இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

இனிய தோழி சுனந்தாவிற்கு…! – முன்னுரை –

June 24th, 1993 · No Comments

முதல் பாகம் / முன்னுரை


‘தம்பிக்கு’, ‘தங்கைக்கு’, என்ற தலைப்பில் மு.வ. அவர்கள் எழுதிய கடித இலக்கியங்களால் கவரப்பட்டும், கடிதங்கள் எழுதுவதன் பால்எனக்கு இருந்த/இருக்கின்ற ஆர்வத்தினாலும், நானும் ஒரு கடித இலக்கியம் எழுத முயற்சிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் அவா.என்னுள் இருந்த அந்த அக்கினிக் குஞ்சு வளர்ந்து வளர்ந்து ஒருநாள் திடீரென்று ஒரு ஒளிப் பிழம்பாய் மாற, என் ‘இனிய தோழிசுனந்தாவிற்கு’ கடிதம் உருவானது.



ஒரு வகையில் இது ஒரு புதுமைப் படைப்பு. `சுனந்தா’ என்ற இந்தப் பெயருக்கு உரியவள், நிஜம் கலந்த ஒரு கற்பனைப் படைப்பு. இந்தக் கற்பனைத் தோழிக்குள், என்னுடைய நிஜத் தோழர்களும், தோழிகளும், சில இடங்களில் பெற்றோர்களும், எனது மாமா, அத்தை, ஆசிரியர்கள், என்று பல பேரும் அடக்கம். அந்த வகையில் இது நிஜம். அவர்களுக்கு இருக்கிற இயல்புகளை எல்லாம் உதிரி உதிரியாய் எடுத்து, ஒரு பூச்சரமாய்த் தொடுக்க முனைந்திருக்கிறேன்.

இதை ஒரு கடிதத்தின் பகுதிகள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்; அல்லது பல கடிதங்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம். அது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. ‘செல்’, ‘செல்லு’, ‘செல்வா’, என்று வருகிற எனது பெயரைத் தவிர வேறு பெயர்கள் யாவும் கற்பனையே. முடிந்த அளவு பெயர்களைத் தவிர்த்திருக்கிறேன். ஆனால், மற்ற நிகழ்ச்சிகள், உணர்ச்சிகள், என் எண்ணங்கள் இவை யாவும் ஏறக்குறைய உண்மையே. உண்மையானவற்றை ஒரு கற்பனைப் படைப்பின் மூலம் வெளிப்படுத்துவதாலேயே இதை ஒரு வகையில் புதுமை என்கிறேன்.

சில நேரம், சுனந்தா எனது பள்ளி நண்பனாகச், சில நேரம் எனது கல்லூரித் தோழனாகத், தோழியாகச், சில நேரம் மாமாவாக, அத்தையாக என்று பலரின் குணங்களில் இருந்து நான் படைத்து இருந்தாலும் குழப்பங்கள் இல்லாமல் கொண்டு சென்றிருப்பதாகவே எண்ணுகிறேன்.

என்னுரையை முன் வைத்துவிட்டேன். இனித் தொடரும் கடிதங்கள். குற்றம், குறை காண்பவர்கள், தயவு செய்து தெரிவியுங்கள். பின்னர்

என்னைத் திருத்திக் கொள்ள அவை உதவும். நிறையோ, வேறு நல்ல அம்சங்கள் காண்பவர்களும் தெரிவியுங்கள். அவை என்றும் என்னை ஊக்கப் படுத்தி உதவும்.

கடிதங்கள் இனித் தொடரும்… என் இனிய தோழி சுனந்தாவிற்கு…!

அன்புடன்
செல்வராஜ்.

Tags: கடிதங்கள்