இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

இயற்கையின் சீற்றம்

December 28th, 2004 · No Comments

வட அமெரிக்காவில் கடுங்குளிரும் பனி வீச்சுமாய் இயற்கை சீறிக் கொண்டிருக்கிறது என்று காட்டப் படம் பிடித்து வைத்திருந்தேன். எல்லா வருடமும் இருப்பது தான் என்றாலும், சடாரென்று கொட்டிச் சற்றே கடுமையாகத் தாக்கியதில் சற்றுத் திணறித் தான் போயிருந்தோம்.

Snow 2004

மூன்றடிக்குக் குவிந்து கிடக்கிற இந்தப் பனியாவது இன்னும் மூன்று நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கக் கரைந்து போகும். மூழ்கிக் கடலடியில் கரைந்த உயிர்கள் மீளாவே!

இங்கே பொழிந்த பனியை மிகச் சாதாரணமாக்கி விட்டது இயற்கையின் தெற்காசியச் சீற்றம். கடல் கொந்தளிப்பும் பேரலைகளும் மூழ்கிய பெருநகரங்களும் வரலாற்றிலும் வரலாற்றுக் கதைகளிலும் தான் படித்திருக்கிறோம். வாழ்நாளில் பார்த்ததில்லை. கேட்டதில்லை. பெருமழையும் புயலும் பிளக்கின்ற பூமியும் கடுந்தீயும் கூடப் பேருயிர்களைக் கவர்ந்து அழிவுக்குள்ளாக்கியதை உலகில் பல இடங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் இம்முறை கொந்தளித்த கடல் தமிழ் மண்ணில் அழிவினை உண்டாக்கியதில் இதயத்திற்கு அருகே சற்றே அதிகத் தாக்கம் தான்.

அதிலும் அந்தக் கடல்!

பூமிப் பரப்பில் இரு மடங்கு நிறைந்து பெரும் சக்திவாய்ந்ததாய் இருந்தாலும் கரையருகில் சாந்தமாய் மனிதனின் காலடியில் உரசிக் கொஞ்சிக் கொண்டு தான் இருந்தது. சாந்தோமிலும் மெரீனாவிலும் பெசந்த் நகர்க் கரைகளிலும் அந்தக் கடலையும் அலைகளையும் பார்த்தபடி மணிக்கணக்கில் கிடந்திருக்கிறேன். சென்னைக் காலத்தில் மனசு சோர்வுற்ற போதெல்லாம் உட்சக்தியை மீட்டுக் கொள்ள ஆர்ப்பரிக்கும் அலைகள் நிறைந்த அந்தக் கடலைப் பார்க்கப் போயிருக்கிறேன். தனியேவும் தோழர் தோழியருடனும் அலை நனைந்து அதன் கரைகளில் ஆடியிருக்கிறேன். பூரண நிலவொளி நீரில் பட்டுத் தெறித்துப் பொன்னிறமாய் பிரகாசித்தது கண்டு பிரமித்துப் போய்ப் பேச்சற்று இருந்திருக்கிறேன். பின்னணியில் அலைகள் இசையமைக்கக் கூட்டமாய் நட்புடன் சேர்ந்து சுற்றியமர்ந்து நிலாச்சோறு உண்டிருக்கிறேன். கடலும் கரையும் நினைவில் நீங்காத ஒன்று.

அதே கடல் தானா இது? சீ போ! இது வேறு முகம். இது வேறு கடல். கரையோர நண்டுகளைக் குளிப்பாட்ட மட்டுமே தெரிந்தது அது. காலனின் கையாளாகிச் சிறு குழந்தைகளின் குரல்வளையை நெரிக்க அதற்குத் தெரியாது. கரையின் ஈரமண் கோட்டைகளை மட்டும் அழிக்கத் தெரிந்த அதற்கு ஊருக்குள் வந்து உயிர் குடிக்க யார் அனுமதி தந்தது?

இயற்கை அன்னையே நீ சக்தி வாய்ந்தவள் என்று ஏற்றுக் கொள்வதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. உன் சீற்றம் தணிந்து இயல் நிலைக்கு வா. உன்னோடு போட்டியில்லை எங்களுக்கு. நீ வாழ்க.

நாங்கள் இதையும் தாண்டிச் சென்று தானாக வேண்டும்.

Tags: பொது