்கிற இடத்தில் எல்சாவும் நம்மைக் கவர்கிறார். பிறகு மரியாவிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறார் வான் டிராப். வெளியே தோட்டத்தில் இருக்கிற ஒரு மணி மண்டபத்தில் சந்தித்து உரையாடுகிறார். காதல் வசத்தில் மீண்டும் கனவு போல் ஒரு பாடலும் ஆடலும். முன்பு அதே இடத்தில் குழந்தைகளில்(!) மூத்தவளான பதின்ம வயதினளின் முதல் காதலும் முதல் முத்தமும் அரங்கேறிய இடம்.

குழந்தைகளும் இந்தச் செய்தியைச் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கின்றன. விரைவில் திருமணமும் அதன் தொடர்ச்சியாகத் தேனிலவுக்கும் தலைவனும் தலைவியும் சென்று விடுகின்றனர். எதற்கும் இருக்கட்டும் என்று எல்சாவின் நண்பர் வான் டிராப் குடும்பத்தினரின் பெயரைச் சால்ஸ்பர்க் கிராமிய விழா அழைப்பிதழில் சேர்த்துவிடுகிறார். தேனிலவு முடிந்து திரும்பி வரும் வான் டிராப்பிடம் சொல்லிச் சம்மதிக்க வைத்துவிடலாம் என்று எண்ணுகிறார். ஆனாலும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை.

இதனிடையே ஆஸ்திரிய நாட்டைக் கைப்பற்றிய ஜெர்மானியர் படை உள்ளே வருகிறது. அவர்களுக்காகப் பணி புரியச் சொல்லி ஆஸ்திரியர்களுக்கு உத்தரவும் வருகிறது. மறுப்பவர்கள் சிறைப் பிடிக்கப் படுவர். ஜெர்மானியர்களுக்கு வேலை செய்ய வான் டிராப்பின் தன்மானமும் தேசப் பற்றும் இடம் கொடுக்கவில்லை. தன்னை வரச்சொல்லி ஒரு தந்தி வருகிறது. மறுத்தால் என்ன நடக்கும் என்று தெரியும் என்பதால், இரவோடு இரவாக, வீடு செல்வம் எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் குடும்பத்தோடு வெளிநாடு (ஸ்விஸ்) சென்று விடலாம் என்று கிளம்புகிறார்கள். வீட்டுப் பணியாளர்களுக்கும் தெரிய வேண்டாம் என்று சிறிது தூரம் சிற்றுந்தைக்கூட ஓட்டாமல் தள்ளிக் கொண்டு வருகிறார்கள்.

இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்தது போலவே காவலர்கள் (ஜெர்மானியர்களை ஏற்றுக் கொண்ட ஆஸ்திரியர் சிலர்) எதிர்கொள்கின்றனர். எங்கேயப்பா குடும்பத்தோடு கிளம்புகிறீர்கள் என்ற கேள்விக்குச் சமயோசிதமாக சால்ஸ்பர்க் கிராமிய விழாவில் ‘வான் டிராப் குடும்பப் பாடகர்கள்’ ஆகப் பாடப் போகிறோம் என்று சமாளித்துவிடுகின்றனர். தயங்கி யோசிக்கும் காவலர் தலைவனிடம் “ஆஸ்திரிய மக்கள் ஜெர்மானியர்களின் ஆட்சியைத் தான் ஏற்றுக் கொண்டாயிற்று; அதற்காகக் கலை இசை உணர்வுகளையும் இழந்துவிட முடியுமா” என்று வாதிடுகிறார்.

“சரி சரி போய்ப் பாடுங்கள். ஆனால் அதன் பிறகு எங்களுடன் வரவேண்டும்” என்று அனுமதி அளித்தாலும், உடன் தாங்களும் காவலுக்கு வருகின்றனர்.

சால்ஸ்பர்க் கிராமிய விழாவில் மீண்டும் இனிய இசையும் பாடல்களும். இதுவரை படத்தில் வெவ்வேறு இடங்களில் வந்த பாடல்களே மீண்டும் வந்தாலும் மிகவும் பொருத்தமாகவும் இருக்கின்றன. “ஈடுல்வாய்ஸ்… ஈடுல்வாய்ஸ்…” பாட்டு கூட்டத்தினரின் நாட்டுப்பற்றையும் தட்டி எழுப்புவதாய் இருக்கிறது. அவர்களும் சேர்ந்து பாடுகின்றனர். இறுதியாக “குட்பை…” என்கிற விடைபெறும் பாட்டு.

விழா எல்லாம் முடிந்து பரிசுகள் அறிவிக்கும் நேரம் வருகிறது. ஒவ்வொரு பரிசாய்க் கீழிருந்து மேலே அறிவித்து வருகையில் இறுதியாக முதல் பரிசு என்று வான் டிராப் குடும்பப் பாடகர்களுக்கே வழங்கப் படுகிறது. இரண்டு மூன்று முறை அறிவித்து வரும் வழியை எதிர்பார்த்துக் குவி விளக்கு வீசினாலும் யாரையும் காணோம். இடைப்பட்ட இந்த நேரத்தில் தப்பித்து ஓடிவிட்டார்கள் என்று தாமதமாக உணரும் காவலர்கள் எழுந்து துரத்தி ஓடுகிறார்கள்.

மரியாவின் தேவாலயத்திற்குத் தான் சென்றிருக்கிறார்கள் என்று அங்கும் காவலர்கள் வந்துவிடுகிறார்கள். மரியா, வான் டிராப் குடும்பத்தினரை ஒளித்து வைத்து விட்டுக் காவலர்களைச் சற்று தாமதப்படுத்துகிறார்கள் தேவாலயத்து மகளிர். காணோம் என்று காவலர்கள் கிளம்ப எத்தனிக்க, ரால்ஃப் என்னும் மூத்தவளின் முன்னால் காதலன் இவர்களைக் கவனித்துவிடுகிறான். தேசப்பற்றோ, காதல்பித்தோ இல்லாத சிறுவனாய் இருக்கிறான். அதனால் அவர்களை விட்டுவிடாமல் சீக்கியடித்து எல்லோரையும் அழைக்கிறான். பிறர் வருவதற்குள் வெளியேறி விடுகின்றனர் குடும்பத்தினர்.

காவலர்கள் தொடர இயலாதபடி சிற்றுந்துகளைக் கெடுத்து வைத்துவிடுகிற தேவமகளிர் புனித அன்னையிடம் தாங்கள் பாவம் செய்துவிட்டோம் என்று மன்னிப்புக் கேட்கிற காட்சி கூட புன்முறுவலையே வரவழைக்கிறது.

தப்பிவிட்ட குடும்பத்தினர் மலைகளின் வழியே நடைப்பயணமாய் ஸ்விட்சர்லாண்டுக்குச் செல்கின்றனர். ஒரு மலைப் பகுதியில் ஆரம்பித்த கதை மீண்டும் மலை மீது ஏறும் பாட்டோடு முடிகிறது.

கடைசிச் சில காட்சிகள் முடிவு நீட்சியாகத் (anti-climax) தோன்றுகின்றன. ஆனால் இது உண்மையாக நடந்த ஒரு கதை (சிறு மாற்றங்கள் இருந்தாலும்). உண்மைக் கதையின் முடிவை வேறெப்படிப் புனைய முடியும் என்று மன்னித்துவிடலாம். 1965ல் ஐந்து ஆஸ்கார் விருதுகள் வாங்கியிருக்கிறது இந்தப் படம். குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய, பார்க்க முடிகிற ஒரு நல்ல படம். வயது வித்தியாசமில்லாமல் எல்லோரையும் கவரும் என்பதற்கு நானும் என் ஆறு வயது மகளும் வீட்டில் வாங்கி வைத்திருக்கிற இந்தப்பட இலக்கச் சலன வட்டுமே சாட்சி.

மேலும் சில படங்களுக்கு.

Tags: திரைப்படம்

12 responses so far ↓

  • 1 ரோஸாவசந்த். // Apr 26, 2005 at 6:47 am

    நானும் மிக அதிகமான முறைகள் போட்டு போட்டு பார்த்த திரைப்படம் இது. அற்புதம்!

  • 2 Princess // Apr 26, 2005 at 7:38 am

    ‘இசையின் ஒலி’ பற்றிய உங்கள் பதிவை வரிக்கு வரி ஆமோதிக்கிறேன். Frame by frame பார்த்து ரசிக்க வேண்டிய படம் அது. அதிலும் பாடல்கள் – ஒவ்வொன்றும் வெல்லக்கட்டி. (மனப்பாடம் செய்து வைத்திருக்கிறேன் :-). இதற்கொரு sequel புத்தகம் கூட வெளிவந்தது – ‘The Trapp family on Wheels’ என்று. எழுதியவர் ‘இசையின் ஒலி’யின் (நிஜக்) கதாநாயகி Maria Von Trappஏ தான். படம் முடிந்து அவர்கள் ஆஸ்திரியா நாட்டைவிட்டே வெளியேறும் நிலைமைக்கு ஆளான பிறகு, அவர்கள் வாழ்க்கை எப்படிச் செல்கிறது என்பதைச் சொல்லும் புத்தகம். உலகம் முழுக்கச் சுற்றி, அவர்களது இசைத்திறமையை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள். வான் ட்ராப் அதிக நாட்கள் வாழவில்லை. அவர் மரியாவுடன் இருந்த வருடங்கள் குறைவு. ஆஸ்திரியாவை விட்டு வெளியேறிய ஏழு வருடங்களுக்கெல்லாம் அவர் இறந்துவிடுகிறார். அப்புறம் எத்தனையோ சோதனைகள், சாதனைகள்…கிடைத்தால், அவசியம் படித்துப் பாருங்கள் (நான் பழையப் புத்தகக்குவியலில் கண்டுபிடித்தேன் 🙂

  • 3 Mathy Kandasamy // Apr 26, 2005 at 9:04 am

    படத்தை இன்னொரு தடவை பார்த்ததுபோல இருந்தது செல்வராஜ்.

    நன்றி!

  • 4 Padma Arvind // Apr 26, 2005 at 10:44 am

    எனக்கும் பிடித்த படம். இதுவே ச ற்று மாற்றங்களுடன் ஹிந்தியில் ஜிதேந்தர், ஹேமா நடித்து வந்தபோது, அவ்வளவு ரசிக்கும்படியாய் இல்லை.
    Born Free பார்க்கவில்லை என்றால் உங்கள் மகளுடன் பார்க்கவும். அற்புதமான படம்.
    Sound of Music இல் நடித்த குழந்தைகளை கடத்தி சென்று பணம் பறித்ததாக ஒரு செய்தி உண்டு.

  • 5 karupy // Apr 26, 2005 at 10:49 am

    அடிக்கடி தொலைக்காட்சியில் போகும் திரைப்படம் இது. தமிழில் சாந்தி நிலையம் என்று நினைக்கின்றேன். இதனைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் சரோஜாதேவி ஜெமினிகணேசன் நடித்தது.

  • 6 இராதாகிருஷ்ணன் // Apr 26, 2005 at 11:17 am

    பதிவின் முதல் பத்தியையும், படங்களையும் பார்த்ததுமே இப்படத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் உண்டானது. மிச்சத்தைப் படத்தைப் பார்த்துவிட்டு படித்துக்கொள்கிறேன். 🙂 நன்றி செல்வராஜ்!

  • 7 பாலாஜி-பாரி // Apr 26, 2005 at 4:52 pm

    நன்றிகள் செல்வா!
    இந்தப் படம் பார்க்க முயல்கின்றேன். நீங்கள் மிக நன்றாக எழுதி உள்ளீர்கள்.

  • 8 செல்வராஜ் // Apr 26, 2005 at 6:32 pm

    கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே. இந்தப் படத்தைப் பற்றிப் பல செய்திகளைப் பல இடங்களிலே தொகுத்து வைத்திருப்பதைப் பார்த்தாலே இதன் வீச்சு புலப்படும். இன்னும் பல படங்களை இணைக்க நினைத்தேன். ஆனால் காப்புரிமைப் பிரச்சினைகள் வருமோ என்று அஞ்சி விட்டுவிட்டேன். கடைசி வரியாய் இருக்கும் IMDB இணைப்பின் படங்கள் நன்றாய் இருக்கின்றன.

    இதை எழுதும் முன் சிறு தெரிவாய்ச் சில காட்சிகளை மீண்டும் பார்த்தேன். குறிப்பாக ஆஸ்திரிய இயற்கைக் காட்சிகளைக் காட்டும் ஆரம்பக் காட்சிகள். அதை எடுத்திருந்த விதமும் அருமை. தூரத்துக் காட்சியாகக் காட்டி, கொஞ்சம் கொஞ்சமாய் அருகருகே வந்து குளத்தின் கரை வீடு வரை வந்த அணுகல் நன்று.

    பத்மா, Born Free பார்க்க முயல்கிறோம். ஆனால் புத்தகம் படித்து நாட்களாயிற்று என்பதால், பவி நீங்கள் சொன்ன புத்தகம் படிக்கக் கொஞ்சம் நாட்களாகும் (வருடங்கள்:-) ).

    இராதாகிருஷ்ணன், பாலாஜி-பாரி கண்டிப்பாகப் பாருங்கள். கருப்பி, ரோசாவசந்த், மதி நன்றி.

  • 9 கீத்துக்கொட்டாய் » The Sound of Music // May 5, 2005 at 3:45 pm

    […]

  • 10 என் எண்ணக் கிறுக்கல்கள் - செல்வராஜ் » Blog Archive » மாமரத்தச் சுத்துவோம் // Jun 15, 2005 at 12:39 am

    […]

  • 11 கோ.இராகவன் // Jun 15, 2005 at 7:13 am

    எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று. உலகளாவிய அளவில் மிகச்சிறந்த படங்களில் ஒன்று. ஆஸ்திரியாவின் அழகும் படத்தின் மென்மையான இசையும் எப்பொழுதும் மனத்தை வருடும். பலமுறை பார்த்திருக்கிறேன் இந்தப் படத்தை. இன்னும் அலுக்கவில்லை.

    ஒவ்வொரு பாத்திரமும் நெஞ்சுக்குள் வைரச் சிற்பங்களாய் உறுதியாக சமைந்து விட்டன.

    நீங்கள் சுட்டிக் காட்டிய தப்பு செய்து விட்டேன் என்று மன்னிப்புக் கேட்கும் காட்சியில் நமக்கு ஒருமகிழ்ச்சியும் புன்சிரிப்பும் தோன்றும். பிரமாதமாக இருக்கும்.

  • 12 செல்வராஜ் // Jun 15, 2005 at 8:56 pm

    இராகவன், உங்கள் கருத்துக்கு நன்றி. என்னைப் போன்றே பலரையும் இந்தப் படம் கவர்ந்திருப்பது தெரிகிறது.